மழை ஆகமம் 1

                                        மழைமதியம் மெழுகுவர்த்தி இன்னபிற


1
என் அன்பு இதற்கு முன்னால்
ஒரு மெழுகுவர்த்தியின் கடைசிச்சுடராக இருந்தது.
மெழுகுவர்த்தியின் தேவைகள் எப்போதாவது நேர்ந்துவிடுபவை.
மின்சாரமற்ற ஒரு மழைமதியம்
ஒரு ராத்திரியைப் போன்றே அத்தனை ரம்மியமானது.
பகலைக் கைக்குள் அடக்கிவிடும்
ப்ரயத்தனத்தைப் பேயாட்டமாக மாற்றிக்கொண்டிருந்தது மழை.
வந்தேறி வசிக்கிற அந்தச்சிறு அறையைத் தான்
எத்தனை அழகானதாக மாற்றிவிட்டிருக்கிறோம்
என்றந்த மழைக்குத் தெரியாது.
மழையின் நடனம் சாலைகளில் தான்.

2.
சன்னலில் இருந்து வழிகையிலெல்லாம்
ஒரு நதியின் புறப்பாடாக
மலர்ந்துவிடும் முயல்வுகளில்
தோற்றுக்கொண்டிருப்பது
மழைக்குத் தெரியவே தெரியும்.
அறைக்குள் புகுந்து வழிகிற
நீர்நதி மழையின் கண்ணீர்

3.
அந்த அறையின் கட்டிலை பிரியமற்றவர்களும் கூடப் 
பகிர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தை 
மழை ஒரு பதிவுக்கடிதமென
 கொணர்ந்து தந்திருந்தது

4.
புகையும் சிகரட்டின்
ஒழுங்கற்ற சித்திரங்களை
சேமிக்க விழைகையில்
அந்த அறை ஒரு ஞானபீடமாகின்றது.
அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கான ஒதுக்கீட்டினின்று
கொஞ்சம் மது களவாடப்பட்டதற்கும்
அந்த மழைதான் காரணம்.

5.
 மதுவுடனான தனிமை மிகவும்
அத்யந்தமானது. மெழுகுவர்த்தி
நடனமாடிக்கொண்டிருக்கிறது.
எனக்குப் பிடித்தமான
ஒரு பாடலோ
ஒரு வார்த்தையோ
ஒரு கவிதையோ
ஒரு இன்னபிறவோ
உன் ஞாபகங்களை எனக்குள் கிளறிவிட்டுவிடுமோ
என நான் அஞ்சுவதை
வெளியே பொழியும் மழை அறிந்தே வைத்திருக்கிறது.

6.
ஒரு மேற்கத்திய இசைக்குழுவின்
ஒத்திகைக் களம் போலத்
தனக்குக் கிடைத்த சாலைகளை எல்லாம்
மழை மாற்றிக்கொள்கிறது.

7.
மெழுகுவர்த்தியின் நடனம் வேறுவகையானது. 
அது மழைக்கெதிரான பாரம்பரிய நிழலாட்டம்.
எதிரே இருக்கும் சுவரின் இருள்திரையில்
மெழுகுவர்த்தி
ஒரு ராட்சசனைப் போலக் கிளம்பி
தன் நடனத்தின் முடிவில்
உயிரிச்சையில் கால்பற்றி யாசிக்கும்
கொடுநோயாளிபோலப் பலவீனமாக மாறிவிடுகின்றது.
மெழுகுவர்த்தியின் நடனம் வக்ரமானது.
அது எப்போதும் நோய்மையை முன்னிறுத்தி
மனங்களைப் பிசைகின்றது.
இந்த மழைக்கான தழுவலை
ஒருபோதும் அந்த மெழுகுவர்த்தியால் தந்துவிடமுடியாது.

8.

செல்பேசியை எடுத்து
உனது எண்ணை அழுத்தாமல்
மேசைமீது வைப்பது இத்தோடு நூற்றியாறாவது முறை.

9.

மது எனக்குள்ளாய்த் தன் நடனத்தை ஆரம்பிக்கின்றது.
ஞானக்கூடத்தின் புகை நாட்டியம் இப்போது
வேறு தளத்தில் தன்னை மாற்றிக்கொள்கிறது.
மழையின் நடனம் இந்நேரம் உக்கிரமாயிருக்கக் கூடும்.
என்றபோதும்
அந்த மதியநேரத்துத் தனிமை ஒரு கோரநாகமாக மாறுகின்றது.
அதன் இரைச்சலொலிக்கு உணவாய்க் கொடுக்க
இரண்டு உடல்கள் பின்னவேண்டுமென்று
அசரீரிப்பறவை ஆருடம் சொல்கின்றது.
அந்த தினத்தின் கடைசி மிடறு
எனக்குள் தன்னை வழுக்கிக் கொண்டு செல்கின்றது.
மெழுகுவர்த்தி தன் கடைசி உள்ளாடையை
 கழற்றிக்கொண்டிருக்கின்றது

10.

திறந்திருக்கும்
அறைக்கதவைத் தாண்டியபடி
வழக்கமான புன்னகை ஒன்றை
சிமிட்டியபடியே
உன் ஹீல்ஸ் அணிகளை
எதிரெதிர் திசைக்குக் கொடுத்தபடி
அறைக்குள் நுழைந்துகொண்டிருக்கிறாய்
சகி
உன்வரவு
நல்வரவாகுக