புதியபெயர்

புதியபெயர்

  குறுங்கதை

 

நீ ஏன் அப்படிக் கேட்கிறாய்

இந்தக் கேள்விக்கு எப்போதும் அவன் பதில் சொல்வதே இல்லை.   அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை என்பது தான் நிதர்சனம். சிறுவயதில் அவனுக்கு முதன்முதலாக ஞாபகம் என்கிற ஒன்று தொடங்கிய காலத்தில் அவன் முதன்முதலில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டான். அப்போதிலிருந்து இந்தக் கணம் வரைக்கும் பதிலற்ற சாலைகளில் தான் அவனது வாழ்வின் பாதங்கள் அலைவுறுகின்றன.

உன் பெயர் என்ன என்பது எத்தனை எளிதான கேள்வி? இந்த உலகத்தில் அனேகமாக எல்லோருக்குமே பெயர் என்கிற ஒன்று உண்டல்லவா? பெயர் பெறாதவர்களுக்கும் பெயர் உண்டு தானே. இவன் ஒருவன் மட்டும் என்ன விலக்கா? ஆதரவற்ற குழந்தைகளைப் பேணுகிற இல்லத்தில் அவனையும் சேர்த்து மொத்தம் முப்பத்து நான்கு பேர் இருந்தார்கள். மற்ற யாருக்கும் வராத ஒரு மன உடைப்பு அவனுக்கு மட்டும் ஏன் வந்தது?

தன்னை எல்லோரும் அழைக்கும் பெயர் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏன் என்றால் அந்தப் பெயரை அவனுக்கு யார் சூட்டினார்கள் என்கிற விபரம் அவனுக்குத் தெரியவரவில்லை. பெற்றோர் இல்லாத குழந்தையாகத் தான் அந்த இல்லத்தில் இருப்பதை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் தனக்கு இருக்கிற பெயரை யார் சூட்டியது என்று தெரியாத வெறுமையை அவன் மனத்தால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெயரை விட்டு வெகுதொலைவு நீங்கி விட விரும்பினான். அந்தக் கணத்தில் அவனொரு முடிவுக்கு வந்தான்.

யாராவது அவனிடம் உன் பெயர் என்ன என்பதைக் கேட்டால் போதும். அதற்கான பதிலாக இன்னொரு வினாவைத் தான் அவன் தொடுப்பான்.

“தயவு செய்து என்னை பாபூ என்று அழைக்கிறீர்களா..?”

 இப்படி அவன் கேட்டதும் எதிரே இருப்பவர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிடும். என்னடா இது பேரென்ன என்று கேட்டால் பாபு என்று சொல்லாமல் என்னை பாபூ என்று அழைக்கிறீர்களா என்று இறைஞ்சுகிறான் என்று அவர்கள் தளர்வார்கள்.

அந்த நகரத்தில் அவன் தன்னை பாபூ என்று அழைக்கச் சொல்லி வேண்டுவதாலேயே பிரபலமாகிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும்.

அவன் ஒரு உணவகத்தில் சிப்பந்தியாக வேலைக்கு சேர்ந்தான். அந்த உணவகத்துக்கு நகரத்தின் செல்வமிகுந்த மனிதர்கள் தான் அதிகம் வருவார்கள். விலையும் அதிகம் ருசியும் அதற்கேற்ப மிளிரும். காலை உணவை ஆர்டர் செய்தால் இரவு உணவாக வழங்கப்படுவதாக கேலியாகக் குறிப்பிடுவார்கள். அங்கே அவன் பரிமாறுகிறவனாகச் சேர்ந்திருந்தான். அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுடைய வெள்ளுடையில் சின்னஞ்சிறிய நேம் பேட்ஜ் ஒன்று இருந்தது. அதில் அவன் பெயர் பாபூ என்று தங்கத் தகட்டில் கருநீல எழுத்துக்கள் மின்னின. அவனிடம் யாரும் உன் பெயர் என்ன என்று கேட்கவில்லை. அவனும் தன் வழக்கமான இறைஞ்சுதலை வெளிப்படுத்த வேண்டியிருக்கவில்லை.

அங்கே இருந்த செயற்கைப் புல்வெளியைப் பராமரிப்பதில் நிறையப் பேர் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவளுக்கு அவனை மிகவும் பிடித்தது. அவனும் அவளும் மதிய உணவை ஒரே இடத்தில் அமர்ந்து உண்பது வழக்கமானது. நிறையப் பேசுகிற அவளது பெயர் இளவரசி. அவன் இளவரசியிடம் உன் பெயரை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டான். அவள் பிடிக்காமலா..? அது தானே என் பெயர் என்று சிரித்தாள். அவனுக்கு உடல்நலமில்லாமல் விடுப்பெடுத்த போது அவனைத் தேடி அவன் வசிப்பிடத்துக்கு வந்தாள். இளவரசியின் அன்பு அவனுக்குத் தேவையானதாக இருந்தது. அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக அவன் அவளிடம் சொன்னான். நீ என்னைக் காதலிக்கிறாயா என்று அவள் கேட்டதற்குத் தெரியவில்லை என்று பதில் சொல்லியிருந்தான். என் அன்பைத் தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமாயின் நாம் காதலர்களாக வேண்டும் என்றாள்.

காதல் கைகூடியது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். அவள் தன் வீட்டுக்கு அவனை அழைத்துச் சென்றாள். இளவரசியின் அம்மாவும் அண்ணனும் அவனை வரவேற்றார்கள். அண்ணன் காரன் அவனிடம் உங்கள் பெயரென்ன என்று கேட்டான். ஏற்கனவே அவனுக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்றாலும் சட்டென்று அப்படிக் கேட்டதும்
 
என் பெயர் பாபூ என்றான்.

இளவரசிக்கு அவன் அப்படிச் சொன்னது மிகவும் போதுமானதாக இருந்தது. நீங்க பேசிட்டிருங்க. உங்களுக்கான சூப்பையும் சான்விச்சுக்களையும் நான் தயார் செய்றேன் என்று சொல்லி விட்டு அவள் உள்ளே சென்றாள்.

பேச்சின் நடுவே பாபூ திடீரென்று அவள் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்

அவளுக்கு இளவரசி என்ற பேரை யார் சூட்டியது நீங்களா அவளது தந்தையா ?

அவளுக்கு நாங்க வைச்ச பேர் அவளுக்குப் பிடிக்கலையாம் தம்பி. சின்ன வயசிலயே அந்தப் பேரை அவ தூக்கிப் போட்டுட்டா. அப்புறம் தனக்குப் பிடிச்ச பேர்களை எல்லாம் அடிக்கடித் தன்னோட பேர்களா சொல்லத் தொடங்குனா. இதுவரைக்கும் அவ ஆயிரம் பேர்களுக்கு மேல் தனக்கு சூட்டிக்கிட்டிருக்கா. இதற்கு முந்தி அவ ஜென்னியா இருந்தா.அவளோட தற்போதைய பேர் இளவரசி. அடுத்த பேர் என்னவோ அவளுக்கு மட்டுந்தான் தெரியும் என்று அலுத்துக் கொண்டார் அவளது அம்மா.

என் அடுத்த பேர் சோனா. அப்டின்னா தங்கம்னு அர்த்தம் என உள்ளேயிருந்து குரலளித்தாள் இளவரசி.