சமீபத்துப்ரியக்காரி 13

            ஆகவே


  • உனக்கே உயிரென்றானவள் ஒருத்தி உன்னை நீங்கிச் சென்றபிற்பாடு அவள் ஏற்படுத்திப் போகின்ற வெறுமையின் துயர் சொல்லவொண்ணாதது. அவற்றில் ஆயிரம் மழைக்கும் வெப்பத்திற்கும் இடமிருக்கக் கூடும். அவளுக்கு மட்டுமே சொல்லக் கூடியதாக உன்னிடம் கதையேதும் எஞ்சியிருக்குமேயானால் அந்தக் கதையின் அரூப கனம் அது தான் அதுமட்டும் தான் தாளமுடியாத வீழ்கணமாகும்.
  • என்ன செய்வாய் நீ என்ன செய்வாய் ஏதுமறுதல் துறவு அல்லது நனவிலி அதுவுமில்லாது போனால் மரணம் இப்படி ஏதும் நிகழ்ந்திருந்தால் கூட உன்னால் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். நீயோ பாவம் அல்லாடுகிறாய் தனிமைக்கு ஆயிரமாயிரம் வீதிகள். மனம் உடைந்தவர்க்கென்று எதேனும் புகலிடம் இருக்குமா..? தங்கி இளைப்பாறித் திரும்புவதற்கான விடுதி போல் எதாவது.. என்று ஏங்குகிறாய். தேடமுனைகிறாய். இருக்கவே முடியாது என்று சொல்வதற்கில்லை.
  • ஆம்…இரவு அது ஒன்று தான் உனக்கானது. இன்மைக்கானது இரவு மாத்திரம் தான். இரவுக்குள் நடைபோடு. ஆழ்ந்து கொண்டே போ. இரவின் மடியில் உன்னைக் கிடைத்து. இல்லாமற் போவதானாலும் இரவாய்ப் போவது உசிதம். முயன்று பார்.
  • ஆனால் ஒரு விஷயம். உன்னைத் தனிமையிலாழ்த்திச் சென்றவள் வரவே போவதில்லை என்று எப்படி முடிவு செய்கிறாய்..? உன்னை விட்டு நீங்கிச் செல்பவளுக்கு யார் தோளிலாவது சாய்ந்தழத் தோன்றலாம். யார் மடியிலாவது சிதறத் தோன்றலாம். யாரிடமாவது தன் ஒரே புதிய கதையைச் சொல்லி அழத் தோன்றலாம். அந்தத் தோன்றல்கள் இட்டுவரக் கூடிய சித்திர ஒற்றையாக உன் உருவமாக இருந்துவிட்டால் என்ன செய்வாய்? ஆகையினால் அந்த ஒரு வருகை நிகழவே கூடாதென்றும் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்றும்
  • எண்ணிக் கொண்டே
    பிரார்த்தித்துக் கொண்டே
    கனாவிக் கொண்டே
    சபித்துக் கொண்டே
    ஆசீர்வதித்துக் கொண்டே
    துக்கித்துக் கொண்டே
    சந்தோஷித்துக் கொண்டே
    மௌனித்துக் கொண்டே
    ஆரவாரமிட்டுக் கொண்டே
    இருந்துகொண்டே
    இல்லாதிருந்து கொண்டே

    தொடர்வதைத் தவிர மாற்றேதும் இல்லை காண்.
  • தனிமையிலிருந்து கூட்டத்தை நோக்கி ஓடுகிறாய் பார். நெரிசலிலிருந்து தனிமையை நோக்கி யாரேனும் நடைபோடலாம். உறவின் துளி நஞ்சையேனும் அருந்தவியலாதா என்று ஏங்கித் தவிக்கிறாய் இல்லையா? யாராவது தன் ஒட்டுமொத்த அடையாளங்களையும் அழித்து விட்டுப் புதிய இடம் நோக்கித் தொலைந்து கொண்டிருக்கலாம்.குவிந்த உள்ளங்கரத்தில் வந்து விழக் கூடிய மழைத்துளியின் வருகைக்கான சாத்தியம் ஒன்றைப் போல் ஒரு அற்புதத்தை நிகழப் போகிறதென்று நம்புகிறாய் பாரேன். உன் கரத்தைத் தவிர்த்த மாபெரும் இப்ரபஞ்சமும் ஒரு கிண்ணத்தை ஏந்திக் கொண்டு காத்திருப்பதை உசிதமாய் நீ மறக்கின்றாய்.
  • இதை விடவும் கொடுந்தனிமை ஒன்றை அழைத்து வரச்சொல்லி, இந்தத் தனிமையைச் சாடியனுப்பி இருக்கிறாய் பாரேன் அதில் தெரிகின்றது உன் சாதுர்யம் ஆனால் ஒன்றை மட்டும் நினைவின் ஆழியில் எங்கோ தூரத்தில் ஒலிக்கின்ற முகமிலியின் அச்சுறுத்தலைப் போல் உனக்குள் ஒலித்துக் கொள்ள மறவாதே.
  • “இரவென்பது எப்போதும் சாதகமானது அல்ல”
    ஆகவே,
    நீ
    வேறொருவர்க்கான பாடலின்
    முதல் வார்த்தையைத் தேடு.