கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11
 துப்பாக்கிச் சப்தம்


எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே!
-கெரோவாக்

கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது.

கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார். அமெரிக்கக் கவியுலகில் முக்கியமான இடத்தை வகிப்பவர். 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை எழுதியிருப்பவர். இவரது how to be perfect ( 2007 ) இவரது ஆக்கங்களில் முக்கியமானது. கவிதையைத் தனக்கு அடுத்த தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் விளங்கும் இவர் ந்யூ யார்க்கில் வசித்து வருகிறார். இவருடைய நீள்வசன கவிதை how to be perfect. கவிதையின் பல்வேறு கலைந்த சித்திரங்களை அடுக்க முனைவதன் மூலமாக உலகளாவிய மனோபாவம் ஒன்றினைப் பேச விழைவது இதன் சிறப்பு. உன்னிப்பாய்க் கவனித்தால் இந்தக் கவிதையின் வரியிடை முரணும் சொல்லாச் சொற்களின் பேரமைதியும் ஒருங்கே திரள்வதன் மூலமாக இந்தக் கவிதை இன்னும் கூடுதலாய் விரிந்துசெல்வதை உணரலாம். தமிழில் இப்படியான கவிதைகள் அரிது. இந்த நூற்றாண்டின் கவித்துவம் உலர்ந்த மற்றும் எளிதில் திறந்து கொள்ளாத புதிர்மையுடன் நிரம்புவதற்கு மிகச்சரியான உதாரணமாக ரான் பேகெட்டின் மொழி விளங்குகிறது. சுழல் தன்மையிலான இதன் எளிய மற்றும் பூடகமான நகர்தல்கள் ஒரு தேர்ந்த ஆட்டக்காரன் சதுரங்க ஆட்டத்தின் ஆகக் கடினமான ஆட்டம் ஒன்றினை ஒவ்வொரு நகர்வும் எப்படி நிறுத்தி நிதானித்து ஆடத் தலைப்படுவானோ அதே கனத்தோடு கூடிய அமைதியை வாசகனுக்குக் கடத்துகிறது.

6 poemas de Ron Padgett - Zenda

மிகச்சரியானவராக இருப்பது எப்படி?

ரான் பேகெட்

தமிழில் ஜனனி கிருஷ்ணா

 • கொஞ்சம் உறக்கம் கொள்.
 • ஆலோசனை வழங்காதே.
 • பற்களையும் ஈறுகளையும் கவனத்தில் கொள்.
 • உன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதைக் குறித்தும் பயங்கொள்ளாதே.அச்சமுறாதே, ஒரு உதாரணத்திற்கு, நீ உறங்குகையில் கட்டிடம் இடிந்துவிடுமோவென, அல்லது உன் ப்ரியத்துக்குரிய யாராவது திடீரென்று மரணமுறுவார்களோ என்பது போன்ற பயமே வேண்டாம்.
 • ஒவ்வொரு காலையிலும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் புசி.
 • சினேகத்துடன் இரு. அது உன்னை சந்தோஷமாக்கும்.
 • உனக்கு மகிழ்வளிக்கிற எதையேனும் செய்து நிமிடத்துக்கு 120 முறை உன் இருதயத்தைத் துடிக்கச் செய். அப்படித் தொடர்ந்து 20 நிமிடங்களேனும் வாரத்திற்கு நாலு அல்லது ஐந்து முறைகள் செய்திரு. எல்லாவற்றையும் நம்பு. எதையும் எதிர்பாராதே.
 • உன் இல்லத்துக்கு நெருக்கமான விஷயங்களை முதலில் கவனித்துக் கொள். உலகத்தைக் காப்பதற்கு முன் உன் அறையை நேராக்கு. பிற்பாடு உலகைக் காக்கலாம்.
 • அறிக,கச்சிதமான ஆசை என்பது நேசிக்கப்படுதல் குறித்த அல்லது சாகாவரம் பற்றிய இன்னொரு வெளிப்படாத ஆசையின் மறைவுணர்வாக இருக்கக் கூடும்.
 • ஒரு மரத்தைக் கண் கொண்டு நோக்கு.
 • எல்லாக் கருத்துக்களிலும் ஐயங்கொள்க, அதேசமயத்தில் அவை ஒவ்வொன்றிலிருந்தும் சில மதிப்பீடுகளை உணருக.
 • உனக்கும் உன்னைச் சார்ந்தோருக்கும் உகந்தாற் போல் உடையணிக.
 • வேகவேகமாய்ப் பேசாதிரு.
 • அனுதினமும் எதையாவது கற்றுக் கொள்க.(நல்ல நாள்!)
 • மக்களிடம், அவர்கள் மோசமாக நடக்க ஒரு சந்தர்ப்பம் கிட்டும் முன் நல்ல முறையில் நடந்துகொள் .
 • எதைக்குறித்தும் ஒரு வாரகாலத்திற்கு மேல் கோபம் கொண்டிராதே, ஆனால் எது உன்னைக் கோபமுறுத்திற்று என்பதையும் மறவாதே.கைக்கெட்டும் தூரத்தில் அந்தக் கோபத்தை இருத்து. அதையொரு கண்ணாடிப் பந்து எனப் பார். பிறகு அதை உன் கண்ணாடிப் பந்துகளின் சேகரிப்பில் சேர்த்து விடு.
 • நேர்மையாயிரு.
 • பொருத்தமான காலணிகளை அணி.
 • உன் செய்கைகளை பலவகைமைகள் மற்றும் உன் மகிழ்வின் சமநிலை ஆகியவற்றைத் தெரிவிக்கும் வண்ணம் வடிவமை.
 • முதியவர்களிடம் அன்புகாட்டு, அவர்கள் அருவருப்பாயிருப்பினும் அவர்களிடம் அன்பாக இரு. எப்போது நீ முதுமை கொள்கிறாயோ அப்போது இளையவர்களிடம் கருணை காட்டு, அவர்கள் உன் பேரக்குழந்தைகள். உன்னைத் தாத்தா என்று அழைக்கும் போது அவர்கள் மேல் உன் கழியை எறியாதிருப்பாயாக.
 • ஒரு மிருகத்தோடு வாழ்ந்துபார்.
 • பெருங்கூட்டத்துடன் அதிக நேரம் செலவழியாதிரு.
 • உனக்கேதும் உதவி வேண்டுமெனில், அதைக் கேட்டுப் பெறு.
 • நல்ல தோரணையை அது உன் இயல்பாக மாறும் வரை வளர்த்துக் கொள்.
 • உன் குழந்தையை யாரேனும் கொன்றுவிட்டால் சிறு துப்பாக்கி கொண்டு அவனது தலையைச் சிதறடி.
 • உன் தினத்தைத் திட்டமிடு அதனால் நீ எப்போதுமே பரபரக்கத் தேவையில்லை
 • உனக்கு நன்மை புரிவோரைப் பாராட்டு. உனக்கு அந்தத் தேவைகள் இல்லாத போது அவற்றைப் புரிந்திருப்பினும், அவற்றுக்காக அவர்கள் கூலி பெற்றிருப்பினும் கூட அவர்களைப் பாராட்டு.
 • தேவையானவர்களுக்கு அளிப்பதற்குப் பதிலாகப் பணத்தை வீணாக்காதிரு.
 • சமூகம் என்பது குறைபாடுள்ளதே. அதைத் தொலைவில் காணும் போதே கண்ணீர் சிந்திவிடு. உன் கற்பனையை விட அதன் குறைகள் அதிகம்.
 • எதையாவது இரவல் வாங்கினாயெனில் அதை நல்ல நிலையில் திரும்பக் கொடு.
 • எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு நெகிழி அல்லது உலோகத்தால் உண்டானவைகளைக் காட்டிலும் மரத்தாலானவைகளை உபயோகி.
 • அதோ அந்தப் பறவையைக் காண்.
 • இரவு உணவு முடிந்த பிறகு தட்டைக் கழுவிவை.
 • அமைதியாக இரு.
 • உன்னைக் கொல்வதற்கான ஒரு விருப்பத்தைத் தெரியப்படுத்தாத குடிமக்கள் வாழ்கிற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்க.
 • உன் குழந்தைகள் உன்னை நேசிக்க வேண்டும் என்று எதிர்பாராதே. அவர்கள் விரும்பினால் அவர்களாகவே விரும்புவார்கள்
 • ஆன்மீகத்துள் தியானித்திரு.பிறகு நீ விரும்பினால் சிறிது தூரம் செல்.
 • அவ்வப்போது, எப்போதாவதேனும் பாடல் பாடுக.
 • நேரந்தவறாதிரு, ஆயினும் தாமதமானால் நீளமான விரிவான காரணங்களைச் சொல்லாமலிரு.
 • மிகவும் சுயவிமர்சனமோ அல்லது தற்புகழ்ச்சியோ செய்யாதிரு.
 • முன்னேற்றம் இருப்பதாக நினையாதே, அப்படி ஒன்றுமேயில்லை.
 • மாடியில் நடைபழகு.
 • நரமாமிசம் புசியாதிரு.
 • எது நடக்கவேண்டும் என நினைக்கிறாயோ அதைக் கற்பனை செய், அதன் பின் அதனை நடக்கவிடாத எதையும் செய்யாதிரு.
 • உன் செல்பேசியை வாரமிருமுறையாவது அணைத்து விட்டு அகன்றிரு.
 • உன் சன்னல்களைச் சுத்தமாக வைத்திரு .
 • அந்தரங்க லட்சியங்களின் அனைத்துத் தடயங்களையும் அழித்திடு.
 • அழிவு எனும் சொல்லை அடிக்கடி உபயோகியாதிரு
 • அவ்வப்போது உன் தேசத்தை மன்னித்திரு. அது முடியாதெனில் வேறொரு தேசத்துக்குப் போய்விடு.
 • களைப்பை உணர்ந்தாயெனில், ஓய்வெடு.
 • எதையாவது வளர்த்தெடு.
 • “நாம் அனைவரும் சாகப் போகிறோம்!” என்று முணுமுணுத்துக் கொண்டு ரயில் நிலையங்களில் அலையாதே.
 • வாழ்க்கையின் வெவ்வேறு படிநிலைகளில் உள்ளவர்களிலிருந்து உன் உண்மையான சினேகிதர்களைக் கணக்கெடு.
  உன் முதுகில் கோடிட்டிறங்கும் வெந்நீரின் மகிழ்வு, குளிர்காற்றின் வருடல், எதையாவது மென்று பார்க்கையில் கிட்டும் இன்பம், ஆழ்ந்த உறக்கம் போன்ற எளிய இன்பங்களைக் கொண்டாடு.
 • “தொழில் நுட்பம் அற்புதமானது இல்லையா?” என்று வியக்காதிரு
 • அனுதினமும் உன் தசைகளை மடக்கி விரிக்க.
 • முதுமை கொள்வதை எண்ணி மனம் குலையாதே, அது மேலும் உன்னை முதுமையாக்கி மனம் குலையச்செய்யும்.
 • ஒரு நேரத்தில் ஒன்றைப் புரி.
 • உன் விரலில் நெருப்புப் பற்றினால் உடனே அதைக் குளிர்ந்த நீரில் ஆழ்த்து. உன் விரலொன்றை வெட்டிக்கொண்டாயானால் இருபது நிமிடம் காற்றுப்பட உன் கரத்தைப் பிடித்திரு. குளிர் மற்றும் புவியீர்ப்பு விசையின் குணமாக்கும் சக்திகளைக் குறித்து அதிசயித்துப் போவாய்.
 • காதைப் பிளக்க சீழ்க்கையடிப்பது எங்ஙனம் என்று அறி.
 • பிரச்சினையின் போது அமைதியாயிரு. பிரச்சினையாக சூழலும் அமைதியாக நீயும் இருத்தல் வேண்டும்.
 • பாலுறவைக் கொண்டாடு, ஆனால் உன் இளமை,மத்யம,முதுமைகளில் குறுகிய காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் வெறிகொள்ளாதிரு.
 • எல்லாவற்றின் எதிர்ப்பதத்தையும் எண்ணிப்பார்.
 • கடலில் அதிகத் தொலைவு நீந்தி விட்டதாக பயம் வருமாயின் திரும்பி உயிர்காக்கும் படகை நோக்கிச் செல்.
 • உன் குழந்தைத் தனத்தை உயிர்ப்போடு வைத்திரு
 • கடிதங்களுக்குச் சரியாக பதிலளி. கவரத் தக்க தபால்தலைகளைப் பயன்படுத்து, அதிலொரு சூறாவளிச் சித்திரமிருப்பது போல்
 • அவ்வப்போது அழு ஆனால் தனியாக இருக்கையில் மட்டும். பிறகு எத்தனை நன்றாக உணர்கிறாய் என்று பார். நன்றாக உணர்வதற்கு வெட்கப்படாதிரு
 • புகையை உள்ளிழுக்காதே
 • ஆழமாக மூச்சுவிடு
 • காவல்காரரிடம் ரொம்ப மிடுக்குறாதிரு.
 • சாலை நெரிசல் சரியாகும் வரை தடையை விட்டு அகலாதிரு. தடுப்பானில் இருந்தபடியே உன்னால் நடைவாசிகளில் யாரெல்லாம் அலைமோதும் கூட்ட நெரிசலின் நடுவே சிக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுணர முடியும்.
 • நல்லவனாயிரு
 • வெவ்வேறு சாலைகளில் நடந்து செல்
 • பின்னால் நோக்கு
 • அழகு என்பதன் தோற்றத்தையும் உண்மை என்பதன் தோற்றமின்மையினையும் நினைவில் கொள். உண்மையென்பதன் எண்ணமானது அழகின் எண்ணத்தை விடவும் பலமிக்கது என்பதையும் கண்டுணர்.
 • சிறைவிட்டு அகன்றேயிரு
 • வாழ்வின் பிற்பகுதியில் விசித்திரமாக மாற்றமடைக
 • பற்கறையைக் கட்டுப்படுத்தும் சூத்திரத்தினாலான புதிய கோல்கேட் பற்பசையைப் பயன்படுத்து.
 • தெரிந்தவர்களையும் நண்பர்களையும் மருத்துவமனைக்குச் சென்று பார், எப்போது அகலவேண்டும் எனத் தோன்றுகிறதோ அப்போது கிளம்பிவிடு.
 • உனக்கு நேர்மையாகவும் பிறரிடம் ராஜதந்திரத்தோடும் இரு
 • நிறையப் பித்துக்கொள்ளாதிரு. அது நேரத்தை விரயமாக்குவது.
 • சிறந்த புத்தகங்களை வாசி, மறுவாசிப்பும் செய்
 • மண் வெட்டியால் ஒரு குழி தோண்டு.
 • குளிர்பருவத்தில் உறங்கச் செல்வதற்கு முனுன் படுக்கையறையைத் துடைத்து வை.
 • அறிக, துல்லியமானவை என்பன கிரிக்கெட் ஆட்டத்தில் முன்னூறே பந்துகளை வீசுவதும் பேஸ்பாலில் இருபத்தேழு வீச்சையும் தவறாமல் அடிப்பதும் மட்டும் தான்.
 • நிறைய நீரருந்து. உனக்கு அருந்தத் தோன்றுகையில் கேள் தயவு செய்து நீர் தருக என.
  போலவே நான் எங்கே சிறுநீர் கழிக்கட்டும் எனக் கேட்காதே எங்கே நீர்ப்பிறை எனக் கேள்.
 • உடல் பாகங்களிடம் கனிவாக இரு
 • நாற்பது வயதின் தொடக்கத்திலிருந்து சில வருடங்களுக்கொரு தரமாவது உன் நம்பகத்துக்கு உரிய மருத்துவரிடமிருந்து முழுமையான உடல்நல ஆலோசனையைப் பெறு.
 • வருடத்துக்கு ஒரு முறைக்கு மேல் செய்தித் தாள் வாசிக்காதே
 • மாண்டரின் மொழியில் வணக்கம் நன்றி மற்றும் உணவைக் குத்தியெடுக்கும் குச்சி போன்றவற்றைச் சொல்லப் பழகு.
 • ஏப்பத்தையும் “பின்காற்றை”யும் வேகமாய்ப் பிரிக.
 • அயல்நாட்டவரிடம் அதீத அன்போடிரு
 • நிழல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளைப் பார்த்து அவற்றில் உன்னை ஒரு அல்லது சகல பாத்திரங்களாகவும் கற்பனை செய்துபார்.
 • குப்பையை சுத்தம் செய்.
 • வாழ்தலை நேசி
 • சரியான சில்லறையைப் புழங்கு.
 • தெருவில் துப்பாக்கி சுடுகிற சப்தம் கேட்டால் ஜன்னலுக்கு அருகே செல்லாதிரு

***
சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டிப் பல கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. அனேக புத்தகங்களைக் கைப்பற்றியாயிற்று. இனி ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். மிகச்சமீபத்தில் வாசித்த இரண்டு தொகுப்புகளிலிருந்து மனம் கவர்ந்த சில கவிதைகளை இங்கே தருகிறேன்.

இந்த அத்தியாயத்துக்கான கவிதைகள்

1
குளிருக்கு இதமாக
அங்கியை இறுக்கிக் கட்டி
இந்தச் சில்லிட்ட தரையில் அமர்ந்து
உன் இளமையைப் பருகுவதைத் தவிர
வேறென்ன இருக்கிறது
இந்த இருள் பிரியாத காலைகளுக்கென?

நீ இல்லாத இடத்தில்
உன் நிழல்தான்
எவ்வளவு கம்பீரமாக வீழ்கிறது!

இப்படித் தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்.
தரங்கிணி முருகையன்
உயிர்மை வெளியீடு
விலை ரூ 160

மேற்காணும் கவிதையில் இரண்டு சித்திரங்களைச் செருகியது நல்ல முறையில் பலிதமாகிறது. என்னளவில் இதன் இரண்டாம் பகுதி நீ இல்லாத இடத்தில் உன் நிழல் தான் எவ்வளவு கம்பீரமாக வீழ்கிறது என்ற மூன்று வரிகள் முற்பகுதியை விடவும் பேருருக் கொண்டு ஒலிப்பதாகத் தோன்றுகிறது. நிழல்தான் என்ற சொற்கூட்டை எத்தனை முறை படித்தாலும் சட்டெனக் கடக்கவே முடியவில்லை. தமிழ் மொழியின் இயல்பான சுழல் தன்மை இப்படிச் சின்னஞ்சிறிய சொற்களின் மாவுருத் தோன்றல்களாக கவியிடை நேர்தல்களை நிகழ்த்துவது பேரெழில்.

உடைந்து எழும் நறுமணம் (Udainthu Ezhum Narumanam) (Poems) (Tamil Edition) eBook : Isai: Amazon.in: Kindle Store
2
ருசி

கைகூட நடுங்கவில்லையெனில்
அதென்னடா குற்றம்?!

3
சிசு

வான் நோக்கி மல்லாந்திருக்கிறேன்
மொட்டைமாடி
தொட்டிலென்றாட
இப்போது
ஒரேயொரு
தேன்ரப்பர் போதும்

இசை
உடைந்து எழும் நறுமணம்
காலச்சுவடு வெளியீடு
ரூ 175

இசையின் கவிதைகள் தமது சுழற்சியின் அடுத்த வளைதலை எட்டியிருப்பதாகத் தோன்றுகின்றன. நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் தொகுதியில் இருந்து சற்றே விலகத் தலைப்பட்டிருக்கும் கவிதைகளை இந்தத் தொகுதியில் காண்கிறேன். சொல்லத் தெரியாத ஏக்கமொன்றை, அலுப்பினூடே பேச விழையும் சொற்களால் வரைய முனைந்த பல துண்டுகளாலான சித்திரம் இக்கவிதை நூல்.