கதைகளின் கதை 8

கதைகளின் கதை 8

வாழ்வாங்கு வாழ்தல்


இருளின் திசையுள் புகுந்து செல்கிறவனுக்கு முதல் வெளிச்சமாகச் சின்னஞ்சிறு ஒளிப்பொறி கிட்டினால் கூடப் போதும்.ஒருவேளை அப்படியானதொரு சிறுபொறி கிடைக்கவே இல்லாமல் போனாலும் காலம் அடுத்த தினத்தின் அதிகாலையைப் பெருவெளிச்சமாக்கித் தரும்.ஆகக் காலம் எதிர்த்திசையில் தன் கரத்தில் பேரொளியோடு வந்துகொண்டிருக்கிறதாய்த் தானே அர்த்தம்..?இருளென்பது ஒளியின் வருகைத் திசை என்றால் தகும் தானே…?

வணிக இதழ்களின் சிறுகதைகளை ஒரு புறம் இருத்தலாம்.இலக்கியத் தரம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது.?உண்மையில் ஒரு சிறுகதை இலக்கியத் தரத்தோடு இருக்கிறதா இல்லையா என்று என்ன அளவீடுகளைக் கொண்டு புரிந்து கொள்வது..?இந்த வினா ஏற்கனவே பலமுறைகள் கேட்கப் பட்டுவிட்டாயிற்று.இங்கே இதே கேள்வியின் இன்னொரு துணைக்கேள்வியையும் சேர்த்துக் கேட்கலாமா..?எல்லாவற்றுக்கும் போலிகள் இருப்பதைப் போல இலக்கியத் தரத்திற்கும் போலிகள் இருக்கக் கூடுமல்லவா..?
மேற்காணப்படும் வினாவுக்கு சத்தியமாக ஆம் என்ற பதிலே சரியானது.தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்றாலும் கூட காலத்தின் அடைப்புக் குறிகளுக்குள் சிலபல சுமாரினும் சுமாரான படைப்புக்களும் கூட இடம்பெற்றுத் தங்களை மேலெழுதிக் கொள்வதற்கான வாய்ப்பும் உண்டு தானே..?இங்கே கூறத்தக்கது இவை போன்ற எல்லைக் கோடுகளுக்கு இங்குமங்கும் ஊசலாடுகிற கதைகளைப் பற்றி அல்ல.எந்த விதத்திலும் புறக்கணிக்க முடியாத ஒரு கதை தனக்கான இடத்தை மிகச்சப்தமான கரவொலி மூலமாய்ச் சென்றமரும்.
உலக அளவில் கனத்தைப் பெயர்த்தளிக்கிற கதைகளுக்கு இருக்கிற வரவேற்பும் அங்கீகாரமும் மெல்லிதான கதைசொலல் முறைக்கு இருப்பதாகச்சொல்ல முடியது.விஷயம் துக்கம் மற்றும் சந்தோஷம் ஆகியவை குறித்தல்ல.அவை பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறோம்.அவலச்சுவை என்ற சொல்லை எங்கனம் பிரிக்க..?துக்கத்தை சுவைபடச் சொல்ல முடியுமா..?ஒரு நகைச்சுவைக் கலைஞனின் கண்ணீரைப் போன்றதல்லவா கடினமாயிருக்கக் கூடும் அப்படிப் பகிர்வது..?
சிறுகதைகளில் புதுமைகளைப் புகுத்துவதென்பது செயற்கையானதாக இருக்கக் கூடாது.அங்கனம் இருந்தால் அது கடுமையாக நிராகரிக்கப் படும்.அப்படி இல்லாமல் சிறுகதையின் மறைபொருண்மையாய் உள்ளுறையும் உப்பினைப் போல் கண்மறைந்து கிளர்த்துகிற பாணி உத்தி வசனம் மௌனம் குழப்பம் இறுக்கம் முடிச்சு விவரணை ஒன்று மற்றொன்றாதல் சிதறல் நிறைவு ஆகியவற்றிலெல்லாம் வழமையிலிருந்து விலகித் தப்பும் பறவைகளுக்கு வேறுவானங்கள் கிட்டக் கூடும்.அவ்வகையான மாறுதல்கள் வரவேற்கத் தக்கவையே.
ஒரு கதையை இப்படித் துவக்கி இப்படியெல்லாம் வளர்த்து இங்கனம் அதில் குழப்பத்தைச் செருகி அதை இவ்விதம் கிளைக்கச் செய்து இவ்வாறாக ஒரு முடிவை நோக்கி ஓடி கச்சிதமாய் நிறையச் செய்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதப்படுகிற கதைகளை வாழ்க என்று வாழ்த்தி விட்டு வேறு வேலை பார்க்கலாம்.அது கதைக்கு மாத்திரமல்ல.சமையலுக்கும் பொருந்தும்.செய்கிற கரமும் கூடிக் குறைகிற ஒரு துளியின் துளி உப்பும் புளியும் மாற்றித் தராதா சொல்லப் பட்டதினின்றும் நிகழ்ந்தேறியதன் சுவையை..?எங்கனம் எழுதிச் செய்ய இயலும் சமையலையே முடியாதென்ற போது கதை என்பது கலை ஸ்வாமி.சொல்லிக் கொடுத்து வருமா..?சொல்லில் கொடுத்தால் தகுமா..?கடினம் தான்.
போலவே தான் கதாபாத்திரங்களும் எப்படியானவர்கள் என்ற விவரணை.என் நண்பரொருவர் சொன்னார்.இது வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளில் கதை நாவல் கவிதை என எப்படைப்பாயினும் ஆண் பெண் ஆகிய இரு ஜென்மங்களுக்கும் சொல்லப்பட்ட மொத்த உவமைகளையும் தொகுத்தால் எத்தனை பெரியதாக வரும்.?என்றார்..நான் மௌனித்தேன்.இன்னும் சொல்கிறேன்.இதுவரையிலான உவமைகளை மாற்றினால் என்னவாகும்..?ஆணுக்கான உவமைகளை பெண்ணுக்கும் பெண்ணுக்கானதை ஆணுக்கும் தந்தால் தகுமா..?என்றார்.சரித்தான் மனிதர் இன்னும் பேசட்டும் என காத்திருந்தேன்.
சரிதானய்யா…இதுவரையிலான சொல்லப்பட்டவைகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டோம் என்று வைத்துக் கொள்ளேன்..என்னவாகும்..?புத்தம் புதிய உவமைகள் தோன்றிக் காக்குமா அல்லாது போனால் கதைகள் வறண்டு காற்றுக்கும் நீருக்கும் அருகிச் சாகுமா என்றார்.பெரிதாகச் சிரித்தவர் இதிலிருந்தே ஒரு கதையைத் தொடங்கலாம் என்று சிந்திக்கிறீரா என்றார்.இன்னும் சிரித்தோம் இருவரும்.
உண்மையில் விதிகள் என்று ஏதுமில்லை என்றாலும் பெரும்பாலானவர்களின் ஏற்புக்குரிய எதையும் மறுதலிக்கிற கதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்படுகின்றன.அத்தகைய கதைகள் அப்படியான விதிமீறலுக்காகவும் காலத்தின் வழமையிலிருந்து விலகுகிற அதே நேரத்தில் அடுத்த காலத்தின் விதிகளை ஊகித்து அவற்றை முன்வைத்தவண்ணம் இருப்பதை சோதித்தறியும் முகமாகவும் அவற்றின் தன்மையற்ற தன்மைகளுக்காகவும் மேலும் அதன் களம் காலம் பாத்திரங்கள் அவற்றின் முரண் செலுத்து திசை முடிவடைகிற புள்ளி மற்றும் பின்னதான நீட்சி ஆகியவற்றிற்காகவும் விரும்பப்படுகின்றன.அல்லது நிராகரிக்கப் படுவதும் மேற்சொன்ன காரணங்களுக்காக அமையக் கூடும்.
தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் சொற்பமான கதைகளையே எழுதிவர் சம்பத்.இளம் வயதிலேயே மண் நீங்கியவர்.தனது கதை சொல்லும் முறை கதைகளின் நேரடித் தன்மை பாத்திரங்களினிடையேயான அலட்சியமுரண் மற்றும் தத்துவார்த்தமான விசாரணைகள் ஆகியவற்றுக்காக தமிழ் இலக்கிய நிலத்தில் சம்பத்தின் பெயர் வெகு அழுத்தமாக கல்லிலெழுதிய சிற்பம் போல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.சம்பத் கதைகளின் முதற்தொகுதியை அழகிய சிங்கர் தனது விருட்சம் பதிப்பகத்தின் மூலமாக ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தொகுத்துக் கொணர்ந்தார்.அதிலடங்கிய பத்துக் கதைகளுமே என்னளவில் தமிழின் ஆகச்சிறந்த கதைகள் என்றாலும் கூட இடைவெளி என்கிற ஒரு கதையை இங்கே விரித்துத் தர விழைகிறேன்.
தேசத்தின் தலைநகர் தில்லியில் நடைபெறுகிறது இடைவெளி என்னும் கதை.
அதன் துவக்க வரிகளை அப்படியே தர விருப்பம்

“என்னவாம்..?” என்ன டெஸிஷன்,” என்றான் வெங்கட்.
“தெரியலை.மோஸ்ட் ப்ராபப்லி மத்தியானத்துக்கு மேலே லீவாக இருக்கும்,,” என்றான் சுரேஷ்
“லீவு விடமாட்டா….ஆபீஸ் பூராவுக்கும் கங்காதரனின் ஃபாதரைத் தெரியாது…யாரு வேண்டுமோ போகலாம்.அப்படித் தான் இருக்கும்.”என்றான் சுந்தர்.
“ஆர் யூ கோயிங்க்” என்றான் நாராயணன் சாகேத்தைப் பார்த்து.
“தட்கோஸ் வித் அவுட் ஸேயிங் ” என்றான் சாகேத்.
“ஃபாதரும் கங்காதரனும் ஜப்பானில் சந்தித்துக் கொண்டனர்.அதிலிருந்து அவருடைய ஃபாதரையும் என் ஃபாதருக்குத் தெரியும்.”அம்மா வந்தா”வைப் பற்றியும் லெட்டரில் அவர் ஒரு தரம் குறிப்பிட்டிருந்தார்””

மிக நேரடியான ஒர் அலுவலக விதானத்தின் குழப்பமற்ற உரையாடலில் துவங்குகிறது இடைவெளி சிறுகதை.நாராயணன் என்பவனது பார்வையில் தொடங்கும் இக்கதையில் அவனோடு அலுவலகத்தில் உடன் பணி புரிகிற கங்காதரன் என்பவரது தந்தை அப்போது தான் மரணமடைந்திருக்கிறார்.அந்த துஷ்டிக்கு செல்வதைப் பற்றிய ஆலோசித்தலாக தொடக்கம் விரிகிறது.
நீ அந்தக் கடிதத்தை பற்றி என்ன நினைக்கிறாய் எனக் கேட்கிற சாகேத்திடம் நாட் மச் என்கிறான் நாராயணன்.
நீ அவரது வீட்டுக்குப் போயிருந்தே இல்லியா என்கிறான்.அதற்கு
“டூர் போயிருந்தப்போ கங்காதரன் அவரிடம் ஒரு லெட்டரை கொடுத்து கொடுக்க சொன்னார்.என்னவோ ஜென்மம் பூராவும் பழகியது போன்று கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.இலக்கியம் ரிலிஜன் பற்றி எல்லாம் பேசினோம்”
வாட் டூ யூ திங்க் அபவ்ட் ஹிம்..?”
ரொம்பப் பெரிய எவால்வ்ட் சோல்.ஒரு ரிஷியின் தன்மை இருந்தது.பேசுபவனின் பிரச்சினை என்ன அவன் என்ன நினைக்கிறான் என்பதை பளீர்னு அவரால் கணிக்க முடிந்தது.டாஸ்டாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.பிரதர்ஸ் கார்மஜோவ் படித்திருப்பதாகச் சொன்னார்”என்று சொல்லும் நாராயணன் கங்காதரனின் தந்தை பற்றித் தொடர்கிறான்
“பிரபஞ்சம் என்கிற களேபரத்தில் நாம் அத்தனை முக்கியமில்லை என்கிறதை திட்டவட்டமாகச் சொன்னார்.ரொம்ப அழுத்தமான தன்னம்பிக்கை கொண்ட பேச்சு.THAT’S something with the older generation.வார்த்தைகளுக்கு ஒரு அசாத்திய மதிப்பு அவர்களால் கொடுக்க முடிந்தது.நம்மால் முடியறதில்லை நான் உங்கிட்டே பத்துரூபாய் வாங்கினேன்னு வைத்துக் கொள்வோம்.நாலு நாள் கழித்துத் தரேன்னு சொல்லறேன்.ஆனால் தர்றதில்லை.நீயும் கேட்பதில்லை.”
“Older generation”ல நாற்பது நாள் டைம் முன்னமேயே கேட்பதற்கென்ன என்பார்கள்.வார்த்தைகளின் அர்த்தங்கள் பொய்த்துக் கொண்டே வருகின்றன.  Modern problem is definitely one of communication”
வாஸ்தவம் தான் என்றன் சாகேத்..வர்றேன்.இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு.நீ மத்தியானம் வர்ரயோன்னோ”என்றான்.
“டு பீ ஷ்யூர் எஸ்.”என்றான் நாராயணன்.தொடர்ந்து ஃபாதரும் வருகிறாரோன்னோ ” என்றான்.
“நோ ஹீ இஸ் இன் ஜெக்.”என்றான் சாகேத்.
ஆமாம் சொன்னார் மறந்து போய்டுத்து” என்றான் நாராயணன்.
இடைவெளி சிறுகதை இன்றைய காலத்தில் தன்னை எந்த விதமான நெருடலும் இல்லாமல் செருகிக் கொள்வதைக் குறிப்பிட்டாக வேண்டும்.நவ காலத்தில் இன்றைய இக்கணத்தின் மனோநிலைகளில் ஏற்பட்டு இருக்கிற சலிப்பும் ஒரு அறிந்த அதே நேரம் அறியாத மனிதரின் மரணம் இக்கதையில் ஒரு தகவலாய்த் தொடங்குகிறது.எந்த விதமான முஸ்தீபும் இல்லாமல் ஒரு இறகு பறந்து வேறிடத்தில் படர்வதைப் போல வெகு இயல்பான இன்னொரு மற்றொன்றாகவே அந்த மனிதரின் மரணம் பற்றிய தகவல் வருகிறது.அந்த அலுவலகத்தில் பணிபுரிகிற பலருக்கும் பல்வேறு விதமான அதிர்வை ஏற்படுத்துகிறது.அதாவது சம்பிரதாய அதிர்ச்சிகள் ஏதையும் காண்பித்துக் கொள்ளாத அதே நேரத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி அந்தச் செய்தியின் முதுகில் ஏறி அவரை அவசர அவசரமாகக் கூடுதலாகச் சற்றேனும் அறிந்து கொள்வதற்கான முயல்வில் கேள்விகள் எழுகின்றன.பதில்கள் அந்த மனிதரைப் பற்றிய தன்னாலான சித்திரத்தை எழுப்பத் தொடங்குகின்றன.
மரணம் இலக்கியத்தின் மாபெரும் சதுக்கம்.சர்வ மொழிகளிலும் மரணம் குறித்த விசாரங்கள் தத்துவார்த்த விவாதங்கள் தன்னாலான தர்க்க மறுப்புக்கள் ஏற்றலும் கொள்ளலும் நிராகரித்தலுமான நியாயவாதங்கள் மௌனங்கள் என மரணத்தைப் பற்றிய அனுமான அபிப்ராயங்களை நாளும் நிகழ்த்திக் கொண்டே இருப்பதன் வாயிலாக மரணம் குறித்த புரிதலை செம்மையாக்கிக் கொள்ள விழைகிறான் மனிதன்.அதிலும் கலைகளைக் கைக்கொள்கிறவன் அறிதலற்ற அறிதலாக மரணம் குறித்த வெளிச்சத்தை அல்லது இருளை நெருங்கிப் பார்ப்பதன் மூலமாக அது பற்றிய பொதுப்புத்தியின் விருப்பமின்மையை வென்றுகாட்ட விழைகிறான்.இது நாளும் நிகழ்ந்து தொடர்கிறது.
இந்தக் கதையின் முதல் ஊடுபாவாக கங்காதரனின் தந்தையின் மரணம் நேர்கிறது.இன்னுமோர் ஊடுபாவாக நவ டெல்லி மகா நகரத்தின் வெடித்துச் சிதறிய மனித வாழ்வின் ரகசிய நம்பகங்களும் எதன் மேலும் பிடிமானம் குறைந்த முதல் தலைமுறையின் விட்டேற்றித் தனமான அதே நேரத்தில் சகல தளைகளிலிருந்தும் எப்போதும் விடுதலையை எதிர்நோக்குகிற உரையாடல்களுமான சந்திப்பு நிகழ்கிறது.
டெல்லியின் தெருக்களில் பயணித்தபடி ஒவ்வொரு பகுதியாகத் தாண்டிக் கொண்டே நாராயணனும் சாகேத்தும் கங்காதரன் வீட்டை நெருங்கினர்.
மரண வீட்டின் வாசல் உள்ளே குழுமி இருக்கும் சொற்ப ஜனக்கூட்டம்.அவர்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் சென்று அமர்ந்து கொள்கின்றனர்.கங்காதரனின் அப்பா தூங்குவது போலவே தான் படுத்திருக்கிறார்.இறந்து விட்டார் என்பதை நம்புவது கடினசிரமமாய் இருக்கிறது.நாராயணனுக்கு முதல்முறை அந்த வீட்டுக்கு வந்த போது இருந்த சகஜ சூழல் வந்து போகிறது.கங்காதரனுடைய தாயார் முன்பு பார்த்த போதே வாழ்வின் சகல சோகவடுக்களைத் தாங்கி நிற்பவளைப் போலத் தோற்றமளித்தவள் இப்போது இன்னுமொரு சோகமாய் இதனையும் தாங்கிக் கொண்டாற் போலத் தோன்றுகிறது.பள்ளி விட்டு வந்த பேரக்குழந்தைகள் அப்போது தான் சேதி அறிந்து முழி முழி என்று முழிக்கின்றன.கங்காதரனுடைய அம்மாவுக்குத் தான் இது பேரிழப்பு என்று எண்ணிக் கொள்கிறான் நாராயணன்.
சாகேதும் நாராயணனும் எழுந்து பஸ் ஸ்டாப்புக்கு வருகிறார்கள்.மெட்ராஸில் இருந்து கங்காதரனுடைய மூத்த சகோதரர் வருவதற்காக அந்த வீடு காத்திருக்கிறது.இனி அந்த மனிதரைப் பற்றி எதுவும் மிஞ்சப் போவதில்லை என்கிறான் சாகேத்.கொஞ்ச நாளைக்கு அவருடைய ஞாபகம் மிஞ்சும்.அதன் பின் நத்திங் என்கிறான்.
தத்தமது வாழிடங்களுக்குப் போகலாம் என்று நகர முற்படுகிற நாராயணனை சாகேத் தடுத்து கனாட்ப்ளேஸில் நடக்கிற ஒரு இருள் டான்ஸூக்கு அழைக்கிறான்.நபருக்கு பத்து ரூபாய்.மேடையில் யாரோ ஒருத்தி கோரமாக உடலை அசைத்துக் கொண்டிருந்தாள்.திடீரென்று ஆடியன்ஸ் நடுவில் குதித்து ஒருவருடைய சிகரெட்டைப் பற்றி இழுத்து இருமுறை புகைத்து கரடுமுரடான குரலில் WHERE IS YOUR WIFE என்றாள்.அந்த டான்ஸூம் அந்த பெருமார்புகளை அவள் அசைத்த விதமும் நாராயணனுக்கு அருவருப்பு ஏற்படுத்தியது.
சாகேத் என்னவெல்லாமோ ஆர்டர் பண்ணி தின்னவும் ஆரம்பித்து விட்டான்.
இதுவும் நம்மிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்டு விடுமுன் தின்னு “என்றான் சாகேத்
“யூ ஹாவ் ரெட் லாட் ஆஃப் புக்ஸ் “என்றான் ஏதோ நினைத்துக் கொண்டது போல.
நாராயணன் மெதுவாகச் சாப்பிட முயற்சி செய்தான்.அவனுக்குக் குளிக்க வேண்டும் போல இருந்தது.
இரண்டு பேரும் தொடர்ந்து மரணம் பற்றிக் கதைக்கிறார்கள்.ஏன் மரணம் நிகழ்கிறது..?ஏன் அதிலிருந்து யார் ஒருவராலும் தப்ப முடியவில்லை…?அதில் தொடங்கித் தன் பதின் பருவ ஞாபகங்களுக்குள் செல்கிறான்.
சில காட்சிகள் சில அனுபவங்கள் மறப்பதேயில்லை சாகேத் என்கிற நாராயணன் தொடர்கிறான்.
“I Loved my sister….மஹாராணியுடைய பை டிஃபன் பாக்ஸ் அவளுடைய சப்பல் என்னுதோடு சேர்த்து எடுத்துக் கொண்டு ஓடி அவளுக்கு பஸ்ஸில் இடம் பிடிக்கணும்.அதுவும் கார்னர் ஸீட்.இல்லாவிட்டால் அவளுக்குக் கோபம் வந்துவிடும்.ஒருதரம் இப்படித் தான் நான் ஓடும்போது அவளுடைய டிஃபன் பாக்ஸ் கீழே மூடி கழன்று விழ அதை எடுக்க குனியும் போது புஸ்தகம் நிரம்பிய பை தடுக்கி கீழே விழுந்து விட்டேன்.நிறைய பேர்கள் வீல்னு கத்தினார்கள்.பஸ் வேகமாக என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன்.என்னுடைய அதிர்ஷ்டம் நான் வந்துகொண்டிருந்த பஸ்ஸூக்குக் குறுக்காக இல்லாமல் நீள வாட்டத்தில் விழுந்திருந்தேன்.இரண்டு மூன்று டயர்களும் அரை பஸ்ஸூம் என்னைத் தாண்டிவிட்டிருந்தது.நான் அதனடியில் பத்திரமாகத் தான் இருந்தேன்.ஸ்கூல் டீச்சர்களில் சில பேர்கள் இன்னமும் வீட்டுக்குப் போயிராத ப்ரின்ஸிபல் என்னை கழட்டி கழட்டி அடித்தார்.ஒரு வாத்தியார் செத்துப் பிழைத்திருக்கிறான்.விட்டுடுங்க என்றார்
YOU THANK YOUR STAR என்று சொல்லி அடிப்பதை நிறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி அனேகமாக எனக்கு மறந்து விட்டது.ஆனால் மற்றொன்று மறக்கவே மாட்டேனெனப் பிடிவாதம் செய்கிறது.
சினேகிதன் பிரகாஷ் வீட்டுக்கு விளையாடப் போனேன்.எதெதற்கோ அப்புறம் மறுபடியும் மாதமாடிகல் க்விஸ் ஆரம்பித்து விட்டான் பிரகாஷ்.எனக்கோ கணக்கு போர் அடிக்கவே ப்ரகாஷ் ப்ளீஸ் போதும் என்றேன்.கோபப்பட்ட ப்ரகாஷ் ஓடிப் பிடித்து விளையாடலாம் என்றான்.அவன் ஓட நான் துரத்த நான் எம்பித் தாவியதில் ஒரு சின்ன விலக்கத்தில் இந்தப் பக்கம் விழுந்தேன்.அந்தப் பக்கம் விழுந்திருந்தால் சின்னப் பல்லி போலக் கீழே தெரிந்த கார்களின் சாலையில் விழுந்திருப்பேன்.நல்லவேளை அப்படி நடக்கவில்லை.It was a close shave சாவுக்கும் கணக்கிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது.”என்றான் நாராயணன்.
மேடையில் இப்போது ஒருவன் பாட ஆரம்பித்தான்.கங்காதரனுடைய ஃபாதர் செத்துப் போனது இவனுக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் இவனால் இப்படிப் பாடமுடியுமா..?அவ்வளவு பக்கத்திலிருந்த யாராயிருந்தாலும் அதை தரிசித்தால் நமக்கும் ஒரு நாள் இதே கதிதான் என்று தோன்றாமலிருக்காது.ஒரு கணத்திற்குத் தான் சொல்லேன்.அந்த உணர்வு ஏற்படத் தான் தோன்றும்.அப்படித் தோன்றிய பிறகு இவனால் இப்படிப் பாட முடியுமா..?நாராயணனை அவன் குரல் பயங்கரமாக ஈர்த்தது.அவர் கங்காதரனுடைய ஃபாதர் இப்படி வசீகரக் குரலில் ஈர்க்கப்பட்டு எப்போதாவது நின்றிருப்பாரா..?உலகத்தின் சோகத்தை எல்லாம் தானே தாங்கிக் கொண்டிருப்பதைப் போலல்லவா காணப்பட்டார்..?அது அவசியம் தானா..?
நாராயணனுக்கு கைகளையும் கால்களையும் அசைத்து அசைத்து டான்ஸ் ஆடவேண்டும் போலிருந்தது.எங்கேயாவது தான் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவோமோ என்று பயந்தான்.”சாவு என்பது ஒரு இடைவெளி ” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.அன்றிலிருந்துதான் சொல்ல முடியாத அளவுக்கு உடல் சுகத்தில் அவனுக்கு நாட்டம் விழுந்தது.
சம்பத்தின் இந்தக் கதையை நன்றாக அவதானிக்கையில் மரணம் என்பது இந்தக் கதையின் மையப்பாத்திரமாக விரிந்திருப்பதை உணரமுடியும்.மேலும் கங்காதரனுடைய அப்பாவின் அன்றைய மரணம் அதற்கு துக்கம் விசாரிக்கப் போகும் நாராயணன் மற்றும் சாகேத் இருவரின் பார்வையில் மரணம் இரண்டாகக் கிழிகிற சல்லாத் துணியாகிறது.ஒரு புதிய துக்கத்தை எத்தனை சதவீதம் பெற்றுக்கொண்டு அதிலிருந்து எங்கனம் வெளிப்பட்டு வருவது என்பது மனிதனுக்கு எப்போதும் சங்கடமான மனப்பிசைதலாகவே தொடர்ந்து வருகிறது.கட்டாய நிமித்தமாகவே அந்த இருவரும் கங்காதரனுடைய வீட்டுக்குச் செல்கிறார்கள்.அங்கே சில தருணங்கள் அமைதி காத்துவிட்டுத் திரும்புகிறார்கள்.ஒரு மகா நகரத்தின் அழிவுகளைப் பேச முற்படுகையில் மரணித்த அந்த மனிதனுடைய ஞாபகங்கள் வந்து போகின்றன.நாராயணன் என்னும் தற்போதிருப்பவன் அவனது முன் பழைய ஞாபகத்தின் இருவேறு சம்பவங்களை விவரித்து விட்டு அவற்றில் இரண்டு வெவ்வேறு மரண நிகர்த் தருணங்களைத் தான் கடந்து வந்ததைப் பற்றி சொல்கிறான்.அவற்றில் ஏதேனுமொன்றில் தான் மரணித்திருந்தால் இந்த கங்காதரனுடைய அப்பாவின் மரண தினம் இவ்வாறு இருந்திருக்காதல்லவா என்னும் வாழ்வின் அபத்தம் பற்றிய வியத்தல் அவனை மீறி வழிகிறது.
மேடையில் முன்பு ஆடியவள் இப்போது இல்லை புதிய ஒருவன் பாடுகிறான்.ஆனால் அந்தக் கணம் ஆடவேண்டும் என்றும் தன்னை அறியாமல் ஆடிவிடுவோமோ என்றும் தோன்றுகிறது. நாராயணனுக்கு மரணம் குறித்த தன்னளவுத் தெளிவொன்றை அடைந்ததாக நம்புகிறான்.
சம்பத் எழுதிய இந்தக் கதையின் புனைவுத் தன்மையை மீறி இதன் தத்துவார்த்த இயக்கம் இந்தக் கதையோடு முடிவடைந்துவிடுவதில்லை.தன்னைத் தப்பித்துக் கொண்டு ஒரு வனம் தாண்டி வேறு வனத்துள் புகுந்து பொங்குகிற ரகசிய நதியின் ஆழ உத்வேகமாய்ப் பெருக்கெடுக்கின்றது.

மொழியென்ப வாழ்வாங்கு வாழ்தல்.
வாழ்க கதைகள்