யாக்கை 11

யாக்கை 11

வாழ்வின் வானம்


செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட அதற்குரிய மாற்று எது எனத் தேடி அலைந்தான். அளந்தளந்து பேசுபவன் அதற்குப் பிறகு சரளமாகப் பேசலானான். தனக்கு அறிமுகமானவர்களில் ஆள் பார்த்து லாவகமாய்ப் பேசியே வீழ்த்துவதில் ஒருவிதமான மன சமாதானத்தை உணரத் தொடங்கினான். தன் மீது யாரும் குறை சொல்லிட முடியாத வண்ணம் பற்பல கதைகளை உற்பத்தி செய்து பகிர்வான். ஒரு கட்டத்தில் உடல் மனம் வார்த்தை முத்தம் என சகலமும் அலுத்தது. மீண்டும் திரும்புவதற்குத் திசையேதும் இல்லாதவன் நகர்ந்தது போதும் என முடிவெடுத்து மீண்டும் பேசாமணவாளனாக மாறினான்.

அந்தக் காலகட்டத்தில் தான் சிந்தாமணி என்பவள் அறிமுகமானாள்.

காதல் தான் என்றாலும் அதனைச் சொற்களால் இரண்டு பேரும் பேசிக் கொள்ளவில்லை. சிந்தாமணிக்கு செல்வாவை மிகவும் பிடித்தது. தனது மனதுக்குள் அவனை முழுவதுமாக நிரப்பிக் கொண்டாள். அவனும் தன்னை மனதார விரும்புகிறான் என்றே நம்பினாள்.

ஓரே நோக்கத்தோடு பயணிப்போர்க்கிடையே சொற்கள் சொற்பமாகத் தன செலவழியும். செல்வாவும் சிந்துவும் ஒரே திசையில் தங்களுடைய தேவையைத் தேடினார்கள். அவளது கண்களை எப்போதும் பார்த்துக் கொண்டே பேசினான் செல்வா. அவளால் அவன் கண்களைப் பார்க்கவே முடியவில்லை. அதென்னவோ நோட்டுப் புத்தகத்தின் நடுவாந்திரம் கத்தி கொண்டு அறுத்த பின் அத்தனை காகிதங்களும் தனித்தனியாய் உதிருமல்லவா அப்படி அவனது பார்வையைக் கண்ட மாத்திரத்தில் அவள் பல துண்டு துணுக்குகளாகத் தன்னை உதிர்த்துக் கொண்டாள். மனசின் அடியில் எங்கோ குழைந்து சரிவதை தானே நம்ப மாட்டாமல் பாதி ஞாபகமும் மீதி கிறக்கமுமாய்ச் சுயம் குலைந்தாள். மூணாறு போய்ட்டு வருவமா என்று கேட்டவனிடம் சிறு மறுப்புமின்றி ஒப்புதல் தந்தாள்.

இரண்டு தினங்கள் தோழிக்கு கல்யாணம் என்று பொய் சொல்லி விட்டு மூணாறு சென்று திரும்பினாள். தன் வாழ்வெலாம் செல்வா வருவான் என்று  முழுதாக நம்பினாள். சிறுகால ப்ரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றவன் இனி வரப்போவதில்லை என்று புரிவதற்கு ஒரு வருடம் ஆனது.

சிந்தாமணி செல்வாவைத் தேடவே இல்லை. பல ஊர்ப் பிரயாணத்துக்கப்பால் மூன்று  வருடம் கழித்து கிருஷ்ணாபுரம் பழைய பஸ் ஸ்டாண்டின் எதிரே  நகராட்சி காம்ப்ளக்ஸில்  ஒரு எஸ்டிடி பூத்துக்கு ஃபோன் செய்யப் போனான் செல்வா. அங்கே காசு வாங்கி போடுகிற கணக்காளி ஆக சிந்தாமணியை எதிர்பார்க்கவில்லை. எதுவும் ரசாபாசமாக ஆகப் போகிறதோ என்று ஒரு சிறு கணம் வியர்த்தான். அவளோ குறையாத நட்போடு ‘பார்த்து எவ்ளோ நாளாச்சி..? எப்டி இருக்கீங்க  கலர் எதுனா சாப்டுறீங்களா?’ என்று கேட்டாள். அவள் குரலில் நக்கல் கிண்டல் எதுவும் இல்லை. அன்றைய இரவு ரொம்பவே நீண்டது செல்வாவுக்கு. எதுவும் பழிவாங்குவதற்கான தெளிவாக இருக்குமோ என்று ஒரு ஓரத்தில் பயந்தாலும் சிந்தாமணியின் குரலும் அவள் கண்களில் தெரிந்த தெளிவும் அவனைப் படுத்தியது.

இவள் தன்னை என்னவோ செய்கிறாளே என்று யோசிக்க ஆரம்பித்தான். தன்னைக் குத்திக் குதறிப் பழிவாங்கினால் கூட நிம்மதி தான் என்று யோசிக்குமளவுக்கு அவன் மனசு அவளை எப்போதும் தேடியது. அவளுக்காகவே அவளைத் தேடிச் சென்றான் “நெசம்மாவே உனக்கு என் மேல கோபம் இல்லையா?” எனக் கேட்டான் ‘எதுக்குய்யா  கோவிச்சுக்கணும்..? உன்னைய புரிஞ்சுக்கிட்டேன். உனக்கும் எனக்கும் என்ன பகையா? உன் தேவைக்கு வந்திருக்கே அது முடிஞ்சதும் கெளம்பிட்டே. நீ இனி வரவே மாட்டேன்னும் நினைக்கலை. வந்தா நல்லாருக்குமே அப்டின்னும் உருகலை. திரும்ப வர்றியான்னு அப்பப்ப பார்ப்பேன். அப்பிடித் தான் அன்னைக்கும் உன்னையப் பார்த்தேன். வந்துட்டே. உன்னை பழிவாங்குறதுல நானும் தான் நாலாக் கிழிவேன். மனசுக்குப் பிடிச்சிருச்சின்னு வய்யேன். அவங்களை நம்மளால எதுமே பண்ண முடியாதுல்ல” என்றாள் யதார்த்தமான குரலில்.

உடல் மனம் பற்றியெல்லாம் அவள் பேசப் பேச சிந்தாமணியின் பரந்த புரிதலும் வாழ்க்கை மீதான அவளது ஞானமும் செல்வாவுக்கு  வியப்பைத் தந்தது. அவளது ரசிகனாவே மாறினான். தன்னை எப்படியெல்லாம் கொஞ்ச வேண்டும் ஆராதிக்க வேண்டும் என்று எல்லாவற்றையுமே அவள் தான் சொல்லுவாள். அவள் சொல்வது அத்தனையும் அவன் செய்வான். இசைக்கருவி ஒன்றைக் கற்றுக்கொள்பவன் வாழ்நாள் முழுவதும் அதோடு உயிராய் உடலாய் இணைந்தே இருக்க முற்படுவானில்லையா அப்படித் தான் சிந்துவும் செல்வாவும் ஒருமித்தார்கள். ஒரு சன்னமான கிறக்கத்தினூடே அவள் காதோரம் பேசினான் செல்வா ” குட்டிம்மா நல்லது கெட்டது, சரி தப்பு, வேணும் வேணாம்னு எதையுமே பார்க்க மாட்டேன். நீ சொல்லு லாரி முன்னாடி நிக்கிறேன். யாரையாச்சும் கொல்லச்சொன்னாக் கூட கொல்றேன். நீ எதைச் சொன்னாலும் செய்வேண்டி” என்றான். “தெரியும்டா” என்று இதழ்களை மூடினாள் சிந்தாமணி.

வெற்றி பெறுவதென்பது ஒரு கலை. அதை நன்றாக அறிந்தவள் சிந்து. வெற்றி என்பதென்ன எதிராளியிடமிருந்து கோப்பையைத் தன் வசம் அடைகிற கணம் மட்டுமா? எதிர்த்தவன் மனத்தை சலவை செய்வது வெற்றியின் முதற்படி. உளியைப் பிரயோகிக்கத் தெரிந்தவன் கத்தியெடுத்துக் குத்தவே மாட்டான். “நீ முற்றுமுதலாய் உன்னைக் கொடு. நான் எனக்கேற்ற உன்னை செதுக்கிக் கொள்கிறேன்” என்று தன் வசமாக்குவதல்லவா வெற்றி. சமீபிக்கிற போதே வென்றுவிட்டதாகத் தாவித் தவிப்பவன் தான் கோட்டை விடுவான். சிந்து மனப்பூர்வமாக வீழ்ந்தது முதல் வெகு காலம் கழித்து முழுவதுமாக வென்றது வரை சகலமும் அவளால் மாத்திரம் சாத்தியமாயிற்று. இன்றைக்குத் தொட்டதெல்லாம் அவளுக்குத் தான் சொந்தம்.

செல்வா தான் அவளுடைய வாழ்வின் வானம். தனியாகக் கீழ்வீட்டில் இருக்கும் சிந்தாமணி செல்வத்தை சந்திக்க இப்படி வெவ்வேறு இடங்களுக்கு அலைய வேண்டியதே இல்லை. தன் வீட்டுக்கே அவனை வரவழைக்கலாம்தான். ஊரைப் பற்றியெல்லாம் சிந்தாமணிக்கு ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. ‘ஊரா சோறு போடுது?’ என்பது அவளுடைய பிரசித்தி பெற்ற வசனம். அவளை ஆளாக்கியது அவள் அக்கா வடிவு. எதாவது மனஸ்தாபம் என்றால் இந்த வார்த்தைகளோடு சகோதரிகளின் சண்டை முற்றுப் பெறும். ‘அப்பனும் ஆத்தாளும் விட்டுட்டுப் போனதுக்கு அப்பறம் அரளிய அரச்சு ஒனக்கும் தந்துட்டு நானும் தின்னுறுக்கணும், செய்திருப்பேன், அன்னிக்கு நீ இப்டியெல்லாம் பேசத் தெரிஞ்சவ இல்லியே, மூஞ்சியப் பாக்கும்போதெல்லாம் சிரிப்படி, ஒன்னய மேடேத்தி விட்டுரணும்னு நா வாழ வந்ததுதாண்டி இந்த வாழ்க்க’ என்பாள். சிந்தாமணிக்கு உலகத்தைக் காட்டிக் கொடுத்தது அக்காதான். உலகமாய் இருந்ததும் அவள்தான். செல்வா என்கிற ஒருவன் வருவதற்கு முதற்கணம் வரைக்கும் அவளுக்கு எல்லாமுமாய் இருந்த ஒரே ஒருத்தி வடிவு தான்.

இந்த உலகம் எத்தனையோ விசித்திரங்களைச் சர்வ சாதாரணமாகக் கையாண்டு வருவதற்கு ஒரே ஒரு காரணம், அப்பழுக்கற்ற பெண்மையின் இயல்புதான். தான் ஆளாக்கியதைப் பார்த்துப் பார்த்து ரசிக்கிற பிரபஞ்சத்தின் தாய் மனோபாவம்தான் அதைத் தக்கவைத்தபடி இருக்கிறது. ஆழப் புதைக்கப்பட்ட வெளித்தெரியாத கொலையுடல் போலத்தான் பெண்மனம் தனக்குள் ரகசியங்களைப் புதைத்துக் கொள்ளுகிறது. பதற்றமற்ற அச்சம்தான் பெண்மையின் பலம். தீர்மானித்துவிட்டால் ஒரு பெண்ணை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தவே முடியாது. ஆண் என்பவன் வெளிப்புறம் மின்னினாலும் உள்ளே உதிர்கின்ற போலிப் பொன் நகை போன்றவன் தான்.

தன்னை விட இரண்டு அடிகள் உயரம் குறைந்த ஒருவனைக் கணவனாக வரித்துக் கொண்டு வந்து நின்றபோது ஊரே சிந்தாமணியின் அக்கா வடிவைப் பழித்தது. அவள் எதையும் லட்சியம் செய்யவில்லை. அவளுக்குத் தெரியும், வருங்காலத்தைக் காண்பதற்குக் கண்கள் உள்ள யாவரும் மற்றவர்களிடமிருந்து விலகுகிறார்கள். அவர்கள் வினோதமானவற்றை வெகு இயல்பாகச் செய்ய முயற்சிக்கிறார்கள். செய்திகளின் வினோதம் அவற்றின்

காரண நியாயத் தேவைக்காகப் பின்னால் நிரூபணமாகிறது. உண்மையில் கண்களை மூடிக் கொண்டு துடுப்புப் போடுகிற ஒருவன் மனசுக்குப் பிடித்த பாடலை முணுமுணுக்கிறாற் போல், தன் முன்னால் வீசப்பட்ட வினாக்களைக் கையாண்டாள் அக்கா. ‘என் புருசன் ஒசரம் கம்மிதான், ஆனா சம்பாத்தியத்துல கொற வெக்கறதில்ல. அளவா சினேகிதக்காரங்க, நான் சொன்ன சொல்ல மீறுறதில்ல. கதாநாயகன் துப்பாக்கி எடுத்துத்தான் சுடணும்னு அவசியம் இல்ல சிந்தாமணி, என் புருசன் எதுத்து யாராவது வந்தா கைல கெடைக்கறதை எல்லாம் வெச்சுக் கொல்லுவான். நல்லவன்னுலாம் சொல்ல மாட்டேன், எனக்கு ஏத்தவன்,நம்பிக்கைக்கு உரியவன். அவ்வளதான்.’

அக்கா அவளிடம் விஷயத்தைச் சொல்லுவது போல அனுமதி கேட்டாள். இரண்டு சகோதரிகளின் ஓட்டுவீட்டோடு மாப்பிள்ளையாகப் பவுன்ராஜ் புகுந்த கதை இது. மனையாள் அவனிடம் கறார் காட்டினாள். ‘தபாரு, ரெண்டு மூணு வருசத்துல தங்கச்சி ஒக்காந்துருவா, தரையில நமக்கொரு ரூமு, ஒரு சமையக்கட்டு, மாடியில அந்தப் பிள்ளைக்குன்னு ஒரே ஒரு ரூமு. இதைக் கட்டுனதுக்கு அப்புறம்தான் நமக்குப் புள்ள, நீ நல்ல வழியில போவியோ நார வழியில போவியோ, எனக்குத் தேவை காசு. வெறுங்கையோட வெட்டிப்பேச்சோட இங்கன வராத.’ பவுன்ராசு ரோஷக்காரன். திருமணமான ஒரு வருடத்துக்குள் வீட்டைக் கட்டிக் காட்டினான். கோமதிநாயகம் என்று தன் தாயின் ஞாபகார்த்தமாக, மகனுக்குப் பெயர் வைத்தான். ‘இன்னொரு புள்ளை’ என அவள் ஆரம்பித்தபோது, ‘போதும் போதும் எல்லாம் ஒண்ணு போதும், அதை வளத்தாப் போதும்’ என்று தனக்குள் நிறைந்தான்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, கணவனும் மனைவியும் சதா சண்டை போடுவதாகவே தோன்றும். அதனாலென்ன, அமைதியாய்க் கொஞ்சுவதற்கு நாங்களென்ன அணிலா முயலா? கரடுமுரடான வழி கோயிலுக்குச் செல்லுகிறாற்போல், ஏச்சும் கத்தலும் கலந்தே கொஞ்சிக் கொள்வதும் நடந்தது. உயரம் கம்மி, அதனால் என்ன. கஞ்சா விற்கிறான், அதனால் என்ன. கண்களை மூடித் திறக்கும்போது இருந்த பிரபஞ்சம் அப்படியே இருக்கும் என்று யாதொரு உத்தரவாதமும் இல்லை, அதனால் என்ன.

வீட்டுக்கே அழைத்து வந்திருக்கலாம்தான். சிந்தாமணிக்கு ஊரைப் பற்றியெல்லாம் கவலை ஏதும் இல்லை. அக்காளிடத்தில் செல்வாவைக் கொண்டுபோய் நிறுத்துவதில் எதோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது சிந்தாமணிக்கு. ‘ரெண்டாந்தாரமா ரெண்டாந்தரமா’ என்பாள். ‘டைவர்ஸ் கேட்டிருக்காரு’ என்றால், ‘இனிமே வேணாங்கறதுக்குப் பேருதான் டைவர்ஸ், புருசன் பொஞ்சாதி இல்லன்னு ஆயிருமா?’ என்பாள். ‘உனக்கு என்ன கொற’ எனக் கண் கசிந்தால் அவளது மனசைக் கொன்றுவிட்டு எதையும் செய்வதற்கு சிந்தாமணியிடம் திராணி இல்லை. உண்மையில் ஒரு நல்ல சூழ்நிலை வராதா அக்காவிடம் அதைச் சொல்லுவதற்கு என்று ஆறு மாதங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். பவுன்ராஜிடம் சொல்லலாம் என்றால் ஊழ் ஊழ் என்று எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘அக்காகிட்ட சொல்லிட்டியா?’ எனப் பயந்தபடி அவளிடமே கேட்பான்.

குளத்தடியில் நின்றுகொண்டு, குளிருமே என்று சிந்திப்பவளைப் போல் தான் நின்று கொண்டிருப்பது சிந்தாமணிக்கு நன்றாகப் புரிந்தது. சொல்லிவிடலாம் சொல்லிவிடலாம் என்றுதான் ஒத்திப் போட்டுக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் எப்போதாவது நேரம் கிடைத்து செல்வா அவளை அணுகும்போது சந்திப்பதற்கு இடம் வாய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிறது. இந்தச் சந்திப்பு கூடக் கிட்டத்தட்ட ஒரு மாதமாய்த் திட்டமிட்டது. ‘சினேகிதக்காரன் மூணு நாள் திருப்பதிக்குப் போரான், நைட்டு ரிஸ்கு, ஒன்னாலயும் முடியாது, மொத நாள் நா மாத்திரம் பகல்ல பொழங்கறேன், ரெண்டாவது நாள் காலையில நீ வந்தே தீருற’ என்றான். ‘இந்தபாரு, எதனா சொல்லி எதனா இது பண்ணிர மாட்டல்ல?’ என்றான். அப்படி ஆரம்பித்ததுதான், வெற்று முதுகை வான் நோக்கிப் பரப்பிக் கொண்டு கடைவாயோரம் எச்சிலை ஒழுக்கியபடி மிதமான குறட்டைச் சத்தத்தோடு ஆழ்ந்து உறங்குகிறவனைப் பார்த்தபடியே இருந்தாள் சிந்தாமணி. அக்காவும் பவுன்ராஜும் அவளது உலகத்தின் ஆதர்ச தம்பதிகள். தன் தலையில் கிரீடத்துக்குப் பதிலாய்த் தன் மனைவியைச் சுமப்பவன் பவுன்ராஜ். அவர்களைத் தாண்டி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை செல்வா தந்திருந்தான்.

ஒரு வகையில் இந்த அனுபவத்தின் வினோதம் அவளுக்குப் பிடித்திருந்தது. யாரென்றே தெரியாத அன்னியர்களின் வீட்டுக்குள் மனசுக்குப் பிடித்தவனுடன் முயங்கிக் கிடப்பதென்பது, ஒரு கனவின் எதிர்பாராமையோடு நிகழ்ந்து கொண்டிருந்தது. கனவுக்கும் நிஜத்துக்குமான மாபெரிய வித்தியாசம், அதன் துல்லியமும் ஒழுங்கும். இது இந்தக் கணத்தின் இன்றைய நிகழ்வு. மெல்ல இதன் உபகுறிப்புகள் மனதை விட்டு அகலும். திரும்ப எப்போதாவது இதைப் பற்றி நினைத்துப் பார்க்க வாய்க்கையில், இதே நிகழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பாதி மறந்தும் பாதி நினைவுமாய் ஒரு கனவின் ஞாபகங்களைப் போலவே மாறும். சிந்தாமணிக்கு இதுபோல தானும் செல்வாவும் தனிக்குடித்தனம் போனால் என்ன என்று தோன்றியது. கர்ப்பகால அவஸ்தை என்பார்கள், விடவும் முடியாது வைத்துக்கொள்ளவும் முடியாது. அதுபோலத்தான் அக்கா என்கிற விஷயத்தை எண்ணினாள்.

முதுகில் இதழ்களை ஒற்றி செல்வாவை எழுப்பலாமா என்று யோசித்தாள். கொலுசுகளைக் கழற்றிப் பர்ஸில் வைத்துவிட்டு, இரண்டாம் நபரொருத்தி அந்த வீட்டுக்குள் இருப்பது யாருக்குமே வெளியே தெரிந்துவிடாத வண்ணம், சத்தம் போடாமல் பேசி, சத்தம் போடாமல் சிரித்து, சத்தம் போடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒலியற்ற சித்திரமாய் அந்த இடத்துக்கான இருத்தலை மாற்றிக் கொண்டு, அன்றைய தினம் காலையிலிருந்தே தன்னாலான எல்லாவற்றின் மீதும் கள்ளத்தனத்தைப் பூசியபடி இருந்தது. வேண்டாம் என்று அதுவரை அதட்டிக் கொண்டிருந்த மனது, ‘வேணும் இப்பவே வேணும்’ என்று தன்னை அதட்டிய இன்னொரு மனதைக் கையாள வழியின்றி விக்கித்து நிற்க, சிந்தாமணி அவனைப் பின் புறமாக அணைத்து, வெற்று முதுகில் அழுந்தப் பதித்த தன் முத்தத்தின் ஈரத்தால் அவனை எழுப்பினாள். கனவில் எங்கோ தனியாய்த் திரிந்து கொண்டிருந்தவன், சட்டென்று மழை பெய்தாற் போல் கண்களைத் திறந்து, ‘என்னடா குட்டி?’ எனக் கேட்டான். ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் இருந்த சிந்து, ‘என்னன்னு கேக்கற? என்னன்னு சொல்லணுமா? ஒனக்குத் தெரியாது?’ எனக் கேட்டாள்.

கிசுகிசுப்பான அவர்களது சம்பாஷணையின் நடுவில் எதோ சத்தம் கேட்க, சட்டென்று உடலுக்குள் ரத்தம் பொங்க, எழுந்து கொண்டான் செல்வா. சன்னலை முழுவதுமாகத் திறந்து விடாமல், லேசாகத் திறந்து என்ன எனப் பார்த்தான். காம்பவுண்டு சுவர் விக்கெட் கேட்டைத் திறந்து வைத்து ஸ்டாண்டோடு வண்டியை வெளியேற்றித் தெருவில் நிறுத்தி சாவியிட்டுத் திறந்து கொண்டிருக்கும்போதுதான் அது உறைத்தது செல்வாவுக்கு. ‘அடக் களவாணிப் பயலுகளா, வெங்கடேசன் வண்டிய ஆட்டயப் போடுறானுகளா?’ என்று அவிழ்ந்த கைலியை இறுக்கிக் கொண்டு சட்டையை அவசர அவசரமாய் உடல் மீது செருகியவன், ‘இந்தாரு நீ சமையல் ரூமுக்குள்ள போய் இரு, நா வந்துர்ரேன்’ என்று படபடவென வெளியே வருவதற்குள், இரண்டு வண்டிகளில் மொத்தம் நாலு பேர் தெருமுக்கைக் கடந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. தலையில் கைவைத்தபடி அப்படியே நின்ற செல்வா, அயர்ந்தவனாய் மறுபடி வீட்டுக்குள் வந்தான். யாராவது இன்னும் தங்களைப் பார்ப்பது போலவே தோன்றியது. ‘சிந்து,வெளிய வா’ என அழைத்தான். வந்தவள் முகமெல்லாம் வெளிறியிருந்தாள். அவள் உடம்பு மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

வளரும்