இன்னொரு காபி


இன்னொரு காபி
குறுங்கதை


“நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் என்னை விட்டு வெளியேறிப் போய் விட்டேன்” என்றான் ஜெ. அவன் எப்போதும் புதிர்களால் நிரம்பியவன். கல்லூரியில் ஆஸ்டலர்ஸ் மற்றும் டேஸ்காலர்ஸ் இரு தரப்பும் எப்போதும் எதிலும் ஒட்டாமல் விலகியே இருப்போம். இவன் விதிவிலக்கு. காலையும் மாலையும் வ்யானீன் விடுதி அறையில் தான் பெரும்பங்கு நேரம் கழிப்பான். அவனைப் பலரும் ஆஸ்டல்வாசி என்றே நினைத்திருந்தார்கள். தினுசானவன்.

“சொல்வது கதை என்றால் சுவையான ஆரம்பம். நிஜம் என்று சொல்லப் போகிறாயா?” என்ற வ்யானின் கேள்வி ஜெயைக் காயப்படுத்தியது

“இதோ பார் வ்யான். நானொன்றும் பச்சைக் குழந்தை இல்லை. கண்டதையும் உளறுவதற்கு” என்றவன் உளறலுக்கு எந்த ற வரும் என்று சம்மந்தமில்லாமல் நினைத்துக் கொண்டான். அவன் வளர்ந்து வருகிற எழுத்தாளன். கல்லூரி சாவனீரில் அவனுடைய கதை கவிதை ஆகியன பிரசித்தம்.

“அடேய் எழுத்தாளா…இதெதுவும் உன் புதிய கதைக்கான கருவேளையா..? என்னைப் பகடையாகப் பயன்படுத்தப் போகிறாயா?” என்றவன் ஆர்வமாகக் கேட்டான் “நான் உன் கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டேனா..?” அவன் வழக்கமாக இப்படியான மீறல்களைப் பெரிதும் ரசிப்பான். கையோடு வைத்திருக்கும் பாக்கெட் நோட் ஒன்றை எடுத்துக் குறித்துக் கொள்வான். எழுத்தைத் தன் வாழ்வின் சகல திசைகளுக்குமான ஒளியாகவே நம்பத் தொடங்கி இருந்தான். இன்றைக்கு மூட் சரியில்லை என்பது தெளிவு. அவன் எதையும் ரசிக்கிற மனவாகில் இல்லை.

“நான் ஸீரியஸ் ஆகப் பேசுகிறேன். நீ சிரிப்பு மூட்டுகிறாய். இது எப்படி சாத்தியம்?” என்றான்.

“ஜெ நீயே விடையைச் சொல்கிறாய். பிறகென்ன..? இதெப்படி சாத்தியம்…:? உன்னைப் போலவே ஒருவனைப் பார்க்கிறாய்.அதுவும் அடிக்கடிப் பார்க்கிறாய். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் ஏன் உன் இரட்டை சகோதரனாக இருக்கக் கூடாது..? அல்லது உனக்குத் தெரியாத உன் தம்பி அல்லது அண்ணன் யாராகவேணும் இருக்கக் கூடுமோ?” என்றான். ‘உன்னை சப்போர்ட் செய்கிறேன்’ என்ற பதத்தில் தான் சொன்னான் என்றாலும் கிணற்றில் தொலைந்த பொருட்களைத் தேடிக் கண்டடைய உதவுமே ஒரு வஸ்து அதைப் போலவே அந்தக் கூற்றின் ஆழத்தில் இருந்த பகடியை ஜெ நன்கு உணர்ந்தான்.

“சரி வ்யான் நான் கிளம்புகிறேன். என்னைப் பைத்தியம் என்று தான் நானே நம்ப விரும்புவேன் போலிருக்கிறது” நிசமாகவே அவன் கண்கள் துளிர்த்திருந்தன. “அடேய் அழுகிறாயா ஸாரி ஸாரி ஜெ. நீ என் நண்பன். உன்னை நான் கேலி செய்யமாட்டேன்”. அருகில் நெருக்கமாக அமர்ந்து அவன் தலையைக் கலைத்தான். “சொல் நீ அவனை எங்கெல்லாம் பார்த்தாய்..?”

“மூன்று மாதங்களாக அவனைப் பார்க்கிறேன். என் தூரத்து உறவினர் சபேசன் இறப்புக்கு என்னால் தாமதமாகத் தான் செல்ல முடிந்தது. அங்கே நான் போய்ச் சேர்ந்த போது என்னைப் புதிய வரவாக அங்கீகரிக்கவில்லை. எங்கே போயிருந்தே என்று கேட்டனர். சற்று முன் வரை நான் அங்கேயே இருந்ததற்கான தடங்களைப் புரிந்து கொண்டு திடுக்கிட்டேன். துக்க வீட்டில் யாரும் என்னிடம் விளையாடப் போவதில்லை. அன்றைய இரவில் அடிக்கடி உறக்கம் கலைந்தேன்”.

கேண்டீன் ரமணி வந்து ஃப்ளாஸ்கில் இருந்த காப்பியை ஆளுக்கொரு தம்ப்ளரில் வார்த்துத் தந்துவிட்டுப் போனான். முடித்ததும் “இன்னொரு காபி வேண்டுமா?” என்ற வ்யானிடம் அஸ்வாரசியமாக “ம்ம்” என்றான் ஜெ

சிப் சிப்பாகக் குடிக்க வேண்டும் என்பது ஜெயின் ரசனை அன்றைக்கு அவன் அவனாக இல்லை போலும். எதோ பிரசாத பாயசத்தைப் போல் டொபுக்கென்று கவிழ்த்துக் கொண்டான்.

“அடுத்து ஊரில் திருவிழாவில் இதே போல் நான் சென்று சேர்வதற்குள் அங்கே நான் வந்து போயிருந்ததாகச் சொல்லப்பட்டேன். மூன்றாவதாக அபரிமிதா என் காதலி அவள் என்னை வேறோரு இடத்தில் பார்த்ததாகச் சொன்னாள். இப்படி வருவது யார் என்பதை விட என் வாழ்வின் குறுக்கு நெடுக்காக அப்படி ஒருவன் ஏன் வரவேண்டும். இப்போதைக்கு என்முன்னால் வரவில்லை.அப்படி வந்தால் அவனுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் குழப்புகிறது தலை வலிக்கிறது வ்யான்” செறுமினான்

“என்னால் உன்னைப் புரிய முடிகிறது ஜெ. ஒன்று ஒருவன் இறந்து போய் அவனுடைய ஆன்மா இப்படி உலாவுகிறது என்றால் அது லாஜிக் நம்பர் ஒன். அல்லது அவனைப் போலவே இன்னொருவன் அவனுடைய இரட்டை அல்லது சகோதரன் என்றால் லாஜிக் நம்பர் டூ. இது இரண்டும் இல்லாவிட்டால் வ்யான் குரல் தற்போது மெலிந்து குறுகிற்று. உனக்கு…உனக்கு…”தயங்கினான்
“சொல்லேன் என்ன பெரிதாய்ச் சொல்லி விடப் போகின்றாய்? பைத்தியம் என்று தானே நினைக்கிறாய்?” என்றான் ஜெ
“நாம் வேண்டுமானால் ஒரு சைக்யாட்ரிஸ்டைப் பார்க்கலாமா?” என்ற வ்யானின் குரலில் அக்கறையும் அன்பும் மட்டுமே தொனித்தன.

“நான் மட்டும் ஒரு புதிய உண்மையைக் கையில் பற்றிக் கொண்டு அலைகிறேன். அதை நம்புவதற்கு என்னைத் தவிர யாரும் முன்வரவில்லை. அது பரவாயில்லை.எனக்கு வெளியே நின்றுகொண்டு ஒரு கதை என்னை உட்படுத்தித் தன்னை எழுதிக் கொண்டிருப்பது போல் உலர்கிறேன். நானே இதை முழுவதும் நம்புகிறேனா என்பதே குழப்புகிறது. நான் என்ற சொல்லே பெரிய கெக்கலிப்பாகத் தோன்றுகிறது. நான் என்பவனாக நான் மட்டும் தானே இருக்கவேண்டும்? இங்கே இன்னொருவனும் நான் என்று அலைகிறான். சரி விதி விட்ட வழி”

எழுந்து கொண்ட ஜெ
“சரி நான் கிளம்புகிறேன்” என்றான். அவன் முகத்தில் மொத்த வாழ்க்கைக்கும் வேண்டுமான விரோதம் தென்பட்டது.

“நான் நம்புகிறேன் ஜெ….” என்று தொடங்கியவனை அமர்த்தியவன். “காலம் எனக்கெதிராக இருக்கிறது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு மட்டும். நீ பெரிய மனது பண்ணி என்னை நம்பத் தேவையில்லை” எனக் கிளம்பப் போனவன் சட்டென்று அறை மூலையில் இருந்த டாய்லெட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்.

எதோ யோசித்தவனாக சன்னல் வழியாகப் பார்த்தான் வ்யான். அவனுடைய சன்னலிலிருந்து கல்லூரி மெயின் கேட் பார்வையளவு தொலைவில் தெரியும். வ்யானின் உடம்பு லேசாய் நடுங்கிற்று. பயல் சொல்வதெல்லாம் உண்மை தான் போல…அங்கே மெயின் கட்டிடம் முன்பு யமஹா பைக் ஒன்று வந்து நின்றது. அதன் பின் ஸீட்டிலிருந்து இறங்கியவன் சாட்சாத் ஜெ தான். விமானத்தின் மேலேறும் தருணம் போல் வ்யானுக்குள் விர்ரென்று எதோ சுழலத் தொடங்கிற்று. அவனை இறக்கி விட்டவன் அப்படியே காலூன்றி எதோ பேசிக் கொண்டிருந்து விட்டு இப்போது வண்டியைத் திருப்பினான். அவன் முகத்தை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. அய்யோ..இதென்னடா சினிமாவா..இதெப்படி சாத்தியம்..? வ்யானுக்கு லேசாய் இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு கையால் வண்டியை செலுத்திக் கொண்டே இடது கரத்தால் தன் சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரேபான் கூலர்ஸை ஸ்டைலாக எடுத்து அணிந்தபடி கடந்து போனான் இன்னொரு ஜெ.