நூறு ரூபாய்

       நூறு ரூபாய்
        குறுங்கதை


அவனை வேறெங்கேயோ பார்த்திருக்கிறேனா எனக்குள் யோசித்துக் கொண்டே இருந்ததில் தலை வலிக்கத் தொடங்கிற்று. உண்மையில் தலை வலியின் ஆரம்ப கணம் ஒரு கவிதையைப் போல் அத்தனை அசுத்தமாக குறைகளோடு தான் நிகழ்கிறது. இரண்டுக்கும் என்னவோ சினேகிதம் இருந்து தொலைகிறதோ என்னவோ. சமீப காலங்களிலெல்லாம் ரூப அரூபங்கள் மாத்திரமின்றிக் கனாவில் கேட்கத் தலைப்படுகிற அசரீரி கூட இம்மாதிரியான தலைவலியாகப் பெருக்கெடுக்கிறது. டவுன் டாக்டரிடம் போய்க் காட்டேன் என்றாள் பாகீரதி. போடீ. சொல்லாமல் கொள்ளாமல் செத்துப் போய்விட்டுப் புகைப்படத்திலிருந்து கொண்டு சிரிப்பதெல்லாம் பசப்பல். உன் சொற்கள் என் காதுகளில் கேட்கவில்லை போ.

அப்படியே முதுகு விண் பார்க்கப் படுத்திருக்கலாம் போலத் தோன்றியது. மறுபடி ஒரு தடவை எழுந்து வந்து சன்னலின் பக்கத்தில் நின்றேன். அவன் அங்கேயே அதாவது எதிர்த்த அறை வாசலிலேயே நின்றபடி யாரிடமோ செல்லில் பேசிக்கொண்டிருந்தான். சிரித்துச் சிரித்துச் செல்லில் பேசுகிறவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் என்கிற ஒருவன் இந்தப்புறம் நின்று அவனையே பார்க்கிறேன் என்பது அவனுக்குத் துளியும் தெரிந்திருக்கவில்லை. அதனால் என்ன? தெரிந்தாலும் பாதகமில்லை. என்னால் இவன் யார் இவனை எங்கே பார்த்திருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளாமல் மறுபடி நிம்மதியை அடையவே முடியாது எனத் தோன்றியது. அது உண்மைக்கும் பொய்க்கும் இடையில் திரிசங்கு போலச் சுற்றுகிறது. அந்தக் கனத்தின் எடையற்ற எடை என் தலைவலியாய்ப் பொங்குகிறது. இந்தப் ப்ரபஞ்சத்தின் கண்களால் அவனை இமைக்காமல் பார்த்தேன். இந்தப் பார்வைக்கு சக்தி இருக்குமேயானால் அவன் இன்னும் சிறிது நேரத்தில் ஃபோன் காலை முடிப்பான். முடித்தான். என்னை நேர்கொண்டு நோக்கி என்பக்கம் வருவான். வரவில்லை விளக்குப்பிறை மாதிரி ஓரிடத்திலிருந்து ப்ரஷ்ஷை எடுத்துப் பல் துலக்க ஆரம்பித்தான். என் முந்தைய தீர்மானம் இப்போதைய அவமானமாகத் தேங்கிற்று. எதாவது செய்யலாமா என்று குறுக்கில் சிந்தித்த குரங்கை அதட்டினேன். ஷட் அப் மூர்த்தி அது தான் என் பெயர். சோமாஸ்கந்தமூர்த்தி என்கிற முழுப்பெயரைக் கல்லூரி நாட்களில் சோமாஸ் என்று கூப்பிட முனைந்த ரகுபதியை சில்லுமூக்கு உடைந்தபிறகும் நாலு முறை குத்தி எட்டு நாட்கள் சஸ்பெண்டாகி அதை வேறொரு கதையில் வாய்த்தால் சொல்கிறேன். இப்போது இவன்.

இப்போது தன் அறை மூலையிலிருக்கும் வாஷ்பேஸினுக்குப் போய் கொப்பளித்து விட்டுத் துவாலையால் முகத்தை வருடிக் கொண்டபடி மீண்டும் வாசலுக்கு வந்தான். அந்த மேன்ஷனை நீங்கள் நிறைய சினிமாவில் பார்த்திருக்க முடியும். விலாசமற்றவர்களுக்கென்று நகரென்னும் பிசாசின் மேனியில் அதையறியாமல் ஒளிந்து கொள்வதற்கான ஸ்மரணையற்ற மச்சமொன்றைப் போல் அந்தக் கட்டிடம். நடுவே டானா போல கம்பிகள் வழியே வானொழுகும் வெற்றிடம். எதிரெதிரே தளத்திற்கு இருபத்திரெண்டு அறைகள் வீதம் ஆறு மாடிகள். நான் இருப்பது மூன்றாவது மாடி.
அவன் வரவழைத்த தேநீர் கோப்பையை ஒரு கரத்தில் ஏந்தியபடி ஸ்டைலாக இன்னொரு கரத்தில் இருந்த சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தான்.நான் சிகரட்டை சமீபத்தில் தான் நிறுத்தி இருந்தேன். மீண்டும் தொடுவதாக இல்லை. அது ஒரு சபதம். அதற்குக் காரணம் லதா. இந்தக் கதையில் அவளையும் அந்தச்சபதத்தையும் சொல்வதாயில்லை. ஒன்லி அந்த மனிதன். அவனால் வலிக்கிறதய்யா என் தலை.

சுற்றிக் கொண்டு என் அறையை நோக்கி அவன் வந்தான். லேட்டாக என் இன்ஸ்டிங்க்ட் பலிக்கிறதா நான் இந்த நகர்வுக்குத் தயாராகாதது போல் உணர்ந்தேன்.என்னை நோக்கி அவன் நடந்து வந்துகொண்டிருக்கும் போது என் பூர்வ ஞாபக மொத்தத்தையும் எனக்குள்ளேயே கொட்டி அலசி யாராக இருப்பான் இவன் என்று சலித்தேன். என் வயதுக்காரன் இல்லை. என்னோடு படித்துப் புழங்கி விளையாடி சண்டையிட்டு நெவர். யாரடா பய்யா நீ..?
நீங்கள் மூர்த்தி தானே என்றான் அவன். இத்தனை துல்லியமாய் என் பெயரை சொல்கிறாயா என்று இன்னொரு வண்ணமாய்த் திகைத்தேன். ஆமாம் என்றேன் சன்னமாக. உள்ளே வரலாமா என்றவனை ப்ளீஸ் என என் அறைக்குள் அழைத்தேன். நாங்கள் எதிரெதிரே அமர்ந்து கொண்டோம். சமீபத்தின் வாசனை அவனுடைய ப்ராண்ட் வில்ஸ் ஃபில்டர் என்று உணர்த்தியது. நான் புகைத்தது கிங்ஸ். பாண்டவ கவுரவப் பகையுறவு இவற்றுக்கும் உண்டு.

ஸாரி நாம் எங்கே சந்தித்தோம் என்று சொல்லுங்களேன் என்றேன். அவன் தன் ஒழுங்கான பற்களால் சிரித்து ஸார் இந்த ரூமில் தான் இன்னும் பத்து நாட்களுக்கு தங்கப் போறேன். நான் கெளம்புற தினம் வரைக்கும் டைம். நாம எங்கே சந்தித்தோம் என்று நீங்க சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்களானால் நான் தோற்று போனதாக ஒப்புக் கொள்கிறேன். நூறு ரூபாய் தருவேன். ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நான் வென்று விட்டதாக அர்த்தம். நீங்கள் எனக்குப் பணம் ஏதும் தரத் தேவையில்லை என்றான்.
போய் விட்டான்.

பத்து ஜென்மமானாலும் அந்த முகத்தை அதோடு கூடிய கழுத்து வரையிலான உருவத்தை எங்கே பார்த்தேன் என்னவோ பேசியிருக்கிறேன். நிச்சயமாக இவனுக்கு என் பேர் தெரிகிறது.எங்கே பார்த்தேன்?

அந்தத் தினம் வந்தது. சாயங்காலம் தோல்வியை அறிவிப்பதற்காகக் காத்திருந்தேன். அவன் அந்த அறையை விட்டுக் கிளம்பி நேரே என் பக்கம் தான் வந்தான். சொல் மாறாதவன். நான் எதுவும் பேசாமல் 100 ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் கைகளைக் கட்டிக் கொண்டிருந்தான். வேண்டாம். நான் தோற்றால் தான் தரவேண்டும். “நீங்கள் தோற்றால் எதுவும் வேண்டாம் என்று தானே சொல்லியிருந்தேன்” என்றான்.

சூடாகிப் போன நான் “உன் சலுகை எனக்குத் தேவையில்லை. என்னால் என் நினைவுகளின் அடுக்கிலிருந்து நம் சந்திப்பை மீட்டெடுக்க முடியாமற் போனது அவமானமாக இருக்கிறது.அதை விட யோசித்து யோசித்து தலைவலி அதிகமாகி விட்டது. அதற்கான விடுதலையும் உன் கதையறிதலில் தான் இருக்கிறது என நம்புகிறேன். இந்தா ரூபாய். நாம் எங்கே சந்தித்தோம்?” என்றேன்.
அதே புன்னகை.
“உன் தலையைப் பிய்த்து விடுவேனடா” எனக்குள் ஒரு பேரலை எழுந்து அடங்கிற்று.

“ஸார். ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மதுரை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் யாரோ உங்கள் நண்பரை இறக்கி விடுவதற்காக வந்திருந்தீர்கள். அங்கே சிறுகூட்டத்தின் முன்பு எனக்கு ஊர் திரும்புவதற்கான பணத்தை யாசித்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் மதியம் வரை இல்லாத புதிய வறுமையை வாழ்க்கை எனக்குப் பரிசளித்திருந்தது. அந்த ஊரில் எனக்கு யாரையுமே தெரியாது. அந்தக் கூட்டத்திடம் எனக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லி வேற்று மொழியொன்றைப் பேசிப் பேசி யாசித்துக் கொண்டிருந்தேன். நான் ஏன் அப்படிச் செய்தேன் என்றெனக்கு இன்றைக்கு வரை புரியவே இல்லை. அங்கே யாருக்குமே அந்த மொழி தெரியாமல் இருந்ததை மனசுக்குள் ரசித்துக் கொண்டே இருந்தேன். எனக்குத் தேவையான பணம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என்று அப்படிச் செய்தேன்.அப்போது தான் நீங்கள் நெருங்கி வந்து என்னிடம் அதே மொழியில் பேச ஆரம்பித்தீர்கள். உங்கள் சரளத்தின் முன் எங்கே என் போதாமை பிடிபட்டு விடுமோ என்ற அச்சம் என்னை நெருக்கியது. நீங்கள் என்னை அன்னியன் என்று நம்பினீர்கள். உங்கள் பர்ஸிலிருந்து சாப்பாட்டுக்கும் சேர்த்து 100 ரூபாயைத் தந்து விட்டுக் கிளம்பினீர்கள். நகர்வதற்கு முன்பாக உங்கள் பெயரென்ன என்று கேட்டேன். சொன்னீர்கள். உங்களை என்றாவது ஒரு நாள் சந்தித்தால் திரும்பத் தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இத்தனை வருடங்கள் கழித்து இங்கே யதேச்சையாக சந்தித்த போது உடனே வந்து கரம்பற்றி நன்றி சொல்லி அந்த ரூபாயைத் திரும்பத் தரவேண்டும் என்று தான் நினைத்தேன். என்னை சந்தித்த ஞாபகம் உங்கள் மனத்தில் ஒரு புழுவாய்க் கூட ஊர்ந்துகொண்டிருக்கவில்லை என்பதால் என் தரப்புச் சர்ப்பத்தை மீண்டும் என்னோடே அழைத்து வந்து விட்டேன். அதனால் தான் அன்றைக்குப் பந்தயம் கட்டினேன். எப்படியும் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று ஒரு முனையில் அஞ்சினேன். இன்னொரு பக்கம் இந்த ஆட்டத்தின் கடைசித் துளியை ருசிக்கும் வரைக்குமான அந்தர நடை எனக்குப் பிடித்திருந்தது. இந்த நூறு ரூபாயைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று நீட்டினான்.

“அதை நீயே வைத்துக் கொள். இன்றைக்குத் தோற்றதால் இதைச் சொல்கிறேன் என்று எண்ணாதே. அன்றைக்குத் தோற்றதற்கான சம்பாவனை அன்றோடு முடிந்தது. கிளம்பு” என்றவன் “ஒரு நிமிடம்” என்றேன் முகம் சுருங்கத் திரும்பினான்

“உன் பெயரைச் சொல்லி விட்டுப் போ” என்றேன்.