ஸ்ரீ நேசனின் கவிதை

ஸ்ரீ நேசனின் கவிதை


ஸ்ரீ நேசனின் புதிய கவிதைத் தொகுதி வெளிவந்து இருக்கிறது. தொகுப்பின் தலைப்பு “மூன்று பாட்டிகள்” . தமிழ் மொழியில் இயங்குகிற மிகத் தீவிரமான கவிமனங்களில் ஒன்று நேசனுடையது. வெற்றி தோல்விகள் ஏதுமற்ற மெனக்கெடல்கள் எதுவுமில்லாத தன் போக்கில் வழிந்து நிறைகிற நதியொழுக்கெனத் தோன்றி முடிகிற கவிதைகள் இவை. யூகம் வழமை இரண்டுக்கும் அப்பாற்பட்டு இயங்குபவை. கவிதை எழுதுவதில் நிகழ்ந்துகொண்டிருக்கக் கூடிய சகலவிதமான பீடிகைகள் முகாந்திரங்கள் யாவற்றுக்கும் எதிரான திசை நகர்தலைக் கொண்டிருப்பவையும் கூட. சிறந்த அச்சுருவாக்கத்தோடு
இந்தத் தொகுப்பை சால்ட் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஸ்ரீ நேசனின் காலத்தின் முன் ஒரு செடி மற்றும் ஏரிக்கரையில் வசிப்பவன் இரண்டு தொகுதிகளும் என் மனத்துக்கு நெருக்கமாக நான் உணரும் கவிதை நூல்கள். அந்த வரிசையிலும் அவரது புதிய தொகுதியான மூன்று பாட்டிகள் கவிதைத் தொகுதிகளையும் நிச்சயம் சொல்வேன் எனத் தோன்றுகிறது. வாசித்து வெகு நேரம் ஆகியும் விலகி வரவே முடியாமல் ஒரு வசியத்தின் மௌனத்தை வாசிப்பவனின் தற்கணமாக மாற்றுவது கலையின் சூட்சுமம். நேசன் எவ்விதமான முன்னேற்பாடும் இன்றி யதார்த்தத்தின் கூடுதலாகவே அதனைச் செய்து விடுகிறார். இந்த ஒரு கவிதையை வாசியுங்கள். தமிழின் ஆகச்சிறந்த கவிதைகளை வரிசை வைக்கையில் இதனை ஒரு போதும் புறந்தள்ளவே முடியாது .

சொல் சில்பம்

அம்மலையடிவாரத்தில் ஒரு பெண் இருந்தால்
அவள் பெண்ணுமாவாள் நிலமுமாவாள்
அந்நிலத்தினடியில் ஒரு விதை இருந்தால்
அது விதையுமாகும் மரமுமாகும்
அம்மரத்தினடியில் ஓர் ஆடு இருந்தால்
அது ஆடுமாகும் பாறையுமாகும்
அப்பாறையினடியில் ஒரு குரங்கிருந்தால்
அது குரங்குமாகும் நிழலுமாகும்
அந்நிழலினடியில் ஒரு புற்று இருந்தால்
அது புற்றுமாகும் குன்றுமாகும்
அக்குன்றினடியில் ஒரு பாம்பிருந்தால்
அது பாம்புமாகும் ஓடையுமாகும்
அவ்வோடையினடியில் ஒரு கல்லிருந்தால்
அது கல்லுமாகும் சொல்லுமாகும்
அச்சொல்லினடியில் ஒரு பொருளிருந்தால்
அது பொருளுமாகும் இருளுமாகும்
அவ்விருளினடியில் ஒரு சுடர் இருந்தால்
அது சுடருமாகும் சூரியனுமாகும்
அச்சூரியனடியில் என் சிலையிருந்தால்
அது சிலையுமாகும் மலையுமாகும்

மூன்று பாட்டிகள்
கவிதைத் தொகுதி
ஸ்ரீநேசன்
சால்ட் பதிப்பகம்
ரூ 140