யாக்கை 16

யாக்கை 16

துன்பச்சகதி


எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி வந்தால் சம்மந்தமே இல்லாத பேரமைதி.

அந்தத் தெருவில் முன் தினத்திலிருந்தே வழக்கத்துக்கு மாறாக ஆள் புழக்கம் அதிகரித்திருந்தது. மறுநாள் கலிவரதனின் முதல் நினைவு நாள். கொலை செய்யப்பட்ட நாள் என்பதை நினைவு நாள் என்று எப்படி இதமாகச் சொல்ல முடியும்..? மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் தன் மகள் பப்பியின் மன அமைதிக்காகவாவது சந்தானம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள முயன்றார்.  பிராமணர்கள் அதிகாலையிலேயே வந்து சாங்கியங்களை ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருந்தனர். முக்கியமான கட்டங்களில் மட்டும்  சொன்ன இடத்தில் அமர்ந்துகொண்ட பேரக்குழந்தை ஆர்யன் சொன்னதைச் செய்தான். மற்ற நேரங்களில் எல்லாம் அவனும் மூத்தவள் ஆஷிகியும் பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நேற்றுத் தான் அந்த வீடியோ கேம் உபகரணங்களை பஜாரிலிருந்து தருவித்திருந்தார் சந்தானம். எந்தப் பொம்மை என்றாலும் இரண்டு செட் வாங்கி விடுவார். ஆளுக்கு ஒன்று. எதையும் பகிர்ந்து கொள்ளவோ எதற்காகவும் காத்திருக்கவோ கூடாதல்லவா..?

கோட்டயத்திலிருந்து “வெள்ளிப்பரம்பில்” என்றொரு பெரும் பணக்காரக் குடும்பம் ஏற்கனவே தமிழ் நாடு உள்பட எல்லா தென் மானிலங்களிலும் நாலைந்து தொழில்களில் கொடி உயரப் பறந்து கொண்டிருந்தது, அவர்கள் தரப்பிலிருந்து எம்.எஸ் மில்லைப் பார்த்து ஒரு ஆரம்ப விலை சொல்லப் பட்டு அடுத்த கட்டம் அமர்ந்து பேசலாம் என்ற அளவில் வருகிற சனிக்கிழமை சந்தானத்தையும் பப்பியையும் கோடயத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்.

அனேகமாக இந்த டீல் முடிந்து விடும் எனத் தான் நம்பினார் சந்தானம். இன்னும் சில மாதங்கள் மட்டுமே இந்த மில் இந்த ஊர் இந்த நாடு எல்லாமே. சிங்கப்பூரில் அவருடைய தங்கை குடும்பம் குடியுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருந்தது. கலிவரதனின் உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். இரண்டில் ஒரு விரலைத் தொடச்சொல்லி எதாவதொரு இடத்தில் சென்று சேர வேண்டியது தான்.

மில்லைப் பூட்டியும் ஒரு வருடம் முடியப் போகிறது. வேலை பார்த்த பலரும் கெஞ்சிக் கதறுகிற நிலைமைக்குப் போயிருப்பது கண்ணாரத் தெரிந்தது. யாருடைய கதறலும் தனக்குக் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் சந்தானம்.

ஓரளவு வாய்ப்பிருந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் வேலைக்குச் சென்று சேர்ந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வுபெறும் தருவாயில் இன்னும் ஓரிரண்டு வருடங்கள் மட்டுமே சர்வீஸ் இருந்த யாருமே கரையேற முடியவில்லை. கம்பெனி கம்பெனி என கண் கண்ட தெய்வமாகவே அதனை வழிபட்டுப் பழகியவர்கள் வேலை இல்லை சேமிப்பு கைவராது சம்பளம் நின்றுவிட்டது புதிய வேலை ஒத்து வராது செல்வதற்குத் திசையில்லை சாகவும் வழியில்லை சாமியிடமும் பதிலில்லை அழுவதற்குக் கண்ணீர் இல்லை வாழ்க்கை சட்டென்று தங்களைத் தள்ளி விட்ட அபத்தக் குழியிலிருந்து எப்படி மேடேறுவது எனத் தெரியாமல் பாதியிலும் பாதியாகச் சுருங்கி நொந்தார்கள்.

கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள் எடுபிடிகளாக இலை எடுப்பவர்களாக வாயில் காப்போராக கிடைத்த இடத்தில் வெயிலாவது கிடைத்ததே என்று தொலைந்த நிழலை எண்ணிச் சிறிது சிறிதாக செத்துக் கொண்டிருக்க எந்த வாய்ப்பும் இல்லாதவர்கள் கலியாணம் காட்சிகள் நின்று போய் மருத்துவச் செலவுக்குக் கையேந்தி மொத்தத்தில் உருக்குலைந்து சாவைத் தாண்டிய துன்பச்சகதியில் நகர்வதற்கு வழியின்று உறைந்து போனார்கள்.

சந்தானத்தை அவர்கள் யாராலும் சந்திக்க முடியவில்லை. மில்லுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. முதலாளியின் மகள் பப்பி பொறுப்பேற்கிறாள் எனத் தெரிந்ததும் பாதிப் பேருக்கு நியாயம் கேட்கும் ஆவலும் குன்றிப் போயிற்று. என் புருஷன் சாவுக்கு என்ன நியாயம் என்று அவள் கேட்டால் என்ன சொல்வது என ஒவ்வொருவருமே தங்களைக் கொலயாளிகளாக எண்ணிக் குறுகித் தவித்தார்கள்.

கூடிய சீக்கிரத்தில் விடிந்து விடும் என்று இருளில் காத்திருப்பவர்களுக்குத் தொடர்ந்த இருள் சலிப்பூட்டும். பயமுறுத்தும். வெளிச்சம் வருவதற்காகும் தாமதம் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல் மனித மனம் தடுமாறும். இப்படி ஒரு நாளும் நடந்ததில்லையே என்று மறுகும். ஒரு கட்டத்தில் சோர்வுற்றுத் தளர்ந்து வீழ்ந்து போகும். அதன் பின் எத்தகைய வெளிச்சமுமே இருளின் இன்னொரு வருகையாகவே கருதத் துடிக்கும்.

மில் தொழிலாளிகளில் ஐம்பது பேர் எல்லோருமே ரிடையர் ஆவதற்கு நெருக்கமான காலகட்டத்தில் நிற்பவர்கள் சேர்ந்து ஒரு குழுவாகக் கிளம்பி சந்தானம் முதலாளியின் வீட்டுக்கு எதிர்ப்புறம் காலி கிரவுண்டில் கூட்டமாக நின்றார்கள். செக்யூரிட்டி வந்து விசாரித்த போது மில் தொழிலாளர்கள் முதலாளியை சந்திக்க வேண்டும் என்று சீட்டுதந்து அனுப்பினார்கள். போனவன் வந்து மில்லுக்கு வரச்சொல்றாங்க என்றான். மில் வாசலில் இதை விடப் பெரிய கதவு பூட்டிக் கிடப்பதைச் சொல்லி இருந்தாலும் செத்தாலும் இங்கனயே தான் கெடப்பம். முதலாளியை வரச்சொல்லுங்க. மூஞ்சியை பார்த்து ஐஞ்சே நிமிசம் கெஞ்சிட்டு கெளம்பிர்றம் என்று அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.

முதலில் செக்யூரிட்டி கம்பெனி ஆட்கள் வந்து கலைந்து போகச்சொன்னார்கள். யாரும் செவி மடுக்கவில்லை. கொஞ்சம் பெரிய மீசை கொண்ட செக்யூரிட்டி ஒருவரிடம் என்ன மத்தியாஸ் நீங்களும் இங்க தான் வேலை பாக்கிறீங்களா..? என்று சிவராமன் கேட்டார். அவருக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் போல அந்த மத்தியாஸ் சொன்னது இன்னும் வயிற்றில் புளி கரைத்தது.

“ இங்க காத்துக் கெடந்து ஒரு புண்ணியமும் இல்லை. ஒருக்காலும் சந்திக்க மாட்டாப்ல…முதலாளியோட வெறியும் பிடிவாதமும் தெரியாதா உங்களுக்கு..? அவர் நெனச்சா தான் தேன் வடியும். நெனக்காட்டி ரத்தம் தான் வடியும். போயி பொழப்புதலைப்பை பாப்பீங்களா…வெட்டியா இங்கன வந்து கூடி என்னாகப் போவுது” என்றார்.

அவரே தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு “”ரெண்டு நாளைக்கு முன்னாடி கையில பொம்பள புள்ளைய தூக்கிக்கிட்டு ஒரு புருஷனும் பொண்டாட்டியும் 3 மணி நேரத்துக்கு மேல காத்து கிடந்தாங்க. ஒரே ஒரு தடவை முதலாளியை பார்த்திட்டுப் போயிர்றம்னு அந்த பொம்பள ஒரே அழுகை.. நாங்க ஒரு சீட்ல அவங்க பேர் எழுதி அனுப்பி விட்டோம். உள்ள இருந்து ஒரே ஒரு பதில் தான் நோ அவ்வளவுதான். . வாசல்தான் இந்த பக்கம். கார் வந்து போறதுக்கு மொத்தம் நாலு வழி இருக்கு. எம் எஸ் முதலாளி மகளை கூப்பிட்டுக்கிட்டு  கிளம்பி போயிட்டே  இருந்தாரு. பாவம் அவங்களால அதை நம்பவே முடியல.  அப்புறமும் ஒரு மணி நேரம் போல  நின்னுகிட்டு இருந்தாங்க. நாங்க தான் சத்தம் போட்டு அனுப்பி வச்சோம்”. என்ற மத்தியாஸிடம் “யாரது?” என கேட்டார் முத்துவேல்.

” அப்ரூவராகி செத்துப் போனானே ஜேம்ஸ் அவன் தங்கச்சி ஜூலி தன்னோட புருஷனையும் குழந்தையும் கூட்டிட்டு வந்திருந்திச்சு. அவனை கவுக்கறதுக்காக இவங்ககிட்ட நிறைய உதவி பண்றேன்னு மொத சொல்லி இருந்திருப்பார் போல. அவன் தான் செத்துட்டானே இனி அவனால் ஆகுறதுக்கு எந்த காரியமும் இல்லேல்ல..? ஒரு பைசாவை நகர்த்துவாரா?”

தான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிவிட்டு சகாக்களை கூட்டிக்கொண்டு கிளம்பினார் மத்தியாஸ்.

லோக்கல் ஸ்டேசனில் இருந்து ஆறு போலீஸ் காரர்கள் வந்து “இங்கன உட்காரக் கூடாது. பர்மிசனில்லாம கூட்டமாக் கூடுறது தப்பு கலைஞ்சி போங்க”  என்று பாவனையில் லட்டிக் கம்புகளை ஓங்கிச் சுழற்ற கூட்டம் அப்படியே அமைதிகாத்தது.

உள்ளெ கலிவரதனுக்குத் திவசம் முடிந்தது.   பிராமணர்கூட்டம் வழங்கபட்ட பொருட்கள் பைகளோடு வெளியேறி காத்திருந்த ஆட்டோக்களிலும் டூவீலர்களிலும் கிளம்பிச் சென்றார்கள். ஒரு கணம் திறந்து மூடப்படும் கதவின் வழியாகக் கீற்றுப் போல் சந்தானம் முதலாளி தென்பட்டார்.

முத்துவேல் கத்தினார் “ எசமானே…கொஞ்சம் கருணை வையிங்க.. ஆயுசு முச்சூடும் உங்களுக்காக உழைச்ச கூட்டத்தை கழுத்துல எட்டி மெதிக்காதீங்க..ஐயா எதாச்சும் வழி காட்டுங்க என்று கத்தக் கத்த கதவு மீண்டும் முழுவதும் சாத்திக் கொண்டது.

கொஞ்ச நேரம் எந்தத் தடமும் இல்லை. சற்றைக்கெல்லாம் மாடி விளக்குகள் பளீரிட்டன. மூன்றாம் மாடியின் முன்புற விதானத்தில் சந்தானம் முதலாளி தோன்றினார்.

என்ன வேணும் முத்துவேல்…எங்கிட்ட இன்னமும் என்ன வேணும்..? ஒரு கொலை செய்தது பத்தலையா..? இன்னம் சந்தானம் முதலாளி மண்ணுல சரியணும்னு கூட்டமா கெளம்பி வந்திருக்கியா..?”

“ஐயா யாரோ 5 பேரு செய்த தப்புக்கு எங்க எல்லாரையும் ஏன் சவட்டுறீக..? ஒருத்தன் செத்துட்டான். மத்தவங்களையும் தூக்குல தொங்க விட்டாலும் எங்களுக்கு பாதகமில்லை. நாங்க அப்பாவிக தானே எசமானே…உழைச்சதைத் தவிர வேறேதும் தெரியாதே அய்யா”

“நீ சொல்றது ரொம்பச் சரி. ஆனா எனக்கு உங்க யாரோட பேரும் தெரியலை. எல்லாம் மறந்து போயிட்டது. என் மருமகனைக் கொன்னு போட்டது இதே யூனிஃபார்ம் போட்ட ஐஞ்சு பேரு…எந்த அஞ்சு பேருன்றது விஷயமில்லை…எனக்குக் கண் முன்னாடி இந்த யூனிஃபார்ம் தான் வந்துட்டு வந்துட்டு போவுது. உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி சொல்றேன்.இனி எம்.எஸ் மில்லைத் தெறக்கப் போறதில்லை. உள்ளே இருக்கிற மெஷின்களை, தாங்கிட்டு இருக்கிற நெலம் உள்பட எல்லாமே விலை பேசி வித்துட்டேன். இன்னம் ஒரு மாசத்ல வேற முதலாளி வேற தொழில் வேற பேர்னு ஆயிரும்.. வர்றவன் வேலை குடுத்தா தாராளமாப் பாருங்க. என் கையில எதும் இல்லைஇனிமே இங்க வராதீங்க சரியா?”

அவர் சொல்லி முடித்ததும் பின்னால் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அனேகமும் அணைந்தன. முன்பே சொல்லி வைத்திருப்பார் போலும். யாரையும் லட்சியம் செய்யாமல் உள்ளெ திரும்பிச் சென்றார்.

முத்துவேல் உட்பட எல்லாருமே அதிர்ந்து நின்றார்கள். ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நம்பி வந்த அவர்கள் அந்த இடத்திலேயே நெடு நேரம் நின்றுகொண்டிருந்தார்கள். மாபெரும் நம்பிக்கை துரோகம் ஒன்றினைப் போல் பொருத்தமற்ற நேரத்தில் வந்த மாத்திரத்தில்  வலுக்கத் தொடங்கிற்று மழை.

(வளரும்)