19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன


திக்கித்து இருப்பதா
மௌனித்திருப்பதா
இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா
(மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே
கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்)

மழை வருதலா முதுகை வெறித்தலா
(ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று
செல்லம் கடிந்து நெஞ்சில் குத்துகிறாற் போல் பாவனை செய்பவளின்)

புன்னகைச்சாயமா
(சமாதான ரதத்தில் அத்தனை உயரத்தில்
கண்மூடிக் கிடத்தப்பட்டிருப்பவரை/பட்டிருப்பதைப் பார்த்தபடியே
குரைத்துக் கொண்டு காததூரம் தொடர்ந்து பின்
தயங்கி உறைகிறது நாய்ஜென்மம்)

அப்படிக் கிடத்தப்படுவதா அல்லது தொடர்ந்து தயங்கி உறைவதா
(புள்ளி பூச்சியம் பூச்சியம் நாலு மைக்ரோ விநாடி பின்னால் வந்தபடியால்)
இரண்டாமிடத்தைப் பெற்றபடி மேலும் கீழுமாய்
மூச்சு வாங்க நடப்பவனின் தளர்நடையா

நீர்த்தழியாத முயக்கத் தேட்டமா
(மீன் தின்றதை கடல் தின்றதாகப் பக்கத்து இருக்கைக்காரனிடம் விழிகள் விரியக் கிசுகிசுக்கும்)
குழந்தமைப் பிராயப் பேருண்மையா
பசியொழிக்கும் தீராக்கலயமா
சாகாவரமா
கனவுட் புகையும் கடவுள் வாசனையா
என்னவென்று கேட்டால்
என்னென்பேனோ

ஏதென்பேனோ