பிரதாப்

பிரதாப் போத்தன் தன் முகத்தாலும் கண்களாலும் பெருமளவு நடிக்க முனைந்த நடிகர். நடிகனுக்கு உண்டான நல்லதொரு லட்சணம் அதீதமான குரல் கொண்டு வசனங்களை ஏற்றி இறக்கிப் பேசி நடிப்பதன் மூலமாகப் பார்வையாளர்களின் கவனக் கவர்தலை நிர்ப்பந்திக்கக் கூடாது. வசனத்தைத் தாண்டிய, அதனைக் கட்டுக்குள் இருத்துகிற நடிப்பின் சாத்தியங்களைத் தன் வேடவாழ்வு முழுவதும் முனைந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தவர் பிரதாப். அறிமுகமான படம் முதல் சமீபத்தில் வெளியான சீ.பி.ஐ 5 வரை தன் இருத்தலைக் குறித்த யாதொரு கவலையும் கொள்ளாமல் வழங்கப்பட்ட வேடத்தைத் தன்னாலான சிறந்த வழியொன்றில் நல்கிச் சென்றவர். நல்ல நடிகர்.Pratap Pothen Wiki, Biography, Age, Movies, Family, Images - News Bugz

பிரதாப் தென் இந்தியாவின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களுடனான வணிகப் பறத்தலில் கொஞ்சமும் ஈடுபடாத குணாம்ச நடிகராகவே ஆரம்பம் முதல் நிலைகொண்டவர். தமிழில் கே.பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமல் எஸ்.வி.சேகர் பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் திலீப் எனப் பலரைத் தாண்டி இன்றளவும் அவர் நினைவுகூரப்படுகிறார் என்பது வெறும் செய்தியல்ல. அது அவரது வேடவாழ்வின் வெற்றி. அத்தனை சின்னஞ்சிறியது அந்தப் பாத்திரம்.

இயக்குனர் மௌலியின் ஆதர்ச வார்ப்பாகத் திகழ்ந்தது பிரதாப்பின் முகம். வா இந்தப் பக்கம் நன்றி மீண்டும் வருக போன்றவை அந்த இணை எடுக்க முயன்ற சில அருமையான படங்கள். நன்றி மீண்டும் வருக படத்தின் பாடல்கள் மறக்க இயலாதவை. இவள் தேவதை இதழ் மாதுளை பாடல் ஒரு இன்பசாகரம். எஸ்பிபி,ஷ்யாம் மற்றும் பிரதாப்பின் ஞாபகத் தீம் ம்யூசிக்காகவே அந்தப் பாட்டைச் சொல்ல முடியும். எண்பதுகளின் முற்பகுதியில் பிரதாப் நடிப்பில் பல நல்ல பாடல்களுடனான திரைப்படங்கள் வந்தன. பாடல் ராசி அவருக்கும் இருந்தது.

விசு இயக்கத்தில் பெண்மணி அவள் கண்மணி படத்தில் மறக்க விடாத வேடமொன்றைத் தாங்கினார் பிரதாப்.கிட்டத் தட்ட விசுவுக்கும் அவருக்கும் இயல்பின் விரிதலாகவே அந்த வேடங்கள் அமைந்தன என்று சொல்லத் தகும்.

மூடுபனியின் சந்துரு தமிழுக்குக் கிடைத்த சர்வதேச நாயகன். தமிழ் சினிமா என்றில்லை இந்திய அளவில் பிரதாப் அந்தப் படத்தில் நடித்தளித்த விதமும் தன்மையும் வசன உச்சரிப்பும் மௌனமும் புன்னகையும் விகசிப்பும் சோகமும் தீராப் போதாக் காதல் வழியும் கண்களுமாக வேறொருவர் இணை சொல்ல முடியாத ஆளுமைத் தெறிப்பு அந்தப் படம். பாலுமகேந்திராவுக்கும் பிரதாப்புக்குமான வாழ்கால சாகசம் மூடுபனி. என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு முன்னும் பின்னுமாய் வெறுக்க முடியாத மனவிலகலைப் பிரமாதமாய்த் தோன்றத் தந்தார் பிரதாப்.

RIP Pratap Pothen: Colleagues remember the 'man so full of life'- The New  Indian Express

மீண்டும் ஒரு காதல் கதை தேசிய விருதைத் தகர்த்து வென்ற படம். இயக்குனர் பிரதாப் தந்த வகைமை வினோதமானது. அவர் தான் ஜீவா மகுடம் ஆத்மா சீவலப்பேரி பாண்டி வெற்றிவிழா ஒரு யாத்ராமொழி போன்ற ஒன்றோடொன்று ஒட்டாத படங்களின் இயக்குனர். சிவாஜி, மோகன்லால், கமல்,கார்த்திக்,சத்யராஜ் பிரபு என அவர் இயக்கத்தில் நடித்த நடிகர்களின் தி பெஸ்ட் பரவலைத் திரையுட் கொணர்வதில் பெரிதும் வெற்றியடைந்தார் பிரதாப்.

மைடியர் மார்த்தாண்டன் மறக்க முடியாத ரீல்நிஜம். ஐடியா மணி இன்றும் உலகைத் தன் பிடியில் கொண்டு ஆள்கிறார். லக்கி மேனிலும் மகுடத்திலும் கவுண்டமணியுடன் பிரதாப் காம்போ நல்ல முறையில் பலித்தது.

நடிகராகவும் யூகிக்க முடியாத பரந்து விரிந்த ஆளுமையாகவே திகழ்ந்தார். மாமன் மகள், அமரன், படிக்காதவன் தொடங்கிப் பல படங்களைச் சிறப்பித்தவர் பிரதாப்.தேடினேன் வந்தது படம் அவரது நடிக வாழ்வில் ஒரு அல்டிமேட் அலப்பரை

அவருடைய நண்பர்கள் அவரைப் பெரிதும் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். முக்கியமாக ஆர்.எஸ்.சிவாஜி அவருடைய நெருக்கமான நண்பரும் துணை இயக்குனரும் ஆவார். அவரும் நானும் இருந்த சந்தர்ப்பம் ஒன்றில் பிரதாப்பிடம் இருந்து அவருக்கு செல்பேசி அழைப்பு வந்தது. இருவரும் பேசிக்கொண்ட நெருக்கமும் வாஞ்சையும் அளப்பரியது. ஒரு அன்றாடத்தின் விள்ளலாகக் கடந்து விட முடியாத பேரன்பின் சாசனம் அது. எனக்குப் பிரதாப்புடன் பேசக் கிடைத்த வாய்ப்பு இன்னமும் மனப்பசுமையாகத் தங்கியிருக்கிறது. வெற்றி விழா படம் குறித்து நான் சொன்ன ஒரு வாக்கியத்தைப் பற்றிக் கொண்டு அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் பெரும் சிரிப்பொன்றை உதிர்த்தார். சரளமான குறையற்ற ஆங்கிலமும் தெளிந்த மலையாளமும் சற்றே குழந்தையின் மனம் கலந்த தமிழுமாகப் பிரதாப்பின் பேச்சு தனித்து இனித்தது.

Pratap K Pothen Latest News & Updates | Read Breaking news

மனம் போல் வாழ்ந்து மலர் போல் மறைந்திருக்கிறார் பிரதாப் போத்தன். இன்னொரு மலர்தல் உண்டெனில் பிரதாப் போத்தனாகவே மலருங்கள் பிரதாப் என்று சொல்ல விரும்புகிறேன். அவரை இழந்து வாடும் அன்பர்களுக்கும் குடும்பத்தார்க்கும் சார்ந்தோருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.