தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன்

“All action in theatre must have inner justification, be logical, coherent, and real.”
                                                                                                       – Constantin Stanislavski

தேங்காய் சீனிவாசன் தன் 22 ஆம் வயதில் நடிகரானவர். 28 வருட காலம் நூற்றுக்கணக்கான படங்கள் எண்ணற்ற வேடங்கள். உடன் நடிக்கும் நடிகர்கள் எத்தனை பேரானாலும் தன் வசனப்போழ்தில் எல்லோரையும் தாண்டி மிளிரக் கூடிய வல்லமை சீனிவாசனிடம் இருந்தது. முகமொழியும் உடல்மொழியும் அபாரமாகக் கை வந்த நடிகர். எந்த வேடமானாலும் அதில் தனக்கென்று தனியான முத்திரையிடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தவர். சென்னை மனிதனைத் திரையில் தோற்றுவிக்கப் பல நாயகர்கள் கடினப்ரயாசை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் தேங்காய் அனாயாசம் காட்டினார். எழுபதுகளில் வெளிவந்த பல படங்களில் தேங்காய் தவிர்க்கவே முடியாதவராகத் திகழ்ந்தார்.
தன்-மேதமையைக் குறைத்துக் கொள்வதே ஒவ்வொரு நடிகனுக்கும் இருக்கும் முதன்மையான சவால். ஒரு வேடத்தின் அளவுகளுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள எத்தனை முயன்றாலும் மனித ஆற்றலை மீறிய வேறொன்று தான் வேடம் அமைவதும் வேடத்துள் நிறைவதும். அந்த வகையில் தன் தோற்றத்தை, குரலை, உடலை, முகத்தை என எதை எவ்வண்ணம் மாற்றியமைத்தாலும் எல்லாமும் அவருக்கு ஒத்துழைத்தது தான் அவர் சிறப்பதற்கான காரணம். காசேதான் கடவுளடா படத்தில் அப்பாசாமியாக வந்து ஆக்ரமித்தார்.காசேதான் கடவுளடா படத்தின் நாயகன் தேங்காய் சீனிவாசன் தான். அவரின்றி ஓரணுவும் அசையமுடியாத நற்படம் அது. தேங்காயின் வசன வழங்கலுக்காகவே அந்தப் படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். ஒரு பெருங்கூட்டத்தையே தன் நடிப்பால் களவாடினார் சீனிவாசன்.
Kasethan Kadavulada - Thengai Srinivasan's Excellent Acting - YouTube
உத்தரவின்றி உள்ளே வா படத்தில் நாகேஷ் வெ.ஆ.மூர்த்தி எனப் பலருக்கும் மத்தியில் தேங்காய் ஏற்ற டாக்டர் சாமிநாதன் பாத்திரம் அட்டகாசம். மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் ப்ளாக்மெய்லர் வாசனாக மின்னி மிளிர்ந்தார் சீனி. இதே படம் அடுத்தடுத்து தெலுங்கு கன்னடம் இந்தி என மறுமொழிகள் கண்ட போது கன்னடத்தில் வாசு என்ற அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் ரஜினிகாந்த்.
பட்டிக்காட்டு ராஜா படத்தில் மெய்வாக்கு மேகநாதனாக வந்தார் சீனு.வைரம் படத்தில் ஆஸ்பத்திரி வார்டு பாயாக வருவார். நான் அவனில்லை படத்தில் ஜானி வாக்கர் என்ற வேஷம். அன்னக்கிளி படத்தில் அழகப்பனாக சீனுவாசனும் அவருடனே எப்போதும் வலம் வரும் உபமனிதனாக வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்தனர்.
அனேகமாக எழுபதுகளுக்கப்பால் வந்த எல்லா எம்ஜி.ஆர் படங்களிலும் தேங்காய் நடித்தார் என்றே சொல்லமுடியும். அரசியல் முன்னெடுப்பில் எம்ஜி.ஆருக்குத் தேவையான போற்றி போற்றி வசனங்களை மற்ற யாரை விடவும் துணிச்சலாகப் பேசி நடித்தார் சீனிவாசன். இன்னொரு புறத்தில் சிவாஜியுடனும் பல படங்களில் வேஷம் கட்டினார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் அந்தரங்கம் படத்தில் கோயமுத்தூர் கோதண்டமாக வந்தவர் வேறு யார், சீனி தான்.
தேங்காய் நடிப்பில் பல முக்கியமான வேடங்கள் உண்டு. வீகே ராமசாமி தயாரித்து நடித்த ருத்ரதாண்டவம் படத்தில் அவர் ஏற்ற வேடம் அவற்றுள் ஒன்று. குற்ற உணர்ச்சியும் கோழைத் தனமும் கலந்த அந்தப் பணக்காரக் கனகசபை எனும் வேடத்தை வேறு யாராலும் நடிக்க முடியாத திறனோடு கடந்தார் சீனிவாசன். இத்தனைக்கும் அந்தப் படத்தில் வீகே.ராமசாமி,நாகேஷ்,சுருளிராஜன், எம்.ஆர்.ஆர் வாசு எனப் பல நகைச்சுவை முகங்கள் சேர்ந்து நடித்தன. எல்லாரிலிருந்தும் தனித்துத் தோன்ற சீனிவாசனால் இயன்றது. ரஜினியின் மைத்துனராக சதுரங்கம் படத்தில் ஒரு பாந்தமான வேடத்தில் வருவார். ப்ரியா படத்தில் டைரக்டராக உன் பாஸ்போர்ட் என் கையிலே என்று நளினம் காட்டுவார்.
வசனமும் வேடமும் எனப் பாடம் வகுக்கையில் தேங்காய் சீனிவாசனைத் தவிர்க்கவே முடியாது எனத் தோன்றும். தனக்கு வழங்கப்படுகிற வசனங்களைத் தன்னால் ஆன அளவு மெருகேற்றுவதில் மன்னராக விளங்கியவர். ஜெயகாந்தன் எழுதி பீம்சிங் இயக்கிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில் தேங்காய் சீனிவாசனும் காந்திமதியும் ஏற்ற சின்ன நைனா தொத்தா பாத்திரங்கள் கவனம் களவாடியவை. அன்பே சங்கீதா படத்தில் காலத்தால் அழியாத பாடல் ஒன்று அவருக்கு வாயசைக்கக் கிடைத்தது. சின்னப்புறா ஒன்று எனத் தொடங்கும் பாடல் இன்றும் ஒலியால் ஆள்கிறது. காற்றினிலே வரும் கீதம் படத்தில் சந்திரன் எனும் நண்பனாக நாயகன் முத்துராமனோடு எப்போதும் கூட இருக்கிறவராக வந்தார் தேங்காய் சீனிவாசன். தன்னிடம் பேய்கள் பற்றிப் பேசி பயமுறுத்துகிற வேலையாளிடம்
“அதெல்லாம் பயந்தாங்கொள்ளிப் பசங்க கிட்ட சொல்லுய்யா நாந்தான் தைரியமா இருக்கிறேனே…போக்கத்த பசங்க பொழுதுபோகாம பேயி நாயின்னு உளர்றாங்க எனக்கு அதுலல்லாம் நம்பிக்கை கெடையாது.யோவ்..உனக்கு தைர்யமாருந்தா அந்தப் பேயக் கொண்டாந்து என் முன்னால நிறுத்து அதோட கோரப்பல்லைப் பிடுங்கி அது வாய்லயே போட்டு மாத்திரைன்னு சொல்லி தண்ணி ஊத்திருவேன். பேய்க்கே மாத்திர குடுக்குறவண்டா நானு”.
இந்தக் காட்சியில் தேங்காய் சீனிவாசனின் உடல்மொழி உடையலங்காரம் இன்ன பிற எல்லாமும் சந்திரமுகி படத்தில் வடிவேலுவை ரஜினி பேய்கள் பற்றிப் பேசி பயமுறுத்தும் காட்சிக்கான முன் முகாந்திரமாகத் தோற்றமளிக்கும்.
Thengai Srinivasan French Brandy Comedy | Tik Tik Tik Comedy | Kamal | Madhavi |Pyramid Glitz Comedy - YouTube
முத்தான முத்தல்லவோ படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடலை எம்.எஸ்.வி குரலில் ஆரம்பித்துத் தருபவர் தேங்காய் சீனிவாசன் தான். அதைத் தொடர்ந்து எஸ்பி பாலு குரலில் அந்தப் பாடலைப் பாடுவார் ஜெய்கணேஷ். மீசையில்லாத முகம் நாற்புறமும் வழியும் சிகை கண்ணாடி பைஜாமா ஜிப்பா அணிந்து வாயில் அலட்சியமாக சிகரட்டைப் புகைத்தபடியே புன்னகையோடு பியானோ வாசிப்பார் தேங்காய். அந்தப் பாடலில் அவருடைய முகபாவங்கள் பிசிறேதுமற்ற பணக்காரத் தனமாக இருக்கும்.

எனக்கொரு காதலி இருக்கின்றாள்… – வல்லமை
ஒரு வகையில் இரு பெருங்காலங்களுக்கு இடையில் பாலம் போலப் பரிணமித்தவர் எனத் தேங்காய் சீனிவாசனைச் சொல்லலாம். எம்ஜி.ஆர் சிவாஜி கோலோச்சிய காலத்தில் அவர்கள் இருவருடனும் பல படங்களில் நடித்த அவர் தான் கமல் ரஜினி இருவருடைய பேரெழுச்சிக் காலத்தில் அவர்களுடைய பல படங்களிலும் உடன் வலம் வந்த நடிகர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் அவர் தான் ரஜினிக்கு அப்பா. பில்லா படத்தில் அவர் ஏற்ற ஜேஜே எனும் பாத்திரம் படத்தின் கதைக்கு நங்கூரம் போல அமைந்த ஒன்று. கிடைத்த இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்திருப்பார். வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் முடிவுக் காட்சியில் தேங்காய் தோன்றுவார். டிக் டிக் டிக் படத்தில் தேங்காய் ஸ்டூடியோ அதிபராக வருவார். நாயகனின் பொறுப்பின்மைக்குப் பதில் சொல்ல வேண்டியவராக பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே பாடலுக்கு முன்னும் பின்னும் மட்டுமல்லாது பாடலினுள்ளேயும் தேங்காய் சீனிவாசனின் முகபாவ மலர்தல்கள் அபாரமாய் இருந்தன. இன்றும் எத்தனை பார்த்தாலும் சலிக்காத பரிமளித்தல் அந்த வேடம்.
எண்பதுகளுக்கு அப்பால் பல படங்களில் வில்லனாகவும் நாயக நாயகி எவரேனும் ஒருவருக்கு அப்பாவாகப் பல படங்களில் தோன்றினார் சீனிவாசன். கனவான் தோற்றம் கலைந்து சரியும் பிம்ப வீழ்தல் பாத்திரங்களில் அசாத்தியமாய் மிளிர்ந்தார். ஊமை விழிகளில் கோகிலாவின் தந்தையாக சிறு பாத்திரம் என்றாலும் அயரடித்தார்
இந்தியத் திரைவானின் புறந்தள்ள முடியாத குணச்சித்திர வைரம் தேங்காய் சீனிவாசன். அவர் சொந்தப்படம் ஒன்றை எடுத்தார். சிவாஜி நாயகனாக நடித்த கிருஷ்ணன் வந்தான் எனும் படம். மகத்தான தோல்வியைச் சந்தித்தது. ஐம்பதே வயதில் பாதி ஆட்டத்தில் எழுந்து சென்றாற் போல் உலகை விட்டு நீங்கினார் தேங்காய் சீனிவாசன். இருந்திருந்தால் இன்னும் பல அரிய வேடங்களை ஏற்று மின்னி மிளிர்ந்து நெஞ்செலாம் நிறைந்திருப்பார்.
என் பார்வையில் தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் நடித்ததில் மிகச்சிறந்த வேடம். அந்தப் படத்தின் நாயகன் ரஜினிகாந்த். மாதவி சௌகார் ஜானகி பூர்ணம் விஸ்வநாதன் எனப் பலரும் பிரகாசித்த படம். எல்லோரையும் தன் இணையற்ற நடிப்பால் ஓவர்டேக் செய்தார் தேங்காய். அந்தப் படமே ஒன் மேன் ஷோ தான் என்பான் நண்பன் பரணி. அந்த ஒன்மேன் வேறு யார்..? தேங்காய் தான்.
அந்தப் படத்தில் ஒரு மேனேஜர் வேலைக்கான இண்டர்வ்யூ நடக்கும். ராமச்சந்திரமூர்த்தி அலையஸ் தேங்காய் சீனிவாசனின் நிறுவனத்துக்கான மேனேஜர் பதவி. அந்த ஒரு காட்சி தமிழ் சினிமாவின் உன்னதங்களில் ஒன்று.
“யாரந்த நாகேஷ்?” என்ற ரெண்டே வார்த்தையை தேங்காய் சொல்வது போல் வேறு யாராலும் சொல்லவே முடியாது
Thillu Mullu Nagesh GIF - Thillu Mullu Nagesh - Discover & Share GIFs

“ஷார்ட் நேம் சுப்பி சார்”.

தன் குமாஸ்தாவிடம் “உம்ம பேரு பக்கிரிசாமிப் பிள்ளை. ஷார்ட் நேம் பக்கியா…? சுப்பியாவது கப்பியாவது கெட் அவுட்” என்று நேர்முகனை விரட்டுவார் தேங்காய்.
அடுத்த கேண்டிடேட்டிடம் “சட்டையில என்ன பொம்மை?”
“பூனை ஸார்”
“அதுல என்ன பெருமை கெட் அவுட்”
என்பார்.
நடிப்பு என்பது தோன்றுவதோ போலச்செய்வதோ அன்று.
வாழ்வது.
வாழ்ந்து காட்டியவர் தேங்காய் சீனிவாசன்.