சாலச்சுகம் 16

                  இரண்டு துண்டாய் உடைந்த மழை பற்றிய கவிதை                   

 


 

1
மற்ற மழைகளைப் போலத்தான்
அந்த மழையின் துவக்கத்திலும்
நனைவதற்கான
ஆடைகளை அணிந்துகொண்டு
கிளம்புகிறேன்.
“மழையில் எங்கே..?”கேள்விக்கு
அந்தமுறையும்
எந்தப் பதிலையும் வழங்காமல்
நடக்கிறேன்
அவசரமாய் வீடு நோக்கி வரும்
மாடிக் குடித்தனக்காரர்
“நல்ல மழை…குடை எடுத்துக்கலியா..?
பொறுத்துப் போகலாமே” என்று
ஆதுரமாய்க் கேட்டதை
மறுத்தவாறே நகர்கிறேன்.
இன்னும் நாலு அடி எடுத்து வைக்கிறதற்குள்
இன்னும் யாராவது
மழைபொழிவதைக் குறித்த
தத்தமது
எச்சரிக்கையைத் தருவார்கள் எனும் அச்சத்தில்
வேகவேகமாய் நடந்து
வசிக்கும் தெருவைத் தாண்டி
இன்னொரு தெருவினுள்
புகுந்து கொள்கிறேன்.
ஒரு தரம் நிமிர்ந்து வான் பார்க்கிறேன்.
மழை என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறது.
தாரைத் தோரணங்கள் தீர்வதாயில்லை.

2
இதுவரை
சொல்லப்படாத மழையின் கதையா
என்றெனக்குத் தெரியாது.
மற்ற மழைகளைப்
போலத்தான்
நிகழ்ந்து
கொண்டிருக்கிறோம்
நனைத்தலின்
நிமித்தம் நனைதல்.
சாலச்சுகம்