இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள்


நேற்று 19-03-2022 மதுரை சூரியன் பண்பலை வானொலியின் சார்பாக நிகழ்த்தப் பட்ட நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன்.கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான வாழ்க்கை மாறுபாடுகளுக்குள் வானொலியின் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினேன். அனேகர் பெருந்தொற்று போன்ற மன இறுக்கக் காலத்தில் வானொலிகளின் அரவணைப்புப் பற்றிப் பேசியது நெகிழ்த்தியது. பாடல்களின் பேருலகத்தில் வானொலியின் செல்வாக்கு அளப்பரியது தான் இல்லையா?. நிகழ்வில் மதுரை மேஸ்ட்ரோ இசைக்குழுவின் இயக்குனர் சைமன் இரண்டு பாடல்களைப் பாடினார். ஒன்று அவராகத் தேர்வெடுத்துப் பாடியது பனி விழும் மலர்வனம் என்ற நினைவெல்லாம் நித்யா படப் பாடல். இன்னொன்று சூரியன் பண்பலையின் ரேடியோ ஜாக்கி ப்ரியா வேண்டிக் கேட்டுக் கொண்ட ராஜராஜ சோழன் நான் என்கிற ரெட்டை வால் குருவி படப்பாடல். இரண்டுமே என் வாழ்வின் முதலிரண்டு பாடல்கள் என்பதின் பொருத்தத்தை எண்ணி வியந்ததிர்ந்தேன். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக டெம்பிள் சிட்டி உணவகச் சங்கிலியின் உரிமையாளர் குமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கினார். சூரியன் FM மதுரை நிலையத்தின் தலைவர் பிரபு கார்த்திகேயன் சுப்ரமணியன் ராம்குமார் மற்றும் ஸ்டீஃபன் ஆகியோரது ஒருங்கிணைப்பு மெச்சத் தகுந்ததாய் இருந்தது. ரேடியோ எனும் பண்டத்தின் மீதான மானுட ஆதுரம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் குறையாது என்பது உறுதி.

No description available.
மாலையில் எழுத்தாளர் அழகிய சிங்கர் ஒருங்கிணைப்பில் விருட்சம் இணைய நிகர்நிஜ சந்திப்பு ஒன்று நடந்தேறியது. ஜீவ கரிகாலன் எழுதிய மூன்று சிறுகதைகளை நானும் தென்றல் சிவக்குமார் மற்றும் டாக்டர் ஜெயராமன் ஆகிய மூவரும் ஆய்ந்து பேசினோம். எனக்கு வழங்கப்பட்ட சற்றே நெடிய கதை ஒரு தத்தையின் குறுகிய கால மீட்டர்கேஜ் பயணம் என்பது. ரசிக்கத் தகுந்த கதை. செறிவும் காதலும் நிரம்பிய சிறுகதையான இதற்கு என் தலைப்புத் தேர்வாக வைனும் காஃபியும் என்பதை முன்வைத்தேன். . வந்திருந்த பார்வையாளர்களும் நிகழ்வோடு ஒன்றித் தங்கள் கருத்துகளையும் தெளிவாக முன்
வைத்தனர்.
குறித்த வண்ணம் நேர மேலாண்மையோடு அழகுற நடந்தேறிய இலக்கிய நிகழ்வு.