சிறந்த கதை

சிறந்த கதை
குறுங்கதை



அவனுக்கு சின்ன வயதிலிருந்தே கதைகள் மீது பெரிய பிரியம் இருந்தது. நிறைய கதைகளை வாசித்து வாசித்து ஒருநாள் நாமும் ஏன் கதையை எழுத ஆரம்பிக்க கூடாது என்று எண்ணினான். சில காலத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியிருந்தான். இதன் பிறகும் ஒரு விஷயம அவனுக்குப் புரியவே இல்லை. ஏன் தன் கதையை யாருமே பொருட் படுத்த மாட்டேன் என்கிறார்கள் என்பதே அது. இதையே ஒரு கேள்வியாக்கித் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்டுப் பார்த்தான். இந்த கேள்விக்கான சிறந்த விடையை அவனுக்கு சொல்வதற்கு யாருமே இல்லை. மேலும் சில காலம் கதை எதையும் எழுதாமல் இருந்து பார்த்தான் முன்னும் பின்னுமாய் ஒரே உலகம் தான் சுழன்று கொண்டிருந்தது ஒரு ஆகச் சிறந்த கதையை தன்னால் எழுத முடியாதா என்று சிலபல வருடங்கள் அமைதியும் ஆர்ப்பரிப்புமாக காத்திருந்து பார்த்தான்.

கதைகள் சார்ந்த பல கூட்டங்களுக்கு சென்று வந்தான் கதைகளை வாசிக்க எழுதுகிற பலரோடும் தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். இப்படியே சில காலம் சென்றது இப்போது அவனுக்கு எது சிறந்த கதை என்பதைப்பற்றிய தீர்மானம் புரிய வந்திருந்தது முன்புபோல் அதனால் தன்னால் இனிமேல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கதைகளை எழுத முனைய முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

இப்போது அவனுக்கு வேறு ஒரு சிக்கல் வந்தது யார் எழுதிய கதையை வாசித்தாலும் அதில் என்ன குறைகிறது என்பதைத் துல்லியமாக எடை போட ஆரம்பித்தான். அந்த கதையைத் தேவையான மாற்றத்துடன் தன் மனத்துக்குள் எழுதிக் கொண்டான்.யார் எழுதிய கதைக்கும் அவனிடம் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவம் ஒன்று சேரத் தொடங்கியது. பலருடைய கதைகளின் மாற்றப் பிரதிகளைக் கொண்ட மாபெரும் ஆல்பத்தை ஏற்படுத்தி அவ்வப்போது அதைப் புரட்டிப் பார்த்துக் கொண்டான். இப்போது அவனுக்குக் கதைகளின் மீது முன்பிருந்த தேடலும் தேட்டமும் குறைந்துவிட்டிருந்தது.

இப்போது தனக்கு என்ன வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்தான் ஒரு கதை எழுதப்படுவது இன்பம் அளிக்கிறதா அல்லது அந்த கதை வாசிக்கப்படுகையில் மகிழ்ச்சி உருவாகிறதா என்பதை யோசித்துக் கொண்டே இருந்தான். தன்னால் இனித் தன் பழைய காலத்துக்குத் திரும்பவே முடியாதா என்று வெம்பினான். புதிய கதாபாத்திரத்தை ஏற்ற பிறகும் முந்தைய வேடத்தின் மிச்சக் குளிர்மையால் அவ்வப்போது தான் நடுங்குவதை உணர்ந்தான். இன்னும் சில பொழுது மௌனத்திற்கப்பால் கதைகளுக்கான கடை ஒன்றினை ஆரம்பித்தான். சீக்கிரத்திலேயே அந்த தேசத்தின் ஆகப் பிரபலமான கதை செப்பனிடும் கடையாக அது மாறிவிட்டது. அவனிடம் பலர் வேலை பார்த்தனர்.ஒவ்வொரு நாளும் உலகின் பல மூலைகளிலிருந்தும் கதைகள் அந்த இடத்தை நோக்கிக் குவிய ஆரம்பித்தன.எல்லா நாட்களும் எந்தக் கதையில் என்ன பிரச்சனை என்பதை குறிப்பிட்டு அதற்கான ஆலோசனைகளை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டான்.

அந்தக் கடையில் கதை எழுதுவது தொடக்கத்திலிருந்து நிறைவது வரை எல்லா நுட்பங்களும் விலைக்குக் கிடைத்தன. பல்வேறு வகைமைகளில் கதை எழுதிக் கொண்டிருந்த பலரும் தங்களுக்கு தேவையான நுட்பங்களுக்காக அங்கே வருவதும் போவதுமாக இருந்தார்கள். அந்தக் கடை பிரபலத்தின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

இந்தக் கதையின் முதல் பத்தியில் ஒரு ஆகச் சிறந்த கதையை தன்னால் எழுத முடியாதா காத்திருந்தவன் சட்டென்று ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் எழுந்து விறுவிறுவென்று நடந்தான். கடைசிப் பத்திக்குள் புகுந்து கதைகளின் கடையின் பிரதான வாசலைச் சமீபித்து அந்தக் கடைக்குள் வேகவேகமாய் நுழைந்தான்