அலங்காரவல்லி

அலங்காரவல்லி


அபிநய சரஸ்வதி என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் என் மனசுக்குள் சரோஜாதேவி என்கிற பெயர் எழும்போதெல்லாம் அப்சரஸ் என்கிற வார்த்தையும் சேர்ந்தே தோன்றும். யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களிலேயே அறியாமை, வெள்ளந்தித்தன்மை குழந்தைத் தனம் ஆகியவற்றை இழந்து விடுவார்கள். சரோஜாதேவி விதிவிலக்கானவர். அவர் நடித்த இருநூறு படங்களில் ஒரு பாதி படங்கள் வேறு யாராலும் தோற்றுவிக்க முடியாத இன்னொசென்சை தக்க வைத்தவர். அவரளவுக்கு சென்ற நூற்றாண்டில் நடுத்தர வர்க்கத்து பெண்களின் உதாரண மங்கையாக பலவித நுண்ணிய பாத்திரங்களை ஏற்று சின்னஞ்சிறு தருணங்களை திரையில் தோற்றுவித்த இன்னொருவரைச் சுட்ட முடியாது. தனது 87 ஆவது வயதில் காலத்தோடு கலந்திருக்கும் சரோஜாதேவியின் கலைப்புகழ் இன்னும் நூறாண்டு கடந்தாலும் குன்றாப் பேரொளியாய் நிலைக்கக் கூடியது.

கன்னடத்துப் பைங்கிளி என்று போற்றப்பட்டவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளிலும் கோலோச்சினார். 15 வருட காலம் தமிழ்த்திரையின் நம்பர் ஒன் நட்சத்திர மங்கையாகத் திகழ்ந்தார்.தமிழ் சினிமாவின் முதல் காதல் தேவதை அவர் தான். புதிய பறவையில் சிவாஜியையும் அன்பே வா வில் எம்ஜிஆரையும் கல்யாண பரிசில் ஜெமினி கணேசனையும் காதலால் கசிந்துருகி கதற வைத்திருப்பார். அத்தனை காதலுக்கு தகுதியான நாயகியாக கனகச்சிதம் காட்டினார். உடன் நடிக்கும் நடிகர் யாராக இருந்தாலும் காட்சிகளிலும் பாடல்களிலும் தன்னை மீறி ஆக்கிரமித்து விடாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை அவரது தனித்துவம் எனலாம். எம்ஜிஆருடன் 20 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் சேர்ந்து நடித்திருக்கிறார். ஏக காலத்தில் இந்த இருவரோடும் அதிக படங்களில் தோன்றினாலும் யாருடைய முகாமிலும் தன் பெயர் எழுதுவதை திறமையாக தவிர்த்தவர்.

 கருப்பு வெள்ளை காலத்தின் ஒரே வண்ணமயமான தேவதை என்று அவரை சொல்ல முடியும் என்டி ராமராவ் நாகேஸ்வரராவ் ராஜ்குமார் விஷ்ணுவரதன் ஜெமினி கணேசன் எஸ் எஸ் ஆர் என யாரோடு ஜோடி சேர்ந்து நடித்தாலும் படத்திலும் குறிப்பாகப் பாடல்களிலும் தன் தனித்துவத்தை நிலை நாட்டிய அபூர்வ நடிகை சரோஜாதேவி. தாமரை நெஞ்சம் படத்தில் தூக்க மாத்திரைகளை கையில் அளைந்தபடி நாகேஷூடன் டெலிபோனில் பேசுகின்ற காட்சியில் சரோஜாதேவியின் நடிப்பு சர்வதேச தரத்திலானது. அதே படத்தில் அடி போடி பைத்தியக்காரி என்கிற பாடலில் நடுவே சொடக்கிடும் நேரத்தில் கடந்து விடக்கூடிய காட்சி ஒன்று அதில் சரோஜா தேவியின் முக பாவங்கள் உலகளாவிய உன்னதம் என சொல்லத்தக்கவை. சட்டு சட்டென்று சின்னஞ்சிறிய பாவங்களை நிகழ்த்தியபடி அனாயாசம் காட்டியிருப்பார். சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபு உடன் திரையைப் பங்கு கொண்ட வெகு சில காட்சிகளில் ஆன மட்டும் ரசிக மனங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வார்.

“கோப்பால்” என்று ஒரு பெயர்ச்சொல்லைத் தன் உச்சரிப்பின் வழியாக அவர் கொஞ்சும் அழகே தனி என்றானது. மொழி அறியாமையைத் தன்னுடைய பலமாகவே மாற்றிய சாமர்த்தியசாலி. அவரது கொஞ்சு மொழி யாருக்கும் உறுத்தவேயில்லை. வேக வேகமாக சரோஜாதேவி பேசுவதை கையில் ஏந்திய குழந்தை பேசிக் கேட்பது போல் ரசித்து மகிழ்ந்தது தமிழகம். குரல் அரசி பி சுசிலாவின் பாடும் குரலுக்கு முகம் வரைந்தாற் போல் மிளிர்ந்தார் சரோஜாதேவி. சரோஜா தேவியின் மனதுக்கு குரல் தந்தது போலவே எண்ணற்ற பாடல்களை சுசீலா பாடினார். தென்னிந்திய சினிமாவின் முதல் ட்ரெண்ட் செட் நடிகை அவர்தான். பின் நாட்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் ஒருவர் பெயர் சொல்லி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைத்தவர் சரோஜாதேவி. தாவணி புடவை அரசகால உடை மேற்கத்திய ஆடைகள் பேண்ட் சட்டை தொப்பி ராணுவ சீருடை என எதை அணிந்தாலும் சரோஜாதேவியின் அலங்கார நேர்த்தி இன்னொருவரால் உருவாக்க முடியாதது.

கலங்கரை விளக்கம் படத்தில் பொன்னெழில் பூத்தது புது வானில் பாடல் ஸ்பிலிட் பர்சனாலிட்டி படங்களுக்கு முன்னோடியாக கல்கியின் சிவகாமி கதாபாத்திரமாக தன்னை நினைத்து லயித்து மகிழும் அவர் கண் இமைக்கும் நேரத்தில் எதார்த்தத்தில் தன்னை நீலாவாக உணர்ந்து சுயம் திரும்புகிற கட்டம். மிகச்சன்னமான அந்தத் தருணத்தை சரோஜாதேவி எடுத்தாண்ட விதம் இன்னும் நூறாயிரம் முறைகள் பார்த்தாலும் பிரமிப்பைத் தரும். இந்திய வெள்ளித்திரை சந்தித்ததில் மிக உன்னதமான நடிகை என்று புகழ்வதற்கு உண்டான அத்தனை முகாந்திரத்தையும் அந்தப் பாடலில் தோற்றுவித்திருப்பார் சரோஜாதேவி.

பிற்காலத்தில் தியாகராஜன் நடித்து இயக்கிய பூவுக்குள் பூகம்பம்,விஜயகாந்தின் பொன்மனச் செல்வன்   விஜய் நடித்த ஒன்ஸ்மோர், சூர்யா படமான ஆதவன் ஆகியவற்றில் எல்லாம் குறிப்பிடத் தகுந்த வேடங்களை ஏற்றார் சரோஜாதேவி. ஆதவனில் காட்சிகளுக்கு உள்ளும் புறமும் வடிவேலு பற்ற வைக்கிற பல நகைச்சுவை வெடிகளில் அவரது பங்கும் இருந்தது.

சரோஜாதேவி பரிபூரணமான நடிகை. எந்த வயதில் எந்த வேடம் ஏற்றாலும் தன் நாயக வட்டத்தில் இருந்து இம்மி கூட நகராமல் ஒன்றே போல் மின்னியவர். வானளாவிய தன் புகழை தலைக்கு ஏற்றாமல் எளிமை காட்டிய நிஜ வாழ்வு குணத்தாலும் பாராட்டப்பட்டவர். வேடங்களும் வசனங்களும் பாடல்களும் மட்டுமின்றி அவர் நிகழ்த்திய மௌன பிம்பங்களும் கூட திரை உள்ள மட்டும் அவரது புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.


தினமலர் இதழில் வெளியான கட்டுரை