தேனில் மிதக்கும் தெப்பங்கள்

தேனில் மிதக்கும் தெப்பங்கள்

காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை

இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே அதிகம். பாடல்கள் கதையின் பெரும்பகுதியை நகர்த்தி அதன் முக்கியக் கூறுகளைக் காத்திரமாகச் சொல்ல முற்பட்டன. படத்திலிருந்து வெளியேறுகிற ரசிகன் பல பாடல்களைத் தன் மனத்தோடு எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். பார்த்த படத்தைத் திரும்பவும் பார்ப்பதற்கான ஈர்த்தல் நிமித்தமாகப் பாடல்கள் இயங்கின. பார்க்கப் பார்க்கச் சலிக்காத தேனில் மிதக்கும் தெப்பங்களாகப் பாடல்கள் மனநதிகளில் நீந்தின.

இசையும் பாடலும் ஒருமித்துக் கிளைத்த ஆரம்ப காலம் தொடங்கிப் பாடல்களை உருவாக்குவதிலும் படமாக்கலைப் போலவே காலாதீத மாறுதல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. சின்னப்பா கிட்டப்பா தியாகராஜபாகவதர் போன்ற சொந்தக் குரலில் பாடி நடித்த நடிகர்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்பதை அடுத்த காலத்தின் புதிய நட்சத்திர நாயகர்கள் தகர்த்தனர். எம்ஜி.ஆர் சிவாஜி என்ற இருவருக்கும் பாடத் தெரியாது என்பது அவர்கள் புகழ்வலத்தில் எந்தக் கடினத்தையும் ஏற்படுத்தி விடவேயில்லை. முந்தைய காலத்தில் ஒரு படத்துக்குள் முப்பத்தைந்து பாடல்கள் கூட இயல்பாக இடம்பெற்று வந்ததுவும் யதார்த்தம். இசையும் பாடலும் ஒருமித்த மனங்களிலிருந்தே வெளிப்பட்டது முதற்காலம். பாபநாசம் சிவன் தொடங்கிப் பலரும் அப்படியான காலத்தில் கோலோச்சினர்.

பாடி இசைத்து நடித்த இசைமுகங்களின் கரங்களிலிருந்து பாடல் வெவ்வேறு மனத்திறன்களின் கூட்டுருவாக்கத்திற்கு மாறி ஒலித்தது. கவிதையின் மரபுசார்ந்த பிடிமானங்களும் தளர்ந்தன. பாடலாசிரியர்களின் எண்ணத்தில் பிறந்த பாடலை இசைக்குள் இயைந்து குரல்களின் வழி ஒலிக்கச் செய்கிற தீர்மான எல்லைகளுக்குள் பாடலின் ஆக்கம் நிலைபெற்றது. மெட்டுக்குப் பாடல் எழுதுவதும் பாட்டெழுதி அதற்கு இசையமைப்பதும் “ஒரு நதி-இருவழி” என்றாற் போல் பல்கின. குரல்கள் பாடல்களைப் பெற்றுக்கொண்டு ஒலிக்கோலங்களை எழுதிப் பார்த்தன. தமிழ்ச்சமூகம் பாடல்களினுள்ளே சுகமாய் உறைந்து கிடந்தது.

இசையும் பாடலுமாகக் கிளைத்த பிறகு பாரதிதாசன் ,உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சை ராமையாதாஸ் மருதகாசி கா.மு.ஷெரீஃப், கண்ணதாசன் கு.மா.பாலசுப்ரமணியம் வாலி புலமைப்பித்தன் முத்துலிங்கம் நா.காமராசன் என்று பாட்டுப் பரம்பரை தொடர்ந்தது. பலரும் இயற்றிய பல பாடல்கள் காலத்தால் அழியாத கோலங்களாக மனம் கவர்கின்றன.பாடலின் உருவமும் உள்ளடக்கமும் தொனியும் லயமும் தன்மையும் எனப் பாடலின் உள்ளும் புறமும் மாற்றமடைந்து பாடல்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது. பாடல்களின் உருவமும் பெரிய தொகையறாவும் பல்லவியும் நேராய் ஒரே ஒரு நெடுஞ்சரணமும் என்றெல்லாம் இருந்தது மாறிற்று. நீண்ட ஆலாபனையுடன் பாரம்பரிய இசையின் பிணையிலிருந்த பாடலின் உருவம் மெல்ல வெளியேறியது. திரைப்பாடலுக்கான வடிவம் நளினமும் புதுமையும் கொண்ட சுதந்திரவாதத்தின் திறப்புக்கேற்ப இயைந்து வரலாயிற்று.

திரைப் படம் வெளிவரும் முன்பாகப் பாடல் வெளியாகிறது. படத்தைப் பற்றிய முதல் அபிப்ராயத்தை ரசிகனின் மனத்தில் பதியச் செய்துவிடுகிறது. ரசிகனைத் திரை நோக்கி நகர்த்துகிற ஊக்குவிசையாகவே ஒலிக்கிறது. ‘பாடல் இல்லாத படம்’ என்பதைப் புதுமை என்ற அளவில் எடுத்துக் கொண்டாலும் மின்சாரம் இல்லாத தினம் போலத் தான் ரசிக மனம் கசகசத்தது. பாடலில்லாத படம் சர்க்கரை நீக்கம் செய்யப்பட்ட கரும்பு போலத் தான் என்றால் பொருந்தும் படம் வெளியாவதற்கு முன்பே தன் ஒலித்தலைத் தொடங்கி விடுகிற பாடல் உண்மையில் படத்தின் ஓட்டம் நிறைவடைந்த பின்னரும் பன்னெடுங்காலம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எந்தப் பாடல் எத்தனை முறை ஒலிக்கக் கூடும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கணித்திட முடியாது. உள்ளளவும் உள்ளதொன்று அஃது.

நூற்றாண்டுப் பெருங்கடலோட்டம் தமிழ்த் திரையுலகத்தின் வரலாறு. திரைச் சரிதத்தை எடுத்துக் கோத்து, மொத்தம் செய்து தொகுப்பது, கடலை எடுத்து எதிர்ப்பக்கம் இடுவது போன்ற கடினம். அதிலும் திரைப்பாடல்களின் மொத்தத்தையும் சீர் தூக்கிப் பார்ப்பது இருக்கின்றதே அதனினும் பெரிய காரியம். இந்த நூல் “வைரமுத்து வரை” அப்படியான பெரிய காரியத்தை மெய்ப்பிக்கிறது.தொகை என்றோ ஆய்வு என்றோ இரண்டு வகைகளுக்குள்ளேயும் இந்தப் புத்தகத்தை இருத்திப் பார்க்க முடியாது. இது ஆய்வும் விமர்சனமும் கலந்த தொகை நூல். தன் மனத்தின் கருத்தாக்கங்களோடு பலரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் சொன்னவற்றை எல்லாம் எடுத்துக் கோத்து இந்த நூலை உருக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். கடினமான உழைப்பும் காலத்தொலைதலும் இல்லாவிட்டால் இப்படியான நூல் சாத்தியமே இல்லை.

திரைப்பாடல்களின் காலாதீத வளர்சிதை மாற்றங்களுக்குக் காரணகர்த்தர்களாக விளங்கிய பாவலர்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் தெளிவாக நிகழ்த்துகிறது.சலனப்படமாக இருந்து பேசுவதாகவும் பாடுவதாகவும் மாறிய நாள் முதல் நேற்றைய தினம் வெளியான படம் வரையிலான கடலளவு மொத்தத்தைக் காலவரிசைப்படி காணத் தந்திருக்கிறார் ஆசிரியர். பாடலெனும் பெருந்தேர் பவனி வந்த பாதைகளைக் குறித்த உலாவரலாறு இந்நூல்.

பேரா.சண்முக சுந்தரம் ஓர் ஆய்வாளராகவும் அதே சமயத்தில் சினிமா மீது பித்துக் குறையாத ரசிகனாகவும் ஒருங்கே நின்றபடி இந்த நூலை இயற்றியிருக்கிறார். இதனை வாசிக்கிற யார்க்கும் எனக்கு இருப்பதைப் போலவே அவர் சொல்லிச் செல்கிற செய்திகளினுள்ளே பல கலைமுகங்களின் மீதான அவரது அபிப்ராயங்களோடு முரண்கள் இருக்கக் கூடும்.எளிய ரசிகனின் ஆதங்க நியாயமாகவே அவற்றை முன்வைப்பதாகக் காவ்யா சண்முகசுந்தரம் குறிப்பிடுகிறார். அதனை விடுத்துப் பார்த்தால் அவர் காணத் தருகிற கால பிம்பத்தின் கலை சாட்சியங்கள் முக்கியமானவை.காவ்யா சண்முகசுந்தரம் முன்வைக்கிற கருத்துக்களில் ஏற்பும் விடுபடுதலும் இருந்திடலாம். பாடலாசிரியர்களின் வரலாற்றைப் பதிவு செய்திருப்பதில் ஆசிரியர் காட்டியிருக்கும் முனைப்பும் ஈடுபாடும் மெச்சத் தக்கவை.

ஒருவர் எழுதியது ஒரே ஒரு பாடல் என்றாலும் அவரது பெயரையும் எழுதிய பாடலையும் இடம்பெற்ற படம் இத்யாதி விபரங்களையும் தவற விடாமல் இந்த நூலின் சரளிவரிசைக்குள் இடம் தந்தியிருப்பது பாராட்டப் பட வேண்டியது. தன்னையே மறந்து ஒருவர் நனவிலிக்குள் திரிந்தாலும் கூட அவர் ஒரு பாடலை எழுதியிருந்தார் என்றால் தமிழ்த் திரைப்பா சரிதத்தில் அவருக்கு ஒரு இடத்தை ஒதுக்கித் தந்து ஒழுங்கு செய்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு சாசனப்பேழையே. வாழ்வோருக்கு அப்படித் தம் பெயரை இப்புத்தகத்தில் காண்பது ஒரு மலர்ச்சி என்றால் வான் புகுந்தோரின் பெயர்களை இந்தப் புத்தகத்தில் காண்கையில் அவர் தம் சந்ததியினர்க்கும் இந்த நூலானது நிச்சயமாகவே ஒரு பொக்கிஷத் திறப்பு.

நூலெங்கும் சினிமாத் துறையில் பன்னெடுங்காலமாகப் பெரிதும் அறியப்பட்ட பலரும் வலம் வருகிறார்கள். அவர்தம் வார்த்தைகள் அவரவர் குரல்களிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. “இன்னார் சொன்னார்” என்று வருபவை பெரும்பாலானவற்றில் பலரும் தம்மைப் பற்றி மனம் திறப்பதற்காகவே இதழ் திறக்கிறார்கள். இசை பாடல் குரல் நடிப்பு இயக்கம் எனப் பலதரப்பட்ட கலைஞர்களைப் பற்றிய விவரணைகள் கருத்துகள் வெவ்வேறு காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளின் பதிவுகளிலிருந்து எடுத்தாளப் பட்ட வார்த்தை விள்ளல்கள். அருகருகே பூத்த வெவ்வேறு மலர்கள் ஒருங்கிணைந்து மணம் வீசி மனம் களவு செய்கிறாற் போல நூலெங்கும் பல கலைஞர்களின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன.

இது வெறுமனே விதந்தோதுகிற மெல்லின நூல் அல்ல. மொத்தமாய்க் கடிந்து கசந்திடும் தன்மையினதும் அல்ல. இரண்டும் சேர்ந்தொழுகுகிற மத்திமக் குரலொன்றைத் தனதாக்கித் தொனிக்கிற புதுவகைத் தொகை நூல், பாடலூர்க் காற்றை வருடத் தருகிற தோகை நூல் இஃது. இதன் முதன்மை என நான் கருதுவது இதனுள் அடங்கிக் கிடக்கிற உப-நுட்பத்-தரவுகள். பல நூறு கவிஞர்களைப் பற்றிய சின்னஞ்சிறு அறிமுகத்தினூடாக அவர்களைப் பற்றி அறியவேண்டிய ஆரம்பங்களாய் அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நன்கு அறிந்த பலரைப் பற்றிய அறியாத் தகவல்களால் நிரம்பியிருக்கிற இந்த நூல் ஒரு தரவுப் பொக்கிஷம் என்றாலும் தகும்.

பேட்டிகளினூடாக இன்றைய தலைமுறையினரும் இனிவரும் சந்ததியினரும் பல முன்னோடிகளின் வாழ்க்கைச்சுருக்கங்களை அறியமுடிவது அடுத்த மகத்துவம். விருதுகளாகட்டும் பணிபுரிந்த படங்களின் பெயர்களாகட்டும் சினிமாவைத் தொடர்ந்து நேசிக்கின்ற யார்க்கும் இந்த நூல் ஒரு ஆகம அரிச்சுவடியெனவே மிளிர்கின்றது. இதனை வாசிக்கையில் கிடைக்கிற திறப்புக்களைத் தொடர்ந்து செல்வது புதிரோங்கிய பெருங்காட்டின் ஆழதூரம் வரை சென்று திரும்புவதற்கான வரைபடமுழுமையைக் கைக்கொள்வதைப் போன்றது. சினிமா எனும் பெருங்கலைக்குக் காவ்யா சண்முகசுந்தரம் அணிவிக்கிற முத்தார முழுமை இந்த ‘வைரமுத்து வரை’ எனும் நூல்.

துரித இரயிலில் சஞ்சரிக்கையில் நம் இருக்கைக்குப் படர்க்கையில் யாரென்று அறியாத சிலர் தமக்குள் உரையாடத் தொடங்குவார்கள். பொழுதைப் போக்கலாமே என்று ‘என்ன பேசுகிறார்கள்’ எனக் கவனிக்க ஆரம்பிப்போம். சற்றைக்கெல்லாம் மெய் மறந்து அந்த உரையாடலின் உள்ளே ஒரு இருக்கை போட்டு அமர்ந்துகொள்வோம். பயணம் நிறைவது வரை கண்களறியாமல் இமைத்துக் கிடப்போம். காதுகள் நிறையக் கேட்டுக் களிப்போம். அந்த உரையாடல் நமக்குப் பல சேதிகளைத் தந்திருக்கும். சில புதிய சாளரங்களைத் திறந்திருக்கும். நிறைய தகவல்களைத் தத்துக் கொடுக்கும். ஏற்கனவே கேள்விப்பட்ட பலவற்றைத் திருத்தியிருக்கும். மொத்தத்தில் செல்லாத ஊரில் செல்லத் தேரில் வலம் வந்தாற் போல் மனம் பூரிக்கும். இந்த வாசிப்புணர்வை வார சஞ்சிகைகள் தொடர்ந்து ஏற்படுத்துவதைக் கண்டிருப்போம். அதையே காத்திரமான தொகை நூலொன்றில் ஏற்படுத்த முடியும் என்பது ஈர்ப்புக்குரியது.

மனித குலம் இசையின் மீது கொள்கிற பற்றின் பின் இயங்குகிற உளவியல் நுட்பமானது. உழைக்கும் மனிதர்களுக்கும் சுகவாசிகளுக்கும் இசையும் பாடலும் ஒரே தன்மையிலானதாக இருக்க வாய்ப்பில்லை. காவ்யா சண்முக சுந்தரம் நிகழ்த்துக் கலை வரலாற்றில் குறிப்பாக நாட்டுப்புறவியலில் கற்றுத் தேர்ந்தவர். அவருடைய மனம் கலைகளின் கூட்டாண்மையாக சினிமா எப்படி உருக்கொண்டு இன்றைக்குத் தலையாய கலையாக நிலைபெற்றிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. இருப்பதை உற்று நோக்குவதிலும் இல்லாமைகளைப் பதிவு செய்வதிலும் ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்திலே தான் அவருடைய பகிர்தல்கள் அமைந்திருக்கின்றன. நெடிய காலத்தையும் கலைப் புழக்கத்தில் ஒளிர்ந்து மிளிர்ந்த மனிதர்களையும் வகைப்படுத்துகிற அதே மனப்பாங்குடன் தான் ஒரு பாடல் ஒரு படம் என்று பங்கேற்றவர்களைப் பற்றிய பகிர்தலையும் செய்திருக்கிறார். இப்படியான மனச்சமன் நூல் முழுவதுமாக விரிந்து நிறைகிறது.

பல்வேறு கலைஞர்களைப் பற்றிப் பலரும் உரைத்ததையும் தன் மனம் உரைப்பதையும் கலந்து தந்திருக்கும் காவ்யா சண்முகசுந்தரம் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் கடந்த நாற்பதாண்டுகளாக ஒளிர்ந்து கொண்டிருக்கக் கூடிய வைரமுத்துவின் பாடல் இயக்கத்தைக் குறித்து ஒரு ஆய்வு மாணாக்கரின் மன அளிப்போடு நெடிய ஆய்வுரையொன்றினை நிகழ்த்தியிருக்கிறார் .வைரமுத்துவுடன் கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பராக இருந்து வருபவரான காவ்யா சண்முக சுந்தரம் “வைரமுத்துவின் வருகைக்கு முன்-பின்” என்று தமிழ்ப்பாடல் புனைவுலகைப் பிரித்துப் பகுத்துப் பார்ப்பதைத் தன் நூல்-நோக்காகக் கொண்டே இந்தப் புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் . நாற்பதாண்டுகளைக் கடந்து தமிழின் திரைப்பாடல் முகமாக வைரமுத்துவை முன் நிறுத்துவதற்கான காரணங்களை அழுத்தமாக ஆய்ந்திருக்கிறார்.

திரையுலகத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுவதோடு நின்று விடாமல் ஒரு சமூகத்துக்கான நவிலலைச் சாத்தியம் செய்தவர் கவிஞர் வைரமுத்து. நிமித்தத்துக்குத் தன் கருத்தை அகழ்ந்து தந்தால் போதும் என்று கருதியிருந்தால் இசை-கதை-மொழி-குரல் என எல்லாவற்றுடனும் சமரசங்களை செய்தபடி பயணித்திருக்க முடியும். தன் பாடல்களைப் பெற்றுக்கொள்கிற சமூக மனங்களைப் பற்றிச் சிந்தித்ததனால் தான் பாடல் எழுதுவது குறித்த கொள்கை- கோட்பாடு-தீர்மானம்-பிடிவாதம் என்று முழுமையான மனவரைபடம் ஒன்றினைத் தயாரித்துக் கொண்டு இயங்குவதைத் தொடர்ந்து செய்து வருகிறார். பாடல் என்பது திரையகத் தேவை. அதனுள் கவிதை வருவது எழுதுகிறவனின் பொறுப்பு. தான் எழுதுகிற எல்லாப் பாடல்களிலும் முடிந்தவரை தனக்கும் மொழிக்குமிடையிலான ‘தீராப் பேராட்டம்’ ஒன்றின் நகர்தல்களை சாத்தியம் செய்வது என்று தொடர் உறுதியோடு பாவுலகில் பயணம் செய்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. திரையுலகம் அவரிடம் நிர்ப்பந்தித்துப் பெற்ற பாடல்களைத் தாண்டி அவர் மொழியுளி கொண்டு தன் மனதை அகழ்ந்து உருக்கொடுத்த சிற்ப-நிகர்ப்பாடல்களுக்காகப் பன்னெடுங்காலம் பேசப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வைரமுத்துவின் வருகை தொடங்கித் தற்கணம் வரை தருணங்களாகவும் உயரங்களாகவும் அடைதல்களாகவும் சம்பவங்களாகவும் மொழிதல்களாகவும் புரிதல்களாகவும் விமர்சனங்களாகவும் பதில்களாகவும் எனப் பல காரணிகளைக் கட்டிக் கோத்து எடுத்து அடுக்கி வழங்கியிருக்கும் விதம் சிறப்புக்குரியது. பாடலுலகத்தினுள்ளே நாற்பதாண்டுகளைக் கடந்து நடைபோடுகிற, பெரிதும் அறியப்பட்ட தமிழ்மொழியில் திரைப்பாடல்களுக்காக அதிக தேசியவிருதுகளைப் பெற்றிருக்கிற, தன் எழுத்துக்களுக்காக சாகித்ய அகாதமி உள்ளிட்ட விருதுகளை அடைந்திருக்கிற, வைரமுத்துவின் பாடற்பயண அடைதல்களை முன்னிறுத்தி எங்ஙனம் அவர் தமிழ்ப் பாடல்களின் நவமுகமாகத் திகழ்கிறார் என்பதைச் சரிவர நிறுவியிருக்கிறது காவ்யா சண்முகசுந்தரத்தின் “வைரமுத்து வரை” என்கிற நூல்.

நகரவைரமும் கிராமமுத்துவும் இன்னும் குன்றாமல் ஒன்றாக ஒளிர்ந்துகொண்டிருப்பதன் காரணங்களைத் தேட முயன்றிருக்கிறார். வேலை தேவை நிமித்தம் சந்தம் கதை சூழல் என்கிற நிர்ப்பந்த எல்லைகளுக்குள் இயங்கியபடியே பாடல் எனும் பெரும்பண்டத்தின் பாடுபொருட்களைத் தன்னால் ஆனமட்டிலும் விரித்துக் கொண்டே சென்ற ராஜபறவையாக வைரமுத்துவைக் கருதுவதற்கான காரணங்களை இந்நூல் கண்டடைந்திருக்கிறது. சாமான்ய மனம் ஒன்றின் கனவுகளினுள் சரிகை கலந்து அவனை ஏமாற்றப் பொய்யில் ஆழ்த்திவிடாமல் அவனது நிசங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சி நிதர்சனச் சாலையில் நடைபோடவைக்கிற உத்வேக ஒளிச்சாட்டையெனவே தன் பாட்டுக்களைப் படைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பதற்கான சான்றாவணமாகவே இந்த நூலை முன்வைக்கிறார் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம்.

தமிழ்த் திரைப்பட உலகத்தில் ‘பாரதிராஜா இளையராஜா வைரமுத்து’ ஆகிய மூவரின் இணையில் உருவான எத்தனையோ பாடல்கள் காலம் கடந்து ஒளிர்பவை. இந்தக் கூட்டாண்மையில் விளைந்த பாடல்களுக்கென்றே தனித்த ரசிகர்கள் இன்றும் உள்ளனர். பொற்காலத்தின் சந்தனக் கிரணங்களை நினைவின் வழி மீளுருச் செய்த வகையில் மீண்டும் மீண்டும் திறந்து கொள்கிற குமிழிக் கதவுகளாகவே சொற்களை வருடத் தருகிறார் காவ்யா.

வைரமுத்துவின் வருகைக்குப் பின் திரைப்பாடல் என்னவெல்லாம் மாற்றங்களை அடைந்தது என்பதைக் குறித்தெல்லாம் ஆழமாய்ப் பேசமுனைகிறது இந்த நூல். பல்வேறு இசையமைப்பாளர்கள் குரலாளர்கள் மற்றும் இயக்குனர்களுடனெல்லாம் இணைந்து பணியாற்றுகையில் தனக்குக் கிடைத்த பாடல் வாய்ப்புக்கள் ஒவ்வொன்றிலும் பாடலின் தன்மை- உட்பொருள்- நடை- நகர்வு- செய்தி- கருப்பொருள்- உள்ளுறைகிற ஆழம்- தொடமுனையும் தூரம்- எட்டிப் பிடிக்கும் உயரம் என்று சகல பரிமாண மாற்றங்களையும் எங்ஙனம் சதாசர்வகாலமும் முயன்றுகொண்டே இருக்கிறார் என்பதற்கான உடன்மொழியை இந்த நூல் கட்டமைக்க முயற்சித்திருப்பது முக்கியமான விடயம். நாற்பதாண்டுகளைக் கடந்த பிறகும் தன் மொழியைப் புதிதாகவே வைத்துக் கொண்டிருப்பதன் அறியமுடியாத ரகசியத்தை அறியப் பார்க்கவும் தவறவில்லை. வைரமுத்து பாடற்சாலையில் அவர் கடந்து வந்திருக்கும் ஒவ்வொரு மைலும் சாதனை பூசிய சாட்சியங்களே. காலமும் கவிஞனும் சேர்ந்து அடைந்திருக்கிற மொழியின் பயணதூரத்தில் பாடல்களுக்கும் நிச்சயம் பங்குபாகம் உண்டல்லவா?

திரைப்படம் தற்போது உடல் இளைப்பதற்காக உணவைத் தியாகம் செய்வது போல் ஆனமட்டிலும் பாடல்களின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டிருக்கிறது.இப்போதைய படங்களில் பாடல்கள் வடிவம் இழந்து ஒரு பல்லவியும் துண்டு துண்டாய் ஆங்காங்கே ஒலித்தடங்கும் சரணத் துண்டுகளாகவும் வளர்சிதை மாற்றம் பெற்றுவருகின்றன. இன்னுமொரு கடினமாகப் பாடல்கள் பதிவாக்கப் பட்டுப் படமுமாக்கப் பட்டுப் படங்களினின்றும் இடநீக்கம் செய்யப்படுவதும் நிகழ்கிறது. இவற்றை எல்லாம் தாண்டிப் பாடல்கள் சென்ற நூற்றாண்டின் பிடிமானத்திலிருந்து விலகிப் புதிய பரிமாணங்களை நோக்கிப் பயணிக்கத் தலைப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவை எல்லாம் நன்மை தீமை என்கிற இருமைக்குள்ளிருந்து விலகி யாரோ PAUSE பொத்தானை அழுத்தி இடைநிறுத்தம் செய்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலை சீக்கிரத்தில் மாறும் என்பது நிச்சயம். பாடல்களுக்கான பேருழைப்பைத் தொடர்ந்து நல்கி வரக் கூடிய கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் நூறு பாடல்களைக் கொண்ட நாட்படுதேறல் என்கிற பாடற்கொத்தினை உருக்கொடுக்கத் துவங்கியுள்ளார். ‘திரைப்படங்களுக்கு வெளியேயும் பாடல்கள்’ என்பதை மெய்ப்பித்து பாடல் என்கிற பெருவடிவத்துக்குப் புதுக்குருதி பாய்ச்சுகிற சொல்வழிபாடாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

“வைரமுத்து வரை” எனும் இந்த நூல் சினிமாக் காதலர்களுக்கான பயணக் குறிப்பு. கணிதத்தில் சூத்திரங்களின் எளிய பிரயோகத்துக்காகப் பரீட்சை எழுதும் போதும் கையோடு கொண்டுசெல்வதற்கு ஒரே ஒரு logarithm புத்தகம் மட்டும் அனுமதிக்கப்படும். அப்படியான அந்தஸ்துக்குரிய புத்தகமாகத் திரைப்பாடல் மீது காதல் கொண்ட யாருக்குமான நூலாக இந்த நூலை முன்மொழிய விரும்புகிறேன். அபிப்ராயங்களுக்கு அப்பால் தரவுகளை ஆய்ந்து கோத்த வகையில் இந்த நூலை விதையெனக் கொண்டு வேரெனப் பற்றி மேலும் பல நூல்கள் தமிழ்ப்பாடல்கள் குறித்து உருவாக முடியும் என்பது திண்ணம். இதனை அழகான நூலாக வெளியிடுகிற காவ்யா பதிப்பகத்துக்கும் அருமை நண்பர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கும் எண்ணற்ற வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்தல் இனிது

அன்புடன்
ஆத்மார்த்தி
23.06.2021