எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள்

11 பெயர் பெற்ற தருணம்
_____________

உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு

இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது.
எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன் பெயரை வெறுத்த சிலரை நானறிவேன். பிடிக்காத உடனிருத்தலாய் ஏன் மாற்றிக் கொண்டால் என்ன என்று கேட்க நினைத்தும் தவிர்த்திருக்கிறேன். எல்லோருமே பிரயத்தனம் கொண்டு செலவு செய்து பேரை மாற்றிக் கொள்வது நடவாத காரிய. அப்படிப் பிரயத்தனம் கொண்டு மாற்றியபின் தன் புதிய பெயர் கெஸட்டில் வந்ததை அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு

இதனால் சகலமானவர்க்கும் அறியத் தருவது யாதெனில் இன்ன விலாசத்தில் வசித்து வரும் இன்னாரின் புத்திரன் இன்ன பெயருடையோன் என்று இதுவரை விளிக்கப்பட்டு வந்தவர் தன் பெயரை இனிமேற்கொண்டு இன்னபெயராக மாற்றிக் கொண்டிருக்கிற படியாலும் தகுந்த கட்டணங்களைச் செலுத்தி அரசாங்கப் பேரேட்டிலும் தன் பெயரை மாற்றம் செய்துகொண்டு விட்டபடியால் இனிமேற்கொண்டு யாவரும் அன்னாரை “SO AND SO” என்கிற புதிய பெயரிலேயே அழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்.

இப்படிக்கு
மேற்படி நபரின் வழக்கறிஞர்

அல்லது சம்மந்தப்பட்ட பெயர்மாற்ற நபரே நேரடியாக விளம்பரம் தருவதும் உண்டு. என் பதின்மத்தில் அப்படியான விளம்பரங்களைச் செய்தித் தாளின் கண்ணுறக் கடினமான முடுக்கில் தேடிப் பிடித்துப் படித்திருக்கிறேன்.

எனக்கு என் பெயரைப் பாதி தான் பிடிக்கும். அதென்னவோ சிதார் மேதை ரவிஷங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொன்னதிலிருந்தே இன்னொருவருடைய சட்டையை அணிந்தாற் போன்ற கூச்சவினோதத்தோடு அல்லாடியிருந்தேன். என் பெயர் முழுவதுமாக எனக்கே எனக்கென்று இருந்திருக்கவில்லை என்பது என் அங்கலாய்ப்பு. வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே புனைப்பெயர்களின் பெருவனத்தில் பெயர்விருப்பப் பறவையாகத் திரிய முடிந்தது.

எனக்குப் பிடித்த புனைப்பெயர்கள் பல. ஏன் என்று தெரிந்தறிய முடியாத உட்காரணங்களைத் தாங்கித் திரிபவை அந்தப் பெயர்கள்.

No description available.

கல்யாண்ஜி-வண்ண நிலவன்-கலாப்ரியா-ஞானக்கூத்தன்-ஆத்மாநாம்-கோணங்கி-சாருநிவேதிதா-வசுமித்ர-பாம்பாட்டிச்சித்தன்-மனுஷ்யபுத்திரன்-

அசோக/சுதேச/நேச மித்திரர்களின் பெயர்களும் இஷ்டமே.

புனைப்பெயரோ நிசப்பெயரோ, பாலகுமாரன் என்ற பேர் மீது பொறாமையே உண்டு.

என்னுடைய இயற்பெயர் தமிழில் “ர” என ஆரம்பிக்கிறது. நான் படித்த பள்ளிகளில் வருகைப் பதிவேட்டில் என் பெயர் கடைசி பத்து பேர்களில் ஒன்றாகத் தான் வரும். தமிழில் எழுதுகையில் இரவிசங்கர் என்று எழுதவேண்டும் என்பது மொழிவிதி. ஏனோ என் பெயருக்கு முன்பாக இ எனுமெழுத்து வந்த போது எனக்கது ஒவ்வாமை ஆயிற்று. இப்போதல்ல இருபதாண்டுகளுக்கு முன்பு என்பதையும் சேர்த்தே கொள்ள வேண்டும்.

பதின்மத்தில் செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் நான் படிக்கும் போது என்னைக் கேட்காமலேயே “வரவில்லை” என்று பதிவிடும் அளவுக்கு அத்தனை ஆப்ஸண்ட் ஆவேன். என் ரோல் நம்பர் அறுபது பேர்களில் ஐம்பத்து ஒன்று என்றிருந்தது. கல்லூரியிலும் ஐம்பது பேர்களில் நாற்பத்து ஒன்று என்று இருந்தது. நிற்க. என் பெயரை அவைகளில் முந்தி இருக்கச் செய்வதான ஒரு வெறி எனக்கு அப்போதே ஏற்பட்டு விட்டதென நினைக்கிறேன். பத்திரிகைகளில் எழுதத் தொடங்குவதற்குப் பல காலத்துக்கு முன்பே நான் எழுதுகிற கடிதங்கள் மற்றும் கவிதைகளில் ரவிஷங்கர் எனக் கையொப்பமிட மாட்டேன். பல்வேறு பேர்களை எனக்கு நானே வழங்கிப் பார்த்த காலம் அது. கொஞ்ச நாள் மகாநதி என்று ஒப்பமிட்டிருக்கிறேன். பாரதிராஜாவை உல்டா செய்தாயா என ஒருவர் கேட்கும் வரை ராஜபாரதி என்ற பெயர்தாங்கித் திரிந்தேன். காயத்ரி என்ற பேர் மீது கொண்ட கிறக்கத்தால் அந்தப் பெயரை ஒப்பமிட்டுச் சில கவிதைகள் செய்தேன். சாதனா என்ற பேரைக் கூட கொஞ்ச நாட்கள் முடிவு செய்திருந்ததாய் நினைவு. 
No description available.

சுஜாதா மீது கொண்ட பெரும்பற்றுப்ரியத்தின் விளைவுகளில் ஒன்றாக நானும் ஒரு பெண்பாற் பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று நந்தினி/மைதிலி என்றெல்லாம் பெயர்களைத் தாண்டி நன்னிலா நப்பின்னை நற்றிணை ஆக்ருதி என்றெல்லாம் யோசித்த போது தான் ஆக்ருதி என்ற பெயரைச் சற்றுக் கூடுதலாய்ப் பிடித்தது. அந்தப் பெயர் சிக்கன-கச்சித-யவ்வன நளினத்தோடு இருப்பதாக என்னோடு பெரும்பாலும் எதிலுமே ஒத்துப் போகாத ஆப்த நண்பன் பரணியும் சொல்லித் தொலைய கிட்டத்தட்ட அதுதான் பெயர் என்றே முடிவாகி விட்டது.

என்னவோ ஒன்று தடுத்தது, ஐ ரியல்லி டோண்ட் நோ வாட் இஸ் தட் என்னவோ…எனக்குள் இருக்கும் கடவுளின் குரலாக அந்த என்னவோவைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தக் குரல் உண்மையிலேயே குரலாக ஒலித்தது என்று கூடப் பகிர்வதற்கில்லை. அது ஒரு எண்ணமாகவே முகிழ்ந்தது.மீண்டும் மறுபடியும் முதலில் இருந்தா என்று சோர்ந்தாலும் ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து தி என்று முடிகையில் ஒரு சித்திரப்பூர்த்தி இருப்பதாக நம்பினேன். ஆர்த்தி என்ற பெயர்ச்சொல்லைத் தத்தம் பெயராகப் பலரும் தாங்கிக் கொண்டிருப்பதால் தயங்கினேன். ஆர்த்தி என்று வைக்கலாம் என்றால் மீண்டும் அந்த உட்குரல் கடவுள் தடுக்கவில்லை. ஆனால் எதோவொரு என்.ஓ.ஸி கிடைக்கவில்லை.

ஆத்மாநாம் என் ஆதர்சங்களின் ஆரம்பம். அந்தப் பெயரின் அதிர்வு தன்னிச்சையாக எனக்குள் பல முறை நிகழ்வது. அந்தப் பெயரை நிரடிக் கொண்டே வேறெதாவதைக் கண்டறிய முனைந்த போது தான் ஆத்மார்த்தம் என்ற சொல் மனதுக்குள் இடறியது. ஆனந்தம் என்ற சொல்லின் பெயர்களாக ஆனந்தன் ஆனந்தி என்று கிளைப்பது போல ஆத்மார்த்தன் ஆத்மார்த்தி என்ற பேர்களைக் கண்டடைய முடிந்தது. ஏற்கனவே சொல் என்றொரு சொல் அதீதனின் இதிகாசம் இரண்டு படைப்புக்களிலும் (ரமேஷ்:ப்ரேம் இணைந்து எழுதியவை) அந்தப் பெயர்களைப் படித்திருந்தபடியால் ஆத்மார்த்தி என்று நிலைபெற்றேன்.

ஆத்மார்த்தி என்ற பேரைச் சூட்டிக் கொண்டதும் கிடைத்த முதல் சந்தோஷமே தமிழில் முதன்மை உயிரெழுத்தான “ஆ” எனப் பெயர் ஆரம்பிக்கிறது. அதைவிட ஆங்கிலத்தில் AA என இரண்டு ஏயுடன் இருப்பதால் இனி வரப்போகும் பெயர்வரிசைகளில் என் பெயர் அனேகமாக முதல் சிலவற்றில் வந்து விடும் என்கிற அல்ஃபபெடிகல் நிம்மதி தான். கூகுள் மாதிரியான தேடல் எந்திரங்களில் தொடங்கிப் பல இடங்களில் இந்த DOUBLE ஏ தரக்கூடிய இன்ப/சந்தோஷ/மகிழ்ச்சியைப் பல முறை நிதானித்து நின்று அனுபவித்திருக்கிறேன்.

No description available.இருந்தாலும் எழுத்தாளனான பிறகு, சமீபத்தில் ஆத்மார்த்தி எனும் இந்தப் பெயர் ஒரு/சில இடங்களில் நியாயமாக இடம்பெற வேண்டிய வரிசையின் முதலிடத்தை விட்டு “ஏ” வரிசையின் கடைசியில் இடம்பெற்றதும் நடக்கத் தான் செய்கிறது. என்ன தான் பார்த்துப் பார்த்துப் பெயர் சூட்டிக் கொண்டாலும் அதை அனுமதிப்பது என்பது சக மனிதர்களின் மனம் சார்ந்த விருப்பம் தான் என்று தோன்றுகிறது.
“அய்யா என் பேர் முதல்ல வந்திருக்கணுமே…என்னாச்சு?” என்று கேட்டால் “ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்” என்றெல்லாம் இலக்கியார்த்த பதில்கள் சொல்லப்படுகின்றன. இதெல்லாம் சின்ன விஷயம் என்று புன் சிரிக்கிறார்கள்.
அப்படி அல்ல. “என் பெயர் என் உரிமை” என்பதை எப்படிப் புரியவைப்பது..? அம்மாதிரி இடங்களைக் கடந்து செல்வதன் மூலமாகத் தான் புரியத் தர முடிகிறது.

எப்போதோ நண்பன் பரணி சொன்ன இன்னொன்று அப்போது நினைவுக்கு வந்தது.
“அடைன்னு பேர் வச்சிட்ருந்தாலும் சமைக்கிறவனை வடை மாஸ்டர்னு தான் சொல்வாங்க. அடை மாஸ்டர்னு சொல்ல மாட்டாங்கன்னேன்!

அடிப்பொளி!