Post Views:
123
காபி
சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி வீசுகிறது. வெளிநாட்டுக்கு போனவர்கள் கூட வாட்ஸ் அப்பில் “குண விலாஸ் ரசிகர் மன்றம்” என ஒரு குரூப் வைத்திருக்கிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் அவ்வப்போது அங்கே சென்று சூடு பறக்கும் காபி தம்ளர் வட்டகப் ஆகியவற்றைப் படம் எடுத்து அதில் பகிர்வார்கள். வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களைச் சபித்து மெசேஜ் போடுவார்கள். ஏக தமாஷாக இருக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் வேறு எங்கேயும் கிடைக்காத சுவை என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள் ஒவ்வொரு நாளும் அந்த வாட்ஸ்அப் குரூப்பில் குண விலாஸ் காபியின் அருமை பெருமைகள் பலவற்றைப் பற்றியும் பத்தி பத்தியாகப் பலரும் எழுதிக் கொண்டே இருந்தார்கள். யாரும் எதையும் மறுப்பதில்லை கிட்டத்தட்ட ஒரு புதிய கடவுளைப் போலவே குண விலாஸ் காபி மாறிக் கொண்டிருந்தது
குண விலாஸ் கடையின் மாஸ்டர் பிரதானியின் பெயர் சம்மந்தம். அவரைப் பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை “மீசை மாஸ்டர்” என்பது தான் விளிப்பெயர்.
அந்தக் கடையில் நாற்பதாண்டு சர்வீஸ் அவருக்கு. திருமணங்களுக்கு பத்திரிக்கை தந்து “அவசியம் வரணும்” என்று அழைப்பார்கள். நல்லநாள் பெரிய நாளுக்கு சுவிட் பாக்ஸ், வெடிகள் பழனிக்குப் போய் வந்தால் பஞ்சாமிர்தம் தொடங்கித் திருப்பதி லட்டு வரை பாரபட்சமில்லாமல் அவருக்கு தந்து விட்டு தான் சொந்த வீட்டுக்கே போவார்கள். பல தளங்களிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டு வந்த மீசை மாஸ்டருக்கும் சகாதேவனுக்கும் முப்பது வருட பழக்கம். சகாதேவனுக்கு குணவிலாஸூக்கு எதிர்த்த தெருவில் கூப்பிடு தூரத்தில் சீட்டுக் கம்பெனி ஒன்று இருந்தது.
அவருடைய அலுவலகத்துக்கு யார் வந்தாலும் உடனே குணவிலாஸூக்கு ஆள் பறக்கும். பார்ஸல் காபி. உபசரிக்கும் சாக்கில் தானும் ஒரு மினி காப்பியை அருந்திக்கொள்வார் கணக்கில் வருவது 4 முழு காபி தான். மற்றபடி ஒவ்வொரு நாளும் ஏழெட்டு சிறு-காபிக்களை அருந்துவது வழக்கமாகி இருந்தது. ஊரறிய சகாதேவனும் மீசையும் நட்பு பாராட்டினார்கள். எல்லாம் ஒரு சனியன் பிடித்த தினத்தோடு முடிந்து போனது. எந்தச்சொல் அந்த நெருக்கத்தை இடறிற்றோ தெரியவில்லை. இனி இவன் புழங்குற வரைக்கும் இந்தக் கடைக் காப்பியை நாவால தொடுறதில்லை என்று இரைந்தார். வேட்டியை மடித்துக் கொண்டு மாங்கு மாங்கென்று நடந்தே வீடு திரும்பினார். யார் யாரெல்லாமோ சமாதானம் பேசினார்கள். பலனளிக்கவில்லை. அந்தக் கோபாவேசக் காட்சிக்கு அடுத்து ஒரு சொல்லைக் கூட மீசை பற்றியோ குணவிலாஸ் காபி மீதான தன் சபதத்தைப் பற்றியோ வாய் திறந்து யாரிடமும் பேசவில்லை சகாதேவன். மீசை இன்னும் கறார். இந்த சண்டை பற்றி யாராவது எதாவது பேச முனைந்த போதும் சட்டென்று பேச்சை மாற்றி விட்டுப் போய்க்கொண்டே இருந்தார். இருவருமே ரோஷாவேச மகாராஜாக்கள். சொல்லைக் காப்பாற்றத் தன் தலையை வெட்டித் தண்ணீரில் எறிந்து விட்டு முண்டமாய் அலையவும் தயங்காத சூரவேங்கைகள்.
இதெல்லாம் ஊருக்கே தெரியுமானாலும் விஷயம் காபி சம்மந்தப்பட்டது என்பதால் சகாதேவன் கோபத்தில் நாலு சொல்லைக் கூடச்சொல்லிவிட்டார் சீக்கிரத்திலேயே வாபஸ் பெற்றுக்கொண்டு கடைக்குத் திரும்பி வரப்போகிறார் என்றெல்லாம் பேசினவர்கள் தான் தோற்றார்கள். அந்தக் கடை இருக்கும் திசையைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. மீசையும் அதன் பிறகு வேறாரிடமும் நெருக்கம் பாராட்டவே இல்லை. ஒன்றிரண்டல்ல சுமார் பதினோரு வருடங்கள் குணவிலாஸூக்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்று நிரூபித்துக் காட்டினார் சகாதேவன். மீசையும் தன்னளவில் சுருங்கினார்.
அன்றைக்கு அதிகாலையிலிருந்தே பெரிய வீட்டுப்பக்கம் ஆள் போக்குவரத்து அதிகமாகத் தொடங்கியது. குணவிலாஸ் பட்டறையில் முருகனும் மீசையும் ட்யூட்டியில் இருந்தனர். பெரிய கேத்தலில் ஐம்பது பேருக்குப் பார்ஸல் காபி வாங்கிக் கொண்டு மணியரசனும் சுந்தரமும் ஆட்டோவில் எடுத்துப் போன போது யாரோ பேசிக் கொண்டார்கள் சகாதேவன் அண்ணாச்சிக்கு நாலஞ்சு நாளாவே முடியலையாம். இன்னைக்குள்ள எல்லாம் அடங்கிரும்னு பேசிக்கிடுதாவ என்றதை அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் முருகன். மீசைக்கு இடது கண் லேசாய்த் துடிக்க ஆரம்பித்தது. தூரத்தில் ஆணியில் தொங்கும் தன் சட்டையின் உட்பாக்கெட்டில் இருந்த பாஸ்-பாஸ் பாக்கெட்டில் ஒன்றை எடுத்துப் பிரித்து வாயில் கொட்டிக் கொண்டார். ஊறத் தொடங்கிய எச்சிலை விழுங்காமல் தேக்கினார்.
தன் டிவி.எஸ் 50 வண்டியை ஸ்டாண்ட் இட்ட வள்ளி நாயகத்தைப் பார்த்ததும் லேசாய்ப் பரபரத்தார் மீசை. இவன் சகாதேவனின் எடுபிடியாச்சே. அவன் கையிலென்ன..? தூக்குவாளி. மீசையின் உதடுகள் லேசாய்த் துடித்தன. அதுவரைக்குமான பாக்குச்சாற்றை அப்படியே விழுங்கினார். உள்ளே கல்லாவுக்குப் போய் டோக்கன் வாங்கிக்கொண்டு பட்டறைக்கு வந்த வள்ளி நாயகத்தின் கண்கள் லேசாய்க் கலங்கினாற் போலிருந்தன. உடைந்த குரலில் “மீசை…சகாதேவன் அண்ணாச்சிக்கு சர்க்கரை அதிகம் போட்டு ஒரு காப்பி பார்ஸல் ” என்று தூக்கையும் டோக்கனையும் நீட்டினான். நெடு நாட்களாகவே அவர் மனக்கண் முன்பாகப் பல முறை வந்து போகிற கனவின் துண்டமொன்று அங்கே உயிர்த்தாற் போல் தோன்றியது. சூடான பாலை கைப்பிடி வைத்த டம்ளரால் ஆடையை ஒதுக்கி நாலைந்து முறை கோரி உயர்த்தி ஆற்றினார். தளதளவென்று புரண்டுகொதித்தபடி அதன் உஷ்ணம் அந்தப் பாத்திரத்தின் வட்டத்தை விட்டு வெளியேறிக் கலைந்தது.
தூக்கு வாளியைச் சரித்தார். அடுத்தடுத்து 4 ஸ்பூன் சர்க்கரையை போட்டவர் சின்னஞ்சிறிய தம்ளரால் இரண்டு முறை டிகாக்ஷனை வார்த்தார். வாழ்க்கையின் புதிர்களைப் போல் சர்க்கரையும் டிகாக்ஷனும் கலக்கத் தொடங்கியதன் மேல் கைப்பிடி டம்ளரால் பாலை ஊற்றி வாளியின் மூடியை அலட்சியமாக அடைத்தவர் வள்ளியிடம் தந்தார்.
“எலே வள்ளி இரு போயீடாதே” என்றவாறே பட்டறையிலிருந்து விலகி உட்பக்கம் கல்லாவை நோக்கி நடந்தார். கல்லாவில் உட்கார்ந்து இருந்த முதலாளியின் மகன் முரளியிடம் காதோடு போய் லீவு சொன்னார். மீசை லீவு எடுத்தால் அதோடு காப்பி யாவாரம் அன்றைக்கு அவ்வளவுதான். மீசைக்கு பதில் வேறு ஒருவர் நின்றாலே “காப்பி வேண்டாம் டீ போதும்” என்று பலரும் டீக்கு மாறுவார்கள். என்னவோ காப்பியை கண்டுபிடித்ததே மீசைதான் என்றாற் போல் ஒரு நினைப்பு. தன் சட்டையை உதறி பட்டன்களை போட்டுக்கொண்டு வெளியே வந்தவர் வண்டியை ஸ்டார்ட் செய்து காத்திருந்த வள்ளியின் தோளைத் தொட்டபடி பின் ஸீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார். அவன் நீட்டிய தூக்குவாளியைத் தன் கையில் ஏந்திக் கொண்டார். வண்டி இப்போது பெரிய வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது. வாசலில் நிறைய பேர் உட்கார்ந்தும் நின்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு ஓரத்தில் தன் வண்டியை நிறுத்தினான் வள்ளி. தூக்குவாளியை இறுகப் பற்றிக்கொண்டு செருப்பை ஓரமாய்ப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்த மீசையைப் பலரும் பார்வையால் அளப்பது தெரிந்தது. இடது பக்கப் படுக்கை அறையில் தென்பட்ட சகாதேவன் அண்ணாச்சியைப் பார்த்துக்கொண்டே அருகில் போய் நின்றார் மீசை. கீழே சற்றுத் தள்ளினாற் போல் கூட்டமாகப் பெண்கள் நெருக்கமாய் அமர்ந்திருந்தார்கள். யாரோ அவரைப் பார்த்த மட்டில் குண விலாஸ் கடையில் புழக்கத்தில் இருக்கும் அதே பித்தளை வட்ட கப் மற்றும் தம்ளரைக் கொண்டு வந்து நீட்டியதை வாங்கிக் கொண்டார் மீசை.
அருகிருந்த மர ஸ்டூல் மேல் தூக்குவாளியை வைத்தவர் , மூடியை நின்ற வாக்கில் திறந்தார். படுக்கையில் கண்கள் மூடி படுத்து கிடந்தார் சகாதேவன். உடம்பு முன்பிருந்ததில் கால் பாகமாக சுண்டி இருந்தது. அது சகாதேவன் என்று பழகியவர்களுக்கு கூட நம்புவது கடினமாகத்தான் இருக்கும். வட்ட கப்பில் முதலில் காப்பியை ஊற்றி வலது கையில் ஏந்திக்கொண்டு இடது கையில் இருக்கும் டம்ளரை லாவகமாக பிடித்து ” சரக் சரக்” என்று வான் வரை ஆற்றினார் மீசை. அந்த அறை எங்கும் குண விலாஸ் காபியின் வாசனை படர்ந்தது. மெல்ல சகாதேவனின் கண்ணீர் கோடிட்ட கண்கள் சிரமப்பட்டு திறந்தன. எல்லோரும் நம்ப விரும்பியதை நம்பாத பரவசத்தோடு அவர் கண்கள் விழித்தது குறித்து கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். அவரருகே சென்று லேசாக திறந்திருந்த உதடுகளுக்கு நடுவில் துளியாக்கிக் காப்பியை வார்த்தார் மீசை. சகாதேவன் அண்ணாச்சி தன் கண்களை ஒரு முறை மூடித் திறந்தார்.