இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”
கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட
இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து “உதிராப் பூக்கள்” என்ற பெயரில் தொகுத்தளித்தேன். மதுரையில் வசிக்கும் இரவி மேனாள் தலைமைச் செயலாளர் முதுமுனைவர் இரா.இறையன்பு அவர்களுடைய அணுக்க நண்பரும் ஆவார். “புலி” என்று செல்லப் பெயரிட்டு விளிப்பார் சிந்தனைச் செம்மல் இறையன்பு அவர்கள். மதுரையம்பதியில் எந்த இலக்கிய நிகழ்வு என்றாலும் தவறாமல் அதில் தன்னைக் கலக்கும் ஒப்புக்கொடுத்தல் இரவியின் ஆயிரம் அடையாளங்களில் ஒன்று.
கவிஞர் இரா.இரவி தற்போது “திரும்பிப் பார்க்கிறேன்” என்ற நூலை எழுதியுள்ளார். தன் அனுபவ விரிதலாகத் தனது வாழ்வில் சந்திக்க வாய்த்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி உள்ளார் இரவி. யாதொரு ஒப்பனையோ பூச்சோ இல்லாமல் எளிய நேர்மொழி கொண்டு இந்தப் பகிர்வுகளை அவர் சரளியாக்கியிருக்கிறார். முதுமுனைவர் இறையன்பு, நீதியரசர அரங்க.மகாதேவன் தொடங்கி எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் வரை தான் பார்த்த மானுடர்களுடனான கதம்பத் தருணங்களைப் பாங்குடன் விவரித்திருக்கிறார். சுவை குன்றாத அனுபவ சாரம் இந்த நூல். அவருக்கு என் வாழ்த்துகள்.வாழ்தல் இனிது
வானதி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
நூலின் விலை ரூ 70