கவிதையின் முகங்கள் 10

கவிதையின் முகங்கள்

10 கேள்விகளாக எஞ்சுதல்


வொர்ட்ஸ்வர்த்துக்கு வசந்தகாலத்தில் மலரும் நெடிய பொன்நிற  டஃபோடில் மலர்கள் எப்படியோ அப்படித் தான் எனக்குப் போதாமையும்
-பிலிப் லார்க்கின்


கவிதை என்பது சந்தோஷமான மற்றும் சிறந்த மனங்களின் சிறந்த மற்றும் சந்தோஷமான தருணங்களைப் பதிவு செய்வது
-P.B.ஷெல்லி


மொழி தன் அடிமைகளிடத்தில் தான் கைகட்டி நிற்பது ஒரு பாவித்தல்.கவிதை தன்னைக் கொல்பவரைத் தான் கொன்று உயிர்க்கும் அற்புதம். மொழி என்பது இருள். கவிதை நிழல். மனித இருப்பென்பது நாடகபாவம். தத்துவார்த்த சத்தியங்களைக் கெக்கலித்து விட்டுப் புன்னகைக்கும் குறளியின் பேரோசை கவிதை.மொழியின் கட்டற்ற பேரோசையின் தற்போதைய இருப்பு கவிதை. அதன் மீதான சலனம் அதன் வருங்காலம்.
சமீபத்திய கடந்த காலமும் முன் பழைய காலமும் ஒன்றெனக் கொள்ளமுடியாது.அனுபவத்தின் காலமும் முந்தைய பெருங்காலமும் வெவ்வேறுதானே. வாழ்ந்து வந்த காலம் இருந்த காலம் என்றும் அதற்கு முந்தைய காலம் இறந்த காலம் என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நேற்று இன்று நாளை இந்த மூன்றுமே வெவ்வேறு வசதிக்கான பகுப்புகள் தான் எனத் தோன்றாமல் இல்லை. தற்கணம் என்பதைத் தான் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம் யாருமே. தற்கணத்தைப் பேசாமல் அதன் ஒற்றை லயிப்பை மறுதலிப்பதற்கான பொய்த் திசைகளாகத் தான் நேற்று இன்று மற்றும் நாளை என்பதெதுவும் உண்டுபண்ணப் பட்டிருக்கின்றன என்பதை மறுதலிக்க முடியவில்லை. மனம் என்ற ஒன்று இருக்கும் வரை தற்கணத்தோடு தானே பிணைக்கப் பட்டிருக்கிறது? மனம் என்ற ஒன்று தான் மனிதனை இயக்குகின்றதா..? அதைப் பற்றியே எண்ணிக் கொண்டும் மறந்து கொண்டும் இருப்பதான பாவனை எதுவுமே மனிதன் தனக்காகச் செய்தளித்துக் கொள்கிற படர்க்கைப் பொய்யின்பம் தானா? காலமும் மொழியும் ஆடுகிற தீராப் பேராட்டத்தில் நாம் உதிர்க்கிற அத்தனை சொற்களுமே நம்மை வைத்தாடுகின்றனவா? நாம் புழங்காத சொற்களுக்கும் நமக்கும் என்ன மாதிரியான பந்தம்? மொழி வாழ்கையில் நாமெல்லாம் அதன் கைப்பொருள் மாத்திரமே.
Credit: Bettmann Archive/Bettmann
எழுத்துக்கள் தங்களுக்குள் செய்து கொள்கிற நிரந்தர சமரசம் இல்லாமல் சொற்கள் ஏது? சொற்களினூடாக எழுத்துக்களின் மீவொலித்தல் குன்றியும் அதிகரித்தும் நிகழ்வது எம்மாதிரியான விலக்கம்..? எழுத்துக்களின் ஓரளவு அழிவின்றிச் சொற்கள் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறதில்லையா. சொற்கள் அவற்றின் அர்த்தப்பாட்டினின்றும் மீண்டும் மீண்டும் புழங்குவதன் செயல்முறை என்ன.? சொல் அதன் அர்த்தங்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொள்கிற இடங்களிலெல்லாம் அதன் மிகுதி அர்த்தங்கள் என்னவாகின்றன? அவற்றை மாற்றி மாற்றிப் போட்டு ஆடிப் பார்த்தால் அந்த முடிவற்ற ஆட்டத்தினூடாகப் பிறக்கவல்ல ஆனந்தம் எத்தகையது? அது சுகானுபச்சுமையா அல்லது அற்பமான நெகிழ்தலா வேறேதுமா..?
எழுத்துக்கள் சொற்கள் இவற்றின் மறுநிகழ்தல்கள் தான் நாம் புழங்குகின்ற மொழி என்று கொண்டோமேயானால் நாள்பட அதன் இருப்பிலும் அல்லது கூட்டிசைவிலும் ஏற்படத் தக்க உப மாற்றங்களை எப்படி வகைகொள்வது.? உண்மையில் கவிதை என்பதன் இருப்பும் பணியும் கவிதையாயிருத்தல் மாத்திரமா..? அல்லது மொழியினூடாகத் தன்னை நிகழ்த்திப் பார்க்கிற சோதனைத் தொடரியின் தற்கண இருத்தல் கவிதை என்கிற காண்பண்டமாய்க் கிட்டுகிறதா?
அர்த்தத்தின் பிரதிவாதம் கவிதை என்கிற அடிப்படையில் கூடுதலாகக் கிடைக்கின்ற அனுபவத்தினின்றும் கவிதையின் சொற்களை மீண்டும் அதன் பழைய இருத்தலுக்கே அனுப்பி வைப்பது சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன்.பழைய இருத்தலின் அதே ஒளி சாத்தியமறுகையில் புதிய நிழலின் இருளைத் தன் மீது ஏற்றிக் கொள்கிறதா கவிதையின் சொற்கள். சொல்-பொருள்-மௌனம் இவற்றின் பிரதானத்தைத் தாண்டிய நெடிதுயர் இருளின் எல்லை தான் என்ன. உண்மையில் அசாத்தியத்தின் இயலாமையைப் பயணமாக்கிப் பார்ப்பது வெறும் கற்பனையாகக் குன்றுமா? அல்லது எப்போதைக்குமான நிகழாமையாய்ப் பெருகிக் கொண்டே இருப்பதுவா?
பூதம் அடைபட்ட விளக்குத் தான் மொழி என்றால் அதை வெளிக்கொணர்வதற்கான கரவருடல் தான் கவிதை என்பது சரியாய் வருகிறதா. உள்ளுறைந்த காலம் எப்போதைக்குமான சூன்ய நிரந்தரமாய்ச் சுழிகிறதல்லவா? வெளிப்படுத்த முயலுகிற கவிதையின் தோன்றுதலை முதன்மைப் படுத்துவது பிசகுத் தோற்றமாய் எஞ்சக் கூடும். வினோத மொழியின் வெளிப்பாடல்ல கவிதை மொழியின் வினோத வெளிப்பாடு மற்றும் இல்லாமற் போதல் ஆகிய இரண்டும் சேர்ந்த வினையூக்கம்.
கவிதையை எளிமையாய்ப் பயில முடியுமா? கற்றுக் கொடுத்து வருவதா கவிதை? அருளின் கூடிவருகிற அர்த்தப் பெருக்கு கவிதை என்றால் அது யாவர்க்குமானதில்லை என்றல்லவா ஆகும்.? மொழியும் காலமும் புணர்ந்து உருக்கொடுக்கிற மனிதரூபக் கொடை தான் கவிதை எனத் தோன்றுகிறது.
சமீபத்தில் வாசித்தவற்றில் ரசித்த சில கவிதைகளை இங்கே தருகிறேன்.

1அது அப்படித்தான்

எந்தக் கால அடுக்குகளில்
எதை நீ தவறவிட்டாய்
இப்போது தேடி எடுக்க?
ஒரு பூவின் அடுக்குக்குள்
ஓராயிரம் ம்றை
போய் வந்துவிட்ட்ட
ஒரு குட்டிப்பூச்சி
தன் முயற்சியைக் கைவிடக்
கற்றுக்கொள்ளும் போது
காற்று அதை
அள்ளி அரவணைத்து
அதன் இரையின் முன்
உட்கார வைக்கிறது

ஸ்ரீவள்ளி கவிதைகள்
எழுத்துபிரசுரம் வெளியீடு
ரூ 350

 

Karthik Netha: Movies, Age, Photos, Family, Wife, Height, Birthday, Biography, Facts, Filmography, Upcoming Movies, TV, OTT, Social Media, Facebook, Instagram, Twitter, WhatsApp, Google YouTube & More » CelPox2.சாட்சி

கண்ணில் மட்டும் ஒளியிருந்து
காண்பொருளில் இருளிருந்தால்
காட்சியாமோ?

கார்த்திக் நேத்தா
ஞாலப் பெரிதே ஞானச்சிறுமலர்
தமிழினி வெளியீடு
ரூ 80

 

3.ஏதோ ஒரு நிலையத்தில்

தண்டவாளங்களின்
இருபுறமும் கும்பலாக
ரயில் பார்க்க
நெருக்கியடித்து நிற்கும்
பீ நாறிச் செடிகள்
எங்கணும் பறந்து
பார்வை மறைக்கும்
மழைக்கால
குட்டிக்குட்டி
வண்ணத்துப்பூச்சிகள்

எங்கோ போகிறோம்
நானும் என் ரயிலும்

சமயவேல்
இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
தமிழ்வெளி பதிப்பக வெளியீடு விலை ரூ 85

4ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் | Buy Tamil & English Books Online | CommonFolks.
கோடி கோடி தண்ணீர் பலூன்கள் என் வாழ்வு
சொற்கள் அவற்றுக்குப் பகை
எத்தனை பலூன்கள் நனைந்துவிட்டன
என் ஆயுளின்
எத்தனை நாட்களை!
இருக்கட்டுமே.
பலூன்கள் உள்ள இடத்தில்
மகிழ்வுக்கு எது குறை!

கார்த்திகாமுகுந்த்
ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்
எழுத்து பிரசுரம் ரூ 80

கவிதை என்பது மொழியில் முதன்முறை என்று மட்டும் கொள்வதற்கில்லை. சொற்களின் மீமுறையும் கோத்தலின் முதன்முறையும் என்று அதனை விரித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வேறொரு காலத்தின் முன் கூறல் என்று தனியே கத்தரித்துச் சொல்வதில் சில சிக்கல்கள் எழுகின்றன. இதுவரை சொல்லப்படாத காலமொன்றைப் பிரதிப்படுத்துகிற கவிதைகளை எழுதுதல் கவனத்திற்குரியதாகிறது. இல்லாக் காலம் என்பதை முன்பிருந்த-எதுவுமறியாக் காலத்தின் மீதான ஒளிப்படர்தல் என்றோ இனி வரப்போகிற அல்லது வந்துகொண்டிருக்கிற காலத்தின் வருகை மீதான ஏற்பென்றோ கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் கவிதை என்பது நிகழ்காலத்தின் பிடிமானத்திலிருக்கிற பண்டம் என்று மீண்டும் மீண்டும் பயிற்றுவிக்கப் படுவதிலிருந்து சற்றே உள் நகர்ந்து இதனை நோக்கினால் இன்னொரு அடைவு கிடைக்கிறது. கவிதை நிகழ்காலத்தின் பிடிமானத்திலிருக்கிற பண்டம் என்பதொரு காட்சியுரு மட்டுமே. தற்காலிகம் வெர்ஸஸ் நிரந்தரம் என்கிற இரண்டின் அடி நிழலைப் போல் உணரக் கூடிய பிறழ்நிஜமாய் விரியவல்லது கவிதை. காலம் எனும் தொகுப்பினுள் கவிதை என்பதன் நிகழ்தல், தற்கணத்தின் தீர்தலினின்றும் தன்னைத் தொடக்கிக் கொள்கிறது. கவிதைக்கான காலம் என்பது முற்றிலும் யூகத்திற்கோ திட்டத்திற்கோ அப்பாற்படுகிறது. கவிதை எனும் சாக்லேட் தன் மீது அணிந்துகொள்கிற மேற்காகிதம் போலாகிறது காலம்.
புனைகதை எனும் கோபுரத்தின் அடித்தளமாகவே நாம் நவிலுவதைச் சொல்ல முடியும். கதைக்கும் கவிதைக்கும் இடையிலான வேற்றுமைகள் பெரிதும் குறைந்துகொண்டே வந்து இன்றைக்குக் கதையைக் கவிதைவழி சொல்லுதலும் கவிதையே கதையாதலும் பெருக்கம் கொண்டிருக்கின்றன. கதாமுறை அற்ற கவிதைகளைப் பார்த்துப் பார்த்து உருத்தருபவர்கள் இன்னமும் இயங்குகின்றனர் என்றாலும் 2000 ஆவது ஆண்டுக்கப்பால் எழுத முனையும் புதிய கவிகள் பலருக்கும் கதாமுறைப் பகிர்தலும் நவிலலும் மிகுந்த கவிதைகளை உண்டாக்குவதில் தான் பெரும் ப்ரியம் இருந்து கொண்டிருக்கிறது.
கவிதை என்பது மனத்தின் நசிவு. கவிதை என்பது நிகழ்கிறது எனில் அதன் உள்வெளி ஆட்டத்தில் உள்ளம் மனம் சிந்தை ப்ரக்ஞை இவற்றின் தொடர்பு அலாதியானது. கூட்டுத் தத்துவார்த்த மௌனத்தைக் கலங்கடிக்கிற தனி ஆரவாரம் மட்டுமல்ல கவிதை.அது மகாமௌனமும் கூட. கவிதை கனமோ தடையோ அல்ல மாறாக அது சிறு ஒளி.கவிசொல்லி மொழியைத் திருகுவதாகச் சாட்டுவது தட்டையானது. மொழியினை உன்னதமாய்க் கையாள்வதே கவிதையாக முடியும்.கவிஞனுக்கு அவன் கவிதையைத் தாண்டிய வேறோர் இடமும் இல்லை. அது தேவையும் இல்லை.மொழியின் வானை அளாவுவது கவிதையின் அதிகாரமல்ல. அதுவே கவிதையின் இயல்பு. இன்னும் மாற்றிச் சொல்வதானால் கவிதையைத் தன் வானாய் அளாவச் செய்வது மொழியின் இயல்பு என்றும் சொல்லலாம்.
நினைப்பதையெல்லாம் வெளிச்சொல்வதற்குக் கவிதை பயனுறுகிறதா?அந்தரங்கம் என்ற சொல்லைப் பார்க்கலாம். வெளிச்சொல்லியும் சொல்லாமலுமாய்ப் பாதி உரித்த பழம் ஒன்றென எஞ்சுவதா கவிதையினூடான அனுபவம்? உண்மையாகவே நினைப்பதை மட்டும் தான் கவிதையாக எழுதுகிறானா கவிசொல்லி?நினைத்துக் கொண்டு இருத்தல் எனும் பதத்தில் நினைப்பை எழுத்தாக்கும் போது நடக்கின்ற வினை கவனத்திற்குரியதாகிறது. தன்னைக் கவிஞனின் மூலம் தான் எழுதிக் கொள்கிறது கவிதை என்பது எளிதாய்ப் புறந்தள்ளக் கூடிய கூற்றல்ல. சொல்வதற்காக நினைப்பது என்பதான தலைகீழ் இயக்கம் அசாத்தியமா..?அல்லவே. இந்த இரண்டில் எதாவதொன்றையோ அல்லது இரண்டையும் மாறிமாறியோ முனைவதென்பது ஒரேவிதமான கலைசெயல்பாடு என்று கொளத் தக்கதன்று. கவிஞன் முற்றிலுமாகத் தன் பிடிமானத்தில் மொழியை இருத்திக் கவிதையை வனைவதும் வார்ப்பதும் ஒரு இயங்குமுறை எனில் முற்றிலும் தன்வயத்திலிருந்து நீங்கிச் சன்னத உணர்வை விவரித்தெழுதுவது இன்னோர் முகடு.
கவிதையில் “நான்” என்பதன் பங்குபாகம் என்ன..? நினைக்கிற நானா எழுதுகிற நான்? சிந்தனை என்பதன் பிடிக்குள்ளிருந்து கொண்டு எழுத்தை வெளிப்படுத்துகிற நான் அதாவது சிந்தனையை எடுத்து எழுதுகிற நான் நினைக்கிற நான் மட்டும் அல்ல. இந்த இடைவித்யாசம் அல்லது விலக்கத்தினுள் இடம்பெறுகிற நான் என்பவன் முற்றிலும் ஒரேயொருவனாக நிறைந்து தீர்வதில்லை. நான் என்பவன் எனது நீட்சியாகவும் முந்தைப் பரம்பரையின் துத்துளித் துளிகளாகவும் முன் பின் தொடரிகளாய்க் கலைவதும் மெய் தான். எனக்குள்ளே நான் என்பதன் பகிர்தலாக என் கற்பனைக்கான நான் மற்றும் நிசமான நான் என இரண்டாய்க் கிளைக்கின்றோமா..? என் கவிதையின் நான், இருப்பின் நானாகத் தான் இருந்தாக வேண்டும் என்பதில்லை. யாருமற்ற அல்லது இல்லாத நான் மற்றும் கூடுதல் நான் ஆகியவற்றையும் உட்படுத்துவதே எழுத்து.
கேள்விகள் காலமற்றவை மற்றும் பதில்கள் காலவாரியாக நிகழ்பவை என்று கொண்டால் எல்லா வினாக்களையும் மறுபதிலுக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க முடிகிறது. புதிய உண்மைகளை நோக்கிச் செலுத்துவதற்கான திசைகளாகப் பழைய பதில்களினின்றும் வினாக்களை விடுவிப்பது செயல்புரிகிறது. கவிதைக்கும் இது பொருந்தக் கூடும். கேள்விகள் தீர்வதேயில்லை. காலமும் கேள்விகளும் ஆடுகிற ஆட்டத்திற்குக் கணக்கற்ற சுற்றுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
உமா ஷக்தியின் சமீபத்திய தொகுப்பான ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு (வாசகசாலை வெளியீடு விலை ரூ 60) தொகுப்பில் அவளுடைய மீன்கள் எனும் ஒரு கவிதை, குறுங்கவிதைகளுக்கான கச்சிதத்தோடு ஒலிக்கிறது.

மிதக்கும் ஒளி புகுந்த வீட்டினுள்
அவள் மீண்டும் வசிக்கிறாள்
அவளுக்காக வருகை தரும்
பறவைகள் மீன்களை
கொத்த துடிக்கின்றன
நீயும் வருகிறாய்
ஒரு நாள் மீனாக
ஒரு நாள் பறவையாக

இந்தக் கவிதையின் கடைசி மூன்று வரிகள் கவிதைக்குள் துளிக்கவிதையாகத் தனித்து எஞ்சுகையில் வேறொரு பலத்தைப் பெற்று ஒலிப்பதைப் பார்க்கலாம்.

நீயும் வருகிறாய்
ஒரு நாள் மீனாக
ஒரு நாள் பறவையாக

இந்த வரிகள் போதுமானவையாக இருக்கின்றன. இங்கே ஆழ்ந்தால் சொற்சிக்கனம் என்பதைத் தாண்டிச் செலாவணியாகிற சொற்களின் கூடுதல் கனத்தை நீக்கும் போது கவிதை இன்னும் ஆழ்ந்து படர்வதை உணரமுடிகிறது. சொல்லாச் சொற்களும் சேர்கையில் தான் கவிதை கூடிய இருளும் மின்னும் ஒளியுமாய்ப் பேரெழில் கொள்கிறது. எதிர் காலத்தில் கவிதை மிகவும் குறைவான சொற்களைக் கொண்டு பெரிய அர்த்தங்களையும் மாபெரும் மௌனத்தையும் விளக்கித் தர முயலும் எனத் தோன்றுகிறது. அதை மெய்ப்பிக்கிற வண்ணம் உமாசக்தியின் மேற்காணும் கவிதை உட்படப் பலரது கவிதா முயல்வுகளும் மிளிர்கின்றன.