சந்திப்பு
அவன் ஒரு எழுத்தாளன். சமீப நாட்களாக அவன் முன்பு போல் இல்லை. சமீப நாட்களாக என்றால் மிகச் சரியாக சொல்வதானால் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளிவந்த நாட்டின் முதலாம் இடம் பிடித்த வாராந்திரியில் அவன் எழுதிய நெடுங்கதை வெளியாகத் தொடங்கியதில் இருந்து
என்று சொல்லலாம். மற்ற எல்லாரையும் போலத்தான் தானும் இருப்பதாக அவன் நம்பிக் கொண்டிருந்தான். இப்போது அவன் நம்பிக்கை அப்படி இல்லை.
கதை வெளிவந்த அன்று காலை உணவை முடித்து ஒரு பத்து நிமிஷம் அமர்ந்து கொண்டிருந்த நாற்காலியில் அப்படியே கண்களை மூடி அயர்ந்து போனான். அப்போது தொடங்கி அன்று இரவு வரை விடாமல் அவனுடைய அலைபேசி குறுஞ்செய்திகளாலும் மின்னஞ்சல்களாலும் அழைப்புகளாலும் பதிவு செய்யப்பட்ட குரல் செய்திகளாலும் நிரம்பித் தளும்பியது. அதற்கு முன்பு அவனுடைய வாழ்வில் அத்தனை ஒளியும் சத்தமும் நிரம்பிய ஆரவாரத்தை அவன் அடைந்ததே இல்லை. தனக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கும் புகழ் பூக்களை துளித்துளியாக அடைய விரும்பினான். பலகால ஒத்திகைக்குப் பின்னால் ஒரே ஒரு நிஜம் அங்கு நிகழத் தொடங்கியிருந்தது. ‘ஒவ்வொரு பேச்சும் பேட்டி தான் ஒவ்வொரு சந்திப்பும் நேர்காணல் தான்’ என்று பல வருடங்களுக்கு முன்பாக அவனுடைய நாட்குறிப்பில் வருடத்தின் முதல் தினம் சொந்த பொன்மொழி ஒன்றினை எழுதி வைத்திருந்தான். அந்த மொழி அப்போதுதான் பலிக்கத் தொடங்கி இருப்பதாக நின்ற இடத்தில் இருந்து விண்ணிலும் பறந்தான்.
எல்லாம் சில தினங்கள்தான். நான்கு ஐந்து நாட்களில் தன் கதை ஏற்படுத்திய பரபரப்பு முடிந்து போய்விட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. தனக்குக் கிடைக்க தொடங்கியது வலுத்த ஒரு மழை என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு சொற்ப காலத் தூறலாக அது முடிவுற்றது தாளவொண்ணாத் துன்பமாக மாறியது. தன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழப் போகிறது என்று சிறுபொழுது எதிர் நோக்கியவன் அந்த அடி தப்பினால் தாள மாட்டான். அதுபோலத்தான் அவனும் துடித்தான். தன் அத்தனை வேலைகளையும் நிறுத்திவிட்டு தனக்கு ஏன் அப்படி நடந்தது அல்லது நடக்கிறது என்பதை குறித்து ஆய்வு அலசல்களில் தன்னை தீவிரப்படுத்திக் கொண்டான்.
நல்ல உறக்கத்திலிருந்து எழுந்து கொள்வது திடீரென்று தன் செல்பேசியை அணைத்து வைப்பது, மீசையை, சிகையை மழித்துக் கொள்வது. ஒருவரிடமும் சொல்லாமல் தன் முகவரியை மாற்றிக் கொள்வது என்று தொடங்கி அதுவரையிலும் எழுதி வந்த பழைய பெயரை துறந்துவிட்டு வேறு ஒரு புதிய பெயருக்கு மாறியும் கொண்டான்.
அவனைத் தேடுகிறவர்கள் மிகுந்த பிரயாசைக்குப்பின் ஒரு தினம் அவனை கண்டறிந்தார்கள். வேறு யாரோ ஒருவனைப் போல் இருந்த அவனிடம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும் கொட்டினார்கள். அவன் ஒரே ஒரு பதிலைத்தான் சொன்னான்.” என்னிடம் கேட்காதீர்கள். நம்மைச் சுற்றி இங்கே இருக்கும் இவர்கள் அத்தனை பேரிடமும் கேளுங்கள். அவர்கள் சொன்னதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு வேறு வழி இல்லை” என்றான்.
“இங்கே யார் இருக்கிறார்கள்?” என்று அவர்கள் கேட்க அவன் சொன்னான்.
” இதோ இவர்கள்தான்.
நான் சொன்னதைக் கேட்டவர்கள்.
இப்போது கேட்க மறுப்பவர்கள்.
நான் எழுதிய பாத்திரங்கள்”