தேன் துளிகள் 4


                                           பு ல ன்  ம ய க் க ம்

 


51
வாத்தியங்களைத் தாண்டி ஓங்கி ஒலித்த பாடல்கள் எளிதாகச் சோகத்தை மனித மனங்களுக்குக் கடத்தியிருக்கின்றன. இதற்கு மாற்றாக மென் மெலடிப் பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பதன் மூலமாக துக்கத்தின் நோய்மையைக் கேட்பவருக்குள் படர்த்துவது நிகழ்கிறது. அளவாகக் கத்தரிக்கப் படுகிற துல்லியமான சோகப் பாடல்கல் அரிதானவை. இதை இன்னமும் சொல்லப் போனால், தீயின் வெப்பம் அளவான வெம்மையைத் தொடர்ந்து நேர்த்துகிறாற்போல், ஒரு துன்ப அழுத்தத்தைத் திட்டமிட்டு அளவாய்த் தருவதன் மூலமாக ஏற்படுத்த இயலுகிற அவலச் சுவை முக்கியமானது. யானைகளின் நீராடல் காலத்துப் பிளிறல்கள் ஒருபுறம், மூங்கில்கள் நெடிதுயர் வனத்தில் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் சத்தம் மறுபுறம், கணிசமான கிளிஞ்சல்களை நீரில் அலசுதல் இன்னொரு புறம் என்பதான தனித்த வேறு எதனுடனும் ஒப்பிடுதற்கியலாத நல்லோசைகளின் பிரதிபலிப்பாய் அத்தகைய பாடல்கள் சிறக்கின்றன
*
52
சின்னஞ்சிறு தீபம் காற்றின் திசைகளெங்கும் அலையும் என்றபோதும் நெடுநேரம் ஒளிரும். அது எத்தனைகெத்தனை சிறியதாகத் தோன்றியதோ அந்த அளவுக்கு உறுதியான ஒளிர்தலையும் முன் வைக்கிறதாகிறது. அப்படியான ஒளி நுனியின் தனித்த விகசித்தலைக் கலையின் மேனியில் பெயர்த்தல் என்பது அரிதினும் அரிது
*
53
ஏன் பாடல்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்? திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு குழந்தையைப் போல் தன் மடியில் கிடத்திக் கொஞ்சிய ஒரு முதியவளின் ஆதுரம் அல்லவா பாடலின் ஸ்தானம்? படத்தில் மௌனம் உடைந்து உரையாடலாகவும் பாடலாகவும் இரு சந்ததிகளாய்க் கிளைத்தபோது, ரசிகர்கள் வசனங்களை வெகு இயல்பாகத் தங்கள் வாழ்வெங்கும் பற்றிக் கொண்டார்கள். ஆனால் பாடல்களுக்குத்தானே தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்? இதில் ஆழ்ந்தால், பாடல் என்பதன் மீதான பிடிமானப் பிடிவாதங்களுக்குப் பின்னே ரசனையைத் தாண்டிய பெரும் சமூகத்தின் கூட்டு நியாயம் புரிபடும்
*
54
பாடல்கள் திரைப்படங்களுக்குள்ளேயே, கதையின் கிளைகளால் தம்மைச் சுற்றிக் கொள்ளுகின்றன. திரைப்படங்களுக்கு வெளியேயும் பாடல்கள் தொடர்பற்ற பல கதைக் கண்ணிகளைத் தம்மைச் சுற்றிலும் வெகு இயல்பாகப் படர்த்திக் கொள்ளுகின்றன.ஒரு சூழல் வாய்க்கையில், ஒரு சொல்லைக் கூடச் சிந்தாமல் ஏற்கனவே ஆரவாரத்துடன் ஆடிக் கொண்டிருக்கிற குழந்தைகளுடன் தானும் போய்ச் சேர்ந்து கொள்ளுமே மேலும் ஒரு குழந்தை, அதைப் போலத்தான் பாடல்கள் மனிதர்களையும் மனங்களையும் அவர்தம் வாழ்வின் தருணங்களையும் கட்டித் தழுவிக் கொள்ளுகின்றன. மேலும், உளிபட்டுச் சிதறாத பாறையை வெடியிட்டுச் சிதற்றுவார்களல்லவா, அது போலத்தான் வசனங்களைக் கொண்டு நகர்த்த வேண்டிய திரைக்கதையின் திசையில் ஆங்காங்கே பாடல்களைப் புகுத்திக் காணற்கினிய அனுபவமாக்கினர். இப்படியாக, பாடல்கள் கதைக்குள் கதையாக, சன்னத இன்பமாக, ஞாபகங்களில் தேங்குகின்றன.
*
55
எது வரினும் ஒருபுறம் மாறா உறுதியுடனும், இன்னொருபுறம் சூழலுக்கேற்ப நெகிழ்ந்தும் குழைந்துமாய் எல்லா ஊடகங்களையும் இணைக்கிற வெகுசில புள்ளிகளில் இன்றியமையாத முதற்பெரும் புள்ளியாகப் பாடல் எனும் வஸ்து சிறந்து தொடர்கிறது யதேச்சையல்ல. பாடலின் வரிகள் ஆன்மா. அதன் குரல்கள் அதன் உடல். அதன் இசை அதன் உயிர். இடை மௌனங்களும் உடனொலிகளும் ஏற்ற இறக்கங்கள். பாடலின் பிறப்பென்பது அதன் வருகை. அதன் தோன்றுதல் என்பது அதன் ஆளுமை. விடுபடுதல் என்பது அதன் ஞாபகம். மேற்சொன்ன அத்தனையும் மானுட வாழ்க்கைக்கும் பொருந்தும் என்பது பாடல் கலை தனிக்கிற அபூர்வத்தின் சூட்சுமம்.
*
56
எல்லாக் கலைகளும் மனிதனுக்கு அடங்குவதிலும், இசை மாத்திரம் மனிதனை அடக்குவதிலும் இருவேறு நதிகள்.
*
57
உழைப்பையும், திறனையும் ஒருங்கே நிரூபிக்கத் தேவைப்படுகிற கலைகளே நிகழ்த்துக் கலைகள். திரைப்படத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப் படுவதில் பல வசதிகள் உண்டு. உதாரணமாக சின்னதும் பெரியதுமான பகுதிகள் தனித்தனியே பாடி ஒட்டவைக்க இயலும். கச்சேரிகளில் அப்படி இயலாது. பாடியவர் தொடங்கி, அந்தந்த வட்டாரத்துப் பாடகர்கள் வரை ஒருங்கே பாடவேண்டும் என்பது மேடைக் கச்சேரியின் நியதி. அதனால்தான் சில பாடல்களைச் சில பாடகர்கள் முதல் முறை திரைப்படத்துக்காகப் பாடின உணர்வை மேடைக்கச்சேரிகளில் உருவாக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
*
58
ஒரு காதலின் எல்லா தினங்களுமே முக்கியமானவை தான்.களவும் ரகசியமும் சொற்பச் சொற்களுடனான தனி மொழியும் கண்களாலேயே பெருவாரி தருணங்களைக் கடந்து விடுவது காதலின் ஜாலம்.ஒரு சொல்லாக இனிக்கத் தொடங்குகிற காதல் அதன் இருண்ட பக்கங்கள் அத்தனைக்கும் சேர்த்துத் தான் சர்க்கரை பூசியபடி நேர்கிறது.எத்தனையோ அவமானங்கள் ஆத்திரங்கள் பகை துக்கம் எனப் பல இருள் முனைகள் இருந்தாலும் கூட இந்த உலகத்தின் தோன்றல் தினத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எல்லா நாட்களுமே எதாவதொரு காதல் கைகூடுகிற தினங்களாகவும் அறிவிக்கப்படுகிற தினங்களாகவும் கைவிடப் படுகிற தினங்களாகவும் இருந்து கொண்டே இருக்கிறது.காதல் என்பது ஒரு சொல்லல்ல.மாபெரிய இயக்கம்.
*
59
வணக்கத்துக்கும் ப்ரார்த்தனைக்குமான வித்யாசம் முதல் காதலின் முதல் பேராகத் தனிக்கிறது.
*
This award-winning semi-acoustic guitar is made in a single piece from carbon fiber - Yanko Design
60
குழந்தைகளுக்கு வைக்கப்படுகிற நிறைவேறாக் காதற் பெயர்கள் இந்த உலகமெங்கும் படர்ந்திருக்கின்றன.மேலதிகமாய் மனைவியைக் குழந்தையை எப்போதும் விளிக்கும் செல்லப் பெயர்கள் பொருளற்ற சொற்களைப் போலத் தோற்றமளித்தாலும் கூட அவற்றின் பின்னே சென்று பார்த்தால் அதன் பூர்வாஸ்ரமம் ஒரு நிறைவேறாக் காதலின் கடக்க முடியாத கடவுச்சொல்லாக இருந்திடக் கூடும்
*
61
காதலில் தூது செல்பவர்கள் சாட்சிகளாக மாறுகிறார்கள்.தவிர்க்கப் பட முடியாதவர்கள் முன்னால் காதலின் ஏற்ற இறக்க வழக்குகள் நடைபெறுவது வழக்கம்.இதனாலேயே இது என் பர்ஸனல்.நீ தலையிடாத என்று தானும் தன் காதலுமாய்த் தனித்து விடுவது உபாயமாகிறது.அப்படி வெளித்தெரியாமல் சொல்லிக் கொள்ளாமலேயே தன் காதலைத் தனக்குள் பொத்தியும் பூட்டியும் வைத்துக் கொண்டு வென்று தோற்று வாழ்ந்தழித்தவர்கள் அனேகம்.காதல் இன்றைக்கு ஒரு ஏற்பாடு.அதன் நீள அகலங்கள் மாற்றி அமைக்கப் பட்டு விட்டன.முன் பழைய காலத்தின் காதல் எனும் புனித பிம்பம் முற்றிலுமாகத் திரும்பப் பெறப்பட்டு இன்றைக்குக் காதலின் வேறொரு வெர்ஷன் புழக்கத்தில் இருக்கிறது.இன்னமும் சொல்வதானால் இன்றைக்கிருப்பதற்கும் முன்பிருந்ததற்கும் இடையே பெயர் மட்டும் தான் தொடர்கிறது.காதலின் பழைய கதைகள் முடிந்து போய்க் காலமாயிற்று
*
62
காதலைத் திரைப்படுத்தும் போது அவற்றுக்கும் பாடல்களுக்குமான பந்தம் ஒரு அதி அவசியமாகவே பார்க்கப்படுகிறது.காதல் என்பதன் அதீதங்களை நிர்ப்பந்திப்பது சினிமா.அங்கே சகலமும் காதல் தான்.அப்படி இருக்க காதலின் நறுமணத்தைப் படர்த்துவதற்கான சந்தனப் பொழுதுகளைப் போலவே பாடல்களின் வருகை நிகழ்கின்றன.எங்கும் எதிலும் எல்லாம் காதல் தான்.திரையில் சேர்ந்த காதல்கள் நிசத்தில் பிரிந்து அறுந்ததும் திரையில் யூகிக்க முடியாத திசைகளில் எல்லாம் வென்ற மற்றும் அழிந்த நிசக்காதல்களின் கதைகள் படர்ந்து பெருக்கெடுப்பதும் நிகழ்ந்தன.
உண்மையாகவே எண்பதுகள் தொடங்கி இரண்டாயிரம் வரைக்குமான இந்திய மனோபாவங்களின் தனி நபர் விருப்பு வெறுப்புக்களைக் கட்டமைத்ததில் சினிமாவின் பங்கு முக்கியமானது.அதிலும் குழைத்துக் கலைத்ததில் பாடல்களுக்குப் பிரதான இடம் உண்டு
*
63
தன்னை உண்டு பண்ணிய முனி தின்றுவிடத் துரத்துகிற தீராப் பசி அசுரம் இசையினது.
*
64
பாடல் உடனான தனி மனிதனின் உறவாடல் இங்கே தொடங்குகிறது. ஒரு பாடலை ஒருவன் விசாரிப்பதிலிருந்து எல்லையற்ற அவன் கனவுகளின் நடுவாந்திரம் அவனால் கட்டுப் படுத்த முடியாத ஞாபக உருவிலிகளில் ஒன்றாக அந்தப் பாடல் தேங்குகிறது. வாழ்வில் முன்னொளி பாய்ச்சி நமை வழி நடத்துகிற சில பலருள் ஒருவராக அந்தப் பாடல் உருக் கொள்ளுகிறது. தேவாலயத்தின் பாவமன்னிப்புக் கூண்டு, ஈரம் கனம். அந்தப் புறம் தன் செவிகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விருப்பு வெறுப்பற்ற துறவு மனம் ஒன்றைப் போல் அந்தப் பாடல் மாறுகிறது. ஒப்புக் கொடுக்கிற ஒவ்வொருவரையும் தனக்குள் கரைத்துக் கொள்ளுகிறது. தன்னை நிகழ்த்தியபடி அன்பின் ஆதுரம் ஒன்றைத் தோன்றச் செய்கிறது
*
65

இசை கேட்பது நல்லவர்களின் பிரயாசை. மதம் ஒரு அபின் என்றால் அதனைப் புகைக்க உபயோகப்படும் சிமிழி இசை எனலாம். மதத்தோடு கலந்து ஒலித்த இசை, உபமதமாகவும், ஏன், மதமற்றவர்களின் மதமாகவும் கூடவே ஆனது ரசம். மனிதனின் ஆகச் சிறந்த காரியங்களில் ஒன்று இசை. ஆன்மாக்களின் மீது அன்பென்னும் தூறல் சொரிந்து, அமைதியைப் பதியனாக்கும் மாண்புமிகு காரியம் இசை. உழைப்பு, வியர்வை, மனித எத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக சன்னதத்தின் தன்னியல்பு இசை.
*
66
அலைவுறும் மனத்தை ஆற்றுப் படுத்துவதில் இசையின் பங்கு பெரியது. ஒரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய மிகப் பெரிய அன்பின் சான்று இசை. மேலும், இசை மீதான கிறக்கம் முடிவற்றது. ஒரே ஒரு முறை நுழைந்தபின் முடிகிற வரை வெளியேறவியலாத வித்தியாசங்களின் ஆட்டம் அது. இசையின் வருகைகள் மகிழ்ச்சிகரமானவை. படகுப் பயணத்தின் திசைமாற்றுகிற கொழுகொம்பைப் போன்றது இசையின் வேலை.
*
67
இசைக்கும் மனிதனுக்குமான பந்தம் விசித்திரமானது. தன்னைச் சரணடைபவர்களைக் காதலிக்கிற ஒரே அதே அவஸ்தை அல்லது பரவசத்தைத் தானும் நேர்த்துகிற சமர்த்து காதலைப் போலவே இசைக்கும் உண்டு.
*
68
பாடல்கள் தரும் சந்தோஷங்கள் அவரவர் வாழ்வின் ஆரம்ப மலர்களை மலர்த்திச் செல்லுகின்றன. நிஜத்தில் ஒரு மலர் பல ஞாபகங்களில் வெவ்வேறு வண்ணங்களாகப் படர்வதென்பதும் வாழ்வின் பரவசம்தான். திரும்பிப் போக முடியாத காலம் ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவிடுகிற தன்னியல்பில் திறந்து கொள்ளுகிற நினைவின் சன்னல்களாகவே பாடல்களின் மீவருகைகள். எந்தப் பாடல் யாருக்கானது என்பது நேயர் விருப்பக் காலத்தில் காகித ராக்கெட்டுகள் தூர உயர மலையெங்கும் சென்று செருகினாற்போல் நினைவுகளை ஒளிர்கின்றன
*
69
உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்பது வெறும் கேள்வி இல்லை.அந்தக் கேள்வி இரண்டு பேருக்கிடையிலான பரிச்சயத்தின் ஆரம்ப சன்னலைத் திறந்து வைக்கிறது.என்ன பேசுவது எனத் தெரியாத குறுகுறு கணம் ஒன்றில் எப்படிப் பேச்சை செலுத்துவது என்கிற தடுமாற்றத் தருணத்தில் இந்த ஒரு கேள்வி ஒரு தெய்வ நிழலைப் போலப் படர்ந்து காக்கிறது.இரு நபர்களுக்கிடையிலான உரையாடலில் உளவியலின் ஆழத்தில் செருகப்படுகிற முதல் மலர் போலவோ அல்லது முதல் கத்தியைப் போலவோ இந்தக் கேள்வி நிகழ்கிறது
*
70
ஒரே ஒரு பாடலா பிடித்த பாடல் என்று சொல்லும் வண்ணம் இருந்துவிடும்..?எத்தனை பாடல்களை விதவினோத காரணங்களால் பிடிக்கும் என்று சொல்ல வேண்டி இருக்கும்.?ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவன் கேட்கும் பாடல்களின் வகையறாக்களைக் கொண்டு அளவிட முடியாது என்றபோதிலும் கையாள்கிற வார்த்தைகளைக் கொண்டு ஒரு அன்னியனின் சித்திரத்தை எழுத முற்பட்டுவிடுவது மானுட சுபாவம்.அப்படிப் பார்த்தால் ஒருவர் விரும்பிக் கேட்கிற பாடல்கள் அவரது மனவிலாசத்தின் ஒரு வரியைப் பிரதிபலிக்காமல் போய்விடுமா என்ன..?காலத்தின் பின்னணி இசை அல்லவா பாடல்கள்?மனிதன் பாடல்களாலும் ஆனவன் தானே?
*