ஓய்தலென்பது

 


சிக்னலில்
யாசித்தபடி வருகிற
முதியவர்
தனக்கு வழங்கப்பட்ட
கரன்ஸி காகிதத்தை
உற்றுப்பார்க்கிறார்.
யாசிக்கையில்
வழக்கமாய்க் கிடைக்கிற
பணங்களைவிடவும்
பேரதிகமான அதன் மதிப்பை
மீண்டுமீண்டும் சரிபார்க்கிறார்.
நடுங்கும் கரத்தால்
அதனைத் தன்
ஏதுமற்ற உடலில்
எங்கனம்
பத்திரம் செய்வதெனத்
திகைத்தபடி
ஒரு முழு தினத் தேவைகளைப்
பூர்த்தி செய்த பின்னரும்
எஞ்சவாய்க்கிற தொகை குறித்து
ஆராய்ந்து கொண்டே
நாற்கரச் சாலை நடுவத்திலிருந்து
எந்தப்பக்கம் போவதென
யோசிக்கிறார்.
ஓய்தலென்பது
ஒராயிரம் விதம்.