தென்னம்பாளை

       

 தெ ன் ன ம் பா ளை

           1

திருவெண்பாவூர் சர்வோத்தம ஏகாம்பரர் கோயிலுள்ளே அதிகம் கூட்டமில்லை. நுழைவாயிலை மறைத்தபடி செயற்கையான தடுப்பு அமைத்து போலீஸ் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதித்து ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர். பின் தொடர்ந்து வந்த பலூன் வியாபாரி தன் தோல்வியை ஒப்புக் கொண்டபடி எதிர்த் திசையில் நகர அவனிடமிருந்து தப்பித்த பத்துப் பதினைந்து அயல் மாநில பயணிகள் பரபரத்துக் கொண்டு உள்ளே போனார்கள். ரகுநந்தனைப் பார்த்து ஸ்னேகபாவத்தில் இளம் போலீஸ் ஒருவன் புன்னகைத்தான். பதிலுக்கு சிரித்து விட்டு குளத்தில் கால் அலம்பிப் படியேறி விடுவிடுவென்று கோயில் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தான். உடம்பு அசந்து போகும் வரைக்கும் சுற்றிவிட்டு பிரகார மண்டபத்தில் கால்களைத் தொங்கப் போட்டபடி அமர்ந்தான்.

சிறுவயதில் இதே குளத்தில் காலை நனைத்ததும் மீன்கள் எங்கேயிருந்தெல்லாமோ வந்து காலைக் கடிக்கும். அது ஒரு சுகமான பயம். எதிர்பார்த்துக் கொண்டே காலை உள்ளே நனைப்பது மீன்களுக்கென்று பொரிப் பொட்டலத்தைத் தன் கையில் வைத்திருப்பார் அப்பா. பொரியை அவரே விநியோகிப்பார். பாகீரதி அக்கா அத்தை பெண் ரஞ்சனி பக்கத்து வீட்டு ஹரி எல்லார் கையிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொரியைத் தருகையில் “கீழே சிந்தக் கூடாது” என்று தன் பெரிய கண்களை உருட்டுவார். ரகுநந்தனின் சின்னஞ்சிறிய கரத்தில் கொஞ்சமாய்த் தரப்படும் பொரியை தண்ணீர் மேல் தூவுவான். மீன்கள் அவற்றை உள்ளிருந்தபடியே இழுத்துக் கொள்வது ரகுவுக்கு ஏமாற்றமாய் இருக்கும். “மீன்கள் கரைக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போகலாம்ல?”என்பான். எல்லாரும் சிரிப்பார்கள். அனுத்தமா பொரியைக் கொட்டிய மறுகணத்தில் மெல்ல நீரின் பரப்பில் பொரி விரவுவதைப் பார்த்த மாத்திரத்தில் ‘நீர்ப்புஷ்பம்’ என்பாள். அனுத்தமா ரகுநந்தனின் அத்தை மகள். அவனை விட நாலைந்து வயது பெரியவள். ரகுவை ரொம்பப் பிடிக்கும் அவளுக்கு. ஒரு நாள் பக்கத்து ஊர்த் திருவிழாவின் போது செந்தலம் ஆற்றுச் சுழலில் சிக்கி உயிரை விட்டாள். அனுத்தமாவின் இறந்த உடல் தான் ரகுநந்தன் வாழ்க்கையில் பார்க்க வாய்த்த முதல் பிரேதம். அதற்குப் பிற்பாடு அம்மா.

ரகு உடலோடு ஒட்டிய டீஷர்ட் வியர்த்துக் கனத்தது. நெற்றியில் புறப்பட்ட ஒரு நீர்க்கோடு நாசி நுனியில் நின்றுகொண்டு இதற்கு மேல் வழியில்லை என்று  கீழே தெறித்தது. ரகுநந்தனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே இல்லை. இன்னும் வந்த வழியிலேயே மழை தீர்ந்து போகும் வரை அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தான். மழையின் கட்டுப்பாட்டிற்குள் சகலமும் வந்து விட்டாற்போல் தோன்றியது. கண் திறந்தான். கொட்டுமேளச் சத்தத்தோடு உற்சவர் வந்துகொண்டிருந்தார்.

                         அந்தப் பகலிலும் எண்ணெயில் நனைத்தெடுக்கப் பட்ட பந்தத்தை உயர்த்திப் பிடித்தவாறு சேவகர்கள் முன்னே பெரிய காலடிகளால் நடந்து செல்ல வாத்தியக்காரர்கள் சற்று இடைவெளி விட்டு மத்தளத்தைத் தட்டியவாறு பின் தொடர்ந்தனர். கூடவே நகைகளுக்குப் பொறுப்பான பேஷ்காரும் அவருடைய உதவியாளனும் சூழ ஊர் காக்கும் தெய்வம் சர்வோத்தம ஏகாம்பரர் அத்தனை நகைகளையும் அணிந்து தங்க க்ரீடத்துடன் மிளிர்ந்தார். அவரை அந்த இடத்தில் காணக் கிடைத்ததன் எதிர்பாராமையில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாரும் ஓடி ஓடி வந்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சரியாக ரகு அமர்ந்த இடத்தைக் கடக்கும் போது பட்டரின் கால் பிறண்டது. ஒரு கணம் விழப்போனவர் சமாளித்துக் கொண்டார். பெரிய மனிதச்சங்கிலி சட்டென்று உறைந்தநேரம் ரகுநந்தன் இறங்கி வந்து உற்சவரின் முன்னே நின்றான்.

            என்ன வேண்டுவதென்று தெரியவில்லை. உள்ளே நிறையக் குரல்கள் ஒலித்தன. “அவனை விடாத அட..கொல்லு” என்று ஓங்கின. உடம்பெல்லாம் சரமாரியாக அடிகளின் தீண்டல் கனத்தது. “நான் பைத்தியமா..?” என்று கேட்டான். உற்சவர் நேர்பார்வையிலிருந்து தன் முகத்தை ஒருகணம் திருப்பி ரகுநந்தனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“உனக்கும் நா பயித்தியமா..?”

.ரகுநந்தன் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே சிவானந்தப் பட்டர் கரிசனமாய்த் தன் கையில் இருந்த தீபத்தட்டை ஒருதரம் சாமியை நோக்கி உயர்த்தி சுழற்றி விட்டு ரகுநந்தனிடம் காட்டினார். இவன் தயக்கத்துடனேயே ஒற்றிக்கொண்டதும் தன் வலக்கரத்தால் திருநீற்றை எடுத்து அவன் நெற்றியில் பூசியவர் உடனே மறுபடி ‘தப்பக் தப்பக்’ என்று பட்டியக்கல் பதித்த பிரகாரத்தில் நடந்து கூட்டத்தோடே சென்று மறைந்தார்.

 

           2

ரகுநந்தன் மறுபடி பிரகாரத்தில் அமர்ந்து கொண்டான். யாரோ புன்னகைத்தாற்போல் இருந்தது. சைக்கிள் கம்பெனி லோகு ஸ்னேகபாவமாய்ச் சிரிக்க இவனும் அரைச்சிரிப்பு சிரித்தான்.

         “நல்ல தர்சனமா..?” என்றார். இவன் தலையை ஆட்டி கண்களை இறுக மூடிக் கொண்டான்,சர்வோத்தம ஏகாம்பரர் அவன் அருகாமையில் வந்து அமர்ந்தார். தன் கிரீடத்தைக் கழற்றி பட்டரிடம் கொடுத்து விட்டு “என்ன வெய்யில் என்ன வெய்யில்..” என்றவாறே தலையைக் கர்ச்சீப்ப்பால் துடைத்துக் கொண்டார். ரகுநந்தன் சட்டென்று கண் திறந்தான். இன்னும் லோகு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்து எரிச்சலானான்.

         அகலமாய்ச் சிரித்தபடி “ரொம்ப சுத்தினியோ ரகுநந்தா…..என்ன நூத்தியெட்டா..?” என்ற லோகுவிடம் “தெர்ல. கணக்கு வெச்சிக்கலை” என்றவனை வித்யாசமாய்ப் பார்த்தவர் விடாமல் “சாமியே கும்பிடாம நேரா சுத்தப் போயிட்டே போல. நான் பாத்தேன்”என்றதும் ஆத்திரமான ரகுநந்தன் “அதான் சாமியே வந்து தரிசனம் தந்துட்டு தானே போறார். அப்பறம் என்ன..?”என முனகி விட்டு வேறு திசை பார்த்தான். அவர் “என்ன இருந்தாலும் மூலவரைத் தரிசிக்கலைன்னா பாவமில்லையா கண்ணா?.” என்று சிரிக்க முற்பட்டார். கடுப்பான ரகு “எனக்கு புண்ணியம் வேணும்னு உம்மை கேட்டேனா..?”என்றதும் அவர் எழுந்து தன் வேஷ்டியை அவிழ்த்து கட்டிக்கொண்டு முன்பக்கம் நகர்ந்தவாறே “சரியான பயித்தியக்காரன் “எனச்சொன்னது ரகுவிற்குக் கேட்டுவிட்டது.” என்ன சொன்னே..?” என்றவாறே எழுந்தான். தலை விண்ணென்று தெறிக்க ஆரம்பித்தது. உள்ளே ஆழதூரத்தில் விர்ரென்று கேஸினோ சக்கரங்கள் சுழன்றன. சப்தத்தோடு பல மஞ்சள் குண்டு பல்புகள் எரிந்தணைந்து எரிந்தன.

                “வேணாண்டா விட்டுர்றா…தெரியாமக் கேட்டுட்டேண்டா” கெஞ்சக் கெஞ்ச லோகுவின் வலது காதை அழுத்தமாய்ப் பற்றி இழுத்துக் கொண்டே வாசல் வரை வந்தான். நுழைவாசல் உட்புறம் தேங்காய் பழக்கடை பழனி வந்து “விடுறா மாப்ளே..” என்று அழுத்தமாய் சொல்லி அதற்கு மேல் நடக்க விடாமல் தடுத்தவன் லோகுவை விடுவித்து “நீங்க கெளம்புங்கண்ணே” என்றான். லோகு பெருங்குரலில் அழுது விசும்பிக் கொண்டே சென்றார். ‘ஏண்டா இப்டி செய்றே’ என்று சலித்துக் கொண்ட பழனியைத் தாண்டி மறுபடி உட்பக்கம் நகர்ந்தான். எங்கடா? என்றவனிடம் “இன்னும் கொஞ்சம் சாமி கும்பிட்டுட்டு வர்றேன்” என்று முணுமுணுத்தபடி விலகினான்.

               மறுபடி  மண்டபத்திற்குச் சென்று அமர்ந்தான். எங்கிருந்தோ பஞ்சுமிட்டாய் வாசனை வந்தது. அம்மா ஞாபகத்தில்  இந்த மண்டபம் அடிக்கடி வரும். அம்மா பற்றிய சொற்ப நினைவுகளே இருந்தன. பெரிய பொட்டு. பிருஷ்டம் தாண்டுகிற தலைமயிரைப் பராமரிப்பது பெரிய சவால். அம்மாவுக்கு நெடிய கூந்தலை எப்போதும் இறுக்கமாய்ப் பின்னிக் கொள்ள வேண்டும். வெண்பாவூரில் இருந்து தினமும் காலை ஏழு மணிக்குள் கிளம்பி நந்தனூர் செல்லும் பஸ்சில் ஏறி பள்ளிக் கூடத்துக்குப் போய் வருவாள். சாயந்திரம் திரும்பும் போதும் அவளது தலைமுடி கட்டுக் கலையாமல் இருக்கும். வெள்ளிக் கிழமைகளில் கொண்டை போட்டுக் கொள்வாள். ரகுநந்தனின் தலையைப் பிடித்து முன் மயிரைக் கலைப்பாள். அதைச் செய்யும் போதெல்லாம் ரகு அம்மாவின் சேலைக்குள் தலையைப் புதைத்துக் கொள்வான். அந்த இருளை அவனுக்கு அத்தனை பிடிக்கும்.

            ஒரு நாள் அம்மா பள்ளிக்கூடம் விட்டு வரவில்லை. யாருடனோ ஓடிப்போய் விட்டாள் என ஆரம்பித்தார்கள். ரகுநந்தனுக்கு ஓடிப்போவதென்றால் என்ன எனப் புரியவில்லை. ஸ்கூலில் ரன்னிங்கில் அவன் தான் முதலாவதாக வருவான். அதைப் போல அம்மாவும் ஏதோ பந்தயத்தில் கலந்துகொண்டாள் போல என்றே கருதினான். அடுத்த இரண்டு மணிநேரம் சென்றதில்  வீடே இழவு வீட்டைப் போல் இருந்தது. அம்மாவைப் பெற்ற நாராயணத் தாத்தாவை எல்லாரும் ஏசினார்கள். அவர் நடுக் கூடத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அப்பா கூட சற்று நேரம் கத்தி விட்டு அமைதியானார். அப்பாவின் தம்பி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். வரதன் மாமாவுக்கும் அவருக்கும் சண்டையாகி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். ஊரே வேடிக்கை பார்த்தது. ரகுநந்தன் அழுதபடியே இருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு வீட்டுப்பெண்கள் அழுதார்கள். ‘எப்படியும் அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள்’ என்றே நம்பினான்.

                     அடுத்த நாள் மதியானம் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை போலீஸ் வந்து எழுப்பியது. அம்மாவின் பிணம் நந்தனூருக்கு நாலு கிமீட்டர் முன்னால் இருக்கும் கேட்பாரற்ற கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப் பட்டதாக அழைத்துச் சென்றார்கள். அது வரைக்குமான அம்மா மீதான கெடுசொற்கள் வாபஸ் பெறப்பட்டு எல்லாரும் அம்மா நல்லவள் என்று சொன்னார்கள். முந்தைய தினம் ஓடிப்போன அவிசாரி என்றெல்லாம் திட்டின சித்தப்பா அண்ணி அண்ணி என்று புரண்டழுதார். வரதன் மாமா மேல் அவருக்கு இருந்த பயம் கூட அவரது அழுகைக்கு காரணமாக இருந்திருக்கலாம். ரகுநந்தனுக்கு அம்மா என்பவள் இனிமேல் வரவே மாட்டாள் என்பது உறைக்கப் பல வருடங்கள் ஆனது. அம்மா பற்றி நினைக்கும் போதெல்லாம் நெடிய கூந்தலும் கொண்டையும் மாறி மாறி வரும். பெரிய சாந்துப் பொட்டு அணிந்த முகம் கொண்டு சிரிப்பாள். சமீபத்தில் மெல்ல அம்மாவின் மூக்கும் கண்களும் உதடுகளும் மறைந்து பொட்டு மட்டும் கனவில் வருகிறது. அதுவும் எப்போதாவது.

                        ரகுநந்தனுக்கு அம்மா மீது எந்தக் கோபமும் இல்லை. அவனால் வேண்டிய மழையை வரவழைத்துக் கொள்ள முடிகிறாற் போலவே அம்மாவையும் வரவழைத்துக் கொள்ள முடிகிறது. என்ன ஒன்று. அம்மா எதுவுமே பேசுவதே இல்லை. ரகுநந்தன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர எதுவுமே பேசமாட்டாள். அவளும் பேசினாளென்றால் அவனுக்கு இந்த உலகத்தில் வேறு யாருமே தேவையில்லை. அவளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது. ரகுநந்தன் எத்தனையோ முறை அம்மாவிடம் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அவள் எதற்கும் பதிலே சொல்வதில்லை. அம்மா ஒரு புகை மாதிரி தெரிகிறாள் அதுவும் ஏன் எனத் தெரியாமல் அவளிடமே கேட்டுப் பார்த்தான். பதிலில்லை.சில சமயம் அம்மாவைக் கடுமையாகத் திட்டி “இனி வராதே என்ன..?” என்று சொல்லி விரட்டி விட்டுக் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்வான். அம்மா காணாமற் போயிருப்பாள். அவனுக்கு அழுகை வரும். அடுத்து “இனிமேல் வரவே மாட்டியாம்மா..?” என்று முனகுவான். அம்மா நல்லவள் டாண் என்று வந்து நிற்பாள்.

அன்பான அம்மா.

             3

கல்மண்டபத்தில் இருளுக்கு அடங்கி லேசான வெளிச்சம் அரக்கு நிறத்தில் வழிந்தது. ரகுவின் பக்கத்தில் ஒரு வயதான மனிதர் வந்து அமர்ந்தார். அவர் உடலிலிருந்து விபூதி வாசனை கமழ்ந்தது. அவரை உற்றுப் பார்த்த ரகுநந்தன் புன்னகைத்தான். அவர் உடலில் எங்கேயும் விபூதி பூசியிருக்கவில்லை. இருந்தாலும் விபூதி நெடி அடித்தது குறையவில்லை. ரகுநந்தன் தன் புன்னகையைக் கைவிட்டதும் அவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். முதுமையின் இருள் ததும்பும் சிரிப்பு ரகுநந்தனுக்குப் பிடித்திருந்தது.

“மூலவரைப் பார்க்காட்டி புண்ணியம் எப்படி வரும்?னு கேட்குறான். உற்சவரைப் பார்த்தேனேன்னு சொல்றேன். இருந்தாலும் மூலவரைப் பார்க்காட்டி எப்படின்னு கேட்குறான். என்னைப் பயித்தியம்னு போயிட்டான்.”என்றான். அவர் தன் நடுங்கும் கரத்தை எடுத்து ரகுநந்தனின் வலது கை மீது வைத்து அழுத்தினார். இரண்டு நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தார். எழுந்து வேகவேகமாய் வாசலை நோக்கி நடந்து காணாமற்போனார்.

ரகு நந்தன் முனகும் குரலில் காற்றைப் பார்த்து உற்சவரும் மூலவரும் வெவ்வேற ஆளா..?என்றான். எழுந்துகொண்டான். உடலெல்லாம் வலித்தது. நடை பின்னிற்று. மெதுவான நடையால் கோயிலுக்கு வெளியே வந்து செருப்பு விடும் இடத்துக்குச் சென்று பார்த்தான். அவனது ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. சுற்றிலும் தேடினான். இன்னொன்றைக் காணவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.  நிறம் வெளுத்த நாய் ஒன்று அவனருகே வந்து முகர்ந்து பார்த்தது. சுற்றி வந்து செருப்புகளையெல்லாம் முகர்ந்து விட்டுத் தாண்டி ஓடியது. ரகுநந்தன் மெல்ல நடந்தான். வெயிலை உள்வாங்கியிருந்த தார்ச்சாலை கொதித்தது. பக்கவாட்டு மணலில் கால் புதைய நடந்தான். அதுவும் சூடாய்த் தான் இருந்தது. பஸ்டாண்டைத் தாண்டியதும் அமீதா புரோட்டாக் கடைக்கு அடுத்தாற்போல் எஸ்.கே என்று செருப்புக் கடை இருந்தது. உள்ளே சென்று தன் சைஸூக்குக் கிட்டிய முதல் ஜோடியை என்ன ஏதென்றே பாராமல் வாங்கி அணிந்துகொண்டு மறுபடி நடந்தான். வாசல் கேட்டைத் திறந்து நேரே மாடிக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே போய் மறுபடி பூட்டிக் கொண்டான்.

கீழே அப்பாவும் மூத்த அக்கா பாகீரதியும் இறைந்து பேசிக்கொண்டிருந்தது நன்றாகக் கேட்டது. வரது மாமா மகள் பூர்ணபுஷ்கலாவை ரகுநந்தனுக்குக் கல்யாணம் செய்து தருமாறு கேட்டிருப்பார் போல அப்பாவிடம் முகத்துக்கு நேராகவே “ரெண்டுங்கெட்டானுக்கு எப்படி என் மகளைக் கேட்கிறாய்?” என்று சண்டை. இருவருமே சண்டைக்குச் சளைத்தவர்களில்லை. வரது மாமா இனி உங்க உறவே வேண்டாம் என்று கிளம்பிப் போய்விட்டார் போல. ரகுநந்தனுக்கு ரெண்டுங்கெட்டான் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. வெகு நேரம் கட்டிலில் படுத்தவாறே கண்களை மூடினபடி இருந்தான் தூக்கம் வரவில்லை. அப்பா எங்கேயோ கிளம்பிப் போன பிறகு தட்டில் சாப்பாட்டோடு மாடிக்கு வந்த பாகீரதி இவனைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதாள்.

இவன் ஏன் அழறே என்று ஒரு தரம் கேட்டவன் மடி மேல் தட்டை இருத்திக் கொண்டு அவக் அவக் என்று சாப்பிட்டு முடித்தான். பாகீரதி இன்னும் அழுகை அடங்காதவளாய் “நீ ஏண்டா தம்பி ஒரு நிலைக்கு வரமாட்டேங்குறே..?எப்போடா உனக்கு விவரம் தெரியப்போகுது..?அம்மா இருந்திருந்தா இப்பிடி நீ சீரழிய நேர்ந்திருக்குமா..?” என்று கேட்டுவிட்டுக் கீழே இறங்கிப் போனாள். இவன் பாரதியார் கவிதைகளை எடுத்து சப்தமாக பாஞ்சாலி சபதத்தை வாசித்தான். தூங்கிப்போனான்.

சாயந்திரம் சன்னதி தெருவைத் தாண்டி காளவாசல் தெரு முனையிலிருக்கிற சுப்பு கடைக்குப் போனான். தோன்றுகையில் அங்கே போய் சிகரட் பிடிப்பான். ரகுநந்தனுக்கு சிகரட் மீது ப்ரியமும் வெறுப்பும் கலந்தே இருந்தன. அடுத்தடுத்து இரண்டு சிகரட்டை அடித்து விட்டு எங்கே போவதென்று யோசனையுடன் தெருவில் இறங்கியவன் எதிரே நின்றிருந்த வேணியைப் பார்த்தான். வேணி முதலில் இவனைக் கவனிக்கவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவள் யதேச்சையாகத் திரும்பிய திசையில் ரகுநந்தனை எதிர்பார்த்திருக்கவில்லை. பலமாகத் திடுக்கிட்டாள். ரகு அவளை வெகு இயல்பாகப் பார்த்தான். ஏழு வருடங்களில் வேணி உடல் சற்றே பருத்திருந்தாள். கண்களின் கீழே லேசு லேசாய் வளையங்கள் தெரிந்தன. எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. அவனது பார்வையை என்ன செய்வதென அறியாமல் தவித்தாள் வேணி.

எதிரே இருந்த சிட்டி மெடிகல்ஸ்சிலிருந்து சின்ன கேரி பையை ஒரு கையில் பிடித்தபடியே தோளில் உறங்கும் பெண்குழந்தையை முதுகில் தட்டியவாறு வந்த  கணவனைப் பார்த்ததும் சற்றே நிம்மதியாகி வேகமாய் அவனருகே போனாள் வேணி. ரகு அதுவரை கவனியாமல் இருந்தவன் போல் டக்கென்று பக்கத்தில் போய் “என்ன வேணி நல்லா இருக்கியா..?” என்றான். இவன் ஒருமையில் அழைப்பதைப் பார்த்ததும் அவள் கணவன் மய்யமாய் ஒரு தரம் புன்னகைத்தான். உறங்கிக் கிடந்த பாப்பாவைத் தன் கைக்கு மாற்றிக் கொண்டாள் வேணி. “நல்லா இருக்கேன்..” என்று சுரத்தில்லாமல் சொன்னவள் தன் கணவனைப் பார்த்து “என்னங்க இவர் ரகு என் காலேஜ்மேட்..” என்றாள். அது போதுமாயிருந்தது ரகுவிற்கு. பாப்பாவா..?” என்ன பேரு என்றான். “நீலாயதாஷி நீலான்னு கூப்டுறோம்”சொன்ன வேணியின் கணவனிடம் நீலா இஸ் அ வெரி நைஸ் நேம்” என்ற ரகு ‘வரேன் ஸார்’ என்று அங்கே இருந்து விலகிப் போனான்.

              4

ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடியப்போகையில்  வேணி ரகுவிடம் பேசவேண்டும் என்று சொன்னதாக உடன் படிக்கும் செல்வராணி ரகுவிடம் சொன்னாள். வேணி எழுதிக் கொடுத்தனுப்பிய விலாசச் சீட்டைப் பெற்றுக் கொண்ட  ரகுநந்தனும் அவள் வரச்சொன்ன நேரம் சரியாக அவள் வீட்டு முன்னால் நின்று காலிங் பெல்லை அடித்தான். அது வேலை செய்யவில்லையோ என்னும் சந்தேகத்தில் கதவைத் தப் தப் என்று தட்டினான். மாடியிலிருந்து எட்டிப் பார்த்த வேணிக்கு சங்கடமாகப் போய்விட்டது. அவள் அங்கேயிருந்து அவனை எச்சரிப்பதற்குள் கீழ் வீட்டின் கதவு திறக்கப் பட்டது. பெரிய மீசையுடன் “என்ன வேணும்..?” என்று கேட்டவரிடம் “வேணி..” என்று பலவீனமான குரலில் சொன்னான். அதற்குள் வேகமாய்ப் படிகளில் இறங்கி வந்த வேணி சமாதானக் குரலில் “அங்கிள் இது என் கிளாஸ்மேட் ரகு” என்றாள். அந்த மனிதர் பார்த்த பார்வையில் வெறுப்பு உமிழ்ந்தது.

“இந்தா நீ கேட்ட நோட்ஸ்..” என்று ரகுவின் கையில் திணித்தாள். சற்று சப்தமாகவே சொன்னாள்.

அதற்குள் “இது எங்கிட்டயே இருக்கே…இதெதுக்கு எனக்கு..?நீ ஏதோ பேசணும்னு வரச்சொன்ன?” என்றவனைப் பல்லைக் கடித்து “ஷட் அப்” என்றாள். படியின் துவக்கத்துக்கு அவனை அழைத்து வந்து நிறுத்தி “ரகு நீ என்ன லூஸா..?என் வீடு மாடில இருக்கு கீழ தட்டிட்டு இருக்க..?”என்றாள்.”எனக்கெப்படி தெரியும்.?” என்றவனிடம்

“சரி இப்ப பேசமுடியாது. நாளைக்குப் பேசிக்கலாம். நான் டைப் இன்ஸ்ட்யூட்கு வரும் போது பேசுவோம். இப்ப கெளம்பு..” என்றாள். இவன் “ஏன் இப்ப ஏன் பேசமுடியாது..?” என்றான். “அய்யோ கீழ்வீட்ல இருக்கிறவர் ஹவுஸ் ஓனர். எங்கப்பாம்மா ஊருக்கு போயிருக்காங்க. வந்ததும் கட்டாயம் எதாச்சும் ஏடாகூடமா சொல்லத் தான் போறார். புரிஞ்சுக்கவே மாட்டியா..?” என்றாள்.

இவன் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு “நானா வந்தேனா..?என்ன வேணி என் கூட எதோ பேசணும்னு நீ தானே வரச்சொன்னே. உங்கிட்டே நோட்ஸ் கேட்டேனா..?என்றான்.

மறுபடி.கடுப்பானாள் வேணி.”காமன் சென்ஸே கிடையாதா உனக்கு..இல்லாட்டி வேணும்னு பண்றியா ரகு..?புரிஞ்சுக்கவே மாட்டியா சிச்சுவேஷனை..?வீட்ல ஆளில்லாத நேரம் தனியா ஒரு பொண்ணு ஒரு பய்யனை வரச்சொல்லி பேச முடியுமா..?அதான் சொல்றேன். நீ கெளம்பு ரகு அப்பறம் பேசிக்கலாம். ப்ளீஸ்..” என்றாள்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டான். அவனுக்கு ஏதோ விருப்பமில்லாத வியர்வை உடலெல்லாம் வழிவது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது.

“உங்க வீட்ல ஊருக்குப் போறாங்கன்னு உனக்குத் தெரியாதா..?என்னை வரச்சொல்லிட்டு இப்ப நாயை வெரட்றாப்ல வெரட்றே…”என்றான் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் சரேல் என்று கோபம் ஏறியது வேணிக்கு. தன் உதடுகளுக்குள் முனகிக் கொண்டவள் “பேசுனதயே பேசுறே உன்னையப் போயி வரச்சொன்னேன் பாரு..பயித்தியமாடா நீ..?கீழ்வீட்டுக்காரர் பாக்குறாருன்னு பேசுறதை புரிஞ்சுக்காம” இப்போது சுற்றுவட்டாரத்தில் நாலைந்து வீட்டார் கவனிப்பதை உணர்ந்து இன்னும் பதற்றமாகி “ஐயோ போயிரு ப்ளீஸ்…உன்னைய வரச்சொன்னதுக்கு என்னை செருப்பால நானே அடிச்சிக்கிறேன்.போ போடா” என்று உள்ளே சென்று கதவை மூடிக் கொள்ள முயன்றாள்.

“வரச்சொல்லிட்டு வாசல்ல நாயி மாதிரி நிறுத்துவே…நீயாத் தானே கூப்பிட்ட..?” என்று இன்னொரு தடவை சொன்னதும் அதே நேரம் கீழ்வீட்டு மீசைக்காரர் விரோதமாய் நிமிர்ந்து மேல் நோக்க அடிக்குரலில் “அங்கிள் திஸ் கய் இஸ் டிஸ்டர்பிங் மீ.ஐ திங்க் ஹீ இஸ் இன் பூஸ்.ப்ளீஸ் ஹெல்ப் மீ அங்கிள்..” என்றாள். உடனே திருப்தியான மீசைக்காரர் படியேறி வந்து “தம்பி..புஸ்தகம் வேணும்னா வாங்கிட்டு கெளம்பு.. தனியா இருக்கிற பிள்ளைட்ட என்ன உரண்டல் பண்றே..?” என்றார்.

இவன் உடனே “இல்ல  ஸார் நீங்க பார்த்துட்டீங்கன்னு தான் என்னை திட்டினா வேணி. இப்ப நீங்க வெளில கெளம்பிட்டா என்னை உள்ளே வரச்சொல்லிடுவா. நீங்க புறப்படுங்க வேணி வரச்சொல்லித் தான் நா வந்தேன்” என்றதும் கடுப்பான மீசைக்காரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பசங்கள் காதுபட ”  என்னடா கலாட்டா பண்றியா..?பொறுக்கி..” என்று ஓங்கி முதல் அடி அடிக்க பேட்டும் ஸ்டெம்புமாய்ப் பசங்களும் புகுந்து கொண்டனர். ஆளாளுக்கு சாத்தியதில்  சட்டையெல்லாம் கிழிந்துவிட்டது. ” சரியான பைத்தியக்காரனா இருப்பான் போல” போலீஸ் ஸ்டேஷனுக்கு யாராச்சும் ஃபோன் செய்ஞ்சீஞ்சளா…?”இவனை எல்லாம் இப்டியே விட்டுறக் கூடாதுல்ல..?பொண்ணுக இருக்கிற எடம்ல..?இவனை அடிக்கிற அடி இன்னொருத்தனுக்கு தைரியம் வரக்கூடாது” என்றெல்லாம் குரல்கள் கேட்ட போது கிட்டத் தட்ட மயக்கமாயிருந்தான். பயம் கொண்ட தெருமக்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி டவுன் ஆஸ்பத்திரியில் சேர்க்க மறுநாள் மதியத்துக்கு மேல் தான் எழுந்தான் ரகுநந்தன்.

ஊரிலிருந்து வந்த வேணியின் அப்பா தாம் தூமென்று குதித்தவர் ரகுநந்தனின் வீட்டு வாசலில் நின்று இறைந்து ஒரு சண்டை. அமைதியடையாமல் கல்லூரி முதல்வரிடம் எழுத்திலும் பேச்சிலுமாய்ப் புகார் கொடுத்து கல்லூரியிலிருந்து முதல் செமஸ்டரோடு சீட்டுக் கிழித்து அனுப்பப் பட்டான் ரகுநந்தன். அடுத்த வருடம் வேணிக்கு கலியாணம் ஆனதாக தெரிந்தது. அதற்கு அப்பால் இன்றைக்குத் தான் அவளைப் பார்க்கிறான்.

ராத்திரி வீட்டுக்குப் போகும் போது மணி பதினொன்று. படுக்கையில் விழுந்தவனுக்கு வெகு நேரம் தூக்கம் வரவேயில்லை. அம்மா வந்து கட்டிலில் இவன் கால்மாட்டில் அமர்ந்தாள்.”யம்மா வேணி வந்திருந்தாம்மா இன்னிக்கு.நா பார்த்தேன். அவளுக்குக் கல்யாணமாகி புருஷன் குழந்தையோட வந்திருந்தாம்மா..அவ கொழந்த பேரு நீலாவாம்”.என்றான். அம்மா எதுவும் பேசாமல் இவன் கால்களை மெதுவாக அமுக்கி விட்டாள். எப்போதெனத் தெரியாத கணமொன்றில் உறங்கினான்.

 

            5

அடுத்த நாள் காலை வெளியே கிளம்பின போது அக்கா கேட்டாள் “எங்கடா போறே..வீட்லயே இருக்கலாம்ல..?”

” இல்லக்கா..கோவிலுக்குப் போயிட்டு வந்துர்றேன் என்று படியிறங்கினான்..கோவிலை நெருங்கும் வழியில் பட்டமார் தெருவினுள் ஒரே கூச்சலும் களேபரமுமாக இருப்பதைப் பார்த்தவன் வேகு வேகென்ற நடையில் நெருங்கினான். தெரு ஜனங்கள் கிட்டத் தட்ட பத்திருபது பேர் கூடியிருக்க சிவானந்தப் பட்டரின் நிலத்தை உழவடை செய்யும் கர்ணன் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டிருந்தான். லைட் கம்பத்தில் ஒல்லியான ஒருவன் கட்டி வைக்கப் பட்டிருந்தான். அவனது கறுத்து மெலிந்த தேகமெல்லாம் ரணம் தெரிந்தது. தன் மீது விழக் கூடிய ஒவ்வொரு அடிக்கும் அடிவயிற்றிலிருந்து அலறினான். “இல்லை இனி வரமாட்டேன். என்ன விட்டுறுங்க..எசமானே..” என்று அவன் அலறினாலும் கர்ணன் அடிக்கிறதை விடவில்லை. சிவானந்த பட்டர் தன் மூத்தமகன் கிருபாகரனை அழைத்து “போலீசுக்கு ஃபோன் செய்” என்று சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தவர் “அப்பிடிக் கேக்குதோ உனக்குத் திருடித் தின்னக் கேக்குதோ..?” என்று தானும் அவன் கட்டப் பட்டிருக்கிற தைரியத்தில் ஓங்கி அறைந்தார். அவர் வீட்டுக் கொல்லையில் தென்னை மரம் மீதேறி இரண்டு காய்களைப் பிய்த்து காம்பவுண்டுக்கு அந்தப்பக்கம் போட்ட போது கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டவனைத் தான் அந்த மாத்து மாத்திக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்தது.

தூரத்திலிருந்தே ஓட்ட நடையில் வரும்போதே ஒரு பெரிய தென்னம்பாளையைக் கையோடு பற்றிக் கொண்டு நெருங்கிய ரகுநந்தன் முதலில் கர்ணனை ஓங்கி ஒரு போடு போட்டான். அடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களுக்கு சரமாரியாக அடி விழுந்தது. சட்டை போடாத தன் வெற்றுடம்பின் மீது அடி விழுந்ததும் துடித்துப் போனார் சிவானந்த பட்டர். அங்கே குழுமி இருந்த மற்றப் பேரெல்லாம் ஓடி மறைந்த திசை தெரியவில்லை.

“வாங்கோன்னா. வந்திருங்கோ பைத்தியக்காரன் எதாச்சும் பண்ணிடப் போறான்” என்று மாமி வீட்டு வாசலில் இருந்தபடியே அழைக்க அவர் இவனை ஒருதடவை முறைத்து விட்டுக் கண் ததும்ப வீட்டினுள் நடந்தார்.

கம்பத்தில் கட்டப் பட்டிருந்தவனது கட்டை அவிழ்த்து விட்ட ரகுநந்தன் “கெளம்பு கெளம்பு” என்றான். அவன் கெந்திக் கெந்தி நடக்க ஆரம்பிக்க ‘இர்றா’ என்று அழைத்த ரகுநந்தனைப் பயத்தோடு பார்த்தவனிடம் “நீ பிடிங்கின காய் ரெண்டையும் விட்டுட்டு போற..?அதை எடுத்துட்டு போ..” என்றான். பாவனையாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு தேங்காய்களிரண்டையும் பற்றிக் கொண்டு மெல்ல நடந்து தெருத் தாண்டி மறைந்த பின்னரும் தன் கையில் இருந்த தென்னமட்டையை உயர்த்தி உயர்த்தி தரையில் தட்டியபடி நின்று கொண்டிருந்தான் ரகுநந்தன்.