கதைகளின் கதை 2

கதைகளின் கதை 2
இன்னொரு கனவு


எம்ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் மறைந்த முதல்வர்.கதைகளின் கதை தொடரின் இந்த இரண்டாவது அத்தியாயத்துக்கும் எம்ஜி.ஆருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.மிகச்சரியாக எம்ஜி.ஆர் மரணமடைந்ததற்கு இரண்டு வாரங்கள் முன்பு சென்னை நந்தனம் சிக்னலுக்கருகே நிகழ்ந்த மோசமானதொரு சாலை விபத்தில் ஒரு மனிதன் கொல்லப்பட்டது இந்த அத்தியாயத்துக்கு அத்யாவஸ்யமான வாக்கியம்.பாதியில் சிதைக்கப் பட்டதெனினும்  முப்பத்தி ஒன்பதே ஆண்டுகள் இப்புவியில் உயிருடன் இருந்த அந்த மென்மையான மனிதனின் பெயர் தமிழிலக்கியத்தின் ஆயுள் உள்ள வரைக்கும் நிலைத்து நிற்கும் என்பது அருள்வாக்கோ அல்லது குறிவாக்கியமோ அல்ல.நிதர்சனம்.தன் எழுத்தின் மூலமாய்த் தன்னை நிரந்தரித்துக் கொண்ட அந்த எழுத்துக்காரனின் பெயர் சுப்ரமணிய ராஜூ.
சுப்ரமணிய ராஜூ கதைகள் - சுப்ரமணிய ராஜு - கிழக்கு பதிப்பகம் | panuval.com
                 வெகு சொற்பமான கதைகளையே எழுதிய ராஜூவின் எழுத்துக்கள் கிழக்கு பதிப்பக வெளியீடாக சுப்ரமண்ய ராஜூ கதைகள் முழுத்தொகுப்பு 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது.முப்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கியது அந்தத் தொகை.
                    சுப்ரமணிய ராஜூ பாதியின் பூரணத்துவம்.அவரது சிறுகதைகள் தனித்துவம் வாய்ந்தவை.வாசகனுடைய ஆழ்மனதின் தனித்த முகட்டில் தங்களைப் பதியச் செய்துகொள்பவை.அவரது மனிதர்கள் 1970 மற்றும் 80 களின் பெருநகர இளைஞர்கள் மற்றும் முதியவர்கள்.அவரது கதைகள் தனி மனிதனின் உளவியல் சிக்கல்கள் மற்றும் ஒவ்வாமைகளின் சகல சாத்தியப்பாடுகளையும் விஸ்தரித்தும் குறுக்கியும் எழுத்தில் பெயர்க்க முயற்சிக்கப் பட்டவை.சுப்ரமணிய ராஜூவின் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பெரிதும் ஒத்துப் போகிறவர்களாகவும் அதனூடே மிக மெலிதாக முரண்படுகிறவர்களாகவும் கதைகளைத் துவக்குகிறார்கள்.குற்ற உணர்வும் இயலாமையும் தனிமையும் ததும்புகிற மிக நேரடியான கதைகள் ராஜூவினுடையது.அவரது கதாபாத்திரங்கள் வாழ்வின் ஒரு விள்ளலுக்குள் இரகசியக் கண்களாக வாசகனை வரவேற்கிறார்கள்.ஒரு கட்டத்தில் மிக இயல்பான அதே நேரம் அயர்வு தரும் முடிச்சிலோ அல்லது சுழலிலோ கதை நிறைவேறுகிறது.வாசகன் முழுவதுமாக அவனது மனதின் சமான அமைதியிலிருந்து சன்னதம் வரைக்கும் திருப்தியுடன் இறுகக் கட்டிய கரங்களுடன் அக்கதையின் மௌன சாட்சியமாக உறைகிறான்.
           ஒரு கதைக்கான லட்சணம் என்ன..?சிறந்ததோர் சிறுகதைக்கான இலக்கணம் என்ன..?ஒரு சிறந்த சிறுகதை இத்தனை பக்கங்கள் இருக்கவேண்டும் இத்தனை பத்திகள் இருக்கவேண்டும் இன்னின்ன இன்னின்ன இருந்தாகவேண்டும் என்றெல்லாம் அறுதியிடப் பட்டிருக்கிறதா..?வாரப் பத்திரிக்கைகளில் ஒரு பக்கக் கதைகள் என்று வருகின்றனவே அவை எல்லாம் உண்மையிலேயே சிறுகதைகளா..?இலக்கியப் பத்திரிக்கைகளில் கிட்டத்தட்ட நாற்பது பக்கம் வரைக்கும் ஒரே நெடிய சிறுகதையை வெளியிடுகிறார்களே..?அவை தாம் சிறுகதைகளா..?
              இவையெல்லாம் கேள்விகள்.கேள்விகள் மாத்திரமல்ல.எங்கே யாரைக் கேட்பது என்றே தெரியாத கண்கட்டித் திரியும் குழப்பங்கள்.ஒரு நல்ல சிறுகதைக்கென்று எந்தவிதமான அளவுசார்ந்த கட்டுப்பாடும் இல்லை என்பதே மெய்.சுப்ரமணிய ராஜூ அதுவரைக்குமான ஐம்பதாண்டு கதை சொல்லிகளின் கதாபாணியிலிருந்தும் கதைக்களன்களிலிருந்தும் பெரிதும் விலகி நிற்கிறார்.அவரது ப்ரவசனங்களும் வியாக்கியானங்களும் அதீத நேர்மையைத் ததும்புகின்றன.அவற்றை நாளும் ஒரு சாமான்யன் தன் வாழ்வின் சகல இடுக்குகளிலும் சந்திக்கிற வாய்ப்புக்களைக் கொண்டவாறே அக்கதைகளினுள் சென்று திரும்புகிறான்.மிக நேரடியான கதை சொல்லலின் ஒரு பகுதியாகவே அத்தனை கச்சித நேர்த்தியான உரையாடல்களை அனுமதிக்கிறார் ராஜூ
     ராஜூவின் கதைகளின் இன்னுமோர் சிறப்பம்சமாகவே மேற்சொன்ன உரையாடல்களைப் பற்றி நீட்டிக்கலாம் என்று தோன்றுகிறது.ஒரு தேர்ந்த ஓவியனின் லாவகத்தோடு தன் கதா மாந்தர்களை எடுத்துத் தர விழையும் ராஜூ எங்கே அவையின்றுக் கதை நகர்வது சிக்கலுறுகிறதோ அங்கங்கே மாத்திரமே தம் கதாபாத்திரங்களைப் பேசச் செய்கிறார்.இன்னும் விவரித்தால் தேர்ந்த மேற்கத்திய திரைப்படங்களின் காட்சிப்பூர்வ நகர்த்துதல்களின் இடையே வெகு சிக்கனமான வசனத் தோன்றல்கள் எங்கனம் நிகழுமோ அவ்வண்ணமே ராஜூவின் கதை சார்ந்த உரையாடல்கள் நிகழ்கின்றன.ராஜூ தீர்க்கமான கதைகளை எழுதியிருக்கிறார்.எந்தவிதமான மதிப்பீடுகள் முன் முடிவுகள் சார்ந்த எந்தக் கவலையும் இல்லாதவராகத் தனக்குத் தோன்றிய கதைகளுக்குக் கடைசி வரைக்கும் நியாயம் செய்துவிடத் துடிக்கும் எழுத்துக்காரனாகவே தன் எல்லாப் படைப்புகளிலும் தெரிகிறார்.
      காலம் என்பதை குறுந்தகவல்கள் மூலமாகவே உணர்த்திப் போகிற நுட்பம் ராஜூவின் கதைகளின் முக்கிய உபகூறு.நுட்பமான அத்தகவல்களைத் தன் படைப்புக்களெங்கும் நிரவிச் செல்வதன் மூலமாகக் கதாமாந்தர்களின் நம்பகத்தன்மையை வாசக ஆழ்மனதின் வசதியான ஓரிடத்தில் நேர்ப்பிக்கின்ற ரசவாதம் இது.அவருடைய பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் மற்றும் இளைஞர்களும் ஆக அனைவருமே தமிழ் மத்யமத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.புனைவில் போலியற்றுப் பிரகடனம் செய்யப்பட்ட பாத்திரர்கள்.
                 சுப்ரமண்ய ராஜூவின் பல கதைகள் குறிப்பிடத் தக்கன.தமிழ் சிறுகதை சரித்திரத்தில் ஆகச்சிறந்த பல சிறுகதை முதல் முயல்வுகளை முயற்சித்துப் பார்த்தவராகவும் அவற்றில் வெற்றிபெற்றவராகவும் ராஜூவைச் சுட்டிக் காட்ட முடிகிறது.அவற்றில் தலையாய ஒரு கதை “இன்னொரு கனவு”
     கதையின் ஆரம்பத்தில் மூர்த்தி ஒரு டாக்டரின் க்ளினிக்கில் காத்திருப்பதில் துவங்குகிறது.அங்கே அந்தச் சூழல் அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமானாற் போலவே இருக்கிறது.சுவரில் மாட்டப் பட்டிருக்கிற சித்திரம் அவனுக்குப் பரிச்சயம் போலத் தோன்றுகிறது.இந்தப் பரிச்சயம் தான் அவன் பிரச்சினை.எங்கே சென்றாலும் அந்த இடம் ஏற்கனவே வந்து போனாற் போல் ஒரு உணர்வைத் தருகிறது.என்ன நடந்தாலும் அது ஏற்கனவே அவனுக்குத் தெரிந்ததாயிருக்கிறது.அந்தக் கணம் கூட நினைக்கிறான்.இப்போது டெலிஃபோன் மணி அடிக்கும் டாக்டர் வருவார்.என.
   அதே போல டெலிஃபோன் அடித்து டாக்டர் வந்து பேசுகிறார்.
    இப்போது மூர்த்திக்கு அதன் பின் நிகழப் போகிறவைகள் தோன்றுவதும் உடனே அவையே நடக்கின்றன.
    டாக்டரிடம் தனக்குச் சமீப நாட்களாகக் கனவுகள் வருவதும் அவை மறுதினமே நிஜமாவதையும் சொல்கிறான்.எப்படி எனக் கேட்கிறார் டாக்டர்
   சென்ற மாதம் ஒரு நாள் தான் ப்ளேனில் போவது போலக் கனவு கண்டதை சொல்கிறான் மூர்த்தி.மறுநாள் ஆபீஸ் போனதும் உடனே டிக்கட் வாங்கி மும்பைக்கு ப்ளேனில் பயணிக்க நேர்ந்ததையும் அந்த ப்ளேன் பயணம் அருகாமை ஸீட்டில் பயணித்தவர் முகம் ஏர் ஹோஸ்டஸ் சிரிப்பு என எல்லாமுமே கனவைப் போலவே நிஜமிருந்ததை சொல்கிறான்.இன்னொரு கனவில் தன்னோடு சிறுவயதில் படித்த ராஜாமணி தன்னைத் தேடி வருவது போல் கண்டதும் மறு நாளே அவன் நிஜத்தில் தேடிவந்ததையும் சொல்கிறான்.
      இன்னொரு நாள் 200ரூ இங்க்ரிமெண்ட் கிடைப்பது போலக் கனவும் மறு நாளே அதுவும் நிஜமானதையும் கிரிக்கெட் போட்டி ஒன்றை முதல் நாளே தான் கண்டதையும் சொல்லி தனக்குப் பைத்தியமே பிடித்து விடுவதைப் போல் இருப்பதை டாக்டரிடம் சொல்கிறான்.
   டாக்டர் அவனிடம் “இதை எளிதாக குணப்படுத்தி விடலாம்” என்றவாறே
  “வெல் உங்க கனவில் எதாவது அமானுஷ்யமா வருதா..?உதாரணத்துக்கு நீங்க பறக்கிறா மாதிரி?” எனக் கேட்க அதெல்லாம் இல்லை என மறுக்கும் மூர்த்தி நினைச்சே பார்க்காததெல்லாம் வந்திருப்பதாகவும் தன் அலுவலகத்தில் உடன் வேலைபார்க்கும் விமலா என்னும் 40 வயது மதிக்கத் தக்க டைப்பிஸ்ட் தன்னிடம் வந்து தன் வீட்டார் எல்லாரும் ஊருக்குப் போய் இருப்பதாகவும் வீட்டில் யாரும் இல்லை என்றும் சொல்வதைப் போல் கனவு கண்டதாகவும் வியர்த்துப் போய் எழுந்த தன்னிடம் அதே போல் மறு நாள் விமலா மிகச்சரியாக அந்தத் தகவலைச் சொல்லி அதோடு நகர்ந்து போய்விட்டதாகவும் சொல்கிறான்.
    இதை மூளையின் அபரிமித செயல்பாடு மூளைக்கூர்மை என்று அவனிடம் சமாதானம் சொல்லும் டாக்டர் இதனை இண்ட்யூஷன் என்கிறார்.நன்றாகத் தூங்குவதற்கு மாத்திரைகள் தருவதாகவும் சொல்கிறார்.இது வெறும் இண்ட்யூஷன் அல்ல என்று மறுக்கிறான் மூர்த்தி.
    அவர் அப்போது எழுதப் போகும் மாத்திரையின் பெயரை ஈக்விப்ரோம் என்று சரியாகச் சொல்கிறான் மூர்த்தி.அதிர்கிறார் டாக்டர்.

  “இதைத் தான் நீங்க வெறும் இண்ட்யூஷன் அது இதுன்னு சொல்றீங்க.இது எல்லாமே என் கனவில நேத்து ராத்திரியே வந்தாச்சு”
அப்புறம் வேற என்னென்ன உன் கனவில் வந்தது?
     இன்னைக்கு காலையில வீட்லேருந்து கிளம்பும் போது அலமாரியில் மேல் தட்டில் இருக்கிற கத்தியை எடுத்துக்கிறேன்.
  கத்தி?”
  ம்..! பாக்கெட் நைஃப்!அருமையான கத்தி! அதை எடுத்துப் பாக்கெட்டுல போட்டுக்கிறேன்.அப்புறம் ஒரு ஹோட்டல்ல போய் ஒரு மஸால் தோசை ஒரு காஃபி சாப்பிடறேன்.வெளியே வந்து ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சி வாய்ல போட்டுக்கிறேன்.அப்பறம் ஒரு வில்ஸ் ஃபில்டர்.ஒரு ஆட்டோ பிடிச்சி நேரா இங்க வர்றேன்.உங்ககிட்டே வந்து என் கனவுகள் பற்றி சொல்றேன்.நீங்க ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதித் தர்றீங்க!கொஞ்ச நேரம் உங்க கிட்டே பேசிட்டு இருந்திட்டு உங்களை ஒரு தம்ளார் ஐஸ்வாட்டர் கேட்கிறேன்.நீங்க காலிங் பெல்லை அழுத்தி உங்க அசிஸ்டெண்டை கூப்பிட்டு ஐஸ்வாட்டர் கொண்டுவரச்சொல்றீங்க.நான் குடிக்கிறென்.காலி தம்ளரை எடுத்துக் கொண்டு அவன் போன பிறகு நான் என் பாக்கெட்டில் இருக்கிற கத்தியை ஒரு தடவை தடவிப் பார்த்துக்கிறேன்.திடீர்னு எங்கிருந்தோ ஒரு பலம் எனக்கு வருது.நான் கத்தியோட உங்க மேல் பாய்றேன்.உங்க மார்பு வயிறு முதுகு எல்லா இடத்துலயும் மாத்தி மாத்தி குத்தறேன்! கத்தியை நல்லாத் துடைச்சி பாக்கெட்ல வெச்சிக்கிட்டு வெளியே ஓடறேன்”
     “வெரிகுட்..நீங்க இந்த மாத்திரையை சரியா ஒரு வாரம் நான் சொன்ன மாதிரியே சாப்பிடுங்க.அப்புறம் என்னை வந்து பாருங்க.ஓ.கே”
     “டாக்டர் எனக்கு தாகமா இருக்கு.ஒரு தம்ளர் ஐஸ்வாட்டர் கிடைக்குமா..?”
 டாக்டர் சிரித்துக் கொண்டே காலிங்பெல்லை அழுத்தி பணியாளிடம் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி சொன்னார்.இவன் பாக்கெட்டில் இருக்கும் கத்தியை ஒருதடவை தடவிப் பார்த்துக் கொண்டான்.டாக்டர் இன்னும் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.
     முகமெல்லாம் வியர்க்க மூர்த்தி திடீரென்று விழித்துக் கொண்டான்.விடிவதற்கு இன்னும் சில நிமிஷங்களே இருந்தன.
               ****
          இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் நின்று கொண்டு யோசித்தால் வரக்கூடிய அதே பிரமிப்பு இன்றைக்கும் தன்னை மேலெழுதிக் கொண்டிருப்பது சுப்ரமண்ய ராஜூவின் மகா உன்னதம் எனலாம்.ஆங்கிலத்தில் இரண்டாயிரத்துக்குப் பின் வந்த இன்ஸெப்ஷன் போன்ற படங்களுக்கெல்லாம் ஆதிப்புள்ளிகளில் ஒன்று மேற்காணும் கதை என்பது அர்த்தமுள்ள நம்பகம் தான்
                இருக்கட்டும்.கடைசி வரிகளுக்குள் மீண்டும் வந்து பாருங்கள்.கடைசி ஒரு வரி தான் நடந்த கதை.,மற்றதெல்லாம் கனா.அந்த ஒரு கனவு மூர்த்தியின் பல கனவுகள் நிஜமாவதன் நோய்மையிலிருந்து துவங்குகிறதா..?அல்லது நிஜமாகவே அவனுடைய அப்படியான நோய்மைக் காலத்தின் இறுதியில் வரும் இன்னுமொரு கனவா என்பது தான் ராஜூவின் ட்விஸ்ட்.இதன் தலைப்பு இன்னொரு கனவு.தமிழில் எழுதப்பட்ட  கச்சிதமான உளவியல் சார்ந்த ஆகச்சிறந்த சிறுகதை சுப்ரமண்ய ராஜூவின் இன்னொரு கனவு.
                  சுப்ரமண்ய ராஜூவின் எல்லாக் கதைகளுமே தன்னளவில் மிக மேன்மையும் நேர்த்தியும் கொண்டவை..அவரது நாவலான “இரவுகள் தவறுகள்” ஒரு வங்கியில் வேலைபார்க்கிற ராஜாராமன் என்னும் இளைஞனுடைய வாழ்வின் மிக முக்கியமான குருதி தளும்பும் ஓர்மையான இருளை வெளிக்கொணர்ந்த மிக முக்கியமான படைப்பு.இதில் வருகிற பாத்திரமுரண் அதுவரைக்குமான தமிழ்ச்சூழலில் சொல்லப்படாதது.புத்தம்புதிய  கதைசொலல் முறையைப் பறைசாற்றும் படைப்பு.”நாளை முதல், உறவு, விலை, தூண்டில், வெளிச்சம்” ஆகியன மறக்க முடியாத கதைகள் என்பேன்.தனக்குப் ப்ரியமான பெயர்களைத் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தியதில் துவங்கி ராஜூவுக்கென்று தனித்த உணர்வுப் பிடிமானங்களை கருத்தில் கொள்ள இயலுகிறது.ராஜாராமன் கேசவன் மூர்த்தி ராஜி லதா என்ற பெயர்கள் பல கதைகளை அலங்கரிக்கின்றன.பெயர்கள் வெறும் பெயர்களல்ல என்று சொல்வதைப் போல்.
                  ராஜூவால் பாதிப்புறாத சீரிய இலக்கிய வாசகனோ சமகாலத்தைக் கடந்த எழுத்தாளனோ இல்லை என்று மெச்சத் தக்க அளவில் ராஜூவின் தனிப்பட்ட வாழ்வாகட்டும் அவர் எழுதிச் சென்ற கதைகளாகட்டும் நித்யமும் காண வாய்க்கிற நிரந்தர வெள்ளியாகவே சுப்ரமண்ய ராஜூவை முன்னிறுத்துகின்றன.