சாலச்சுகம் 15

முத்தத்தின் மீனினங்கள்

அன்பே
பேசியபடியே பிரிந்து செல்ல ஏதுவாய்
ஒருதரம் சந்திக்கலாமென முடிவாயிற்று.
முன்னம் ப்ரியங்களைக் கொட்டிய
வழமையின் சந்திப்பிடங்களில்
எதைத் தேர்வெடுப்பது
என வெகுநேரம் குழம்பினோம்.
பிற்பாடு
சன்னமான ஒளிச்சாரலுடனான
தேநீர்த்தலத்தில்
எங்கே நட்பன்பைக் காதலாக்கிக்
கதைத்துக் கொண்டோமோ அங்கேயே
சந்தித்துக் கொள்ளலாமென அறிவித்தனை
மறுப்பதற்கேதுமின்றிச் சம்மதித்தனன்
திரும்பத் தந்துகொள்வதற்கான
ப்ரியத்தின் வாக்குரிமையற்ற
பரிசுச் சவங்களின்
பட்டியலைக் கைக்கொண்டபடி
வந்தமர்கிறாய்.
இன்னும்
காதலுக்கானவையாய்த்
துடித்துக்கொண்டுதான் இருக்கின்றன
உன் முத்தத்தின்
உன் பார்த்தலின்
வெவ்வேறு மீனினங்கள்.
வியாபாரத்தின்
இருவர் போலக் கரங்குலுக்கிக் கொள்கிறோம்.
பிரிதலின்
ஒப்பந்தகாலம்
தொடங்கலாகிறது அந்தக் கணத்தில்
செய்வதறியாமையின்
துன்ப இசை
மெல்ல வழிகிறது
எங்கிருந்தோ
விலகிப்போவதன்
பானத்தைக் குவளையில் வார்ப்பவன்
ஒருகணம்
புன்னகைக்க முயல்கிறான்.
நம் இருவருக்குமே இதுதான் நல்லது
எனத் தொடங்குகிறாய் நீ.
வேற்று மொழிக்காரனின் தேவசெய்தியாய்
அதனைப் பெற்றுக்கொள்கிறேன்.
மிக அமைதியாக
விடைதந்து கிளம்புகிறாய்.
சற்றுநேரம் கழித்துக் கட்டணத்தைப்
பெற்றுக்கொண்ட புன்முறுவல்காரன்
மீதத் தொகையோடு
சில்லறைக்குப் பதிலாய்ச் சில
சாக்லேட்களையும்
வைத்து விட்டு நகர்கிறான்.
பயணத்தலத்தில்
திடீரென்று
சர்க்கரை நோயாளியாக
அறிவிக்கப்பட்ட ஒருவனைப்போல
அந்தச் சாக்லேட்டுகளின்
அழையா நுழைவை
உற்றுப் பார்த்தல்
சாலச்சுகம்