சார்லி

(தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

                                                                                       சா  ர்  லி


தத்துவவியல் எம்.ஏ பட்டம் பெற்ற வீ.டீ.மனோகர் தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். பிறருக்கு உதவுகிற நல்ல மனசுக்காகவும் அடிக்கடி புகழப்படுபவர். அவர் தான் நடிகர் சார்லி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சார்லி கோவில்பட்டியில் பிறந்த தெற்கத்தி மனிதர். எண்ணூறு படங்களைத் தாண்டிய வெற்றிப்பயணம் இவருடையது.

எளிதாக காணக் கிடைக்கிற முகம்.சட்டுச் சட்டென்று முகபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற பாங்கு நன்மைக்கும் தீமைக்கும் அப்படியே பொருந்திப் போகும் குரலும் உடல்மொழியும் சார்லியின் நிறை திறனுக்குச் சில காரணங்கள். தையற்கலையில் அளவுச்சட்டை என்று சொல்வோமே அப்படி அளவெடுத்தாற் போல் கச்சிதமாக நடிக்கக் கூடிய நடிகர். சாமானிய வாழ்க்கையைத் தன் நடிப்பெங்கும் சாட்சியப் படுத்தியவர் சார்லி. அவர் ஏற்ற பல வேடங்கள் விளிம்பு நிலை வாழ்க்கையில் அல்லாடும் மனிதர்களை உருவகப் படுத்தின.எல்லா விதமான பாத்திரங்களுக்கும் நியாயம் செய்வது தான் கலையின் நியதி. சார்லி எப்போதும் அளவு மிகாதவர். நியாயத் தராசு படத்தில் ராதாவுக்கு தம்பியாகப் படத்தின் உயிர்நாடியாக வலம்வரும் சார்லி வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா பாடலுக்கு அசத்தலான மேற்கத்திய டான்ஸ் ஆடியிருப்பார்.சிகரம் படத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் கண்டவர் மனம் உருகக் கிடைத்த வாய்ப்பு.

கவுண்டமணி செந்தில் தொடங்கி சமீப காலத்தின் யோகிபாபு வரை  எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் காட்சிப் பகிர்ந்த திறன்பட்ட நடிகர் சார்லி. வடிவேலுவுடன் இவர் அதகளம் செய்யும் ஃப்ரெண்ட்ஸ் படம் சான்று.வடிவேலுவைக் குழப்பி அடிக்கும் கோபால் பாத்திரத்தை வெல்லக் கட்டி கரைந்தாற் போல் அசத்தினார் சார்லி.குணச்சித்திர நடிப்பு என்பது கடலின் ஆழத்தில் நல்முத்தைத் தேடுவது.சார்லி இன்று வரை தனித்துவக் கதாபாத்திரங்களுக்காக அழைக்கப்படுகிற நடிகராகத் தொடர்கிறார். வெள்ளைப் பூக்கள் வேலைக்காரன் மாநகரம் 24 பாபநாசம் நேரம் என சமீபத்திய படங்களிலும் சார்லியின் பவனி தொடர்கிறது

“யார் கொலைகாரன்?’ என்பதைத் துப்பறியும் மௌனம் சம்மதம் படத்தில் நல்லவரான ஜெய்சங்கரின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டிருக்கும்.வக்கீல் மம்முட்டி கடினமாக முயன்று உண்மையைக் கண்டறிவார். சார்லிக்கு ஜெய்சங்கர் வீட்டில் வேலைபார்க்கும் மணி என்கிற விசுவாசி வேடம் .சார்லி தான் தன் தம்பியைக் காப்பாற்ற பழியை முதலாளி மீது திருப்பினார் எனும் உண்மை தெரியவரும்.  நீதிமன்றத்தில் சார்லி உண்மையை ஒப்புக்கொள்ளும் காட்சியில் அவர் குரல் வேறு எங்கேயும் தென்படாத அரிதாகத் தொனிக்கும்.

கருவேலம்பூக்கள் படத்தில் சிறுவர்களை தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பும் மாரிமுத்து என்கிற ஏஜண்டு பாத்திரத்தில் தோன்றிய சார்லி அந்தப் படத்தில் நடை உடை பாவனை என எல்லாவற்றாலும் நடித்து அசத்தினார்.மௌனமும் சலனமும் கூட நடிப்பதற்கான உபகரணங்கள் என்பதை அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மெய்ப்பித்திருப்பார் சார்லி.சிந்து பைரவி படத்தில் வாய்ப்புக்காக ஏங்கிப் பலகாலம் புகழ்பெற்ற கலைஞர்களைப் பின் தொடர்கிற பாத்திரத்தில் மின்னற் பொழுதே தோன்றினாலும் தானும் மின்னினார் சார்லி.அதில் கையில் ஒரு இசைக்கருவியை ஏந்தியபடி ஓட்டம் கலந்த நடை ஒன்றை மேற்கொள்வார். அப்படி ஒரு நடையை நரம்பெல்லாம் நடிப்புக்கலை ஊறிய ஒருவரால் தான் காட்ட முடியும்.

உன்னை நினைத்து படத்தில் புரட்டு ஜோசியராக வருவார் சார்லி. சிங்க
முத்துவின் மகன் சார்லியை ரொம்பவே நம்புவார். இறந்து போன ஒருவரது ஜாதகத்தைக் கொண்டுவந்து சார்லியிடம் பலன் கேட்கும் காட்சி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றென இன்றும் கொண்டாடப் படுகிறது.அது வரை பல சந்தர்ப்பங்களில் தப்பித்துக் கொண்டே “ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் செல்ஃபோனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம் சிம்கார்ட் இல்லாமலும் பேசலாம்” என்றெல்லாம் ஜாலவித்தை காட்டி நழுவுபவர் கடைசியில் சிங்கமுத்துவிடம் சமாளிக்க முடியாமல் அழுத்தமாக மாட்டிக் கொண்டு திணறுவது  அபாரம். சார்லியின் அப்போதைய முக நுட்பங்கள் நடிப்புக் கலையைக் கற்க விரும்புவோர்க்குப் பாடம் என்றாலும் பொருந்தும்

வெற்றிக் கொடி கட்டு படத்தின் உயிர்நரம்பாகவே ஒரு காட்சி வரும். கதை என்னவென்றால் இளைஞர்கள் பலருக்கும் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்து தலைமறைவாகி விடுவார் ஆனந்தராஜ்.அவரால் பாதிக்கப் பட்ட இருவர் முரளி வீட்டுக்குப் பார்த்திபனும் அவர் வீட்டுக்கு முரளியும் சென்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டபடி வெளிநாட்டில் வேலைபார்ப்பதாக பொய் சொல்லி சமாளிப்பார்கள். பலரும் பணமிழந்த கதையில் தன் மகன் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாத சேதி கேட்டதும் பக்கவாதத்தில் தளர்ந்த தாய் இனி உன்னோடு பிழைக்க வழியே இல்லை என்று இரு குழந்தைகளுடன் கணவன் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டுத் தாய்வீடு சென்றுவிட்ட மனைவி என குடும்பம் சிதறி மனம் சிதைந்து ஊர் ஊராக ஆனந்தராஜைத் தேடி அலையும் கதாபாத்திரத்தில் தோன்றுவார் சார்லி. முரளி வீட்டில் இருக்கும் பார்த்திபனைச் சந்தித்து உணவு உண்டு கிளம்பும் போது “ஒரு பத்து ரூபா இருக்குமா” என்று கேட்கும் காட்சியில் கண்களைக் குளமாக்கி மனங்களை உருக்கிவிடுவார் சார்லி. ஆத்திரம் கோபம் ஆனந்தம் கூச்சம் இயலாமை வெறி எனப் பத்துவித உணர்ச்சிகளை அந்த ஒரு காட்சிக்குள் படர்த்தித் தன் முகத்தால் மாபெரும் நடிப்பை வழங்கினார். தன் தோளோடு ஒரு கையால் பற்றி இருக்கும் மஞ்சள்பையை மேலும் கீழுமாய் அசைப்பதைக் கூட அத்தனை இயல்பாகக் கதையின் ஓட்டத்திற்கேற்ப செய்து காட்டியிருப்பார்.மனம் முழுக்க வெறி மிக அந்தக் களவாணிப்பய மட்டும் என் கையில கெடச்சான் என்று கண்களை உருட்டும் போது நம்மை அறியாமல் கைதட்டத் தோன்றும்.

சினிமாவின் வர்த்தக வணிக நிர்ப்பந்தங்களைத் தாண்டி கதைக்குள் கதையென மறக்க முடியாத மானுடவாழ்வை நம் கண்முன் தோற்றுவித்த மகத்தான கலைஞர் சார்லி.