பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

சாக்லேட்டுக்கு அழுது
கண்கள் வீங்கவுறங்கும்
குழந்தைக்குக்
கிறிஸ்துமஸ் தாத்தாவா

நனவிலி நிலை நோயாளியின்
உயிர்த்துடிப்பு இயந்திரத்தில்
கிடைக்கோடா

சாலையோரத்தில்
படுத்துக்கிடக்கிற
இடுப்புகளைத் தட்டியபடியே  நடந்து
கோணிபொத்திக் கிடக்கிறவளைத்
தன் லாட்டியால் நிரடி
புணர்வதற்குக் கவர்ந்து செல்லும்
காவலாளியா

சன்னலைத் திறந்து
கைக்கெட்டுகிற 
பர்ஸ்,வாட்ச்,செல்ஃபோன்
இத்யாதிகளுடன்
சேர்ந்தவாக்கில் வந்துவிட்ட
ஆணுறையைத்
தெருவில் வீசினபடி
விசிலொலியுடன்
நடக்கிற கள்வனா

கடைசி இழுப்பு முடிவதற்குள்
வாழ்வாங்கு வாழ்வதற்கு ஏங்கும்
பட்டாம்பூச்சி சட்டைக்காரனா

மூன்றுமுறை சுத்தியலால்
தட்டி அமைதியை கட்டளையிடும்
கோமாளியா

எந்த இரவின்
யார் கனவின்
உபநடிகன் நான்