மரங்களெனவே முளைத்த மரங்கள்

 

ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை

தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க் கவிதைத் தொகுப்புகளும் வரிசையில் நிற்கின்றன..கவிதை என்பது விற்பனைக்கான கற்பனை அல்ல.பிற புத்தகங்களுக்கான குறைந்த பட்ச விற்பனை உத்தரவாதம் கூடக் கவிதைகளுக்கு இருப்பதில்லை.காதல் கவிதைகளுக்கு வேண்டுமானால் ஒரு சிறு சந்தை இருக்கக் கூடும்.
கவிதைத் தொகுதிகள் சுயவர்ணப் பறவைகள்.எல்லோருக்குமான வாழ்க்கைக்குள் கவி எழுதுபவனின் நிச்சலனமும் நம்பகமும் தேடலும் கண்டறியும் திசையும் ஏன் ஓய்தலும் கூடத் தனித்தே நேர்கின்றன.புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை ஒன்றின் மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.
கவிதைகள் எழுதப்படுகின்றன என்ற வாக்கியத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை.கவிதை என்பது பெரும் ஞானம் என்று ஜல்லியடிப்பதையும் நான் ஏற்க மாட்டேன்.மாறாகக் கவிதைகளை எழுதுவதென்பது ஒரு அனுபவத்தை நேர்த்துவதற்குத் தன் மனதை உள்ளீடாகத் தந்தபடியே கவிதையை வெளிப்பொருளாகப் பெறும் சின்னதோர் சூட்சும வேலையாகவே கருதுகிறேன்.
கவிதைகள் எக்காலத்திலும் இழத்தலின் வலிமையான குரலைப் பதிவு செய்யும் குருதித்தீற்றலுடனான ஏடுகளாகவே இருந்து வருவது தற்செயலல்ல.முன் பழைய காலத்தின் சாட்சியமாகக் காலங்கடந்தும் ஒலிக்கக் கூடிய அசரீரியின் எச்சரிக்கைக் குறிப்புகளாகக் கவிதைகளைக் கொள்ளமுடியும்.மேலும் மனம் பிறழ்ந்தவனின் இலக்கற்ற அலைதலின் ஊடாக அவனைத் தேர்வு செய்து தங்களை மொழிந்துகொள்ளும் பொருத்தமற்ற சொற்களுக்கிடையே அவதானிக்க வாய்ப்பிருக்கும் ஆழ்பிணைப்புப் போன்றதும் கவிதைகளே.
ஈழத்தைச் சேர்ந்த சமீபத்திய கவிதைகள் பல்வேறு பாடுபொருட்களை நுட்பத்துடன் அலசுவதைக் கவனித்து வருகிறேன்.இழத்தலின் சாட்சியங்கள் வலியை இடம்பெயர்க்கும் கவிதைகள் முகத்தில் அறையும் நிஜத்தின் குரல்கள் இந்தியாவில் வசிக்கும் என்போன்றவர்களின் இயலாமையை வினாவுக்குட்படுத்தும் கவிதைகள் இவற்றைத் தாண்டி தனி மனித உளவியலுக்குள் இன்றைய பொருள்சார் உலகம் நிர்பந்தப் படுத்தியிருக்கும் ஒற்றை வாழ்வைக் கடுமையாகச் சாடும் பலரது கவிதைகளைத் தவிர்க்க முடியாது.அப்படியான கவிதைகள் நிலவரைபடங்களின் மாயக்கோடுகளை அழித்தவாறே நாளைய தமிழ்க்கவிதை குறித்த பெரும் நம்பிக்கையை இன்றைய இளையவர்கள் ஏற்படுத்துவதை உணர்த்துகின்றன.
இளையவர் ஜே.ஃபிரோஸ்கான் முகப்புத்தகத்தில் என்னைத் தொடர்புகொண்டு தன் “மீன்கள் செத்த நதி” தொகுப்பிற்கான முன்னுரையை எழுதித் தருமாறு கேட்டார்.அவர் எனக்கு அஞ்சலிட்ட கவிதைகளைப் படிக்கும் போது இயல்பான பல நினைவேந்தல்களின் காட்சிப் படிமங்களாக அவரது கவிதைகள் விளங்குவதை உணர்ந்தேன்.பல நேரடியான கவிதைகள் என்னை ஈர்த்தன.
ஃபிரோஸ்கான் வலிந்து கவிதையாக்கம் செய்வதற்கான வரிகளைத் தேடி மொழிவனத்துக்குள் சஞ்சரிக்கும் நாடோடி போன்றவர் அல்லர்.மாறாக நெருக்கடி மிகுந்த நகரப்பரப்பின் உள்ளேயே வாழ்ந்துகொண்டு அவற்றின் நிர்ப்பந்தகளுக்கு ஊடாகக் கவிதைகளைப் பின்னும் பெரு மூப்பனைப் போலக் காத்திருக்கிறார்.அவரது சொற்கள் போலியானவை அல்ல.கடினமானவையும் அல்ல.மத்யம வாழ்வியலின் வெகு இயல்பான சொற்களைக் கொண்டு தன் கவிதைகளை எழுதிப்பார்க்கும் பெயரற்ற இன்னொருவனின் பெயர் தான் ஃபெரோஸ்கான் எனத் தோன்றுகிறது.
இத்தொகுப்பில் பல கவிதைகள் என்னை ஈர்த்தன.இதனைத் திரும்பவும் ஒரு முறை பதியத் தோன்றுகிறது.எதிர்காலத்தில் ஃபெரோஸ் கான் அழகியலைத் தாண்டி நுட்பமான மாயசாரக் கவிதைகளை வடிக்கக் கூடும்.அது வேறு சொல்லுழவு,இந்தத் தொகுப்பில் உடன் பயணிக்கும் ஒருவனின் வெகு இயல்பான கதையாடல் போன்ற மெலிதான கவிதைகளையே அவர் எழுதியிருக்கிறார்.அந்த அளவில் இதனை ஒரு ஆறுதலாகக் கூடக் கொள்ள முடிகிறது.
ஃபிரோஸ்கானின் கவிதைகளில் குழந்தைகளும் பெண்களும் பாட்டியும் அம்மாவும் பல பெண்ணுறவுகளும் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறார்கள்.குழந்தைகளின் பொம்மைகள் குறித்துக் கவலைப் படுகிறார்.அவர்கள் பொம்மைகளுக்குப் பதிலாக சாக்லேட்டுகள் தரப்பட்டு ஏமாற்றப் படுவதாக ஒரு கவிதை சொல்கிறது.
அழும்
குழந்தைகளுக்கு
முன்
சாக்லேட்டுக்களாகவும்
பொம்மைகளாகவும்
மாறிவிடுகின்றனர்
அம்மாக்கள்
இந்தக் கவிதை என்னை மிகவும் ரசிக்க வைத்த கவிதை.இதிலிருக்கும் தனி அனுபவத்தை வெகு நேராகப் பன்மையாக்கியிருப்பது பேரழகு.

கழிப்பறையில் இருக்கும் நேரங்களில்
என் தலைக்கு மேலாக
முளைத்து விடுகின்றன கவிதைகள்,
முன்னும் பின்னும் இருப்பதெல்லாவற்றையும் அகற்றுகிறது.இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் அபாரம் இதன் நீட்சி.

மரங்களென.
முளைத்த மரங்கள்
பூப்பதுமில்லை
காய்ப்பதுமில்லை
கனிவதுமில்லை
இது ஒரு ஆகச்சிறந்த கவிதை.மரங்களெனவே முளைத்த மரங்கள் என்பது மீன்கள் செத்த நதி என்பதற்கு இணையான இன்னுமோர் நற்தலைப்பு.சின்னஞ்சிறியவரான ஃபெரோஸ்கான் எழுதிய இந்தக் கவிதை அவரது எதிர்காலத்தின் மீது பாயப்போகும் பெருவெளிச்சமெனவே கருதச்செய்கிறது.
நதி எனும் குறியீடு பலரும் ஆர்வமாகக் கைக்கொள்வது.என்னைப் பொருத்தவரை நதி என்னும் சொல்லையே நான் வெகு கவனமாகக் கைக்கொள்ளவேண்டிய வார்த்தை என்பேன்.ஆறு கடல் குளம் குட்டை சமுத்திரம் அருவி போன்ற நீர்ப்பரப்புக்கள் எவையும் ஏற்படுத்தாத அதிர்வினை நதி என்னும் சொல் நேர்த்தும்.அப்படி இருக்கையில் ஒரு கவர்ச்சிக்காக நானும் நதி பற்றி எழுதினேனாக்கும் என்ற மோகத்தில் பலரும் நதி பற்றிய கவிதைகளை எழுதிப்பார்ப்பது வழக்கம்.
ஆனால் நதியை வசப்படுத்தும் கவிதைகளை வெகு சிலர் தான் எழுதுகிறார்கள்.இந்த இளைஞரின் தொகுப்பின் தலைப்பே மீன்கள் செத்த நதி.சொல்லாச் சொற்களைச் சொல்லிப் போகும் தீராநதியாக உள்ளே இழுத்துவிடுகிறது வாசிப்பவர்களை.மேலும் தொகுப்பின் சிலபல கவிதைகள் நதி குறித்து இன்னும் ஆழமாய்ப் பேசத் தலைப்படுகின்றன. ஒரு கவிதையில் ரகசியத்தை விழுங்கிய நதி என்கிறார்.இன்னும் வாசிப்பவனது ஆழ்மனதில் கொண்டுபோய்த் தன் நதியைச் செருகி வைக்கிறார் கூட்டுக்குள் எழுதுகோலைச் செலுத்துகிறாற் போல்.
ஒரு தெரு நாயைப் போல் காரணம் தெரியாத சம்பவத்தில் இறந்து போனவனை உருவகப்படுத்தும் இன்னொரு கவிதையும் சிறப்பு.பிசாசுகளாகிப் போன சொற்கள்-பருந்துகளின் தீராப்பசி- பிரசவம்- பனி காலத்துத் தேநீர் ஆகியன இன்னும் என்னை ரசிக்கச் செய்தன.
மிகப் புதியவரான ஃபிரோஸ்கான் இளைஞர்.ஆழமான சொல்வயப்படுத்தும் திறன் கொண்டிருப்பது புலனாகிறது.இன்னும் எதிர்வரும் காலத்தில் ஆழமான பல கவிதைகளை அவரால் படைக்க இயலும்.இந்தத் தொகுப்பின் குறைகள் சொற்பம்.நிறைகள் அதிகம்..”இன்னும் உன் வானத்தை விரித்துக் கொள் தம்பி..” என மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்தல் இனிது.

அளவற்ற அன்போடு
ஆத்மார்த்தி
மதுரை

23/04/2015