பேசும் அறை


பேசும் அறை
 குறுங்கதை


நீ சொல்வது இந்த உலகத்தின் மொத்த நம்பகத்துக்கும் எதிரானது. ஜடங்கள் பேசுவதில்லை” என்றான் ஜேன்.

“நீ அப்படித் தான் சொல்வாய். இந்த உலகம் தொகுப்புக்குள் அடைபட விரும்பாத சுதந்தரிகளை நோக்கி வீசுகிற முதற்கல் பைத்தியக்காரன் எனும் பட்டம் தானே?”

“இதோ பார். நானுன்னைப் பைத்தியம் என்று சொல்லவில்லை. நீ சிந்திப்பது அதீதமாக இருக்கலாம். இப்போது உன் சிந்தனை உன்னைக் கட்டுப்படுத்துகிற இடத்தில் சற்றே பிசகிருக்கக் கூடும். நீ நம்ப விரும்புவது எல்லோராலும் ஏற்புக்குரியதாக இருக்க வேண்டாமா சொல்லேன். எதற்கும் ஒரு நிரூபணம் தேவையில்லையா..? என்ற ஜேனைப் பார்த்து சோகையாய்ப் புன்னகைத்துத் தன் தோளிரண்டையும் குலுக்கிக் கொண்ட ஸ்வான் “சரி நான் கிளம்புகிறேன்” என்று எழுந்தான்.

“இரு இத்தனை தொலைவு வந்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் கிளம்பலாமா..?” உள்ளறையைப் பார்த்து “மான்சி…எங்களுக்கு மதிய உணவைத் தயாரிக்கிறாயா என்ன?” என்று குரலளித்தான். உள்ளே இருந்து “இன்னும் பத்தே நிமிடம் தான். பொன் முறுவலான வாத்துக்கறி சான்விச் தயாராகிவிடும்” மான்ஸி குரலளித்தாள்.

“இல்லை நான் இன்னொரு இடத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப வேண்டும். நான் கிளம்புகிறேன்” என்றவனை “இருடா போய்க்கொள்ளலாம். தேநீராவது அருந்து” என்று அதட்டினான் ஜேன். அவன் சொல்லைப் புறக்கணிக்க முடியாமல் அமர்ந்திருந்தான் ஸ்வான். அப்புறம் அவர்கள் வெறேதையெல்லாமோ பேசினார்கள். ஸ்வான் கிளம்பும் நேரம் வழியில் அவன் சாப்பிடுவதற்கு ஏற்றாற் போல் சான்விஸ் பொட்டலத்தை அவனிடம் தந்தனுப்பினாள் மான்ஸி.

ஸ்வான் கிளம்பினான். கதவைத் திறந்து அவன் வெளியேறிய அடுத்தக் கணம் அடைத்தாள் மான்ஸி. அதற்குள் பனிப்பொழிவின் தாக்கம் அந்த அறையெல்லாம் நிரம்பிற்று. எழுந்து கொண்ட ஜேன் தன்னைக் கடக்க முயன்ற மான்ஸியின் கரத்தைப் பற்றி இழுத்து அவள் இதழ்களில் நீண்ட மொத்தமொன்றைப் பதித்தான்.
“கொடுத்ததும் திருப்பிக் கொடுக்கும் கடன் இது என்று கவிதை செய்யப் போகிறேன்” எனக் கேலியான குரலில் சொன்னவனிடம் “ஆஹஹாஹா” என்று பழிப்புக் காட்டினாள் மான்ஸி. பனியின் இடமெல்லாம் காதல் ததும்பிற்று.

மதிய உணவை எடுத்துக் கொள்ளும் நேரத்தில் மான்ஸி கேட்டாள். “எதற்கு இத்தனை தூரம் வந்து சென்றான் ஸ்வான்?. எதுவும் அவனுக்கும் ஜூவாவுக்கும் பிரச்சினையா..?

“இல்லை மான்ஸி. இவன் சொல்லும் கதையே வினோதமாயிருக்கிறது. அவர்கள் வீடு நம் வீட்டைப் போலவே தான். ஓஸ்வால் நகரின் எல்லையில் தனித்திருக்கும் நீ அறிவாய் தானே..? அந்தத் தனிமை பயலைக் குழப்பியடித்து விட்டது என நினைக்கிறேன். அவன் வீட்டின் ஸ்டடி ரூமில் இருக்கும் மேசைகள் பேசுகின்றனவாம். அவற்றுக்கும் அங்கே இருக்கும் கடிகாரத்துக்கும் சதா சண்டை நடக்கிறதாம். இவன் சென்றால் அவை பேச்சை நிறுத்திக் கொள்கின்றனவாம். இவனறியாமல் மீண்டும் சண்டையிடுகின்றனவாம். இப்படி ஒரு கதையை இவன் சொல்லி அதை ஜூவாவும் நம்புகிறாள் பாரேன். எனக்கு சிரிப்பு தாங்கவில்லை”.

நல்ல சைக்யாட்ரிஸ்டைப் போய்ப் பார்க்கலாமே உன்னை எதற்காக வந்து பார்க்கிறான்?” என்ற மான்சியைப் பார்த்து முறைத்தான்
“சரி சரி நீ கோபித்துக் கொள்ளவேண்டாம். நீயும் நல்ல சைக்யாட்ரிஸ்ட் தான் ஒப்புக்கொள்கிறேன்” என்றவளைப் போலியாக அடிப்பது போல் நடித்தான்.

அன்றைக்கு இரவு ஜேனும் மான்ஸியும் உறங்கிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள் அவர்களது மகள் லிஸியா. கெட்டிலில் இருந்து வெம்மையான தண்ணீரைத்தன் தொண்டைக்குள் வார்த்துக் கொண்டவள் மீண்டும் கட்டிலுக்குத் திரும்பினாள்.

“அவள் போய்விட்டாள்” என்றது ஸ்டடி ரூம் கடிகாரம்.

நீ வாயை மூடு. ஏன் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் பேசத் துடிக்கிறாய்..? இவர்கள் ஊரில் இல்லாத நாட்களிலும் வெளியே செல்லும் பொழுதுகளிலும் மாத்திரம் பேசிக் கொண்டால் போதாதா..? மெல்ல மெல்ல உன் பேசும் ஆசைக்கு நீயே இரையாகப் போகிறாய்” என்றது நாற்காலி
என் உயரம் என்ன உன் உயரம் என்ன..? உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை. நீ கேவலம் நான்கில் ஒரு நாற்காலி.நான் தனித்த சுவர்க்கடிகாரம் அதை நினைவில் வைத்துக் கொண்டு பேசு”

உயரத்தில் இருப்பதால் உசத்தியா நீ? உன் கால்கள் தரையில் படாமல் இருப்பதால் துள்ளுகிறாயா?” என்றது சுவரில் இருந்த படம்

“நான் சொல்வதை எல்லோரும் கேளுங்கள். நம் ஒற்றுமையின்மை அழிவைத் தரும். இப்படித் தான் ஸ்வானின் வீட்டில் நம்மவர்களின் ஒற்றுமையின்மை அவர்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. நாமும் பிடிபட்டோம் என்றால் அதுவே நம் இனத்தின் அழிவுக்குக் காரணமாகி விடும். . தயவு செய்து அமைதியாகுங்கள். பேச்சுத் தான் நமக்கெல்லாம் பொது எதிரி என்பதை நீங்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் “ என்று தழுதழுத்தது புத்தக அலமாரி.

இப்படித் தான் பேசும் அறையாக இருந்த அந்த வாசிப்பறை மௌனத்தின் அறையாக மாறியது.