யாக்கை 19
ஆதாரஸ்ருதி
சின்ன வராந்தாவைத் தாண்டியதும் உள்ரூம். அதில் ஒரு திசை முழுவதும் மரக்கட்டில் ஒன்று வியாபித்துக் கிடந்தது. பவுன்ராஜின் அந்தப்புரம் அந்தக் கட்டில் தான். அதில் படுத்தபடியே பார்த்தால் திறந்திருக்கும் வாயிற்கதவு வழியாக தெருவின் ஆரம்ப முனையில் ஜெயந்தி ஸ்டோர்ஸ் படிக்கட்டு வரைக்கும் தெளிவாகத் தெரியும். மழை அடித்துப் பெய்தாலும் கூட வாசல் திறந்தே இருக்கட்டும் என்பான் பவுன்ராஜ். அவனுக்குக் கட்டிலில் தலை வைத்துக் கிடக்கும் போதே அகில உலகமும் அந்த வாசல் வழியாகத் தெரிவதாகத் தான் நினைப்பு.
வாசலில் நிழலாடுவதைக் கண்டதும் பவுன்ராஜ் யாரெனப் பார்த்தான். சிந்தாமணி இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளை தூக்கியபடி விக்கெட் கேட்டை திறந்து உள்ளே வந்தாள். முத்துக்கட்டி நின்றிருந்த வியர்வை நெற்றி குங்குமத்தை இருந்த இடத்திலேயே சன்னமாய் கலைத்திருக்க நாசி வரை ஒரு கோடாய் கீழிறங்கிய வியர்வையை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டாள். மிகச் சாதாரணமான பருத்தி புடவை. உடுத்துவதில் எப்போதும் ஒரு நேர்த்தி இருக்கும். உடை என்பது என்ன துணி என்பதில் மட்டும் இல்லை. எப்படி உடுத்துகிறோம் என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. சிந்தாமணி எப்போதும் மிக நேர்த்தியாக ஆடை அணிவாள். மிகச் சாதாரணமாக அவளை எப்போதுமே பார்த்து விட முடியாது. இந்த கத்தரிப்பூ நிற புடவை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. மச்சினிச்சியை பார்த்தவரை போதும் என்று கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அலமாரி பக்கம் திரும்பிக்கொண்டான் பவுன்ராஜ்.
உள்ளே ரேடியோ பாடும் போது தானும் சேர்த்து வடிவு பாடுவது வாசல் வரை கேட்டது. அவளுக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போதெல்லாம் தானும் கூட சேர்ந்து பாடுவாள். பிடித்த பாடல் என்றால் அதன் அத்தனை வரிகளும் அவளுக்கு அத்துபடி தோழியர் யாராவது பாடலில் சந்தேகம் என்றால் அவளிடம் தான் கேட்பார்கள். யாரிடம் பழகினாலும் உனக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு கேட்டு மனசுக்குள் அதை குறித்து வைத்துக் கொள்வாள் வடிவு. “ஏண்டி ஜோதி நேத்திக்கு திருச்சில உனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இரண்டு தடவை போட்டாங்க. என்னன்னு சொல்லு பார்ப்போம்” என்றாள். ஜோதிக்கு பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் தனக்கு பிடிக்குமே அதில் இவள் எதைச் சொல்லுகிறாள் என்று குழப்பமாக இருந்தது. ‘இதுவா அதுவா அதுவா’ என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தாள். அட நீ வேற..இதெல்லாம் இல்லைடி பாக்கியலட்சுமி படத்திலிருந்து ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி’ பாட்டு அது. சுசீலா சக்கரகட்டியா பாடிருக்காங்கல்ல? என்று சிலாகித்தாள். ஜோதி உடனே “மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி” என்ற வரியில் இருக்கும் வடிவு என்னும் வார்த்தையை அழுத்தி பாடினாள்.
வடிவாம் பாளுக்கு வெட்கப்படத் தெரியும் என்பதே பாடல்களைப் பற்றி அவள் பேசும்போது மட்டும் தான் தெரியவரும். எது எப்படியோ காரியத்தில் மிகச் சரியாக இருப்பாள் வடிவு.” அப்ப கிளம்புறேன்க்கா” என்று ஜோதி எழுந்து கொள்ள ” இந்த வார தவணை காசு இன்னும் தரலையே ஜோதி” என்று கேட்டு வாங்கிக் கொண்டாள். காசு விஷயத்தில் மிகச்சரியானவள் வடிவு. அவளது உலகத்தில் எல்லோருமே மிக மிக சரியாக மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொண்டாள்.” அதை கொடுக்கத்தான் வந்தேன், பேச்சு சொரத்துல மறந்துட்டேன்” என்று அலுத்துக் கொள்ளும் ஜோதியிடம் ” இப்ப அதனால என்ன? நீ மறந்தாலும் நான் கேட்டு வாங்கிக்கிறேன்ல” என்று இயல்பாக அவள் தோளைத் தட்டியபடியே ” இரு ஜோதி ஈரல் குழம்பு கொதிக்குது. இறக்கி வைக்கிற பதம் தான். ஒருவாய் சாப்பிட்டு போவியாம்” என்று ஆதுரம் காட்டினாள்.
” அட நீ வேற, சாலை ஆண்டவரை ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் குடும்பம் முச்சூடும் முழு சைவமா மாறிட்டம். நாலு வருஷம் ஆச்சு கவுச்சியை விட்டு. நான் வரேன் கா” என்று மாறாத புன்னகை முகத்தோடு திரும்பியவள் ” ஆயுசு நூறு சிந்தாமணிக்கு. இப்பதான் கேட்டுகிட்டு இருந்தேன் நீ வந்து நிற்கிற” என்று மலர்ந்தாள். அவளது புன்னகையை ஏற்றுக்கொண்டே வடிவை நோக்கிய சிந்தாமணி “ஜெயந்தி ஸ்டோர்ஸ்ல லிஸ்ட் கொடுத்து இருந்தியாக்கா? டெலிவரி பாக்குற பாபு அண்ணன் ஊருக்கு போய் இருக்குதாம். மூன்று நாளைக்கு வராதாம். நானே எடுத்துட்டு வந்துட்டேன்” என்றாள்.
“ஏன் சிந்து தூக்கிட்டு நடந்தா வந்த? ஒரு ஆட்டோ புடிச்சு வந்திருக்கலாமே” கவலை பொங்கும் குரலில் வடிவு கேட்க ” அட நீ வேற ஆட்டோல தான் கா வந்தேன்” என்று பதில் சொல்லவே திருப்தியானாள்.
“சரி நான் கிளம்புறேன்கா” என்றவாறே வாசலை நோக்கி நகர்ந்த ஜோதியிடம் ” இரேன் சாப்பிட்டு போலாம்” என்று தன் பங்குக்கு உபசரித்த சிந்தாமணியிடம் வடிவிடம் சொன்ன அதே கதையை சொல்லிவிட்டு கிளம்பி போனாள் ஜோதி.
“என்ன இன்னும் வெளில கெளம்பாமத் தூங்குது..?” என்றாள் பவுன்ராஜின் முதுகைப் பார்த்து.
“என்னன்னு தெரில. இன்னம் கெளம்பல” என்றாள் வடிவு. சுத்தமாக உறக்கம் கலைந்த பின்னரும் எழுந்து கொள்ளாமல் ஒரு சின்ன சலனமும் இல்லாமல் அப்படியே கிடந்தான் பவுன்ராஜ். ஒரு வகையிலான ஒற்றுவேலை தான் இப்படிக் கிடப்பது. அக்காளும் தங்கையும் என்னல்லாம் பேசிக்கிறாளுகன்னு கேட்டுக்கிறலாம் என்பது தான் உள் யோசனையாகப் பட்டது. வயிறு பசிக்கிறாற் போலத் தோன்றியது. அவன் தான் காலையில் சீக்கிரமே எழுந்து போய் அக்பர் மட்டன் ஸ்டாலில் இருந்து ஈரலும் எலும்பும் வாங்கி வந்தான். சிந்தாமணிக்குப் பிடிக்கும் என்று தனியே ஒரு ப்ளாஸ்டிக் பையில் ரத்தத்தையும் கொண்டு வந்திருந்தான். ரத்தத்தைப் புட்டு செய்து லேசாக மேலே தேங்காய்த் துருவி விட்டால் சிந்தாமணிக்கு ரொம்பப் பிடிக்கும். அவளது சிறுவயதுகளில் வாய் நிறைய ‘மாமா மாமா’ என்று ஆசையாய் விளித்து வந்தவள் சமீபங்களில் என்ன உண்டோ அந்த சம்பாஷனையை மட்டும் நறுக்கினாற் போல் பேசுவதோடு சரி. ‘மாமா’ என்று ஒரு முறை கூட அழைப்பதே இல்லை. வடிவும் அவனை ஏய் இந்தா என்றெல்லாம் தான் அழைப்பாளெ ஒழிய முறை சொல்லி கூப்பிட்ட நினைவே இல்லை. தான் குள்ளமாக இருப்பதால் தான் இப்படி நடத்தப்படுகிறோம் என்று ஒரு முறை யோசித்துக் கலங்கிய பவுனுக்கு உடனே ஆழ்மனசில் பதிலும் ஒலித்தது ‘ ச்சேச்சே….வடிவுக்கு அவன் மீது எத்தனை பிரியம்..? சிந்தாமணி என்ன இருந்தாலும் கலியாண வயசில் நிற்பவள் அளந்து பேசினால் தானே அவளுக்கு மரியாதை..?’
பவுன்ராஜுக்கு அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது நன்றாக தெரிந்தது. எப்படி இருந்தால் என்ன? அவன் தான் இந்த வீட்டின் ஆம்பளை. குடும்பத்தின் தலைவன் ஆதாரஸ்ருதி எல்லாமே. பவுன்ராஜ் தன் முந்தைய ஏக்கத்தை அழித்துவிட்டு வேறொரு பெருமையை உடனே அந்த இடத்தில் எழுதிக் கொண்டான்.
அக்காளும் தங்கையும் பைகளை ஓரமாக வைத்துவிட்டு நடுரூமுக்குள் சென்றார்கள் கதவை லேசாக சாத்தினாற் போல் வைத்துவிட்டு ரேடியோ சத்தத்தை குறைத்தபடியே பேசத் தொடங்கினார்கள்.
காதை தீட்டிக் கொண்டான் பவுன்ராஜ். ஆன மட்டிலும் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டு விட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது அவனுக்கு. வடிவாம்பாள் தவணைக்குத் தந்து வாங்குகிறாள். அவளுடைய கஸ்டமர்கள் எல்லாருமே பெண்கள் மட்டும் தான். தப்பியும் தவறி யாராவது ரொம்ப வேண்டியவர்கள் ஆடவர்கள் வந்து காசு கேட்டால் லேசான சிரிப்புடன் சொல்வாள். நீ எதுக்குண்ணெ வந்து கஷ்டப்படுறே..? மதினியை வரச்சொல்லு. நான் பேசிக்கிடுறேன். சரிப்பட்டு வந்தா உடனே தொகையைத் தந்து விட்டுர்றேன். பணத்தைத் திரும்பக் குடுக்கறப்ப நீ வந்தாலும் சரி. மதினி வந்தாலும் சரி நா வாங்கிக்கிடுறேன். கை நீட்டி எங்கிட்ட காசு வாங்குறது மதினியாத் தான் இருக்கணும்” என்பாள்.
சரியான நபர்கள் தம் மனையாள் சகிதம் அடுத்த முறை வந்து பணம் வாங்கிப் போவார்கள். நீ மட்டும் வந்தாப் போதுமே மைனி என்று குழைவாள்.கந்து வட்டிக்குத் தவிர சின்னச் சின்னப் பாத்திரங்கள் பித்தளை ஜாமான்களை அடகு பிடித்தும் காசு தருவாள். இன்னும் கொஞ்சம் காசு சேர்ந்தால் சின்னதாக ஒரு அடகுக்கடையை போட்டு செட்டில் ஆகி விட வேண்டும் என பவுனுக்கு ஒரு நெடு நாள் யோசனை உண்டு. எத்தனை நாளைக்கு இப்பிடி டோப்பு வியாபாரமெல்லாம் செய்துகிட்டு கச்சேரிக்கு பணம் கட்டி ரெண்டாம் நம்பர் ஆசாமியாகவே திரிவது..? பவுன்ராஜூக்கு முதல் தரத்துக்கு முன்னேற வேண்டும் என்பது கனவோ ஆசையோ அல்ல. அது அவனது லட்சியம்.
பவுன் ராஜ் ஒட்டுக் கேட்பதற்கான தேவை ஒன்றே ஒன்று தான். தன்னைப் போலவே வடிவாம்பாளும் பல ரகசியங்களைச் சுமந்து திரிபவள் தான். வாய் திறந்து கேட்காமலேயே அந்த ரகசியங்களை அறிந்து கொள்வதில் தான் கள்ளத் தனம் கலந்த ருசி.
வடிவு பேசுவது பவுன்ராஜ் காதுகளில் தீர்க்கமாகக் கேட்டது.
“யார் கூடவோ உன்னைய அங்கனயும் இங்கனயும் வச்சிப் பார்த்ததா காதுல அப்பப்ப விழுந்திட்டிருந்திச்சி. இப்ப என்னடான்னா உங்க மாமனே பார்த்திச்சாம். என்ன விவரம் சிந்தாமணி…?”
“நானே சொல்லணும் தாங்க்கா இருந்தேன். இந்த பேச்சை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு எனக்கு தெரியல நீயே கேட்டது நல்லதா போச்சு. அன்னிக்கு நானும் அவரும் பேசிகிட்டு இருந்ததை உன் வீட்டுக்காரர் பார்த்ததை நானும் கவனிச்சேன். எப்படியும் உங்கிட்ட வந்து சொல்லிருப்பார்னு தெரியும். நல்லது தான்னு தோணிச்சி” என்ற சிந்தாமணிக்கு இயல்பை மீறி லேசாய் படபடத்தது. “அவர் பேரு செல்வா. ராஜலிங்கபுரம் தான் சொந்த ஊருன்னாலும் படிச்சது வளர்ந்தது எல்லாமே பவளத் திட்டுத் தான். எனக்கு மூணு வருசமா பழக்கம்.” என்றாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த வடிவு மேலே பேசு என்றாற் போல் அமைதி காத்தாள்.
“ஆறு வருசத்துக்கு மிந்தி அவருக்கு சொந்தத்துலயே பார்த்து கலியாணம் செய்து வச்சி அந்த உறவு சரிப்பட்டு வரலை.மூத்த தாரத்துக்கு வலிப்பு மாதிரி வருமாம். அதை நினைச்சி தாழ்வு மனப்பான்மையாகி எதுக்கெடுத்தாலும் சண்டை. கத்தி கூப்பாடு போட்டு அழுது அரட்டி தொடர்ந்து பல தடவை பஞ்சாயத்து வச்சு அதுல எல்லாம் சரிப்பட்டு வராம இரண்டு தரப்புமே கோர்ட்டுக்கு போய்ட்டாங்க. இப்ப கேஸ் நடக்குது சீக்கிரத்திலேயே விவாகரத்து கிடைச்சிரும். நான் கூட முன்னாடியே கட்டிக்கிடலாம் அப்படின்னு பேசினேன். அவர்தான் விவாகரத்து கிடைச்சதுக்கு அப்புறம் முறையா கல்யாணம் பண்ணி குடும்பத்தை ஸ்டார்ட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டாரு. ரொம்ப நல்லவருன்னெல்லாம் சொன்னா பொய். வல்லவனுக்கு வல்லவன். என் மேல உசுரையே வச்சிருக்காரு. ஓரளவுக்கு சம்பாதிக்கிறார். எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு. இன்னும் வேற என்ன சொல்லந்ன்னு தெரியலை” சன்னமான குரலில் திருத்தமாக பேசி முடித்துவிட்டு வடிவம்பாளையே உற்றுப் பார்த்தாள் சிந்தாமணி.
இந்த இடத்தில் பவுன்ராஜூக்கு லேசாக வியர்த்து வந்தது. இந்த விஷயத்தை அவன் வடிவாம்பாளிடம் சொன்ன போது எல்லாவற்றையும் உம் உம் என்று கேட்டுக் கொண்டிருந்து விட்டு சரி நீ இதுல எதுவுமே பேசாத. நான் பார்த்துக்கிறேன் என்று மட்டும் சொன்னாள். வடிவு சம்மதிக்காவிட்டாலும் சிந்தாமணி அந்தப் பையனுடன் தான் போவாள் என்பது பவுன்ராஜின் நம்பிக்கை. வடிவு ஆட்சேபித்தால் சிந்தாமணி கலங்கிப் போவாள். ஆனால் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது..? அக்காளைப் போலவே தங்கச்சியும் ராங்கி ரப்புப் பிடித்தவள் தான். வடிவாம்பாள் என்ன செய்வாள் என்று இத்தனை வருடக் குடித்தனத்துக்கு அப்பாலும் பவுன்ராஜால் யூகிக்கவே முடியவில்லை. இன்னும் ஆயிரம் வருசமானாலும் யூகிக்க முடியாது.
“நான் பேசுறதுக்கு என்ன இருக்கு..? நீ எனக்கு பொண்ணு மாதிரி. அம்மா இருந்து நம்ம ரெண்டு பேரையும் வளக்குற பாக்கியம் நடக்கல. அம்மா என்கிற ஸ்தானத்திலேயும் நான் தானே நிக்க வேண்டி இருக்கு. நீ எது செஞ்சாலும் ஒன்னுக்கு நாலு தடவை யோசிச்சித் தான் செய்வேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு சிந்து. ஊருக்கு உங்க மாமா எப்படியோ எனக்கு அது தான் ராசா. நம்பி வந்த என்னைய தலை குனிய விட்டதே இல்லை. நெஞ்ச நிமித்திகிட்டு நானும் நாலு இடத்துக்கு போயிட்டு வரேன்னா குடும்பம் நடத்துற பாங்குல தான் எல்லாம் இருக்கு. ஏற்கனவே சொன்னதுதான். இந்த வீட்ல சரி பாதி உனக்கு.உன் ஆளை வர சொல்லு. என்ன இருந்தாலும் ரெண்டாங்கலியாணம்குறது உறுத்துது சிந்தாமணி. உன் சைட்ல உனக்காக நாங்க பேசியே ஆவணும்ல? எடுத்தம் கவுத்தம்னு விட்ற முடியாதுப்பா… சம்பிரதாயத்துக்காவது நான் பத்து கேள்வி கேட்கணும். எனக்கு திருப்தியா பதில் சொல்லட்டும். நல்ல முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணிடலாம். நான் சொல்றது தான் உங்க மாமாவுக்கும் ரெண்டு கருத்து இல்லை. சரியாடி..?” என்று சொல்லும் போதே அப்போதுதான் எழுந்திருக்கிற பாவணையில் எழுந்து தன் கைலியை சரி செய்து கொண்டே “ஏ சிந்து உன் கூட தான் பேசிட்டு இருக்காளா உங்க அக்கா? என்ன தீவிரமா யோசனை? “என்றவனிடம் வடிவு விஷயத்தை விளக்கிச் சொல்ல முதல் முறை போல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ” எனக்கு அந்த தம்பியை நல்லா தெரியும். தங்கமான குணம். என்ன கொஞ்சம் கோபம் பட்டு பட்டுன்னு வருது. ஆம்பளைக்கு அதுதானே லட்சணம்?. சிந்தாமணிக்கு ஏத்த ஜோடி” என்றான் பெரிய மனுஷத்தனமாக.
என்ன நினைத்தாளோ பொங்கிக் கொண்டு வந்தது சிந்தாமணிக்கு.” இப்படி அக்கா பக்கத்தில் வந்து நில்லு மாமா” சன்னமான குரலில் சொல்லியவள் அவன் வந்து நிற்க இரண்டு பேரின் கால்களிலும் சடார் என்று விழுந்தாள். ” நான் எதுவும் தப்பு பண்ண மாட்டேன் அக்கா.. நீங்கதான் எங்கள ஆதரிக்கனும். எனக்கு வேற யார் இருக்கா?” என்று அழுதாள். பவுன்ராஜ்க்கு மனசு பூ பூத்து போனது. “எழுந்திரு சிந்து எல்லாம் நல்லபடியா நடக்கும் அதெல்லாம் விட்டுருவோமா…. நீ எங்க புள்ள இல்லையா?” நிஜமாகவே அவனும் கண் கலங்கினான்.
“இன்னிக்கு அஷ்டமி நாளைக்கு வேண்டாம் நாளை சென்று வரச் சொல்லு பேசிகிடலாம்” என்றவள் “நீ போய் பல்லை விளக்கிட்டு வாய்யா ஈரல் குழம்பு இறக்கிட்டேன்” என்று பவுன்ராஜை புழக்கடைப் பக்கம் அனுப்பி விட்டு “ வா சிந்து நாம சாப்டலாம்” என்றவாறே சமையலறைக்குள் சென்றாள்.
ஈரல் துண்டை ருசி பார்த்துவிட்டு ரத்தப்பொறியலை அள்ளி ஒரு வாய் சாப்பிட்டவளுக்கு “செல்வாவுக்கு ஈரல் என்றால் ரொம்பப் பிடிக்குமே” என்று தோன்றியது. “எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறானோ…சாப்பிட்டிருப்பானா..?” என்று ஆற்றிக் கொண்டு வந்தது. இப்பமே பொஞ்சாதி மாதிரி இதெல்லாம் தோணுதோ என்று டபுளாக்சன் படங்களில் வருவது போல் அவளுக்கு இடப்புறம் இன்னொரு சிந்தாமணி கெக்கலித்தபடி கேட்டாள். “நான் தான் அவனோட பொஞ்சாதி. நா கவலைப் படாம…” என்று அதட்டிக் கொண்டாள்.
**********
வரச்சொன்னியாமேப்பா என்ற குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த கதிர் வரதனின் முகத்தைப் பார்த்ததும் சோகையாய்ப் புன்னகைத்தான். “ வரதா….எனக்கொரு உதவி….செய்வியா?” எனக் கேட்டான்.
சொல்லு…செய்துரலாம் என்றவனிடம் முந்தைய தினத்தின் நாற்றம் மனசைத் துளைக்கத் தான் மர்ம மனிதனொருவனால் மிதிபட்ட நிகழ்வை விலாவரியாக சொல்லத் தொடங்கினான் கதிர்.
{வளரும்}