மை


இந்தக் கதையை எங்கே எப்படித் தொடங்கலாம்..?ஆத்மாநாமின் கவிதை வரி ஒன்று ஞாபகம் வருகிறதல்லவா..?ஒரு கதை என்றால் ஒரு முடிவு இருந்தாக வேண்டும் அல்லவா..?இந்தக் கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகள் இருக்கப் போகிறது என்று ஒரு பட்சி சொல்கிறது.என்ன கதை என்றே தெரியாமல் இதை வாசிக்கிற உங்களைப் போன்றே எழுதுகிற நானும் மை என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் எதோ வாக்குத்தத்தம் போலக் கையில் வைத்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.முடிவைப் பற்றி முடிவில் யோசித்துக் கொள்ளலாம்.

திருப்பரங்குன்றத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே பக்கத்தில் தொழிலும் பண்ணிக் கொண்டிருக்கும் ஆதீஸ்வரனுக்கும் சென்னை டைடல் பார்க்கில் ஒரு கம்பெனியில் பெரிய விற்பன்னனாக இருக்கும் கார்த்திக்குக்கும் சின்ன வயதிலிருந்தே ஸ்னேகிதம்.ஒருவனுக்கு ஒருவன் என்று சொல்லும் அளவுக்கு.அப்படியாப் பட்ட கார்த்திக் வசிக்கும் சென்னைக்கு ரத்து செய்யப்பட்ட தன் கோழிப்பண்ணை லைஸன்ஸைப் புதுப்பிப்பதற்காக பத்துப் பதினைந்து நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம் வந்தால் ஹோட்டலிலா தங்க முடியும்..?நண்பர்கள் இல்லாதவர்களுக்காகக் கட்டப் பட்டவை தானே ஹோட்டல்கள்..?

ஏன் வந்தாய் என்று கேட்கும் உலகில் எத்தனை நாட்களானாலும் நிம்மதியாய்த் தங்கு என்று சொல்லும் மனசு நண்பனுக்குத் தானே வாய்க்கும்..?ஆதிக்கு மனசு லேசாய்க் குழைந்தது.எவ்வளவு நாளானாலும் மாறாத கார்த்திக்கை நினைத்து உருகினான்.தன் கிளாஸில் இருந்த திரவத்தைக் குடித்து முடித்து விட்டு அபார்ட்மெண்டின் சிட் அவுட்டில் பூமியைப் பார்த்து நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் உடல் லேசாய்க் குலுங்கியது.அழுகிறானா என்ன..?இருக்காது என்றவாறே அவன் தோளைத் தொட்டான் ஆதி.திரும்பிய கார்த்திக் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைத்தான்.

“என்னடா மாப்ள…ஏன் அழுகுறே,..,?”கேட்கும் போதே கஷ்டமாக இருந்தது ஆதிக்கு.
“இல்லடா ஆதி.வந்ததும் வராததுமா உன்னை மூட் அவ்ட் ஆக்க விரும்பலை. விடு.என் துயரம் என்னோட போகட்டும் என்று வானம் பார்த்தவனை அதட்டினான்.
“இப்ப சொல்லப் போறியா இல்லயா..?என்னடா பிரச்சினை..?உனக்கு பணப் பிரச்சினை எதும் வராதேடா…வேற என்ன..?எதா இருந்தாலும் சொல்லுடா கார்த்தி”
“சொல்றேன்” எனத் தொடங்கினான் கார்த்திக்.

விஷயம் இது தான்.தன் அலுவலகத்தில் வேறொரு டீமில் வேலை பார்க்கும் கார்த்திகா என்னும் சேலத்துப் பெண் மீது கார்த்திக்கிற்குக் காதலோ காதல்.இரண்டு வருடப் பழக்கம் தந்த தைரியத்தில் அவளிடம் தன் விருப்பத்தை சொல்லப் போக அவளோ காதலுக்குக் கொஞ்சமும் ஒத்துவராத தன் முன் கதையைச் சொல்லி இருக்கிறாள். கார்த்திகாவின் அக்கா காதலித்துத் திருமணம் செய்யப் போக… அவளையும் அவள் கணவனையும் கார்த்திகாவின் அப்பா வெட்டிக் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போய்விட்டாராம்.அவளைப் பெற்ற அம்மா மன நோயாளியாகி தற்கொலை செய்து கொண்டாளாம்.இப்போது கார்த்திகா வாழ்வது அவளது சித்தப்பா வீட்டின் அரவணைப்பிலாம்.காதல் என்று சொன்னாலே செருப்பைத் தூக்குவது தான் அவள் வழக்கமாம்.என்னென்னவோ பேசியும் ஒத்து வராமற் போய் ஒரு மாதமாயிற்று என்று சொல்லி மறுபடி கண் கலங்கினான் கார்த்திக்.

“சரி மாப்ள..நீ தூங்கு.நிம்மதியாத் தூங்கு.நாளைக்குப் பேசிக்கலாம்..” என்று சொல்லி அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்தான் ஆதி.நண்பனிடம் சொன்னதையே தனக்கு ஒரு வழி கிடைத்த சந்தோஷமாக மாற்றிக் கொண்டு தூங்கப் போன கார்த்திக்கின் முகத்தையே உற்றுப் பார்த்தான் ஆதி.”என்ன பண்ணியாச்சும் உன்னை சந்தோசப்படுத்துறேன் மாப்ளே என்று சொல்லும் போது தூங்கிவிட்டிருந்தான்.
அந்த வார வெள்ளிக்கிழமை காலை சீக்கிரமே எழுந்து எங்கேயோ போய்விட்டு வந்தான் ஆதி.வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“மாப்ளே…இந்தா இதை பத்திரமா வெச்சிக்க என்று சின்ன டப்பாவைக் கொடுத்தான்.
இது என்ன என்று புரியாமல் பார்த்தவனிடம்
“மாப்ள…இந்த மையைப் பாரு.இது கேரளாவுல இருந்து ஸ்பெஷலா வரவழைச்ச மய்யி.இதை நீ மூணு இடத்துல தடவணும்.உன் ஆளு தினமும் உட்கார்ற இடம்….அவ அடிக்கடி வந்து போற ஒரு இடம்.அப்பறம் அவ படுத்துத் தூங்குற இடம்.இதான் அந்த மூணு இடம்.சரியா தடவிறு…அப்பறம் ஒரு கவலையுமில்ல.உன் பிரச்சினை சால்வாய்டும்.”என்றவனை குழப்பமாய்ப் பார்த்தான் கார்த்திக்

“என்ன ஆதி…இந்தக் காலத்துல போயி மய்யி பொய்யின்னிட்டு…”என்றவனிடம்
“நீ என்ன லச்சக் கணக்குல இன்வெஸ்ட் பண்ணி மேட்ச் ஃபிக்ஸிங்கா பண்ணப் போறே..ஜஸ்ட் இத்தினூண்டு மைய்யி..அதை தடவப்போறே..வெய்ட் பண்ணப் போறே…நடக்காட்டிக் கேளு…நான் கிராமத்தான் மாப்ளே…இன்னும் எத்தினி வர்ஷம் ஆனாலும் சில விஷயம் மாறாது.என்ன ஒண்ணு…செய்றதை நம்பிக்கையோட செய்யி.உன் ஆளு தேடி வந்து உன்னைய விரும்புறேன்னு சொல்வா..நாப்பத்தெட்டு நாளுக்குள்ளே..பாரு என்றான்.

அரை மனசோடு அந்த டப்பாவை வாங்கித் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் கார்த்திக்.
சாயந்திரம் வழக்கத்தை விட சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பினவன் சந்தோசமாக இருப்பதை அவன் முகம் சொல்லிற்று.தடபுடலாக முட்டை புரோட்டா பிரியாணி எனப் பல பார்சல்களோடு ஆஜரானான்.ஆதி தன் மீசைகூட்டத்தில் இருக்கும் நரைத்துரோகிகளைக் களை எடுத்துக் கொண்டிருந்தான்.
“மாப்….அசத்திட்டம்ல என்றான்.வாய்க்குள் நாக்கை துருத்தித் தன் மீசையைத் துருத்திக் கொண்டிருந்தவன் கண்ணாலேயே என்ன எனக் கேட்டான்.
ஆஃபீஸ்ல அவ சீட்டுக்கு அடியில தடவிட்டேன்.அதே மாதிரி கேண்டீன்ல அவ அதிகத் தடவை வந்து உட்கார்ற சேருக்கு அடியில தடவுனேன்.ஆதீ…பயந்துட்டேன் ஒரு நிமிசம்..நான் வெளிய வந்த அடுத்த நிமிசம் கார்த்திகா வந்து அதே சேர்ல உட்கார்றா கேண்டீன்ல…ஒரு செகண்ட் வேர்த்துட்டேன் தெரியுமா என்றவனைப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சிரித்தான் ஆதி.பயந்தகோளிடா நீ என்று சொன்னவனை ஒரு கணம் முறைத்தான் கார்த்திக்.

“சரி…அவ தூங்குற எடம்..?என்றவனிடம்
“அதை நாளைக்கி தடவிக்கலாம்ல..?” என்றான் கார்த்திக்
“அடக்கிறுக்குப் பயலே…மூணு இடத்துலயும் ஒரே நாள்ல தடவணும்டா…இல்லாட்டி வேலை செய்யாது “என்றான் கருணையே இல்லாமல்.கழற்றத் தொடங்கிய சட்டைப் பித்தான்களை மறுபடி மாட்டிக் கொண்ட கார்த்திக் “எப்டிடா இப்பப் போயி அவ வீட்டுக்குள்ளே தடவுறது..?நான் கால் பண்ணா ஃபோனை எடுக்கக் கூட மாட்டா ஆதி..” பரிதாபமாக சொன்னான்.

“எனக்குத் தெரியாது மாப்ள..இன்னிக்குள்ள தடவியே ஆகணும்.அவ வீட்டுக்குள்ளே போயிர்றே…அவ பெட்ரூமுக்கு உள்ளே தடவுனா க்ரேட்டு..முடியாட்டி எவ்ளோக்கெவ்ளோ பெட்ரூமுக்குப் பக்கத்துல தடவுறியோ அவ்ளோ நல்லது.பார்த்துக்க. “என்றான் ராணுவக் கமாண்டர் போல.

அவனையே ஒரு தினுசாய் முறைத்துப் பார்த்த கார்த்திக் தன் ஃபோனை எடுத்து ரிங் செய்தான்.நல்லவேளை எடுத்துவிட்டாள்.”கார்த்திகா…நாந்தான்….ப்ளீஸ் ஃபோனை வெச்சிராத.நான் உன்னைப் பார்க்கணும்.என்னைய மன்னிச்சிரு.நான் தேவையில்லாம உன்னை அன்னிக்கு மூட் அவ்ட் ஆக்கிட்டேன்”என்று குறைந்த ஸ்தாயியில் பேசிக்கொண்டே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஆல்டோவின் கதவைத் திறந்து உள்ளே புகுந்துகொண்டான்.வாசல் கேட்டைக் கூட மூடாமல் வேகமாகத் தெருத் திரும்பியவனை மனதுக்குள் திட்டிக்கொண்டே கேட்டை மூடி விட்டு உள்ளே வந்தான் ஆதி.

சரியாக ரெண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்து “உஸ் அப்பா..ஒரு காதலுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது..?” என்று சிரித்தவனைப் பரிதாபமாகப் பார்த்த ஆதி என்னடா ஆச்சு என்றான்.

“ஆச்சு ஆச்சு.முதல்ல முகம் குடுத்தே பேசலை.அப்பறம் வேற வழியில்லாம எனக்கு ஜோதின்னு ஒரு பொண்ணோட கல்யாணம் நிச்சயமாய்டுச்சின்னு சொன்னேன்.சகஜமாய்ட்டா.,.நீ தான் எனக்கு வாழ்நாள் ஃப்ரெண்டு.உன் நட்பு எனக்கு முக்கியம்னு சொன்னேன்.வீட்டுக்குள்ளே போனதும் இண்டீரியர் எல்லாம் ப்ரமாதமா இருக்குன்னு சொன்னேன்.வீட்டை சுத்திக் காமிச்சா…பெட் ரூமுக்குள்ளே ஒரு கர்ட்டஸிக்கு நுழைஞ்சதுமே வெளியே வந்துட்டேன். அதுக்குள்ளே “என்று மறுபடி பெருமூச்சை விட்டவாறே “தடவிட்டேண்டா மாப்ள..இனி எல்லாம் மைய்ய நம்பித்தான்..” என்று கைலிக்கு மாறினான்.

வெளியே பெருங்காற்றோடு இடி இடிக்கத் தொடங்கியது.மழை நிச்சயமா வரும் என்றபடியே வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டு ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து மொத்தத்தையும் குடித்தான்.

“சாப்டலையா?” என்ற கேள்விக்கு பதிலே சொல்லாமல் கம்ப்யூட்டர் முன்னே சென்று அமர்ந்து கொண்டான்.

அடுத்து வந்த முதல் பத்து நாட்கள் ஆதி தன் லைஸன்ஸ் வேலையில் பரபரப்பானான்.கார்த்தியும் இயல்பாக கார்த்திகா பற்றிப் பேசாமல் தவிர்க்கிறான் எனப் புரிந்தது.ஒரு சனிக்கிழமை காலை ரெண்டு பேரும் பழைய ஊர்க்கதை எல்லாம் பேசிச்சிரித்தபடியே சரக்கடிக்கத் தொடங்க அந்த நேரம் பார்த்து “கார்த்திகா கிட்டேருந்து மெசேஜ்டா ஆதி,ஃப்ரீயா இருந்தா கால் பண்ண சொல்றாடா”என்று முகமெல்லாம் பிரகாசமாகி “ஹலோ கார்த்தி எப்டி இருக்கே..?” என்றவாறே சிட் அவுட்டுக்குள் நுழைந்து காணாமற் போனான்.

அரைமணி நேரம் தனியே ஹிட்லர் மாதிரி அமர்ந்திருந்த ஆதியிடம் மறுபடி அவஸ்தையான முகபாவத்தோடு வந்தமர்ந்தான்.

என்னடா ஆச்சி என்றவனிடம் “மாப்ள..ஃஃப்ரீயான்னு மறுபடி கேட்டா…மீட் பண்ணலாமான்னு அவசரப்பட்டுட்டேன்.நல்ல வேளை சமாளிச்சாச்சி…எனக்கு நிச்சயமாய்டிச்சின்னு சொன்னேன்லயா..?அதுக்கப்பறம் ஆஃபீஸ்ல எதிர்ல பார்த்தாக் கூட எந்த விரோதமும் வெச்சிக்காம இயல்பா சிரிக்குறதும் லேசா பேசுறதுமா இருக்கா.ஆனாலும் இன்னிக்கி தான் மொத மெசேஜூம் காலும் வருது.வேற எதுமே பேசாம என் வருங்கால பொண்டாட்டி பத்தியே பேசினாடா…நானும் எதுமே காமிச்சிக்காம இல்லாத ‘வுட் பீ’ பத்தி நிறைய சொன்னேன்.

எதோ வேலைன்னு போயிருக்கா..மறுபடி கூப்டுவாளான்னு தெர்ல…எனிவே…ஐம் ஹேப்பி..” என்றான்.

“நான் குடிக்கலை மாப்ள..நீயே எனக்கும் சேர்த்துக் குடி.திடீர்னு மீட் பண்லாம்னு சொல்லிட்டா..என்ன பண்றது..?ப்ரச்சினையாய்டும்” என்று குளிக்கப் போனான்.ஒரு வேலையுமில்லாத சனிக்கிழமை எதற்கென்றே தெரியாமல் டக் இன் எல்லாம் பண்ணிக்கொண்டு புதுமேனேஜர் மாதிரி பய்யன் சொல்ல முடியாத அவஸ்தையில் இருப்பதை ஆதியும் ரசித்தான்.அன்றைக்கு அதன் பின் கார்த்திகாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.ஸோ வாட்..?பக்த கார்த்திக் காத்திருப்பான்.
ஆதிக்கு ஊரிலிருந்து அழைப்பு வந்தது.”ஒரு மாசம் இருப்பேன்னியே?” என்ற கார்த்திக்கிடம் “இல்ல மாப்பி…போயே ஆகணும்.தங்கச்சி கல்யாணம் தகைஞ்சு வருது.நா போயிட்டு பத்து நாள்ல வந்துருவேண்டா..”என்றவன் பஸ் ஏறப்போகும் கணத்தில் கார்த்தி என்றான் என்ன என அஸ்வாரசியமாக கேட்டவனிடம் “இந்தா பாரு..மை நிச்சயமா வேலை பார்க்கும்.நீ என்ன பண்றே..எந்த சந்தர்ப்பம் கிடச்சாலும் அடிச்சி விளையாடு.விட்டுறாத..” என்று விட்டுப் போனான்.கார்த்தி முகம் கறுத்து களையிழந்து இருந்தது.

பத்தாவது நாள் சொன்ன சொல் தவறாமல் வந்தான் ஆதி.அவன் நுழைவதற்கும் கார்த்தி வெளியே கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.சாயந்திரம் வந்து பேசிக்கலாம் என்று அனுப்பி வைத்தான்.அன்றைக்கு ஆதிக்கு வெளியே வேலை இல்லை.ரூமிலேயே ரெஸ்ட் எடுக்கலானான்.கார்த்தி சாயங்காலம் சீக்கிரமே வந்து எழுப்பும் வரை தூக்கம் தான்.

“மாப்ள…கையக் குடு.நீ ஊர்ல இருக்கும் போதே எல்லாத்தையும் சொல்லி இருக்கணும்.இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு கான்ஃபிடெண்டா சொல்லலாம்னு வெய்ட் பண்ணேன்” என்று தொடங்கினான்.

“ஆதி…நீ ஊருக்கு போன மறு நாள்ல இருந்து கார்த்திகா கிட்டே இருந்து அடிக்கடி மெசேஜ் வர ஆரம்பிச்சிது.இயல்பா அவளும் நானும் பேச ஆரம்பிச்சா ஒவ்வொரு காலும் ஒரு மணி நேரமாச்ச்சும் நீண்டிச்சுன்னா பார்த்துக்க.நா அவசரமே படலை.எனக்கு இல்லாத வருங்கால மனைவி கேரக்டரை ரொம்பவே பில்ட் அப் பண்ணேன்.அவளுக்கு நா கார்த்திகா சொல்லி தான் கலியாணத்துக்கு சம்மதிச்சேன்னு சொன்னதே பிடிக்கலை.அவ ரொம்ப பொஸசிவ் டைப்னு ஒரு ரெண்டு நாள் போச்சு.அப்பறம் மெல்ல அவ கேரக்டரை சந்தேகப் பிராணின்னு மாத்தினேன்.கார்திகா வாயாலயே இவளை நீ கல்யாணம் செஞ்சுகிட்டா சிரமம் தான்னு சொல்லாம சொல்ல வெச்சேன்.மூணு நா முன்னாடி கார்த்திகாவுக்கு பொறந்த நாளு.ஒரே டிசைன்ல ரெண்டு ஹேண்ட்பேக் வாங்கினேன்.ஒரு பேகை ரூம்லயே வெச்சிட்டு இன்னொண்ணை கார்த்திகாவுக்கு பிரசண்ட் பண்ணென்.பர்ஸ்லேருந்து பணத்தை எடுக்கும் போது வேணும்னே தவற விட்டேன்.பில்லை எடுத்து பார்த்தவ எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியான்னு கோச்சுகிட்டா.இன்னொண்ணு யாருக்கு ஜோதிக்கா அப்டின்னு சாதாரணமா கேட்டா.நா ஆமாம்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.அப்பறம் ரெண்டு நாள் நாங்க பேசிக்கலை.இன்னிக்கு காலைல கிளைமாக்ஸ்..என்று நிறுத்தினவன் வாசல் மணி சப்தம் கேட்டு எழுந்து போனான்.

கூரியர் வந்துச்சி.ஆஃபீஸ் போறதால பொதுவா ஈவினிங் தான் டெலிவரி பண்ணுவாங்க.என்றவாறே மறுபடி தன் எதாஸ்தானத்தில் அமர்ந்தான்.
சொல்லுடா எனக்கு பக்கு பக்குங்குது என்ற ஆதியை நிர்மலமாகப் பார்த்து சிரித்தான் கார்த்திக்.மாப்ள நீ ரொம்ப நல்லவண்டா…நீ மாத்திரம் ஹெல்ப் பண்ணிருக்காட்டி எனக்கு கார்த்திகா கிடைச்சிருக்க மாட்டா என்றான்.
என்னது…கிடைச்சிட்டாளா…அடப்பாவி என்னடா ரொம்ப கேஷூவலா சொல்றே…சொல்றா எப்டிடா கவுத்தே..? ஆதி கிட்டத் தட்ட உற்சாகத்தில் கத்தினான்.
“சொல்றேன்…சொல்றேன்..இன்னிக்கு கார்த்திகா வந்தா.அவளுக்கு அவ வீட்ல கல்யாணப் பேச்சை எடுத்து கடுப்பாயிருந்தா போல.எனக்கது தெரியாது.என்னாச்சு நீ ஏன் ஒரு மாதிரி இருக்கேன்னா…நான் உடனே பயங்கரமா சோகமூஞ்சியோட என்னை எதுவும் கேட்கவே கேட்காதே கார்த்திகான்னேன்.சொல்லியே ஆகணும்னு கட்டாயப் படுத்தினா.நான் ஜோதிக்கு ஹேண்ட்பேகை குடுக்கும் போது கை தவறி பில்லை பார்த்துட்டா..ரெண்டாவது ஹேண்ட்பேக் யாருக்கு வாங்கினேன்னு கேட்டா..நான் கார்த்திகாவுக்குன்னு சொன்னேன்.எனக்குனு ஒரு ஹேண்ட்பேக் கூட தனியா வாங்க மாட்டியான்னு கேட்டா…நான் பொறுமையா அட்வைஸ் பண்ணேன்.அதுக்கு அவ முதல்ல எனக்கு தரணும்னு தோணலைல்ல உனக்குன்னு கேட்டு சண்டை போட்டா..நம்ம வாழ்க்கை முழுக்க கார்த்திகா அணை மாதிரி உன்னை தேக்கி வெச்சிட்டே இருக்கப் போறான்னா எனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கையே வேணாம்னா…நான் ஒரு அளவுக்கு மேல பொறுமை இழந்து போயி அம்மா தாயே என்னை மன்னிச்சிடு.உன்னை மாதிரி பேய் கிட்டேல்லாம் உண்மையா இருக்கணும்னு நினைச்சேன் பார்..என்னை செருப்பால அடிச்சிக்கணும்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.மதியமே வீட்லயும் பேசிட்டேன்.இனி கல்யாணம் வேண்டாம்னு ரெண்டு பக்கமும் பேசியாச்சுன்னு இல்லாத கதையை முடிச்சிட்டேன்.”
“அடப்பாவி…இதைக் கேட்டா நானே உன்னை லவ் பண்ணுவேனேடா..?” ஆதி பெரிதாக சிரித்தான்.

“இரு…கார்த்திகா எதுவுமே பேசலை..நானா எப்டி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.”கார்த்திகா நான் ஒரே ஒரு ஹேண்ட்பேக் வாங்கியிருக்கணும்.ஷீ நெவர் டிஸர்வ் எனிதிங்” அப்டின்னேன்.அவ மௌனமா இருந்தா..நான் கார்த்திகா ரெண்டு வெவ்வேற நபர்கள் நம்ம வாழ்க்கையில நுழையுறதா இருந்தா நாம இப்பவே பேசிக்கறதைக் கூட ஸ்டாப் பண்ணிக்கலாம்.என் மேல நம்பிக்கை இருந்தா வா.ரெண்டு பேரும் காதலிக்கலாம்.கல்யாணம் பண்ணிக்கலாம்.என்னை விட வேற யாராலயும் உன்னை சந்தோஷமா வெச்சிக்கவே முடியாதுன்றதை நான் தினமும் நிரூபிக்கிறேன்னேன்.ஒரு ஃப்ளோல அடிச்ச்சி விட்டுட்டு பயங்கர பயத்தோட அவளை பார்த்தேன்.அவ மெதுவான குரல்ல “என்னை எப்பவுமே இதே அளவு லவ் பண்ணுவியா கார்த்திக்..?” அப்டின்னு கேட்டா…ஷாக் கலந்த சர்ப்ரைஸோட “ம்ம்” அப்டின்னேன்.அவளும் “ம்ம்ம்” அப்டின்னா.அப்பறம் எங்களுக்கு வார்த்தைகள் தேவைப்படலை மாப்ள…”

ஆதிக்கு மன நிறைவாக இருந்தது.ஒரு ஆண் தன் வாழ்க்கையில் வெட்கம் கலந்த குறுகுறுப்போடு சரிந்து நெளிவது அபூர்வமான தருணம்.காதல் எல்லோரையுமே முதல் தடவை கள் குடித்த போதையாட்டத்துக்குள் வரவழைத்து விடுகிறது.கார்த்திக் ரொம்ப நல்லவன்.ஆனால் கோழை.

ஆதி..நீ என்ன நினைச்சாலும் சரி.என்னால ஃபீல் பண்ண முடியுதுடா மாப்ள..இவ்ளோ துல்லியமா இந்தக் காரியம் பழமானதுக்கு நீ குடுத்த மை தாண்டா காரணம்.ரொம்ப தேங்க்ஸ்டா.ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.கண்கள் பனிக்க கார்த்திகாவுக்கு ஃபோன் செய்வதற்காக அந்தப் பக்கம் போனான் கார்த்திக்.அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி மனதினுள் நினைத்தான்.அடேய் நண்பா…அந்த மையோட வரலாறு உனக்குத் தெரியுமா..?

இந்த இடத்தில் இந்தக் கதை முடிகிறது.

அந்த மை பற்றிய உண்மைகள் ஒன்றல்ல மூன்று.

உண்மை 1

ஆதி நினைத்துக் கொண்டான்.சின்ன வயசுல இருந்தே இந்த கார்த்தி பய்யன் எதுக்கெடுத்தாலும் தாழ்வு மனப்பான்மையால மனசைக் கொழப்பிக்கிட்டே இருக்கிறவன். இப்ப ஒரு பொண்ணை காதலிக்கிறப்பவும் தைரியமில்லாம எனக்கு ஹெல்ப் பண்ணுன்னு அழுவுறான்.இவனை சரி பண்ணனும்னா ஒரே வழி தான் அப்டின்னு வடபழனி கோயிலுக்கு சமீபத்ல ஒரு பீடா கடை இருக்குது.அங்கே பீடா வாங்குறதுக்காக போயிட்டு இருக்கும் போது தான் அந்த ஐடியா வந்திச்சி.”
சின்ன கூடையில பல விதமான செப்பு சாமான்களும் சீப்பு கண்ணாடி இத்யாதிகளும் வித்துகிட்டு இருந்த அசோதை கிட்டே இருந்து ஒரு சேஃப்டி பின் பாக்கெட்டையும் மை டப்பா ஒண்ணையும் விலை கேட்டான் ஆதி.அந்த கடை அசோதையோடது இல்ல.செல்லம்மாவோடது.டீ குடிக்க போயிருந்த செல்லம்மா வந்த சோருக்கு இந்தா புள்ள இந்த பின்னும் மை டப்பாவும் எவ்ளவுன்னு கேட்க…சரியா கவனிக்காத செல்லம்மா வாங்கு ரெண்டுக்கும் சேர்த்து ஒரு இருவது ரூவான்னு சொன்னதும் ஆதி 20 ரூவாய குடுத்து ரெண்டையும் வாங்கிட்டு  டுர்ருன்னு கெளம்பி போயி கார்த்தி கிட்டே அதை ஜெகஜ்ஜால மைன்னு குடுத்த கதை தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே…?

உண்மை 2

அசோதைக்கும் செல்லம்மாவுக்கும் வாய்த் தகறாரே வந்து விட்டது.நான் கேட்டா உனக்கெங்கே போச்சிது அறிவு அப்டின்னு அசோதை ஏச எனக்குன்னு வந்து சேர்து பாரேன் ஒவ்வொரு கெரகமும்னு செல்லம்மா பேச இருவரும் மாபெரும் டூ விட்டுக் கொண்டதன் காரணப் பின்னணி இதுதான்.
செல்லம்மாவின் ஒரே மகள் வனஜா.அவளைக் கலியாணம் செய்திருக்கும் ஈஸ்வரன் நல்லவன்.குடிக்காத போதுகளில்.எப்போதும் தண்ணி.அடி உதை இத்யாதி.என்னென்னவோ செய்தும் திருந்தவில்லை.அப்போது தான் செல்லம்மாவின் அண்ணன் கோவிந்தன் கேரள சோசியர் ஒருவரிடம் கேட்டு பல நாள் பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ஸ்பெஷல் மையை அறுநூறு ரூபாய் ஃபீஸ் தந்து வாங்கி வந்திருந்தார்.இதை எப்டியாச்சும் உன் மருமவனுக்கு நெருக்கமான இடங்கள்ல தடவச்சொல்லு.எல்லாம் நல்லது நடக்கும் என்று சற்றை முன்னர் தான் கொடுத்திருந்தார்.அறுனூறு விலை கொடுத்து வாங்கிய மையை கவனிக்காமல் இருவது ரூவாய்க்கு வித்துட்டாளே என்று தான் அசோதை மீது பெருங்கோபம் அவளுக்கு.அதை விட நினைச்ச காரியம் எதுவானாலும் நடக்கும் என்று சொல்லப்பட்ட சாமியாரின் ஆஃபர் மிஸ் ஆயிட்டுதே என்று தான் கவலை அவளுக்கு

உண்மை 3

கல்யாணப் பேச்சு பேசுவதற்காக ஊரில் இருந்து சொந்தம்ஸ் மற்றும் பந்தம்ஸ் கூட்டிக் கொண்டு கார்த்திகா வீட்டுக்குப் போனான் கார்த்திக்.எல்லாம் நல்ல விதமாகப் பேசி முடித்து இன்னும் நாற்பது நாளில் கலியாணம் என்று பேசிக் கிளம்பிய பிற்பாடு அன்றைய இரவு பேச்சு வெகு நேரம் நீண்டது.கார்த்திக் கேட்டான் அன்னிக்கு வந்ததுக்கும் இன்னிக்கு வர்றதுக்கும் இடையில உங்க வீடு ரொம்ப சேஞ் ஆனாப்ல இருக்குதே கார்த்திகா…என்று
பகபகவென்று சிரித்தவள் ஸாரி கார்த்திக்.அன்னிக்கு நீ வந்தது எங்க வீடு இல்ல.எதிர்வீடு.உன்னை அவாய்ட் பண்றதுக்காக எதிர் வீட்டு அங்கிள் பெர்மிஷனோட அவங்க வீட்ல வெச்சி தான் உன்னை மீட் பண்ணேன்.ஸாரிடா..கோச்சுக்காத என்றாள்.
எதிர் வீட்டு பெட்ரூமுக்கும் இவள் வீட்டு பெட்ரூமுக்கும் இடையில் எத்தனை தூரம் இருக்கும் என்று மனசுக்குள் கணக்குப் போட்ட கார்த்திக் யப்பா செம ஸ்ட்ராங்க் மை போல இருக்குது..எவ்ளோ தூரம் தாண்டி வேலை பார்த்திருக்குது..தேங்க்ஸ்டா ஆதி அப்டின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்கிட்டான்.

 

சுபம்.