எந்நாளும் தீராமழை 

 

எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம்.
அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது.
தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்
அலங்கரித்துக் கொண்டவர் பாலு. இந்தக் கட்டுரை முழுவதும் அவரை பாலு என்றே குறிக்க விருப்பம்.
பாலு ஒரு குழந்தை என்பது தான் அவருடன் நெருங்கிப் பழகிய எல்லோரும் சொல்கிற முதற்சொல்.
ஒரே ஒரு தடவை அவரை சற்றே தள்ளியிருந்து மட்டும் பார்த்த எனக்கும் அதே தான் தோன்றியது.
தன் குழந்தமையை மனம் முழுவதும் நிரவிக் கொண்டதால் தான் அத்தனை ஆயிரம் பாடல்களைப்
பாடி அனாயாசம் செய்ய முடிந்திருக்கிறது. சாகசத்தைத் தன் இயல்பாக மாற்றிக் கொள்கிற
பருவங்கடந்த பால்ய மனம் அரிய செல்வந்தம். பாலு சாகசராஜன். அவர் கானங்களுக்கு
அழிவே இல்லை. இந்தியத் திரையுலகில் கேட்ட எல்லாவற்றையும் பாடித் தருகிற வல்லமை
கொண்ட ஒரே பாடகர் பாலு. அவர் ஒரு ஒற்றை. தன் சுயத்தைக் கொண்டு சித்தாடிச் சென்ற
ஞானநதி.அவரிடம் எந்தப் பாடலை எழுதி நீட்டினாலும் அதன் பின்னால் இயைந்து விடக் கூடிய
இசை எத்தகையதாக இருந்தாலும் அதை மறுக்க வேண்டிய தேவையே இல்லாத குரல்வாகு
கொண்டவர்.தனக்காக திருத்தங்கள் கோரிப் பெறுகிற பலருக்கும் மத்தியில் எத்தனை வகைகள்
உண்டோ அத்தனையையும் பாடிவிட்டுப் புன்னகை பூக்கிற மேதமை அவரிடமிருந்தது. தன்
உடலால் அல்ல மனதால் பாட முடியும் என்று நிகழ்த்தியவர் பாலு. அவருடைய பாடல்கள் எந்த
மொழியானாலும் சுயமொழித் தன்மையுடன் மிளிர்ந்தன. இந்தியாவின் குரல் முகம் பாலு.

மேற்சொன்ன குணாம்சம் பலவற்றோடும் ஒத்திசைந்து செல்லக் கூடிய அருகமை நதியின்
பெயர் தான் எம்.எஸ்.வி. தென் இந்தியத் திரை இசையைத் தன் பிடியில் பல காலம்
வைத்திருந்த நல்லிசைச் சக்கரவர்த்தி. ஒரு காலகட்டத் தமிழ்ச்சமூகம்   காலை விழிப்பது
தொடங்கி இரவு கண் அயர்வது வரைக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையாக்கத்தைச்
சார்ந்திருந்தது. எத்தனையோ உணர்வுகளை இசையுருவில் நிரந்தரம் செய்த மேதை விஸ்வநாதன்.
சிந்திப்பதை விட வேகமாக இசையமைப்பதாக அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. தன்
மனவோட்டத்திலிருந்து பிறந்த பல இசைக்கோர்வைகளைக் குறித்த வியத்தல் கூட இல்லாத
உயர்பண்பு அவரிடமிருந்தது. எல்லோரும் தன் பாடல்களைக் கொண்டாடுவதைச் சிறுபிள்ளையின்
குதூகலத்தோடு ஏற்பும் விடுப்பும் இன்றிக் கடந்த போகத்துறவி. அவருடைய இசையமைப்பில்
எண்ணிலடங்காத பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். நான்கு தசாப்தங்களைத் தாண்டி இசைத்த
சாதனை இசைஞர் எம்.எஸ்.வி

திரைப்படங்களில் பாடல்களின் தேவை என்பது நூற்றாண்டை நெருங்கும் தமிழ்த் திரைப்பயண
சரித்திரத்தில் முக்கியமான முதற்கூறு. பாடல்களுக்கான அந்தஸ்து தவிர்க்க முடியாதது.
படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றின் செல்வாக்கு அளப்பரியது. சூப்பர் ஹிட் பாடல்
ஒன்று ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிற முக்கியக் கூறென  நம்பப் படுவது. படம் வெளிவருவதற்கு
முன்பே அதன் வருகைக்கான கட்டியக்கூறலாக ஒருசில பாடல்கள் திகழத் தொடங்குவது வரப்
பிரசாதம். அத்தகைய பாடல்கள் படத்தின் ஓட்டகாலத்தைத் தாண்டிய ஒலித்தல் காலத்தோடு
விளங்குவது அதனதன் விசேஷம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இருபதாண்டு காலம் பாலு
பாடிய பல பாடல்களில் பலவும் முக்கியமானவை. பாட வந்த புதிதில் பாலுவின் குரல் மிருதுவாக
இருந்தது. சன்னமான மெல்லிசை கானங்களை அவரது குரல் உருவாக்கியது. அவருக்கு முன்னும்
சமமுமான காலத்தில் சீர்காழி கோவிந்தராஜன் திருச்சி லோகநாதன் டி.எம்.சவுந்தரராஜன் போன்ற
கனக் குரலாளர்களும் ஏ.எம்.ராஜா பி.பீ.ஸ்ரீனிவாஸ் போன்ற  சன்னக் குரலாளர்களும் பிரசித்தி
பெற்றிருந்தனர். எஸ்பிபி ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் மலேசியா வாசுதேவன் ஆகியோர் அடுத்த
காலத்தில் உதித்து வந்தார்கள். முன்பிருந்தாற் போல் இரண்டுக்குள் ஒன்றென்று தங்கிடாமல்
எஸ்பிபி எல்லா வகையான பாடல்களையும் பாடுகிற முதல்வரிசைப் பாடகராக உருவெடுத்தார்.
அவருக்குத் தன் அனேகப் படங்களில் ஒரு பாடலையாவது பாடும் வாய்ப்பைத் தொடர்ந்து
தந்து கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் எஸ்பிபிக்கும் இடையிலான பாடல் பந்தம் அளப்பரியது. ஒவ்வொரு
பாடகருக்கும் என்ன வரும் எது வராது என்பதையெல்லாம் துல்லியமாகக் கணிக்கிற ஆற்றல்
எம்.எஸ்.வியிடம் இருந்தது. அவர் பாடல்களை உருவாக்கவில்லை அவற்றை நிகழ்த்தினார்.
அந்த வகையில் பாலுவின் குரல் 1978 வரைக்குமான பத்து வருடங்களில் மிருதுவும்
சன்னமுமாகத் தொடங்கிப் பாடப் பாட இன்னுமோர் இடத்தை வந்தடைந்தது.அதற்கான
வழித்தடங்களாகப் பல பாடல்களை தந்தவர் எம்.எஸ்.வி. இளம் பாடகர்களில் நல்ல வரவேற்பைப்
பெற்ற பாலுவுக்கு பலவகைப் பாடல்கள் அவற்றுக்குள் சூழல்  தொடங்கிச் சவால்கள் வரை
பலவற்றைப் புழங்கத் தந்தவர் எம்.எஸ்.வி தான். அவருடைய எதிர்பார்ப்பை முற்றிலுமாகப்
பூர்த்தி செய்தார் பாலு. நல்லாசிரியனுக்கும் தேர்ந்த மாணவனுக்கும் இடையிலான விசித்திர
பந்தம் எம்.எஸ்.விக்கும் பாலுவுக்குமிடையே இருந்ததை உணரமுடிகிறது.69 மற்றும் 70 காலகட்டத்தில் எம்.எஸ்.வி பாலுவுக்குத் தந்த பாடல்களிலெல்லாமும் சவாலும்
வினோதமும் பெருகியது யதேச்சை அல்ல. பாலு என்கிற மகாகுரலை அதன் பேராற்றலை உள்ளுக்குள்
நன்கு உணர்ந்த ஒருவராகவே இத்தகைய பாடல்களை எம்.எஸ்.வி தந்திருக்க முடியும். பால்குடம்
படத்தின் பாடலான ‘மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்’ இதற்கான நற்சான்று.  ‘உனக்காக’ என்ற ஒரே
ஒரு சொல்லைக் கொண்டு மனங்களை எல்லாம் கலங்கடித்திருப்பார். சோகச்சாய்வுடனான மைய
இசையும் சற்றே வேகமான செல்திசையும் இணைந்த டூயட் பாடல் இது.பாலுவுடன் பாடியவர் சுசீலா.
மெட்டைப் பொறுத்த வரை இதன் ஒற்றுமையை பிற்காலத்தில் வேறு பல பாடல்களிலும்
கலைத்தாண்டிருப்பார் எம்.எஸ்.வி. பாலுவின் குரல் இன்று கேட்டாலும் கேட்பவர் மனம் திருகும்.“ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு” பாடல் ஜெமினிகணேசன் வாயசைப்பில் ‘அவளுக்கென்று ஒரு மனம்’
படத்தில் இடம்பெற்றது. அத்தனை கடினமான முன்னோசைச் சரடினை அட்டகாசமாக எடுத்தாண்டிருப்பார்
பாலு. ஜெமினிக்கு அதற்கு முன்பாக ராஜா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் எண்ணிலடங்காத ஹிட் பாடல்களைத்
தந்திருந்த நிலையில் ஒரு புதிய குரல் எடுத்த எடுப்பிலேயே கனகச்சிதமாகப் பொருந்தும் என யாரும்
எதிர்பார்த்திருக்கவில்லை அந்தப் பாடல் பாலுவுக்குத் தேர்ந்த சித்திரத்தின் முதற்புள்ளி போல்
அமைந்தது. சாந்தி நிலையத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை
எண்ணி” பாடலை பாலு பாடிய விதம் உற்றுக் கவனிக்கப் பட்டது.
“பொன் என்றும் பூவென்றும் தேன் என்றும் சொல்வேனோ
உன்னைப் பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் ஓராயிரம்”
1970 ஆமாண்டு வெளியான ‘நிலவே நீ சாட்சி’ படத்தில் இடம்பெற்ற வைரம். ‘இன்னும் ஓராயிரம்’ என்ற
வரியை நிறைக்கும் போது சன்னமாக நடுக்குவார்.பூவை வந்தாள் பெண்ணாகத் திரண்டு என்று சரண
சங்கதி நிறைவுறும் இடமாகட்டும் உச்சி முகர்ந்து நெற்றி வழித்து திருஷ்டி சுற்றிப் போடலாம் எனத்
தோன்றும். அதற்கு முன் அத்தனை அந்தரங்கத்தை வேறாரும் நேர்த்தியதில்லை. எம்.எஸ்.வியின்
மெட்டும் குரல்செட்டுமாய் இணைந்து இயைந்திருக்கும் இதன் பின்னணி இசை ஒருவித தொன்மம்
கலந்து செல்லக் கூடியது. ஆனந்தத்தை எடுத்திசைத்தாற் போல் சின்ன  உற்சாகக் கேவலைப்
பின்னிசையின் தன்மைக்கு உதாரணமாய்ச் சொல்லமுடிகிறது.

முந்தைய இரண்டு ஆண்டுகள் மொத்தமே பத்துக்கும் குறைவான பாடல்களை எம்.எஸ்.வி இசையில்
பாடியிருந்த பாலு  71 ஆமாண்டு பதினாறு பாடல்கள் பாடினார். அவரது நுழைதலின் காலம்
எம்ஜி.ஆர் சிவாஜி ஜெமினி ஆகிய முன்வரிசைக் கதாபதிகளின் பாடல்களுக்கென்று தனித்த மவுசு
இருந்தது. அதிலும் இசை எம்.எஸ்.வி பாடல் கண்ணதாசன் எனும் போது அதற்கொரு தனி மதிப்பும் கூடும்.
‘சுமதி என் சுந்தரி’ படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ‘பொட்டு வைத்த முகமோ’ அச்சு அசலான
சிவாஜி பாடல். சவுந்தரராஜன் குரலளவுக்கு இன்னொரு குரல் சிவாஜிக்குப் பொருந்தாது என்று பல
முறை சொல்லப்பட்டதை இந்தப் பாடல் தகர்த்தெறிந்தது. ஏற்கனவே எம்ஜி.ஆருக்கு “தேடி வந்த
மாப்பிள்ளை” படத்தில் பாலு பாடியிருந்த வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் பாடல்
இன்னோர் சாட்சியம். அடுத்த காலத்தை ஆளப்போகும் குரல் என்று அப்போதே உணரச் செய்ய
இத்தகைய பாடல்கள் உதவின.

த்தரவின்றி உள்ளே வா படம் ஸ்ரீதரின் கைவண்ணம்.என்சி சக்கரவர்த்தி இயக்கிய நகைச்சுவைக் காவியம்.
டி.எம்.எஸ் மற்றும் எஸ்பிபி இருவருடனும் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடலான
“உத்தரவின்றி உள்ளே வா” பாடலில் தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் முத்திரை பதித்தார் பாலு.
இதே படத்தில் கதையின் நாயகனான ரவிச்சந்திரனுக்கு பாலு பாடிய இருவேறு   பாடல்கள்
‘மாதமோ ஆவணி’ மற்றும் ‘உன்னைத் தொடுவது இனியது’   நல்ல பிரபலமடைந்தன.
“பாவை முன்பு நானும் இன்று பள்ளிப்பாடம் சொன்னால் என்ன” என்பதை அந்தக் காலத்தில் வேறார்க்கும்
வாய்த்திராத ஸ்டைலோடு புழங்கினார் பாலு.

தொடர்ந்து தனது படங்களில் பாலுவைப் பாட வைத்தார் கே.பாலச்சந்தர்.
“கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை”
கமல்ஹாஸனை முன் நிறுத்தி பாலுவை அவருக்கான குரலாக மனங்களில் பதியனிட்டது.
‘ஓங்கிய பெருங்காடு’ என்ற சொற்றொடரைக் கமலாகவும் பாலுவாகவும் மந்திரித்து உச்சரித்தார் பாலு.
கமல்ஹாஸன் கேபி அடுத்தடுத்து இணைந்த படங்களில் எம்.எஸ்.வி இசையில் பாலு பாடிய பாடல்கள்
தனியே தொனித்தன. எழுபதுகளின் திரை இளவரசனாக கமல்ஹாஸனை முன் நிறுத்துகையில்
பாடல்களில் மற்ற யாரை விடவும் பொருத்தமான குரலாக பாலுவினுடையது அமைந்தது என்று சொல்ல
முடியும். ‘மன்மத லீலை மயக்குது ஆளை’ (மன்மத லீலை) இருமனம் கொண்ட திருமண வாழ்வில்,
அங்கும் இங்கும் பாதை உண்டு (அவர்கள்) கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ (நிழல் நிஜமாகிறது)
எனத் தொடர்ந்த இந்த பந்தம் நினைத்தாலே இனிக்கும் படத்தில் அடுத்த வானை அடைந்தது.
“எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்” பாடல் அதில் பங்கேற்ற எல்லோருக்குமான புதிய வாசல்களைத்
திறக்கிற சாவியானது. பாலு அந்தப் பாடலை ஒரு மென்சோக வழிபாடாகவே நிகழ்த்தினார். அலுக்கவே
அலுக்காத பாடலாக நிரந்தரித்தது அந்தப் பாட்டு. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ‘சிப்பி இருக்குது
முத்துமிருக்குது’ ,’பாட்டு ஒண்ணு பாடு தம்பி’ போன்ற பாடல்களிலும் அட்சரம் பிசகாமல் கமலுக்கான
குரலாகவே பாலு ஒலித்தார்.பாலச்சந்தரைப் போலவே பிறர் படங்களிலும் மற்ற இசையமைப்பாளர்களின்
பாடல்களிலும் கமலுக்குப் பொருந்திய குரலாக அதிகதிகம் பாலு பாடிக் கொண்டிருந்தார்.
“சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது” என்ற பாடலைக் கண்ணதாசன் வடிக்க
வாணி ஜெயராமுடன் இணைந்து பாடினார் பாலு. பேசும் மணிமுத்து ரோஜாக்கள் (நீலமலர்கள்) அதிகம்
ரசிக்கப்பட்ட இன்னோர் பாடல்.

 சின்னச் சின்ன உணர்வுகளைத் தன் பாடலோடு இணைத்துத் தர முயன்ற முதல் பாடகராக பாலு
அமைந்தது தற்செயலாகவும் இருக்கலாம். திரைப் பாடல்கள் மாறிக் கொண்டே வந்து சேர்ந்த இடத்தில்
பாலு பாடவந்த பாடகராகவும் இவ்விசயம் அமைந்திருக்கலாம். எழுபதுகளின் எல்லையில் அப்படியான
பல பாட்டுக்கள் உருவாகின. பாடல்  என்றாலே இசையொழுங்கோடு,ஆரம்பித்தால் ஓட்டமாக ஓடி
நிறைவது தான் அதன் ஆன்ம அடையாளம் என்பதையெல்லாம் திரையிசை தகர்த்தெறிந்தது.
காலத்தேவை பாடல்களின் உள் அமைப்பை முற்றிலுமாக மாற்ற முனைந்தது. பாடல்களுக்கு நடுவே
ஒழுங்கற்ற நிறுத்தங்கள் பலவிதமான இடையூறுகள் இசையழகாக மாற்றம் செய்யப்பட்டன.
ஒலிகளும் குரல்களும் சிறப்பு சப்தங்களும் தவிர குணாம்சங்களுமெல்லாம் கூட பாடல்களுக்கு
உள்ளே உப-பண்டங்களாக இடமளிக்கப் பட்டன. பாடலின் புனைவு வெளி விரிவடைவதற்கு
இப்படியான மாற்றங்கள் துணை நின்றன.

பாலச்சந்தர் படங்களில் கதாகனம் மிகுந்த பாடல்கள் இடம்பெறும். இசையும் பாடலும் நட்சத்திர
அந்தஸ்தோடு திகழ்வதை விரும்பிய இயக்குனர் கேபி.அவர் படப் பாட்டுகள் கேள்வியின்பம்
ஒன்றாகவும் காட்சிப்பாங்கு இன்னொன்றாகவும் விரிந்து இன்புறுத்தும். பட்டினப் பிரவேசம்
படத்தில் பாலு பாடிய “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்ற பாடலைத்
தன் குரலெனும் உளி கொண்டு லட்சோப லட்சம் மனங்களில் தனது பெயரெழுதிக் கொண்டார் பாலு.
அது ஒரு முகமிலிப் பாடல். தனக்குப் பிடித்த யாதொரு முகத்தையும் அந்தப் பாடலில் உள்ளீடு
செய்து கொண்டோர் எக்கச்சக்கம். அந்தப் பாடலைத் தங்கள் வாழ்வின் பகுதியாகவே
ஆராதித்தவர்களை அறிவேன். அடுத்த நூற்றாண்டிலும் கொஞ்சமும் செல்வாக்கை இழக்காத
பாடல்களில் இதுவுமொன்று.

நாம் பிறந்த மண் படத்தில் “ஆசை போவது விண்ணிலே” என்று தொடங்கும் ஒரு க்ளப் பாடல்
சோகமும் மென்மையும் இணைந்து பெருக்கெடுத்த சாய்விசைப் பாடல். மேற்கில் இப்படியான பாடல்கள்
மிக அதிகம். இந்திய அளவில் இவ்வகைப் பாடல்களை எண்பதாம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில்
அதிகம் முயன்றவர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர். எதிர்பாராத அயர்தலைக் கேட்கிற ஒவ்வொரு முறையும்
இரட்டித்து நிகழ்த்தவல்ல மாயரசவாதம் இவற்றின் உள்ளுறையும். ரஜினிகாந்த் எழுபதுகளின் பிற்பாடு
எழுந்து வந்த புதிய நாயகன்.பலவேடங்களைத் தாண்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவர். அவருடைய
ஆரம்ப கால கானங்களில் தொடங்கி முந்தைய படம் வரைக்கும் அவருக்கான் முதல்-பொருத்தக்
குரலாக விளங்கியவர் எஸ்.பி.பாலு தான். அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்று
தொடங்குகிற பாடல் எழுதித் தீராத இன்பம். பலரது பாடல்மனங்களிலும் நிரந்தரப் பசை கொண்டு
தன்னை ஒட்டியிருக்கும் பாட்டு அது. எஸ்பிபியின் சிறந்த பத்து டூயட் பாடல்கள் என்று எடுத்தோமானால்
அதில் சிரமமேதும் இன்றி இடம் பெறுவதற்கான தகுதி கொண்ட கானம். ‘நான் பொல்லாதவன்’ என்கிற
சாய்விசைப் பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். தனிமையைக் காமுறும் இசையும் கிறக்கமும் அவஸ்தையுமாகப்
பெருக்கெடுக்கும் குரலுமாக ரஜினிகாந்த் என்ற நடிகர் உச்சம் தொட்ட பிறகும் அவருடைய கூடுதல்
நிழலாகவே தொடர்கிறது பாலுவின் குரல். நான் பொல்லாதவன் என்று தொடங்கும் பாடலைக் கேளுங்கள்.
அது தான் ரஜினிகாந்த் என்கிற வில்லனாக இருந்து நாயகனாக உருமாறிய நட்சத்திர மனிதனின்
இயல்புகளை வெளிப்படுத்தக் கூடிய வரையறைப் பாடல். அதனை அட்சரம் பிசகாமல்
செய்தளித்தவர்கள் எம்.எஸ்.வி கண்ணதாசன் மற்றும் எஸ்.பி.பி என்கிற மூவர்.திரையுலகத்தின் மையகவனம் இயல்பாக இடம்மாறிய காலம் எழுபதுகளின் இறுதி எனலாம்.
எம்ஜி.ஆருக்கு பாலு பாடிய எல்லாப் பாடலுமே ஹிட் பாடல்கள் தான். சிவாஜிக்கும் பார்த்துப் பார்த்துப்
பாடியிருக்கிறார் பாலு என்றாலும் அந்த இருவருக்குமான முதல் பொருத்தக் குரலாக டி.எம்.சவுந்தரராஜன்
விளங்கினார்.ரத்தபாசத்தில் பாலு பாடிய “ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை” என்ற ஒரு பாடல் அள்ளித்
தந்த அத்தனை உற்சாகத்தை சிவாஜி ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.விஸ்வநாதன் சிவாஜி இணைந்த பல
படங்களிலும் பாலு தொடர்ந்து அவருக்கான வகைமை மாற்றுக் குரலாகப் பயன்பட்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக விஸ்வநாதன் இசையமைப்பில் ரஜினி மற்றும் கமலுக்கான படங்களில்
வகைமை மாற்றுக் குரலாக ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடிய
அளவுக்கு டி.எம்.எஸ். பாடவில்லை. போக்கிரி ராஜா படத்தில் “விடிய விடிய சொல்லித் தருவேன்”
என்ற பாடல் வானொலிக் காற்றை வருடியது. கானம் கேட்கும் எல்லோரையும் கயிறற்ற கயிறொன்றைக்
கொண்டு கட்டியது. “கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு”
என்ற பெப் பாடலை பாலு பாடித் தந்த விதம் அனாயாசமானது.”ஐயா மேலே சாமி வந்து ஆடும்” என்று
அவரளித்த உற்சாகத்தைப் பல நூறு மடங்குகள் பெருக்கி ஆராதித்தனர் ரசிகர்கள்.
ஜேசுதாஸ் உள்ளிட்ட சக பின்னணிப் பாடகர்களுடனும்  இணைந்து வெற்றிப் பாடல்களைத்
தந்திருக்கிறார் பாலு. எம்.எஸ்வி இசையில் இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான்
எதிர்காலம் என்ற இரட்டை வேடப் பகிர்பாடலில் தாஸூம் பாலுவும் அட்டகாசம் செய்தது ரசனாநதி.
சுசீலா வாணி ஜெயராம் எல்.ஆர்.ஈஸ்வரி எஸ்.ஜானகி என அனேக பாடகியருடன் இணைந்து பல
பெருவெற்றிப் பாடல்களை எம்.எஸ்.வி இசையமைப்பில் பாலு பாடி இருக்கிறார். வாணியுடன்
இணைந்து “நாலு பக்கம் வேடருண்டு” (அண்ணன் ஒரு கோவில்) , (வசந்தத்தில் ஓர் நாள்) “வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு” கௌரி  மனோகரியைக் கண்டேன் (மழலைப் பட்டாளம்) இல்லம்
சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் (அவன் அவள் அது) நானா பாடுவது நானா (நூல்வேலி)
சுசீலாவுடன் ஜாய்ஃபுல் சிங்கப்பூர் (வருவான் வடிவேலன்) , (முள்ளில்லா ரோஜா) முத்தாரப்
பொன்னூஞ்சல் கண்டேன் எனப் பட்டியல் நீளும்.
1980 ஆம் ஆண்டுக்கப்பால் தமிழ்த் திரைப் பாடல் உலகில் ஏற்பட்ட மாற்றங்களில்
எஸ்பிபாலசுப்ரமணியம் முதலிடப் பாடகராக முன் வந்ததும் ஒன்று. விஸ்வநாதனின் திரையிசைப்
பயணத்தில் பாலு பாடிய பல முக்கியப் பாடல்கள் இந்த தசாப்தத்திலும் தொடர்ந்தன. தில்லுமுல்லு
படத்தில் இடம்பெற்ற “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” ஏகாந்த வானில் தனியே
சிறகடித்துப் பறக்கும் பாடற்பறவை. அழகிய ரஜினியின் பாடலாக இன்றும் நிலைத்தொளிர்வது.
சிம்லா ஸ்பெஷலில் இடம்பெற்ற “உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா”
மற்றும் தாம்பத்யம் ஒரு சங்கீதம் படப் பாடலான “இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ” 47 நாட்கள்
படத்தில் இடம்கொண்ட “மான் கண்ட சொர்கங்கள்” ஆகியவையெல்லாமும் காற்றை ஆண்ட
பாலுவின் பாடல்களே.
திரைப்பாடல் வெள்ளத்தில் தனியதோர் தீவெனவே கண்ணதாசனின் ஒப்பற்ற பாடல்களுக்கு
இசையமைத்து ‘கிருஷ்ணகானம்’ என்ற தனியிசைப் பேழையை உருவாக்கினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதில் 6 பாடல்கள் இடம்பெற்றன. எல்லாமே இன்றும் நிலைத்தொலிப்பவை. அவற்றில் எஸ்பி.பாலசுப்ரமணியம்
பாடிய ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் என்று தொடங்கும் பாடல் எத்தனையோ
அதிகாலைகளைப் புலரச்செய்த நில்லாவொலிப் பாடல். காலமுள்ள காலம் வரை கண்ணன் புகழ் பாடும்
சரண் புகல் பாடல் இது.ணல் கயிறு படத்தில் ஒரு பாட்டு அந்தப் படம் அதன் கதை எல்லாவற்றையும் தாண்டிய வேறொரு
உலாவாக நிகழ்வது. இன்று வரைக்கும் திரும்பத் திரும்பப் பார்க்க வாய்க்கும் படங்களில் இடம்பெறுகிற
இத்தகைய பாடல்களை வேகநகர்த்திச் செல்லாமல் முழுவதும் ஒளிர்ந்தொலிக்க விட்டுக் கடப்பதெல்லாம்
அரிய நிகழ்வு தான். எத்தனை முறை கடக்கும் போதும் அப்படியே அயர்த்தி விடுகிற வல்லமை கொண்ட
பாடல்களில் ஒன்றாகும் இது. “மந்திரப் புன்னகை சிந்திடும் மேனகை சந்தனப் பைங்கிளியோ” என்று
துவங்குவது. வாலி எழுதிய இந்தப் பாடல் தடையற்ற ராக வெள்ளம். நாதப் பெருமழை. கானநதி.
என்னவெல்லாம் புகழ்ந்தாலும் எஞ்சுகிற பேரின்பப் பாட்டமுது. இதன் கடைசி வரி “என்னை வந்து
சேரும் இந்த ஏந்திழை வாழ்க” என்று வரும். அந்த இடத்தை பாலு கடப்பது வார்த்தைகளால்
கடக்கவே முடியாத சுகவலிஅக்னிசாட்சி படத்தின் “கனா  காணும் கண்கள் மெல்ல” என்கிற பாடலைச் சொல்லாவிட்டால்
இந்தக் கட்டுரை பூர்த்தியாகாது. இசையா குரலா என்று யாராலும் தீர்ப்பெழுத முடியாது அப்படி
ஒரு அற்புதம் இந்தப் பாடல். அந்தக் குரலில் பாலு வேறு ஒரு பாடலைக் கூடப் பாடியதில்லை
என்று அடித்துச் சொல்வேன்.
“குமரி உருவம் குழந்தை உள்ளம்
இரண்டும் ஒன்றான மாயம் நீயோ ”
என்ற வரியை முதல் முறை கடக்கும் போது குழந்தையாய்ச் சிணுங்குவார். அடுத்த முறை பாடும்
போது அன்னையாய் ஏந்துவார். ஒரு மருத்துவனின் அன்பைப் போல் அளந்தும் கனிந்தும் அந்தப்
பாடலைப் பாடினார் பாலு.இசையில் ஒரு வேள்வியே நடத்தினார் எம்.எஸ்.வி. மனவதங்கலின் அதீதங்களை
இசையிலெடுத்துக் கோர்ப்பதெல்லாம் எளிதல்ல.
“கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்”
என்ற வரியைக் கொண்டு போய்ப் புரியாப் பெருவாஞ்சையாய் சரித்திருப்பார் பாருங்கள்.
இதனை அனுபவித்து நிறைப்பதற்கே ஒரு ஆயுள் போதாது. பாலுவின் மாயமும் எம்.எஸ்.விஸ்வநாதனின்
வினோதமும்  உக்கிரமாய் ஒன்றிணைந்த கானச்சிற்பம். மூடிய கண்களிலிருந்து முத்துநீர் கோர்த்தெடுக்கும்
வல்லமை மிகுந்தது இந்தப் பாட்டு.

அதிகம் கவனிக்கப்படாத படங்களிலும் சில பாடல்கள் அபூர்வமான இனித்தலோடு விளைந்து வருபவை.
அப்படி அனு என்ற படத்தில் “சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது” என்ற பாடல் கூட்டுப்புழுக்கள்
படத்தில் “நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா” என்கிற கானம் டௌரி கல்யாணத்தில் “ஸ்ரீராமன்
ஸ்ரீதேவி” என்று தொடங்குவது என நிறையவே சொல்ல முடியும். பிரம்ம்ச்சாரிகள் என்றொரு படம். அதில்
“அழகிய திருமுக தரிசனம்” என்ற பாடல் இடம்பெறும். அந்தப் பாடல் முழுவதுமே எம்.எஸ்.விஸ்வநாதனின்
இசைத்திறனும் எஸ்பி.பாலசுப்ரமணியத்தின் பாடற்புலமையும் ஒன்றிணைந்து பெருக்கெடுக்கும் நாத வெள்ளம்.
இதன் முதல் வரியின் ஈற்றுச்சொல் ‘வாராயோ’ என்று முடிவது. இந்த வாராயோ என்பதை பாலு பாடினாற் போல்
வேறாராலும் பாட முடியாது என்பது என் ஆணித்தர அபிப்ராயம். சின்னச்சின்ன நுட்பங்களால் நிரம்பி வழிகிறது
இந்தப் பாடல். ஒரே ஒரு முறை கேட்டால் போதும் இந்தப் பாட்டு அவ்வளவு சீக்கிரம் தன்னிலிருந்து வெளியேற
விடாது. பாலசுப்ரமணியம் என்கிற குரல்பேருரு பாடிய சாகசப் பாடல் இது.
 தமிழ்த் திரைப்பா சரித்திரத்தில் இரண்டு மகாவுருக்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும்
என்பதே நிஜம்.இவர் இசையமைத்த பாடல்களும் அதிகம் அவர் பாடிய கானங்களும் பல்லாயிரம். அவற்றில்
குறிப்பிட்ட காலகட்டத்தின் பாடலாற்றைக் கைகள் கோர்த்தபடி கடந்து வந்ததாக இவர்களது இணைதலைக்
கொள்ள வேண்டி இருக்கிறது. மாபெரும் புரிதலும் சக பரிவும் கொண்டிருந்தால் ஒழிய ஒரு மந்திரவித்தையை
இரண்டு பேர் பகிர்ந்து அளித்து விட முடியாது. இந்த இருவரும் அப்படியான வித்தையைப் பகிர்ந்து கொண்ட
ரசவாத சகாக்கள் தான் . எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைப் பற்றி
இரண்டே சொற்களில் சொல்வதானால்….
  “எந்நாளும் தீராமழை