மொழிவழி மூலிகை

மொழிவழி மூலிகை


முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் நூல் தென் கிழக்குத் தென்றல். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் தாவோ-ஜென்-சூஃபி குறித்த தத்துவப் பகிர்தல்களை வாசிக்க முடிகிறது. தாவோ பகுதிக்கான அணிந்துரையை எஸ்.ராமகிருஷ்ணனும் சூஃபி பகுதிக்கான முகவுரையை மௌல்வி முகமது இஸ்மாயிலும் வழங்கி உள்ளனர்.

இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ஜென் பகுதிக்கான எனது சிறிய அணிந்துரை இங்கே


மனிதனின் ஆறாம் அறிவு அவனது கற்சிறகு. எவ்வளவு பறக்கவோ அவ்வளவு கனக்கவுமானது. மனம் ஈவு மீதி கண்டறிய முடியாத மாபெரும் எண்ணை வாழ்நாளெல்லாம் வகுத்தபடி இருப்பது. காலமும் அறிதலும் இருவேறு ஏற்பாடுகள் ஓரறிவு உயிரி துவங்கி ஐந்தறிவு மிருகங்கள் வரை மிகவும் கொடுப்பினை மிக்கவை அவற்றுக்கு நினைவின் சுமை இல்லவே இல்லை. கரும்பைப் போல வாழ்வைப் பிழிகையில் காலம் சக்கையாக ஞாபகம் சாறென எஞ்சுவது அமைப்பு. சர்வ காலமும் மனிதன் தான் ஆடிக்கொண்டிருப்பதாக நம்புகிற ஆட்டத்தை உண்மையில் காலம் தான் ஆடுகிறது. மனிதனுக்குக் கட்டுப்பட்டாற் போலக் கைகட்டி நிற்பது காலம் பொய்களைக் கனிச்சுவையுடனும் மெய்ப்பாட்டைத் துவர்ப்பாகவும் பராமரிக்கிற நல்லதொரு சூட்சுமம்.பசித்த சிங்கத்தின் கரம்பற்றி இணைநடனம் ஆடுவது போலத்தான் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான சன்ன சொற்ப சரித்திரம்.மாபெரிய சிங்கத்தின் வாயின் உட்புறம் விரைந்து ஓடி ‘இல்லாமற் போவதற்கான சாலை’யினின்றும் வெளியேறி விடலாமென்று கனா காண்கிறான் மனிதன். வாழ்க்கைக்குப் பசி தீரப்போவதே இல்லை.

தாக மனதைத் தக்கவைத்தபடி நீண்டகாலமாய் எழுதிக் கொண்டிருப்பவர் திரு.இறையன்பு. இந்த நூற்றாண்டின் இக்கணம் வரையிலான புற அழுத்தங்கள் மாற்றங்கள் நிர்ப்பந்தங்களெதிலும் அயர்ந்து விடாமல் ஆழ வனத்தின் அரிய சுனை நீரெனத் தன்னை அகழ்ந்து விடையறிய விழைபவர். தீராத அகவினவுதல்களைத் தன் எழுத்தினூடாக எழுப்புகிறவரது புத்தக வரிசையில் இந்த நூல் இன்னும் முக்கியமானதாகிறது. இந்திய அளவில் ஜென் தத்துவம் குறித்த பெயர்த்தல்கள் அணுகள்கள் மேலோட்டமாக ஆங்காங்கே தென்படுகின்றனவே தவிர ஆழமான பரிமாற்றப் பேழை அபூர்வம். அந்த ஆழத்தை சாத்தியம் செய்கிறது இந்தப் புத்தகம்.

 பேருந்தில் அமர்ந்திருப்பவனுக்கு முன் இருக்கையின் மேற்கம்பி எழவும் அமரவும் பற்றினால் போதுமானது. அமர இடம் கிட்டாதவன் ஆள் குறைவான பயணத்தில் எதாவதொரு குறுக்குக் கம்பியில் ஒய்யாரமாய்ச் சாய்ந்து நிற்கலாம். அதுவே கூட்டமான பேருந்தின் கூரை உட்புறக் கம்பி பல வியர்க்கும் கரங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது. கூட்டம் நிரம்பி வழிகையில் வாசலில் தொங்கிக் கொண்டு பயணிக்கிறவனுக்கு வாசற்கம்பி தான் பிடிமானத்திற்குரிய கடவுள். வாழ்க்கைப் பயணத்தில் சேர்விடமும் தூரமும் பகிரத் தக்க பொதுமைகள் என்றாலும் எந்தக் கம்பியை எங்கனம் பற்றுகிறோம் என்பது அவரவருக்கானது. அப்படியான பற்றுக் கம்பிகள் தான் தத்துவங்களும்.சமகாலம் என்பதே ஒரே சரித்திரத்தின் விதவிதமான மனித விள்ளல்களே. தத்துவங்கள் அடுத்த காலங்களுக்கு மேலெழுதப்பட வேண்டியவை. அப்படியான  வேண்டுதலைத் தேடலாகவும் தாகமாகவும் கொள்ளுகையில் அவை ஞானமாக விளைகின்றன.

ஞானம் காய்ந்த காயத்தின் தோல் சருகுகளென வாழ்வின் ஆசைகளை உதிர்த்துவிடுகிறது.ஞானத்தின் பயன்  அதைக் கண்டறிந்தவர்களின் காலத்தோடு தொடர்புடையதன்று. வாழ்ந்த பிறகான வாழ்தலை, தத்துவம் உறுதி செய்து தருகிறது. யூகம் சாமர்த்தியம். அனுபவமே ஞானம். பகிர்வதன் மூலமாக யூகமும் ஞானமும் ஒன்றோடொன்று இயைந்து ஓடக்கூடிய இணைநதிகளாகின்றன. மௌனம் போதுமானதெனினும் சொற்கள்தான் சுவையானது போலவே மௌனத்தைத் தாண்டி ஞானம் சொற்களின் ஊடாகத் தொடர்ந்தோடுகிறது. பாதி நதி என்று ஒன்று இல்லவே இல்லை.ஜென் தத்துவமென்பது குளிர்கண்ணாடி போன்றதல்ல. மாற்றிக் கொள்ளவும் இரவல் தரவும் இயலாது. அவரவர் கண் அழுத்தத்திற்கப்பால் தயாரிக்கப் படுகிற பிரத்யேகக் கண்ணாடி.
 
மழையற்ற பொழுதுகளில் மடக்கி வைத்திருக்கும் குடையைப் போல மனிதனின் தேடல் அமைகிறது. இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வித்தியாசத்தை மழை வந்து ஏற்படுத்தித் தருகிறது. ஜென் தத்துவம் என்பது ஒரு மாபெரிய மரத்தின் அடிமடியில் அமர நேர்கையில் பொழிகிற மழைச்சாரலின் குளுமை போன்றது. இன்னொருபுறம் அதுவே பல விளக்குகளை ஏற்றுவதற்கு முன்பாக ஏந்திக் கொள்ளுகிற முதல் விளக்கைப் போன்ற உள்ளங்கை ஒளித் தெறலின் இதமும் ஆகிறது.

அச்சம் நரகமாகையில் ஞானம் சொர்க்கமாகிறது. மௌனம் வரளுகையில் சொற்கள் பொங்குசுனையாகின்றன. அன்பு சுரந்துகொண்டிருக்கும் வரை தட்பத்துக்கும் வெப்பத்துக்கும் இடையிலான சமநிலை சாத்தியமாகிறது. எல்லாம் வல்லவனைத் தவிர வேறு யாரும் அறியப் பெறாத ரகசியமாகவே எஞ்சிக் கொண்டிருக்கிறது வாழ்வின் புதிர். யாராவது கைப்பிடித்து அழைத்துச் செல்ல மாட்டார்களா என்று சதா ஏங்குகிறது மனித மனம். எதற்கும் இருக்கட்டும் என்று உபாயங்களைச் சேமித்துக் கொள்கிறான் சாமான்யன். மௌனத்திலிருந்து ஞானத்திற்கும், ஞானத்திலிருந்து மௌனத்திற்குமான ஆட்டத்தில் செல்வதும் திரும்புவதுமாகப் பொழுதைப் போக்குகிறான் தத்துவக்காரன். புள்ளிகள் தீர்கிற நாளில் கோலத்தைத் தொடங்கலாம் என்று நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் கவிஞன். சித்திர நிஜத்தின் முன் போலி புனிதமாகிறது.கலை எல்லா சாத்தியங்களிலும் உடனிருக்குமே தவிர நேரடியாகக் களமாடுவதில்லை. தத்துவங்களின் பிரயோகமும் அப்படியானதே.

மௌனத்தை துக்கத்தை சந்தோஷத்தை கூச்சலை நோய்மையை பயத்தை கலக்கத்தை என எங்கெல்லாம் குழம்ப நேரிடுமோ அங்கெல்லாம் தேவைப்படுகிற மருந்துச்சொற்களை இந்தப் புத்தகம் சாத்தியம் செய்கிறது. தூரதேசமொன்றிற்குச் சென்று திரும்பிய பிற்பாடு எழுதித் தருகிற பயணக் கட்டுரை எங்கனம் துவக்க கால அச்சத்தை பயணம் குறித்த ஒவ்வாமையை சென்று திரும்புகிற வரைக்குமான அறியாமையை என்ன நேருமோ என்கிற புதிர்கலந்த வெறுமையை எல்லாம் ரத்து செய்து தருமோ அதே போன்றதொரு நிமித்தப்பூர்வ அறிதலை வாழ்க்கை என்ற பெரும்பயணத்தைக் குறித்த நம்பகத்தை வெ.இறையன்பு எழுதி இருக்கக் கூடிய இந்த நூலின் வழியே பெற முடிகிறது

 திரு.இறையன்பு ஆசிரியரின் பொறுப்புணர்வும் ஆய்வாளனின் தாகமும் கொண்ட ஒருவராக ஜென் தத்துவத்தை அணுகுகிறார் வாராமழையை வரச்செய்கிறாற் போல் ஒரு அற்புதத்தைக் குறித்த புரிதலை அறிவிப்பவரது நடைமுறைச் சிக்கல் அமையக் கூடும். எனினும் பருவம் தப்பாத நல்மழை போல  எளிய புரிதலுக்கான மொழியினூடாக அபாரமான விளக்கங்களை சாத்தியம் செய்திருக்கிறார். நெடுங்காலமாய் ஜென் குறித்த பயணத்தில் இருப்பவருக்கும் புத்தம் புதிதாய்ப் புறப்படுகிறவருக்கும் இந்நூலின் வழியாக ஜென்னில் நுழையவும் திரும்பவுமான வாசல்களைத் துல்லியமாக்கித் தந்திருக்கிறார். பெட்டிக்கதைகள் சிறுபிராயத்து நெல்லிகளாக மனம்பற்றுகின்றன.கூற்ல் நேர்த்தியும் சொற்பிரயோக துல்லியமும் அயர்ச்சி தராத நகர்தலுமாக இதன் அத்தியாயங்கள் அமைந்திருக்கின்றன. பேசுபொருளைத் தாண்டிய ஒரு சொல்லைக் கூட எங்கேயும் காணவியலாத மொழியாள்கையும் கச்சிதமும் போற்றுதலுக்குரியது. எளிய தலைப்புக்களின் பொருத்தமும் பாங்கும் சின்னஞ்சிறு மாத்திரைகளுக்குள் பெருநோய்மைகளைத் தீர்க்கிற வல்லமை போல் உறைகின்றன.

.இந்த நூலைக் குறித்த முதற்சொற்களை என்னை எழுதக் கேட்டது திரு.இறையன்பு அவர்கள் என் மீது கொண்டிருக்கக் கூடிய பேரன்பு. ஜென் தனக்கானதைத் தானாய் நிகழ்த்தும் என்பதால் அதனை பனிதீராக் குறுகுறுப்போடு ஏற்றேன்.ஜென் போதுமான பேரொளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

  தத்துவங்கள் மூலிகைகளைப் போன்றவை. முட்களோடு கலந்திருப்பவை. பதர்களுக்கு நடுவில் வளருபவை. விஷவண்டுகளும் பூச்சிகளுமாய்த் தெரியவருபவை. தூரவனத்தில் மாத்திரம் கிட்டுபவை. பக்குவத்துக்கப்பால் சேர்மானச் சூத்திரங்களுக்கு உட்பட்டு, பத்தியங்களின் ஊடாகப் பலன் தருபவை, என்றபோதும் நோய்மைக்கு நிரந்தர ஒற்றை மாற்றாகத் திகழ்பவை. எனில், அவற்றைத் தொழுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழில் திருமிகு இறையன்பு தேர்ந்தளித்திருக்கும் இந்த ஜென் நூல் அப்படியான மொழிவழி மூலிகை. வாழ்தல் இனிது