யாக்கை 13

யாக்கை 13
வெறுப்பின் தடம்


மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத் தொடங்கி விடுவது தமாஷான விஷயம். ஆட்டோவில் வந்து கண்ணன் நகர் மெயின் ரோடில் “சேவற்கொடியோன் ஆட்டோ கன்ஸல்டன்சி” என்று எழுதப்பட்டிருந்த நியான் போர்டைப் பார்த்ததும் ‘இங்கதான்’ என்று இறங்கிக் கொண்டார்கள். அலுமினியம் சேனல் டோரின் கண்ணாடியில் திக்கான கருப்பு நிற ஸ்டிக்கர்கள் உள்ளே என்ன என்பதை முற்றிலுமாகத் தெரியவிடாமல் செய்திருந்தது. வாசலில் அனுமதி பெற்று உள்ளே வரவும் என இருந்த பிரிண்ட் அவுட் லேசாகக் கிழிந்திருந்தது. செல்வா கதவை மூன்று முறை சம்பிரதாயமாகத் தட்டினான்.

உள்ளே இருந்து சடக்கென்று கதவு திறக்கப் பட்டது. நெற்றியிலிருந்து இரண்டு பக்கமும் வயலட் கலரில் சாயம் பூசியிருந்தவனுக்கு அதிகபட்சம் 17 வயது இருக்கலாம். “வாங்க”  என்று அழைத்துச் சென்று ரிசப்சன் மாதிரி இருந்த முன் பகுதியில் இருந்த இரும்பு சேரில் அமரச்சொன்னான். சுந்தர் ராஜ் ஏட்டய்யா ”
பிபிக்கு மாத்திர சாப்ட மறந்திட்டேன்” என்று சோகையாய்ச் சிரித்தவர் “தம்பி கொஞ்சம் தண்ணி குடு” என்றார். அவர் யூனிஃபார்மைப் பார்த்த ஒரே காரணத்தால் அந்த வயலட் தலையன் மூலையில் இருந்த தண்ணீர் அண்டாவிலிருந்து பிடித்து வந்து தம்ளரை நீட்டினான். இதுவே சாதாரண ஆடையில் வந்திருந்தால் மூலையைக் காட்டி “அங்கன இருக்கு எடுத்துக்கங்க” என்று தான் சொல்லியிருப்பான். காவல் துறைக்கென்று கிடைக்கக் கூடிய முகாந்திர சலுகைகளில் இதுவொன்று.

செல்வா அந்த இடத்தைச் சுற்றிலும் பார்த்தான். எதிர்ப்பக்க சுவரில் புத்தர் காந்தி விவேகானந்தர் திருவள்ளுவர் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் பிள்ளையார் லட்சுமி வெங்கடாசலபதி மூவரும் ஒரே ஃபரேமுக்குள் புன்னகைத்தபடி இருக்க அந்தப் படத்துக்கு மேலே தோரணம் போல் பூச்சரம் தொங்க விடப்பட்டிருந்தது. ஊதுபத்திகள் நாலைந்து ஏக காலத்தில் புகைந்ததில் நறுமணம் போன்றதொரு வாசனை மூடப்பட்டிருந்த அந்த அறையெங்கும் கமழ்ந்தபடி இருந்தது.

நாலைந்து பசங்கள் உள்ளெ செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தனர். இவர்களுக்கு முன்பே அங்கே நாலைந்து பேர் காத்திருந்தபோதும் வெளியே வந்த பூப்போட்ட சட்டைக்காரன் உள்ளெ வாங்க என்று சுந்தர்ராஜ் ஏட்டைய்யாவைப் பார்த்து அழைத்தான்.

சில மனிதர்களைப் பார்த்ததுமே வெறுப்பின் கரிய தடமும் சேர்ந்தே தோன்றும். அப்படித் தோன்றிய பிறகு அந்தக் கடவுளே வந்தாலும் கதையை மாற்றித்தர முடியாது. செல்வா அப்படிப் பட்ட சூழல்களில் பெரும்பாலும் மௌனமாகி விடுவான். கதிரைப் பார்த்ததும் அவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. கொஞ்சமும் சினேகமற்ற தோற்றம். சட்டையின் முதல் இரண்டு பித்தான்களை அவிழ்த்து விட்டு உள்ளே அணிந்திருக்கும் வலை பனியன் சகிதம் நாலைந்து மாலைகள் அதிலிரண்டு தங்கச்செயின்கள் என்னைப் பார் என்னைப் பார் என்றாற் போல் கிடந்தன. சத்தமாகத் தும்மிவிட்டு “எலே மாரி அந்த ஏசியைக் குறைடா”
என்றவனின் குரலில் இது என் இடம் என்கிற பந்தா தான் தெரிந்தது.

“வாங்க ஏட்டய்யா…உட்காருங்க” என்றவன் செல்வாவை ஏறெடுக்கவே இல்லை.

சுந்தர்ராஜ் ஏட்டய்யா தன் கையிலிருந்த ஜெராக்ஸ் காபிகளைத் தர அதை வாங்கி அலட்சியமாகப் பார்த்தவன் “என்ன ஏட்டய்யா வண்டி ட்யூ பாக்கி இருக்குன்னு தூக்கிட்டம். பாக்கியைக் கட்டிட்டா இப்பமே வண்டியை எடுத்துக்கலாம்.” என்றான்.

அவன் அப்படித் தான் சொல்வான் என்று எதிர்பார்த்திருந்த சுந்தர்ராஜ் “இல்லை சார் இந்த வண்டி என் அக்கா மகளோட வீட்டுக்காரர் செகண்ட்ஸ்ல வாங்கிருக்காரு. ஆலம்பட்டிக்காரன் முத்தரசுன்னு ஒருத்தன் வண்டியை வித்து அதுக்கான விலையை வாங்கிட்டு டீசீ ஃபார்ம்ல கையெழுத்தும் போட்டுக் குடுத்திருக்கான். வண்டியோட ஆர்சி புஸ்தகம் மட்டும் ஊருக்குப் போயி எடுத்துட்டு வர்றதா சொல்லிருக்கான். வண்டியை வாங்குனவரு இப்ப திருப்பதி போயிருக்காரு. வண்டியை வித்தவன் ஏமாத்திருக்கான் போலருக்கு.அவனை நாம் பாத்துக்கிறேன். கம்ளெயிண்டே இல்லாமக் கவட்டையை பெளந்திர மாட்டம்..?” என்றவர் மீண்டும் கனிந்த குரலில் இப்ப எவ்வளவு பாக்கி இருக்கு என்று சமரசமான குரலில் கேட்டார்.

கதிர் உடனே மேசையிலிருந்த பட்டன் மணியை அடித்ததும் வெளியே இருந்த மூர்த்தி உள்ளே வந்தான்.

“ஏன் மூர்த்தி அந்த முத்தரசு வண்டி யார்டுல ஏத்தியாச்சா?

மூர்த்தி ஆட்கள் முன்பாக அவனை ஸார் என்று அழைப்பான்.

“இல்லைங்க  ஸார் நம்ம ஷெட்ல தான் ஏத்தி வச்சிருக்கம். நாளை மறுநாள் தான் யார்டுக்கு அனுப்ப சொல்லிருந்தீங்க” என்றான்.

அவனது பவ்யத்தை ரசித்துக் கொண்டே தன் உதட்டைக் கடித்து மீசை நுனியை  நாவால் வருடிக் கொண்டே “ஏட்டய்யா யார்டுல எடம் இல்லைன்றது தான் வாஸ்தவம். நல்லவேளை இங்கன தான் நிக்கிது. யார்டுக்கு ஏத்திருந்தா அப்பறம் சார்ஜே வேற…இங்கன்னா அதெல்லாம் வராது. மூர்த்தி எவ்ளோடா  பாக்கி?” என்று கேட்க வெளியே சென்று அக்கவுண்ட்ஸ் கயல்விழி லெட்ஜரைப் பார்த்து தொகையெழுதித் தந்த துண்டு சீட்டை மடித்து வந்து கதிரிடம் தர அதை அலட்சியமாக வாங்கிப் பார்த்தவன் “ஏட்டய்யா மூணு ட்யூ பெண்டிங்க்…வண்டி தூக்குன சார்ஜ் யார்ட் சார்ஜ் லேட் பேமெண்ட் சார்ஜ் எல்லாம் சேர்த்தா மூவாயிரம் ரூவா வருது. நீங்க நமக்கு வேண்டப்பட்டவரா போயிட்டீங்க…டிபார்ட்மெண்ட் ஆளுகிட்ட கூட வாங்குனா நாளையும்பின்ன எந்த உதவியும் செய்ய மாட்டீங்கல்ல…ட்யூ காசு 2400 லேட் வட்டி இரநூறு சேர்த்து ரெண்டாயிரத்து அறுநூறு ரூவா கட்டிருங்க…புக்கை வாங்கிக்கலாம். அதான் என்னால செய்ய முடியும்” என்றான்.

செல்வா எதுவும் பேசவேயில்லை. வெங்கடேசன் எல்லாவற்றிலும் கெட்டிக்காரன் இப்படி ஏமாந்து போனானே என்று தான் வருத்தமாக இருந்தது. சுந்தர்ராஜ் ஏட்டய்யா பேரம் பேசிக் கெஞ்சி மிஞ்சி  ஒருவழியாக ரெண்டாயிரம் மட்டும் கட்டி ரசீதை வாங்கிக் கொண்டு எழுந்தார்கள்.

மூர்த்தியை அழைத்த கதிர் “பின்பக்கம் கூட்டிப்போயி அவங்க வண்டியை குடுத்துவிடு” என்று  சுந்தர்ராஜ் ஏட்டய்யாவை “நீங்க போயி பார்த்து எடுத்துக்கங்க ஏட்டய்யா” என அனுப்பினான். செல்வாவிடம் “நீங்க உட்காருங்க ஸார் ஆர்சிபுக்கை வாங்கிட்டு போவீங்க” என்றான் கதிர்.

சரி என அவனை அமரச்செய்து விட்டு ஏட்டு மட்டும் கிளம்பிச் சென்றார்.

ஏசி குளிர் லேசான சப்தத்தோடு தாலாட்ட சட்டென்று கதிர் சேரை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு வந்தவன் “ஒண்ணு கேட்கலாமா உங்ககிட்டே..?” என்றான்.

எதைக் கேட்கப் போகிறான் எனப் பார்த்தவனிடம் “ ஏட்டய்யா மருமகன் திருப்பதிக்குப் போயிருக்கதா சொன்னாப்டி. பசங்க வண்டியை எடுக்க வந்தப்ப வீட்டுக்குள்ளாற கலர்ப்படம் ஓடுனதப் பார்த்திட்டு வந்து சொன்னானுங்க…நா அசந்துட்டேன். உங்கூட இருந்தது அம்சமான ஆளுன்னு வேற சொன்னாங்கிய அதெப்படி உங்க ஆளா அல்லது வேற மாதிரியா? ஒரு ஆர்வத்தில கேட்குறேன். தப்பா நெனக்காதீங்க” என்றான்.

ரத்தம் கொதித்து தலைக்கேறிய செல்வா “ இங்க பார்…உன்னைய மாறி சாமியார் கேஸ் பார்த்தவன் கிடையாது நானு. கழுத்தை அறுத்துப் போட்டுப் போயிட்டே இருப்பேன். உன் பேச்சுப் பு..தியெல்லாம் வேற எங்கனா வச்சிக்க..” என்று எழுந்தவன் எதிரே வந்த மூர்த்தியின் கையிலிருந்து ஆர்சி புக் இருந்த ப்ரவுன் கவரைப் பிடுங்கினாற் போல் பறித்துக் கொண்டு வெளியே நடந்தான்.

சுந்தர்ராஜ் அதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு காம்பவுண்டுக்கு வெளியே வந்திருந்தார்.

கிளம்பலாம் என்று நகர்ந்த போது லேசாய்த் தூறல் பொட்டாய் விழுந்தது. வானை வெறித்தான் செல்வா. அதுவரை சன்னப்படுத்தி வைத்திருந்த சுந்தர்ராஜ் ஏட்டய்யாவின் வாக்கி டாக்கியில் “கொன கொன” வென அதன் இயல்பான விளித்தல் தொடங்க சப்தத்தை அதிகரித்தார். வழங்கப்பட்ட சேதியை “அய்யா…சரிங்கய்யா சரிங்கய்யா” என்று கேட்டுக் கொண்டிருந்தவர் முடித்து அணைத்து விட்டு
“ எளவெடுத்தவனுங்க சாவுறதுக்கு எடமே கெடக்கலியா..? கடைவீதில வந்து தான் சாவணுமா?” என்று அலுத்துக் கொண்டவர் “செல்வா என்னைய ஆர்.எம்.சி ஸ்கூல் பக்கத்துல கடைத்தெருவில முரளி கேசட் செண்டர்னு அந்தக் கடை வாசல்ல எறக்கி விட்டுருங்க தயவு செய்து என்றார். வண்டியை வெங்கடேசன் வீட்டுல ஏத்தி நிப்பாட்டிறச் சொன்னாப்டி எனவும் சொன்னார். சரி என்ற செல்வா அவரைப் பின்னால் உட்கார சொல்லி விட்டுத் தான் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

என்னாச்சு ஸார் எனக் கேட்ட செல்வாவின் தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்ட சுந்தர்ராஜ் “எவனோ அனாதைப் பய கேசட்டு கடை வாசல்ல ரத்தம் கக்கி செத்துக் கெடக்கானாம். இன்ஸ்பெக்டர் ஊர்ல இல்ல எஸ்.ஐ என்னைய முதல்ல போயி பாடியை செக்யூர் பண்ண சொல்றாரு. பின்னாலயே வர்றாராம். அப்டின்னா எங்க பாஷையில என்ன அர்த்தம் தெரியுமா…? நீ பார்த்துக்க என்னைய எதிர்பார்க்காதன்றது தான். இன்னம் இது வெறும் டெத்தா அல்லது மர்டரான்னு தெரியணும். அப்பறம் இருக்கு தலவலி” அலுத்துக் கொண்டே சொல்லி முடித்தார்.

வலது பக்கம் ஆட்கள் வேலை செய்கிறார்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் என போர்ட் இருக்க அதைப் பார்த்ததும் தயங்கிய செல்வாவின் தோளை இறுக்கமாகப் பிடித்து நீங்க போங்க…நம்மளுக்கில்லை அது” என்றார் சுருக்கமாக.

சாலை இரண்டாகப் பிளந்து ஒரு பக்கம் வேலை முடிந்து மீண்டும் மண் கொண்டு நிறைத்திருக்க மறுபுறம் வாயகன்ற கிழட்டுப் பூதத்தின் கோரச்சிரிப்பைப் போல் விரிந்திருந்தது. செல்வா அத்தனை மேடு பள்ளங்களிலும் ரொம்பக் குலுங்காமல் ஏற்றி இறக்கி ஓட்டினான். ஒரு வழியாக ஆர் எம் சி பள்ளியின் காம்பவுண்ட் சுவரை அடைந்து மெயின் சாலையைப் பிடித்தவனுக்கு இடம் பற்றிய எந்தக் குழப்பமும் இல்லாமல் கூட்டமாக ஜனங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தைச் சென்றடைந்தான்.

“சரிங்க செல்வா நீங்க கெளம்புங்க” என்றவாறே கூட்டத்தை நோக்கிச் சென்றவர் “தள்ளு தள்ளு வெலகுங்கய்யா…!”என்று அதிகாரத்தைப் பூசிக் கொண்ட குரலில் சப்தமாகக் கூவினார் சுந்தர்ராஜ். கூட்டம் அவரது சீருடையைக் கண்ட மாத்திரத்தில் பாதியாய்ச் சிதறியது. தனக்கு அறிமுகமான முகங்களைத் தேடித் தோற்ற ஏட்டய்யா சரியாய் வரும் என்று தோன்றிய இரண்டொரு முகங்களைப் பார்த்து அவர்களைத் தொட்டுப் பிடித்த பாணியில் பேசினார். இந்தாருங்கய்யா…முதல்ல பார்த்தது யாரு…இந்த ஏரியாக்காரங்க இருக்கீங்கள்ல…என்னையப் பார்த்ததும் ஓடிராதீங்க…அப்பறம் கச்சேரிக்குத் தூக்கிட்டு போயி லாடம் கட்டிருவேன்..ஜாக்கிரதை என்றார். கூட்டம் இப்போது சொற்பமாய்க் குறுகி இருந்தது.

மை தடவினாற் போல் உடம்பு லேசாய் நடுங்க கையில் இருந்த கித்தான் பையை நெஞ்சோடு இறுக்கமாய் அணைத்தபடி நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்கவரிடம்

” உங்க பேர் என்னய்யா?” என்று கேட்டார் சுந்தர். அதற்கே அவருக்கு கண் தளும்பி விட்டது. “நான் இப்பதான் வந்தேன்” என்றார் சன்னமான ஒரு தோற்றுப்போன குரலில். “எப்ப வந்தா என்னய்யா உன் பேர் என்ன?” என ஒருமைக்கு மாறினார் சுந்தர். வெங்கட்ராமன் “லாட்டரி டிக்கெட் விக்கிறேன் தெரு தெருவா அலைகிறேன் எனக்கு ஒண்ணுமே தெரியாது நான் பார்க்கும் போது இங்கே கூட்டமாக நின்னாங்க நானும் வந்தேன்” என்று மனதில் இருந்து ஒப்பித்தார்.

அடுத்த ஆள் வலை பனியனும் மடித்துக் கட்டிய அழுக்கு வேஷ்டியுமாக “ஐயா எம்பேரு மணி நான் எதுத்தாப்புல பாலு பஞ்சர் கடையில் வேலை பார்க்கிறேன்.
இந்த ஆளு இங்க ரெகுலரா வர்றவர் தான். கேசட் கடை முரளியோட சினேகிதன் தான். வருஷகணக்கா இதே ஏரியால இருக்கிறவர் பெயர் எழுமலை.
அதோ அங்கு ஆலமரத்துக்கு பின்னாடி சைடு வாங்கி நிக்குது பாருங்க 77 47 அந்த அம்பாஸர் வண்டியோட ஓனர். டிரைவர் இவர் தான். எப்பவுமே குடிச்சிட்டே இருப்பாரு. இன்னைக்கும் நல்ல போதையில் வந்து உட்கார்ந்தார். ஒரு சிகரெட் எடுத்து பத்த வச்சாரு. திடீர்னு ரெண்டு மூணு முறை செருமிட்டே இருந்தவரு அப்படியே முன்னாடி சாய்ந்து விழுந்துட்டாரு. வந்து பார்த்து நிமித்தினா ரத்தமா வாந்தி எடுத்து இருக்காரு. தண்ணீ தண்ணீன்னு கேட்டாரு. வாங்கி ஒரு வாய் குடிச்சிருப்பாரு. அப்படியே கண் செருகி…” சுந்தர்ராஜனுக்கு தேவையான ஆரம்பகட்ட தகவல்கள் அனைத்தும் தந்த மணி ஆசுவாசமாக பார்த்தவர் “சரி
நீ கடைக்கு போ திரும்ப கூப்பிடுறேன்” என்று மணியை அனுப்பிவிட்டு திரும்பி பார்த்தவர் இன்னமும் வண்டியில் அமர்ந்தபடியே காத்திருக்கும் செல்வாவை பார்த்து “இன்னும் கிளம்பலையா?” என கேட்டார். அவன் பதில் சொல்லும் முன் வாக்கி டாக்கி அழைக்கவே அதை உயிர்ப்பித்து மணி சொன்ன தகவல்களை முழுக்க ஒப்பித்தார். “நேச்சுரல் டெத் மாதிரி தாங்கய்யா தெரியுது. ஆங்…ஆங்…நல்லதுங்கய்யா நல்லதுங்கய்யா” என்றபடியே அதை அணைத்துவிட்டு “உஸ் அபா” என்ற படியே நெற்றி வியர்வையைக் கர்சீப்பால் துடைத்தார்.

“வண்டி வந்துகிட்டு இருக்கு. பாடியை மார்ச்சுவரிக்கு  அனுப்பிட்டு நானும் வந்துடறேன் ஒரு பத்து நிமிஷம் என்னை ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுங்க” என கேட்டதை தலையசைத்து ஆமோதித்தான் செல்வா. அடுத்த ஐந்தாவது நிமிடம் தனது புல்லட்டில் காலர் படபடக்க வந்து சேர்ந்தான் சின்னு. பின் சீட்டில் அமர்ந்திருந்த முரளி முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சின்னு சாதாரணமாகத்தான் இருந்தான். ஆட்டோவில் வந்து இறங்கிய பவுன்ராஜை பார்த்ததும் செல்வா வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஏழுமலையின் உடலை வண்டியில் ஏற்றும் முன் பக்கவாட்டில் வரிசையாக நின்ற முரளி சின்னு பவுன்ராஜ் ஆகிய மூவரும் வருத்தம் தோய்ந்த முகங்களோடு அவன் முகத்தையே பார்த்தார்கள். மிகச் சமீபத்தில் இறந்த சலனமற்ற முகத்தின் அத்தனை வருட கால பரிவர்த்தனைகள் தாறுமாறாக உள்ளே அலையடிக்க தொடங்கியது. சுந்தர்ராஜ் முரளியிடம் “செத்தவன் பேமிலி எங்க இருக்காங்க?” என கேட்க “விசாரிக்கணும் சார்” என்று பதில் சொன்னான்.

“ஏன்யா வருஷகணக்கா பழக்கம்கிறாங்க இந்தாள் வீடு தெரியாதா உனக்கு?” என குதர்க்கமாக கேட்ட சுந்தர்ராஜனிடம் ஒரு உணர்ச்சியும் காட்டாமல் “ஏட்டையா இந்த ஆளு ஒத்தக்கட்டை. பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு கட் பண்ணிட்டு போய் பல வருஷமாச்சு. அவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னு இனிமே தான் விசாரிக்கணும். தானா பொங்கி தனியா தூங்கி பொண்டாட்டி புள்ள குட்டி திரும்ப வராதான்ன்னு குடிச்சு குடிச்சு ஏக்கத்திலேயே செத்து போயிட்டான் எழுமலை. விசாரிச்சுத் தான் பார்க்கணும் சார்” என்றவனது பதிலில் திருப்தி அடைந்த சுந்தர் “எப்படியாச்சும் சொல்லிவிடுங்கய்யா” என்ற படியே செல்வாவின் பின்னால் வண்டியில் ஏறிக்கொண்டார்.

“ராக்கம்மா சொந்த ஊர் எது?” என கேட்ட சின்னுவிடம் “பிறந்த ஊரு பவளத்திட்டு தான். இப்ப இருக்கிறது அவங்க அண்ணன் குடும்பத்தோட கோயம்புத்தூர் பக்கம்னு சொல்லுவான் எழுமலை. பால் பூத்து கிருஷ்ணனுக்கு அவங்க இருப்பிடம் தெரியும்ந்னு நினைக்கிறேன்”  அலுப்பான குரலில் சொல்ல “என்னமாச்சும் செஞ்சு முதல்ல தகவலை சொல்லுவம்” என்றபடியே புல்லட்டை எடுக்கப் போனவன் அதை உருட்டிக்கொண்டு போய் அடைத்திருந்த சிமெண்ட் கடை வாசலில் ஓரமாக பார்க் செய்துவிட்டு “பவுனு சாமியோட ஆட்டோவை கூப்பிடு இன்னிக்கு அதுல தான் சுத்துறோம்” என்றான்

இன்றைய பொழுது இந்த விஷயத்தில் தான் செலவாகப் போகிறது என்று மட்டும் பவுன்ராஜ்க்கு நன்றாக புரிந்தது