18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி
18 சுமாராகப் பாடுகிறவள்


"சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. 
மெல்லப் புன்னகைத்தேன்.
ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு 
அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது.
அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.
எப்படி எதையுமே யாராலும் முழுவதுமாய் 
சொந்தம் கொண்டாட முடிவதில்லையோ 
அப்படித் தான் பாடல்களும் ஆகின்றன.
பாடலென்பதும் ஒரு பண்டம் தான் 
என்று சொல்ல முற்படுகையில் 
மனம் வலித்துப் போகின்றனர் பலரும்.
ஆனால் அது தான் உண்மை
பாடலென்பதும் ஒரு பண்டம் தான்.
ஒரு பாடலையும் யாரொருவராலும் 
முழுவதுமாகச் சொந்தம் கொண்டாடிவிட முடிவதே இல்லை
மாறாக அவர்கள் வேறொன்றைச் செய்ய முடியும்.
அது
ஒரு பாடலின் மேனியெங்கும் 
தன் பெயரைப் பச்சை குத்தினாற் போல் எழுதிவிடுவது
அப்படித் தான் 
பாடல்கள் 
அவற்றைப் பாடுகிற குரல்கள் 
ஒரு-சிலவற்றின் பெயர்களைத் 
தன் மேனியெங்கும் சுடர்ந்துகொண்டே இருக்கப் ப்ரியப்படுகின்றன.
வெளித் தெரியாத வேர்களின் அடுக்ககமாகத் தான் பாடல்கள் திகழ்கின்றன.
சுமாராகப் பாடுகிறவர்களால் தான் 
பல பாடல்கள் அடுத்த காலங்களுக்குத் தம்மை 
மேலெழுதிக் கொள்கின்றன.
ஆகவே 
இந்த உலகின் ஆகச் சிறந்த பாடல்கள் 
மிகவும் சுமாராகப் பாடுகிறவர்களால் மட்டுமே 
ஒரு மந்திரத்துக்குண்டான உச்சாடன அடைதலைப் பெற முடிகிறது.
சுமாராகப் பாடுகிறவர்களை 
அப்படியான பாடல்கள் மானசீகத்தின் உள்ளே வணங்கித் தொழுகின்றன.
கரவொலிகளைத் தின்றுய்க்கிற கனாமிருகங்கள் 
செவிலியாயிருந்து பாலூட்டியதால் மாத்திரமே 
அப்படியான பாடற்குழந்தைகள் தப்பியுயிர்த்தன 
என்பது இருளில் புதையுண்ட சரிதநிஜம்.
ஏக்கத் தாமரை மலர்கள் 
ஆசை வெள்ளத் தனைய உயரங்களை 
அடைந்துயிர்ப்பதும் முன் சொன்னதன் உப-நிஜம் தான்.
ஒரு பாடல், தன்னை யாராவது முணுமுணுக்க மாட்டார்களா என்று 
பசியோடலைவது அதன் வாழ்வியல்பு.
முழுவதும் பாடப்படுகிற தினங்களைத் 
தமக்கான வாழ்த்துமழைச் சொரிதலெனவே கொள்கின்றன.
யாராவது யாருக்காவது தன்னை அறிமுகம் செய்கையில் 
நன்றியோடு தன் புதிய ப்ரதியொன்றைப் பிறப்பித்தனுப்புகின்றன.
வாழ்பவர்களினூடாகத் தாமும் வாழ்பவையன்றி 
வேறில்லை பாடல்கள்,காண்!
என்றெல்லாம் சொல்லி முடித்தேன்.
கண்களால் கேட்க முடியாதென்பதைப் பொய்ப்பித்தபடி 
என்னையே பார்த்திருந்தனள்.
"நான் கேட்டதற்கு என்னென்னவோ சொல்கிறாயே" என்று சிணுங்கினள்
சுமார் எனும் சொல்லை மாத்திரம் நீக்கி விட்டால் 
இந்தப்ரபஞ்சம் பொத்தென்று செத்துவிழாதா,கண்மணி...?
நீ அட்சரம் பிசகாமல் சுமாராகப் பாடினள். 
சுமாரிற் சிறத்தல் ஒன்றும் எளிதல்ல. 
கடவுளால் ஆகாத ஒன்றே ஒன்று 
சுமாராயெதையும் செய்துவிடுதல் தான். 
நீ அதனினும் ஓங்கிச் சுமாராய்ப் பாடினள். 
பிரதியும் நிகரும் செய்யமுடியாத ஒற்றை உன் பாடல். 
ஆகவே கடவுளை விஞ்சினள் கேள்! என்றேன்
"நீயும் என் பாடலைப் பற்றிச் சுமாராய் எதோ சொல்ல முயற்சிக்கிறாய்" 
என்றவாறே எழுந்தகன்று சென்றனள்