சாலச்சுகம் 3


மோனத்தவம்

1
மேதமையோவென்று
நினைத்திருக்கக் கூடும்
இத்தெய்வம்
முன்னின்ற தேவகணம்
வேண்டிக் கொள்வதற்கு
ஏதும் தோன்றாத
பேதமை
என்
மோனம்.
2
விபத்தில்
வெட்டுண்ட கரம்
இன்னுமிருக்கிறாற்
போலவே
அவ்வப்போது
பாவனை செய்யும்
பழைய காலத்து
ஞாபகக் கூச்சம்
3
கிணற்றில்
எட்டிப் பார்க்கும்
போது
யாரோ
பின்னாலிருந்து
தள்ளுகிறாற்
போலொரு கனா
திக்கித்து விழிப்பதற்கு
இப்போதெல்லாம்
எங்கே இருக்கிறது
எட்டிப்பார்க்க
ஏதுவாய்
ஒரு கிணறு?
4
என்
நிழலுக்குத் தான்
இப்படி
ஒரு
வாழ்வு.
வேண்டா
வெறுக்க
அதற்கொரு
நான்.
5.
பூட்டிய
அறைக்கதவைத்
திறக்க
மறுக்கும்
பைத்தியத்தின்
மௌனம்
போல
ஒரு
வாழ்தல்
சாலச்சுகம்