அன்புள்ள பாலா

 

முன்பே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்.எழுதி இருக்க வேண்டும் என்பது குற்ற உணர்வாகிறது.எழுதி அனுப்பிய கடிதத்தை நீங்கள் வாசிப்பதை உங்கள் அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் எனும் அடுத்த ப்ரியமும் உடனே பூக்கிறது.நிரம்பவும் ததும்பவும் உங்களுக்கு எத்தனையோ மனசுகள்.எங்களெல்லார்க்கும் ஒரே ஒரு பாலா தானே..?

 

ஒரு மழையற்ற மாலையில் இந்தக் கடிதத்தை தொடங்குகிறேன்.என் சன்னலின் வழியே வானம் சிறார் விளையாடுகிற வெளுத்த ஃபிலிம் துண்டு  போல எதுவுமற்று வெளிறிக் கொண்டிருக்கிறது.மேகங்களுக்கு நடுவே எங்கோ நீங்கள் மெல்லத் தோன்றுகிறாற் போல ஒரு காட்சி அதன் சின்னத் தெறிப்பு சுகமாய் இருக்கிறது.எப்படி இருக்கிறீர்கள் பாலா உங்களுக்கென்ன எங்கிருந்தாலும் உங்களைக் கொண்டாடத் தான் செய்வார்கள்.சுப்ரமண்ய ராஜூவின் கரம்பற்றி இடைவெளி காலக் கதைகளத்தனையையும் சொல்வதற்கே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.

லேசாய் முத்துக் கட்டும் கண்ணீரை அப்படியே செரித்து விடும் உத்தேசத்தோடு வார்த்தைகளைத் தேடுகிறேன்.தொலைக்காட்சியில் ஒரு செய்தியாய் நீங்கள் நீங்கிப் பறந்தது ஸ்க்ரோல் ஆக ஆரம்பித்த கணம் நீர்மம் தீர்ந்து வெறுமையாய் இருந்தது.

உங்களைப் பற்றிய ஞாபகங்களை முடிந்தளவு வரிசையாக்கி அசை போட ஆரம்பித்தது மனம்.முதன் முதலில் இரும்புக் குதிரைகள் நாவலை எடுத்த போது இதனை என்னால் வாசித்து விட முடியுமா என்றொரு அயர்ச்சியோடு தான் ஆரம்பித்தேன்.அதுவரை நான் வாசித்ததெல்லாம் அதிக பட்சம் நூறு பக்கங்களுக்குள் தங்களை முற்றிக் கொள்கிற சமர்த்துச் சிக்கனங்கள்.முதலில் எதற்கு இத்தனை பக்கம் என்று தோன்றியது.இத்தனைக்கும் எனக்கு அப்போது வெறும் 14 வயது தான்.

அடுத்த கணத்தைத் திறந்து பார்க்கையில் கிடைக்க இருக்கிற ஆச்சர்யம் மீதான எதிர்பாராமை தான் மொத்த வாழ்வுமே.இல்லையா பாலா..?அந்த நாவலைப் படிக்கும் போது அதன் கதைக்களன்களெங்கும் நான் பல தினங்கள் திரிந்தேன்.அதன் மனிதர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் என்னைத் தேடினேன்.ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்றெல்லாம் எந்த பேதமும் இல்லாமல் பலரது குணங்களும் எனக்குள் இருக்கின்றன என்றும் இல்லை என்றும் தேம்பினேன்.

அந்த விஸ்வநாதனை நான் அத்தனை காதலித்தேன்.காயத்ரி என்ற பெயர் எனக்குள் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.தண்ணீர்த் தொட்டித் தெருவில் தொடங்கி முடிகிற ஒருவாழ்வு எனக்கும் விதிக்கப்படாதா என்று ஏங்கினேன்.மானசீகத்தில் பலமுறை அங்கேயும் இங்கேயுமாய் அலைந்தேன்.

அதில் சின்னத் தம்பி என்றொரு பாத்திரம் வரும்.அளந்தால் மூன்று விரற்கடை அளவு கூடத் தாண்டாத சின்னஞ்சிறிய பாத்திரம்.ஆனால் மாபெரிய வெடிப்பும் திறப்புமாய் எனக்குள் எப்போதும் அதிர்ந்து கொண்டே இருந்தது அந்தப் பாத்திரத்தின் வீரியம்.நான் அந்த சின்னத் தம்பியும் ஆனேன்.நானே கவுசல்யாவாகவும் திணறியும் திணறச்செய்தும் ஒரே காதலின் சகலபுறங்களிலும் கரைந்திருக்கிறேன்.

பாலா நீங்கள் சினிமா மீது எத்தனை காதலோடு இருந்தீர்களோ அத்தனை காதல் எனக்கு உங்கள் மீது இருந்தது பாலா.உங்களை விட்டு வெளியேறுகிற அத்தனை சொற்களையும் முதற்சொல் போலவே தனித்துக் குறித்துப் பத்திரம் செய்து கொண்டவர்களில் நானொருவன்.என் உடன் படித்த மூவேந்தன் எனக்கே மூத்தவன் எனும் அளவுக்கு உங்கள் மீது பித்தானவன்.ஒரு காலத்தை எப்படியென்றே அறியாமல் அப்படித் திருடி வைத்திருந்தீர்கள் பாலா.

நீங்கள் நாவல் சிறுகதை தவிர்த்து உங்கள் சினிமா அனுபவங்களை எழுதியபோதெல்லாம் அவற்றை பாடப்புத்தகத்துக்கு அப்பால் கையேடு தேடுவோமே அப்படித் தேடி அதனுள் ஆழ்ந்தோம்.பெரிய மனிதர்கள் என்று நீங்கள் சுட்டிய அத்தனை பேர்களிடத்திலும் மானசீகத்தில் ஹலோ பாஸ்…அவர் எங்களோட பாலா..பார்த்து என்று மரியாதையான குரலில் அன்பாக எடுத்துச் சொன்னோம். உங்களை சினிமா கீறிவிடுமோ எனப் பயந்திருக்கிறேன்.ஆனால் நீங்கள் சட்டென்று இயக்கம் என்ற புள்ளியிலிருந்து நகர்ந்து வசனங்களுக்குத் திசைகண்டீர்கள்.அது என் போன்றவர்களுக்குப் போதுமான ஏதுவானதாயிற்று.

எந்த மலை..?

அது சொல்லக் கூடாது

ஆனா மலை மலைன்னு சொல்லக் கூடாது சொல்லக் கூடாது ஆனா மலைன்னு சொன்னவுடனே ரொம்பக் குளிரா இருக்கு ரொம்ப உயரமான மலை.குளிரான மலை.இப்ப போட்டீங்களே ஊசி அது என்ன ஊசி..?

பெண்டதால்

ஆங்க்..பெண்டதால்…பெண்டதால் அந்த மலை பூரா பெந்தடால் பெண்டதால் வாசனை

இங்கெல்லாம் ஒரே அசிங்கம்.ஒரே அசிங்கம் ரோசி அசிங்கம் அம்மா அசிங்கம் அப்பா அசிங்கம் எங்க அப்பா மட்டும் எங்க அம்மாவை அடிச்சி தொந்தரவு பண்ணாம விட்டுட்டு ஓடிப்போகாம இருந்திருந்தா பாவம் எங்க அம்மா இந்தத் தொழிலுக்கு வந்திருக்கவே வந்திருக்காது ரொம்ப சுத்தமா இருந்திருக்கும் நானும் சுத்தமா இருந்திருப்பேன்

ஏன் நீ சுத்தமா தானே இருக்க

இல்லை இல்லை சுத்தமா இல்லை சுத்தமா இல்லை அசிங்கமா இருக்கேன் இந்த மூஞ்சி இந்த மூஞ்சியைப் பாருங்க இந்த மூஞ்சியைப் பாருங்க எங்க அப்பன் குடுத்துட்டு போன மூஞ்சி என் மூஞ்சி மேல ஒட்ட வச்சிட்டு போயிட்டான் என் மூஞ்சி மேல அவன் மூஞ்சியை ஒட்ட வச்சிட்டுப் போயிட்டான் இது என் அப்பன் மூஞ்சி இது என் அப்பன் மூஞ்சி அந்த மூஞ்சிய அழிக்கணும் அழிக்கணும் இந்த மூஞ்சிய அழிக்கணும் அப்பன் குடுத்த உடம்பை அழிக்கணும் அதுக்கு அபிராமியப் பாக்கணும் அபிராமியைப் பார்த்தா உடம்பு சுத்தமாகும் மனசு சுத்தமாகும் புத்தி புத்தி சுத்தமாகும் அபிராமிக்கு லட்டர் போட்டு வரவழைக்கணும்..லட்டர் போட்டு வரவழைக்கணும் லட்டர் போட்டு அபிராமி வந்ததும் நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா குடும்பம் நடத்தி நல்லபடியா குழந்தைங்க பெத்துக்கிட்டு எல்லாம் நல்லபடியா   நான் இந்த அசிங்கத்துலே

தப்பிச்சு நான் போயிர்றணும் நல்ல இடமா பார்த்து மலை மேல பெண்டதால் வாசனை இருக்கிற மலை மேல சிவலிங்கம் பிரதிஷ்டை பண்ணி அபிராமி அபிராமி அபிராமி அபிராமி…

.எப்படி பாலா எழுத முடிந்தது..?இது வெறும் சினிமா வசனமா பாலா..?நாங்கள் இவ்வளவு தாங்குவோம் என்று அளந்து எங்களை மேடேற்றிய ஞானப் பருந்து நீங்கள் பாலா.மதுரையில் அபிராமி திரையரங்கில் தீபாவளி அன்றைக்கு வெளியான குணா படத்தைப் பார்த்து விட்டு இந்தக் காட்சியில் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தது இன்னமும் முடிவடையவில்லையோ என்று தோன்றுகிறது.ஒரு சினிமாவுக்குள் தன் யுகயுகாந்திர எழுத்துக்களை எப்படி எழுத்துக்காரன் ஒருவனால் நீர்மம் போலாக்கி ஊற்ற முடியும் என்று எனக்குள் திகைத்திருந்தேன்.என்னோடு வந்திருந்த நண்பன் மார்லன் எந்தப் படத்தையும் கொண்டாட்ட மனநிலையுடனேயே அணுகத் தலைப்படுபவன்.அதிலும் அவனொரு ரஜினிகாந்த் ரசிகன்.இது போதாதா..?சரித்தான் படத்தை விட்டு கிண்டலும் நக்கலுமாய் தன்னாலான அளவுக்குக் கீறிக் காயம் செய்யப் போகிறான் என்று எனக்குள் எண்ணியபடியே எழுந்து வெளியே வந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த போது திரும்பி பார்த்தேன்.மார்லன் அழுது கொண்டிருந்தான்.நான் அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.எங்களைப் பார்த்த ஒரு மூதாட்டி பேருந்துக்காகக் காத்திருப்பவர் என்னப்பா ஏன் அழுகிறே என்று பதற்றத்தோடு கேட்டார்.நான் வெறுமையில் திகைத்திருந்தேன்.மார்லன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒண்ணில்லம்மா..நீர் கடுக்குது என்றான்.

அருகருகே அமர்ந்து கொண்டு பஸ்ஸில் பயணிக்கையில் மேற்சொன்ன வசனத்தைத் தன் மனனத்தில் இருந்து முக்கால் வாசி அப்படியே ஒப்புவித்தான்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நான் பாலகுமாரனை நன்கறிந்த வாசகன்.அவனுக்கு அப்படியோர்   எழுத்தாளர் இருப்பதே தெரியாது.அல்லது இருப்பது மட்டும் தெரியும்.ஆனால் ஒப்புவிக்கிறான்.அவன் என்னிடம் சொன்ன அடுத்த வார்த்தைக்காகத் தான் இத்தனையும் சொல்கிறேன் டே எனக்கு இந்தாள் எழுதின எதாச்சும் புக் தர்றியா வாசிச்சுப் பார்க்குறேன் என்றான்.

பாலா..இது அதிசயம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.ஆனால் எனக்கு நிகழ்ந்து நான் ஒரு சாட்சிக்காரனாக உடன் நிகழ்த்திய ஒன்று.இப்படி எத்தனை வாழ்வுகளுக்குள் சொற்களாலும் வாக்கியங்களாலும் உங்கள் கையெழுத்தை நிரந்தரப் பொன்னுருக்களில் எழுதியிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா..?

கைவீசம்மா கைவீசு கல்லூரிப் பூக்கள் பச்சை வயல் மனது முதலான உங்கள் படைப்புகளை முழுவதுமாக முடியாது போனாலும் அவற்றின் தமிழ் மன விள்ளல்களை எடுத்தாவது பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாக்கலாம் பாலா.செய்வார்களா எனத் தெரியாது.செய்தால் நலம்.உங்கள் புத்தகங்கள் எனக்கு ஆசிரியனைப் போல வழிசெப்பின.நான் தளர்ந்த போதெல்லாம் என்னைத் தட்டி எழுப்பிக் கட்டித் தொகுத்து நிற்கச் செய்தன.என்னை வடிவமைத்ததில் என் தாய் தகப்பனுக்கு அடுத்தாற் போல் குருமார்கள் வரிசையில் பாலகுமாரன் என்ற மனிதனுக்கு பெரியதோர் இடம் உண்டு.உங்கள் வாக்கியங்களால் வாசிப்பின் வழி வேறொரு சூட்சுமம் தேடி எழுத வந்தவன் நான்.எனக்குள் நான் ஆழும்போதெல்லாம் சின்னதொரு துளியாய் பாலாவின் சொற்களிலேதாவது அகப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

 

உங்கள் புத்தகங்களில் எதாவதொன்றை எடுத்துவிட்டால் ஒரு மழைக்காலத்தின் முதல் மழை போலாகிவிடுகிறது மனம்.படித்த நாவல்களை இன்னொரு மற்றொரு முறை படிப்பது போல இந்த வாழ்வின் போதை மிகுகிற இன்னொன்று இல்லை எனத் தோன்றுகிறது பாலா.எங்களுக்காக எத்தனை எழுதினீர்கள் பாலா..அதற்கு ஒரு நன்றி சொல்வதற்கு இந்தக் கடிதம் ஒரு வாய்ப்பாகிறது பாலா.நன்றி பாலா.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் பாலா.நீங்கள் எனக்கு ஆசிரியர்களில் ஒருவர் பாலா.உங்களுக்குச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது பாலா.உங்களை இன்னும் நெருங்கியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது பாலா.இல்லை.வேண்டாம் நெருங்காமலிருந்தது தான் நல்லது என மனசின் இன்னொரு முகம் என்புறம் திரும்பிச் சொல்வதையும் ஏற்காமலிருக்க இயலவில்லை பாலா.தொலைவில் இருந்து கொண்டபொழுதே இப்படிக் கசிகிறாய்.இன்னும் நெருங்கி இருந்தால்..?என்றென்னை அதட்டுகிறது பாலா.

ஆமாம் பாலா..அது சொல்வது சரிதான் போல.இது ஒரு வகையில் கபடம்.ஏகலைவனாக இருந்து கட்டை விரலைத் தந்து மற்ற விரல்களைக் காப்பாற்றிக் கொள்கிற சமர்த்து.துரோணர் தனக்காகக் கேட்டிருந்தால் அந்த விரலையா கேட்டிருப்பார்.?

ஞானம் என்பது நகர்ந்து கொண்டே இருக்கும் நதி.ஜென்மம் என்பது வெறும் கலயம்.மொழி உள்ளளவு உங்கள் சொற்கள் நிரந்தரித்து வாழும்.தாயுமானவனுக்குச் சொல்வதற்கென்று தனித்த ஒரு சொல் எதுவும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் பாலா.நன்றி பாலா.

 

அன்புடன்

ஆத்மார்த்தி