யாக்கை 22

யாக்கை 22

வெண் தாமரைக் குளம்


து வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய மொஃபஸல் பஸ் ஆகையால் ஒரு பக்க சீட்டுக்கள் இருவருக்கானவையும் இன்னொரு பக்கம் மூவருக்கானவையுமாக இருந்தன. மூவருக்கான ஸீட்டில்  சன்னலோரத்தில் சிந்தாமணி அமர்ந்திருந்தாள்.  பேருந்து வேகமெடுக்கும் போதெல்லாம் காற்று , சன்னல்களினூடாக  ஆக்ரோஷமாய்ப் புகுந்து   முகங்களில் விளையாடியது. சிந்தாமணிக்கு நெடுந்தூரம் செல்வதற்கான பயணமாக அது இல்லையே என்று ஒரு கணம் ஏக்கமாக இருந்தது. காலடியில் வயர்க்கூடையை இரண்டு கால்களுக்கும் நடுவே இருத்தியிருந்தாள். அதனுள் பெரிதாகப் பணமோ பொருட்களோ இல்லையென்றாலும் அடிக்கடிக் கீழே குனிந்து பை அதன் இடத்தில் பத்திரமாக இருக்கிறதா எனப் பார்க்கத் தவறவில்லை.

அவளுக்கு அடுத்தாற் போல்  எதையோ கேட்டு தொணத் தொணத்திக் கொண்டே வந்த குழந்தையை மெல்லிய குரலால் எச்சரித்து அமர்த்தியவளுக்கு சிந்தாமணியின் வயது தான் இருக்கும். மடியில் சமீபத்தில் பிறந்த சிசுவொன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அதன் உறக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக மூத்தவளிடம் பொறுமையாய்ப் பேசி வருகிறாள் என்று தெரிந்தது. இப்போது மறுபடி அந்தக் குழந்தை எதையோ அம்மாக்காரியின் காதோடு மீண்டும் கிசுகிசுக்க அதே நேரத்தில் மடியிலிருந்தது எழுந்து கொண்டு வீறிட்டழவே கடுப்பானவள் பக்கத்தில் இருக்கும் மகளின் தலையில் அழுத்தமாய்க் கொட்டினாள்.  தற்சமயம் மூத்தவளும் அழத் தொடங்கினாள். முந்தைய அமைதி முற்றிலுமாக அழுகைக் குரல்களால் கெட்டதும் பஸ்ஸில் அமர்ந்திருந்த அனேகம் பேர் தற்காலிக உறக்கம் கலைந்து போனதில் நசநசவென்று பேச தொடங்கினார்கள். சிந்தாமணிக்கு இப்போது சன்னம் குறைந்து வீசும் காற்றை ரசிக்க மனம் ஒப்பவில்லை. அவள் இறங்க வேண்டிய சீனியம்மன் கோவில் ஸ்டாப் வர இன்னும் ஐந்து நிமிடமாகலாம். எதற்கும் இருக்கட்டும் என எழுந்து கொண்டவள் குழந்தையையும் தாயையும் நாசூக்காகத் தாண்டி வெளியே வந்து கம்பியில் சாய்ந்து நின்று கொண்டாள்.

சீனியம்மன் கோயில் நிறுத்தத்தில் இறங்கும் போதே எதிர்த்தாற் போல் செல்வா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

“என்னடி வெளியூர் வண்டில வந்து இறங்குறே?”

எனக் கேட்டவனிடம்

“அட நீ வேற உள்ளூர் பஸ் ல நிறைய்ய சர்வீஸூக்குப் போனதால  இது ஆக்டிங்கு வண்டியாம். நா எங்க வெளியூர் போப்போறேன்?”

என்று நெற்றி வியர்வையைத் தன் இடுப்பில் சேலையோடு செருகியிருந்த கர்ச்சீப்பை எடுத்துத் துடைத்தாள். செல்வா எச்சில் விழுங்கினான்.

“ஏண்டி கர்ச்சீப்பை வக்கிற இடமாடி அது…பார்த்ததுமே மூடேத்துறியேடி”
“ ஆங்…நல்லா ஏத்துவாங்க….சும்மா போவியா…இங்காரு மாமா செமையா பசிக்கிது. வாயேன் எதுனா சாப்டலாம்”

என்றவளிடம் எதிரே நாலைந்து கட்டிடங்களுக்கப்பால் தெரிந்த  “அருணா டிபன் ஹோம்” பலகையைக் காண்பித்து

“ வாடி டிபன் பண்ணலாம்”

என்றான்.

“ வேணாம் மாமா.  ரெண்டு வடை காபின்னு முடிச்சிக்கலாம். நைட்டுக்கு அக்கா வீட்ல சாப்பிடப் போவணும். வரச்சொல்லிச்சி.”

“அப்டின்னா இன்னிக்கு சைவம் தானா?

என்றவனிடம்

“எப்பவுமே அதே நெனப்புலயே திரிவியா?”

எனப் போலிக் கோபம் காட்டினாள். செல்வம் காபி டம்ளரை ஏந்திக்கொண்டு தட்டிலிருந்த வடையைப் பிய்த்து  சட்னிகள் சாம்பார் என ஒவ்வொன்றாய்த் தொட்டுத் தொட்டு சிந்தாமணி சாப்பிடுகிற அழகையே ரசித்துப் பார்த்தான்.

“மாமா…நாளைக்கு கல்யாண வீட்ல உன்னையப் பாக்கணுமாம். வடிவக்கா வரச் சொல்லிச்சு”

என்றவளிடம்

“வேற எங்கனாச்சும் பார்க்கலாம்ல”

செல்வத்தின் முகத்தையே உற்றுப் பார்த்தாள் சிந்தாமணி.

“இங்க பாரு…எங்கக்கா திடீர் திடீர்னு செண்டிமெண்ட் பார்க்கும். தாய் தகப்பனத் தொலச்சிட்டு என்னைய வளர்த்தெடுத்தது வடிவக்கா தான். நெறைய விசயங்கள்ல என்னால அதை ஏன் எதுக்குன்னெல்லாம் கேட்கவே முடியாது. பெரிய விசயத்தை எல்லாம் நமக்கு சாதகமாக்கிக்கிறொம். இதெல்லாம் சின்னச்சின்ன அட்ஜஸ்மெண்டு. இதைச் செய்றதால என்ன குறைஞ்சிறப் போறம்..? “

மூச்சு வாங்கினாள்.

“அட ஏண்டி நீட்டி மொழக்குறே…பொதுவா பையன் வீட்டாரும் பெண் வீட்டாரும் முத முதல்ல பார்த்துப் பேச்சைத் தொடங்குறதுக்கு கோயிலுக்குப் போவாக. அதான் கேட்டேன். அப்பறம் கலியாண வீட்டுல சத்தமும் சந்தடியுமால்ல இருக்கும். அங்கன என்ன பேசிற முடியும்ன்றதையும் பார்க்கணுமில்ல..?”

எதோ நெடியடித்தாற்போல் அச்சூ அச்சூவென்று தும்மினான்.

“நீ சொல்றதும் சரிதான். கலியாண வீட்டுல வச்சிப் பார்த்தா ராசின்னு அக்கா நெனக்கிது. வந்து உன் முகத்தைக் காட்டு. அப்பால கெளம்பி நீ சொல்றாப்ல சீனியம்மன் கோயில்ல இல்லாட்டி நாடக மன்ற தெறந்தவெளி ஆடிட்டோரியம்  இருக்குதில்ல. அங்கன கூட உட்கார்ந்து சாவகாசமாப் பேசிட்டு வருவம். என்ன?”

அலைவதற்குப் பதிலாக கலியாண மண்டபமே தேவலாம் என்று தான் செல்வத்துக்கும் தோன்றியது.

“இந்தாரு வர்றப்ப நீ மாத்திரம் வராத. யார்னா சினேகிதக் காரனைக் கூட்டிட்டு வா. அப்பத் தான் துண்டாத் தெரியாது. சரியா?

என்றவள் சற்று நேரம் மௌனமாகி விட்டு

“ செல்வா…உங்கிட்ட டார்க் ப்ளூ சட்டை இருக்குல்ல ப்ளெயினா..அதை அயர்ன் பண்ணி போட்டுட்டு வா. அப்டி இல்லாட்டி மெரூன் கலர்ல ஒரு சட்டை வச்சிருக்கியே…அது கூட ஓக்கே தான்”  

பில்லுக்குப் பணத்தைத் தந்து விட்டு வெளியே வந்தார்கள். வெண்தாமரைக் குளத்திற்குப் போகும் வழியில் நெடுங்கால  அரசமரமொன்று தலை விரித்தமர்ந்திருக்கும் பசி தீராப் பிசாசைப் போல் இரவுகளில் பயமுறுத்தும். அதுவே பகலில் எல்லோர்க்குமான ஓய்விடம். பொழுது சாய்ந்த பிற்பாடும் அதனடியில் அமர்ந்திருக்கச் சிலர் மீதமிருந்தனர். வாகான ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள்.

அவளை நெருங்கி அப்படியே வளைத்து தன் மீது பொருத்திக் கொண்டவன் முகமெல்லாம் முத்தமிடத் தொடங்கினான். அவள் சிணுங்கலும் வெட்கமுமாக அவற்றை ஏற்ற படியே “டேய்…” என்று கூவினாள்.

“ என் செல்லக் கிறுக்கி..உங்கக்கா என்னையப் பார்த்து வேணாம்னு சொல்லிட்டா விட்ருவியாடி?” நான் எந்தக் கலர் சட்ட போட்டா என்னடீ”

என்றான்.

இயல்பாக அவன் பிடியிலிருந்து விலகிக் கொண்டே

“இந்தாரு செல்வா அக்கா என் கருத்துக்கு விரோதமா எந்த முடிவையும் எடுக்காது. உன்னைய ஏற்கனவே சரின்னு சொல்லிருச்சி. இப்ப பார்க்க வரச்சொன்னது சம்பிரதாயத்துக்குத் தான். சொல்றதைக் கேட்டுட்டு ஒழுங்கா வந்து சேரு. திரவியனூர்ல வீரமாகாளி கோயிலுக்கு எதிர் வரிசையில சங்கர் ட்ரைவிங் ஸ்கூல்னு இருக்கும். அத ஒட்டுன சந்து மாதிரி பிரியும். அதுல வந்ததுமே மொதல் கட்டிடமே ஜோதிராம் மகால்னு தான் இருக்கும். சரியா பத்தே முக்காலுக்கு அங்க வந்து சேரு” 

“யார்னே தெரியாதவங்க கல்யாணத்துக்கு மாப்பிள்ளை மாதிரி வரச்சொல்றே…சரி உனக்காக வர்றேன்”

என்று பெரிய மனசு செய்தாற் போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவன் மோவாயைப் பிடித்துக் கிள்ளியவள்

“செல்வா…எங்க கலாவதி அத்தையோட ரெண்டாவது மகளுக்குத் தான் அங்க கலியாணம். பையன் வீடு பெரிய எடம் வாழத்தோப்பு செல்வராசுன்னு கட்சில எல்லாம் இருக்காப்ல. சாப்பாடெல்லாம் கிராண்டா இருக்கும். வருவியா….சும்மா அனத்தறியே..”

என்றாள்.

“சரி நா போயி வைத்திப் பயலை ரெடி பண்றேன். அவன் தான் கூட வர்றதுக்குத் தோதானவன்”

என்றபடியே கிளம்பிப் போனான்.

*****************

ண்ணன் நகரிலிருந்து திரவியனூர் செல்லும் சாலைப் பிரிவில் வந்து கொண்டிருந்த   சொகுசுக்காரில் சில்லென்ற ஏசி குளிர் பெர்ஃப்யூம் கலந்து வருடியது சந்தானத்தைக் கிளர்த்தியது. கிரவுன் கிளப்பில் அவர் பெருமைக்குரிய மெம்பர்.  சீட்டாட்டத்தில் அன்றைக்கு அவர் லட்சத்துக்கு மேல் தோற்று எண்பதாயிரம் வரை ஜெயித்திருந்தார். என்னவோ திடீரென்று மந்தமாய்த் தோன்றியது. வீட்டுக்குப் போலாம் என்று அவர் மனசாட்சி அறைகூவலிடவே  அதைச் செயல்படுத்த விழைந்தார். சரியாக அரை மணி நேரம் முன்பு ஒரு ஏழு கிளவருக்காக ஏங்கிக் கிடந்த போது டெலிஃபோனில் ஒரு தகவல் சொல்லப் பட்டது. எம்.எஸ் முதலாளி கிடைத்த தகவலை மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்திக் கொண்டார். உண்மைதான் என்று தெரிந்த போது உடனே இந்தத் தகவலை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. யாரிடம் சொல்லலாம்..? பப்பி தான் அவரது முதல் சாய்ஸ்.

பப்பி குழந்தைகளுடன் ஜெய்ப்பூரில் நடக்கும் ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிருக்கிறாள். மாடசாமியின் தளகர்த்தன் ஒருவன் பெயர் பூபதி பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வருகிற பீமனின் நவகாலத் தோற்றத்துடன் மிகப் பவ்யமாக  நடந்து கொண்டான். துப்பாக்கி லைசன்ஸ் கராத்தே பயிற்சி என பல தகுதிகளுடன் அவன் ஒருவன் பத்துப் பேருக்குச் சமம் என்று புகழ்ந்திருந்தார் மாடசாமி. பப்பியும் ஜெய்ப்பூரில் இருந்து ஃபோன் செய்யும் போது பூபதியைப் பற்றி நல்லவிதமாகக் கருத்தளித்தாள். சந்தானத்துக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு மீண்டும் பப்பியின் மலர்ந்த முகமும் தெளிந்த தோற்றமும் மனசை நிறைத்தன. விரும்புகிற இடங்களுக்கெல்லாம் பயணித்துவிட்டு வரட்டும்.

சந்தானத்துக்கு தான் கேள்விப்பட்ட தகவலை பப்பியிடம் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.வீட்டுக்குப் போனதுமே மணீ…ட்ரங்க் கால்ல பப்பியைக் கூப்பிடு என்றவாறே மாடிப் படிகளில் ஏறத் தொடங்கினார்.ட்ரங்க் கால் புக் செய்து ஜெய்ப்பூரில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலை அழைத்த மணி மாடிக்கு லைன் தந்தான். பப்பி வெளியே சென்று இருப்பதாகவும் வந்ததும் தகவல் அளிப்பதாகவும் ரிசப்ஷனில் சொல்ல இரவு 8 மணிக்கு மேல் தானே அழைப்பதாக சொல்லி போனை வைத்தார்.

மாடிக்கு சென்று அதன் மூலையில் அவருடைய பிரத்தியேக பார் இருந்தது வீட்டு சிப்பந்தி சோமு 20 வருடங்களுக்கு மேலாக சந்தானத்துக்காகவே உயிரை கொடுப்பவன். விசுவாசி அடிமை நண்பன் எல்லாம் கலந்த கலவை

” எலே சோமு இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா”

என்றார் பார்த்தாலே தெரிந்தது சோமுவுக்கு கலிவரதன் கொல்லப்பட்ட பிறகு மெல்ல மெல்ல சந்தானத்தின் குடும்பம் இயல்புக்கு திரும்புவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகி இருக்கிறது. இன்னமும் முழுவதுமாக பழைய மலர்ச்சி வந்த பாடில்லை. ஆனால் ஒரு மாதமாக நல்ல வெளிச்சம் தெரிகிறது முதலாளி பழைய மாதிரி ஆகிக்கொண்டு வருகிறார். கூட்டமாக வந்து தொழிலாளர்கள் போராட்டம் போல் ஒன்றை நடத்தி கெஞ்சியும் மிஞ்சியும் பார்த்தார்கள் சந்தானத்திடம் நடக்குமா என்ன அன்றைக்கு ஏதோ இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்தார் முதலாளி. ஆனால் இன்று வரும்போது இவ்வளவு கொண்டாட்டமாக உற்சாகமாக சமீபத்தில் அவர் இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு குஷி.

“3 ரவுண்டு போதும் முதலாளி”

என்ற போது கண்கள் சிவந்து இருக்க

“டேய் இன்னிக்கு ஸ்பெஷல் நாள்ரா இன்னிக்கு மட்டும் என்னை ஏதும் தடுக்காதடா கொஞ்சம் அதிகமா குடிச்சுகிறேன்டா. மத்த நாளெல்லாம் வருத்தத்தில் குடிப்பேன் இன்னிக்கு சந்தோஷமா இருக்கேன் டா. ப்ளீஸ் டா”

கெஞ்சினார். டேப் ரெக்கார்டரில் மேற்கத்திய சங்கீதம் ஆனமற்றிலும் கத்தி கதறி கொண்டிருந்தது. உலகத்துக்கு அந்த வீட்டில் அப்படி ஒரு அறை இருப்பதோ அங்கே அந்த பாடல் அலறிக் கொண்டிருப்பதோ, தன்னிலை மறந்து சந்தானம் குடித்து இருப்பதோ எதுவும் முற்றிலும் தெரியாது. ஜெய்ப்பூரில் இருந்து அழைப்பு வந்தது

” பப்பி.. பப்பி.. பப்பி கண்ணு.. குழந்தைங்க என்னடா பண்றாங்க… நீ சாப்டியா?”

உற்சாகமும் சோகமும் கலந்த குரலில் ததும்பினார்

” டாடி எத்தனை ரவுண்டு குடிச்சிருக்கீங்க?”

” பப்பி கண்ணு பப்பி கண்ணு டாடி இஸ் வெரி ஹாப்பி. நம்ம வக்கீல் போன் பண்ணி இருந்தாரு. ஏ ஒன் இருதயம் இல்லை, ஜி ஹெச் ல அவன் செத்துட்டான். இன்னிக்கு சாயங்காலம். இன்னும் மூணு விக்கெட் பாக்கி பொறுமையா செய்யலாம்”

என்றார். எதிர்முனையில் பப்பி இதை முற்றிலும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது தெரிந்தது.

” என்ன டாடி திடீர்னு எப்படி?”

என்று மட்டும் கேட்டாள்.

” மஞ்சக்காமாலை. ஒரு மாசமாவே டிரீட்மெண்ட்ல தான் இருந்தான். தேறிட்டான் அப்படின்னு நம்புனாங்க. பட் இன்னைக்கு சாயங்காலம் செத்து போயிட்டான்” என்றவர் “பப்பி இது நமக்கு போனஸ்…நாம எதும் முயற்சிக்கலை. எந்த விதத்துலயும் இதுக்கு காரணமாகலை. தானாவே நடந்திருக்கு.தட் மீன்ஸ் கடவுள் நம்ம பக்கம் இருக்காருன்னு நினைக்கிறேன்”

என்றார் தெளிவான குரலில். லேசாக சிரித்து விட்டு

கடவுள் கலிவரதன் பக்கத்துல இல்லாமப் போயிட்டாரே டாடி

என்றவள் சுதாரித்துக் கொண்டு

“அப்பா மத்த 3 பேர் விஷயத்துல அவசரப் படவேணாம். பொறுமையா நிதானமா பாத்துக்கலாம். நமக்கு முதல்ல மில்லு கைமாறனும் முழு செட்டில் மட்டும் பிரச்சினை இல்லாம ஆகணும் உங்க கவனத்தை அதில் வைங்க போதும். மத்ததெல்லாம் அப்புறம்”

என்றாள்.

” சரிமா பாத்துக்கலாம்.”

என்றவர் மேற்கொண்டு சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்துக்கான முன்னேற்பாடுகளை குறித்து எல்லாம் பேசிவிட்டு குழந்தைகளிடமும் குட் நைட் முத்தா தந்து பெற்றுக் கொண்டு பீங்கான் கிண்ணத்தில் எஞ்சியிருந்த ஆப்பிள் துண்டங்களை மென்றபடியே மறுபடியும் ஒரு ரவுண்டு போட்டுவிட்டுத் தான் தூங்கச் சென்றார் சந்தானம். சோமு

“ நா கீழ போறேன் மொதலாளி”

என்றதும்

“ டேய் சோமு அந்த டேப்ல ஏ.எம்.ராஜா ஹிட்ஸ் கேஸட்டை போட்டு விட்டுட்டுப் போ”

என்றபடியே படுக்கையில் வீழ்ந்தார். மூடிய கண்களுக்குள் காணமுடியாத வண்ணங்கள் பெருக்கெடுத்து வழியத் தொடங்கின.

{வளரும்}