லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்


பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார். 93 வயது. நிறைந்தொலிக்கும் கானவாழ்வு என்றும் மங்காப் புகழ் லதாவினுடையது.
ஏக் துஜே கேலியே படத்தின் தேரே மேரே பீச்சுமே பாடலை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. லதா மங்கேஷ்கரின் குரல் அப்படிப்பட்ட பாடலுக்குத் தேவையான மாயநியாயத்தை ஏற்படுத்துவதில் திறன் மிக்கது.

லதா மங்கேஷ்கரின் குரல் வினோதமானது. ஒரு பாடலின் பின்புலத்திற்குள் வேரூன்றிச் சென்று அசாத்தியமான ஆழத்தைத் தொட்டுத் திரும்பக் கூடியது. மன வினோதங்களின் ஊடுபாவாய்த் திகழ்ந்த பல பாடல்களைப் பாடினார் லதா. வேறு யாராலும் நேர்த்தவியலாத மாய-நியாயம் ஒன்றைப் பல பாடல்களுக்குள் பதியனிட்ட குரல் அவருடையது. தேர்ந்த குரலொன்றின் காலகாலப் பிரதிகளாகத் திகழ்பவை அவரது பாடல்கள். இந்திய மொழிகளில் பெரும்பாலானவற்றைத் திறந்து நோக்குகையில் லதாவின் தனித்துவம் பொங்குகிற குரலளிப்புகள் தனித்து ஒலிப்பதைக் கண்ணுறலாம்.

தேரே மேரே ஹூடோன் பே எனத் தொடகும் சாந்தினி படப்பாடல் லதாவும் பாப்லா மேத்தாவும் சேர்ந்து பாடியது.ஷிவ் ஹரி இசையமைப்பில் உருவான இந்தப் படம் ஸ்ரீதேவி என்ற பேரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் இந்தப் பாடல் நீவோ நானோ ஊஹலாலோ என்று ஆரம்பிக்கும். தெலுங்கில் லதாவோடு சேர்ந்து அந்தப் பாடலைப் பாடினார் எஸ்பி.பாலசுப்ரமணியம்.

தென்னக மொழிகளைப் பாடும்போது நீட்டிக்கப்பட்ட குழந்தமை ஒன்றை லதாவின் குரல் அணிந்துகொண்டுவிடும். தமிழிலும் அவர் பாடிய பல பாடல்கள் அப்படியானவை தான். தமிழில் லதா பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இங்கே பொன் வீணை எங்கே சங்கீதம் எனத் தொடங்கும் கண்ணுக்கொரு வண்ணக்கிளி படப்பாடல்.ஹானஸ்ட் ராஜ் படத்தில் இடம்பெற்ற வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் பாடலின் சாயல் லேசாய்த் தென்படும் இந்தப் பாடலை லதா பாடிய விதம் பெருவண்ணம்.  சத்யா படத்தில் இடம்கொண்ட வளையோசை கலகலகலவென பாடலாகட்டும் ஆராரோ ஆராரோ என்று தொடங்கும் ஆனந்த் படப் பாடலாகட்டும்  எண்பதுகளில் நல்ல உயரதூரத்தைத் தொட்டடைந்தவை.

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்று ஆரம்பிக்கும் என் ஜீவன் பாடுது படப்பாடல் அமானுஷ்யமும் குழந்தமையும் ஒருங்கிணையும் புள்ளியிலிருந்து பெருகி ஒலிப்பது.

சலீல்தா இசையில் ராமு கரியத்தின் நெல்லு மலையாளத்தில் உருவான சிறந்த படங்களில் ஒன்று.

கதலி கண் கதலி என்று தொடங்கும் பாடலொன்றைப் பாடினார் லதா. இணைப்பிசைத் தூவல்களில் நுட்பமும் நகாசுமாய்ப் பெருகும் பாடலைத் தன் ஆழ்ந்தொலிக்கும் ஆதுரக் குரலில் சிறப்பித்தார் லதா.

ஆயிரக்கணக்கில் பாடியிருக்கிறார். ஆயிரமாண்டுகளைக் கடக்கும் குரலை அள்ளித் தந்து சென்றிருக்கிறார்.

வாழ்க இசைராணி லதாவின் புகழ்!