யாக்கை 25
குருதிப்பசி
பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே ‘பவளத் திட்டு’ என்று டிக்கெட் கேட்டால் ” மீன் மார்க்கெட்டா..ஜீஹெச்சா? என்று தான் கேட்பார்கள். ஒரே ரோடு இரண்டாய் மீன் மார்க்கெட்டுக்கும் மருத்துவமனைக்கும் பிரியும் இடத்தில் பெரிய பிள்ளையார் கோயில் உண்டு. அந்த ஸ்டாப்புக்குப் பெயர் பிள்ளையார் முக்கு. ஒரு பக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. சற்று தள்ளினாற் போல் டாக்ஸி ஸ்டாண்ட். டவுன் பஞ்சாயத்து ஒரு பெரிய பூங்காவை பராமரித்து வந்தது. அதன் பின்பக்கம் ஊருக்கு பொதுவாந்திர விளையாட்டு மைதானம். அதன் உட்புறம் ஓரத்தில் பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. காசில்லாத பலருக்கும் அந்த மரத்தடி தான் பொழுதுபோக்கு. பூங்காவுக்கும் மைதானத்திற்கும் இணைவிடத்தில் ஒரு திறந்தவெளி கலையரங்கம் இருந்தது. முன்பெல்லாம் அதில் நடனம் நாடகம் என்று போடுவார்கள். இரண்டு மூன்று வருடங்களாக ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை .
பிள்ளையார் முக்கு ஸ்டாப்பில் பஸ்ஸில் வந்து இறங்கிக் கொண்ட வெங்கடேசனின் மனைவி பானுமதி கூட வந்த தன் தங்கை கலாவிடம்
” எதுத்தாப்புல ஆட்டோ எதுனா வந்தா நிப்பாட்டு”
என்றாள். அதே நேரம் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு ஆட்டோக்கள் வர முதலில் வந்ததை கைகாட்டி நிறுத்தினாள். வண்டியை நிறுத்தாமல் ஸ்லோ செய்து எதிரே பிள்ளையார் முக்கு கோவிலை காட்டி
” சைட்ல ஸ்டாண்ட் இருக்கம்மா.. அங்கன போய் ஆட்டோ கூப்பிடுங்க”
என்று விரைந்தார். அப்போதுதான் ஆட்டோ ஸ்டாண்டை கவனித்து வரிசையில் முதலாவதாக இருந்த வண்டி டிரைவரிடம்
“ஜீஹெச்சுக்குப் போகணுங்க”
எனக் கேட்க 15 ரூபாய் என்றதை ஒப்புக்கொண்டு ஏறி அமர்ந்தார்கள். சீக்கிரத்திலேயே வந்துவிட்டது.அரசாங்க ஆஸ்பத்திரி ஜனங்கள் வந்து கொண்டு போய் கொண்டும் எப்போதுமே ஜே ஜே என்று இருக்கும். சொல்லப்பட்ட 198 வது வார்டு தேடிக் கொண்டு போய் ஒவ்வொரு படுக்கையாக தேடினார்கள்
சம்பிரதாயப்படி அந்த கூடத்தின் வாசலில் சாதாரண உடையில் நின்றிருந்த கான்ஸ்டபிள் பரசு இவளை பார்த்ததும்
“யாரை பாக்கணும்?”
என்று கேட்டார்.
“வெங்கடேசன் மனைவி. இது என் தங்கச்சி”
எனச் சொன்னதும்,
“நல்லா இருக்காரு. தூங்குறாப்ல”
என்று அனுப்பி வைத்தார்.
உள்ளே கட்டிலுக்கு கால் மாட்டில் சிறு இடத்தில் ஒடுங்கியபடி இருந்த பானுவின் அம்மா எழ முயற்சிக்க சும்மா இரு சும்மா இரு என்று பார்வையாலேயே அவளை அமர்த்தி விட்டு தான் கொண்டு சென்ற சாப்பாட்டு கூடை துணிமணி இத்யாதிகள் இருந்த பெரிய கித்தான் பை ஆகியவற்றை கட்டிலுக்கு அடியில் வெளி தெரியாத வண்ணம் சாதுரியமாக இறுத்தினாள். கலா தன் கையில் இருந்த காபி ஃப்ளாஸ்கை நீட்டியதை வாங்கிக் கொண்ட பொன்னம்மா சின்ன சின்ன பேப்பர் கப்பில் ஆளுக்கு கொஞ்சம் ஊற்றி தந்ததை வாங்கியபடி கலாவும் பானுமதியும் தரையில் அமர்ந்தார்கள். பருமனான நர்ஸ் ஒருவள் மெல்ல மெல்ல அடி எடுத்து வந்து இவர்கள் அமர்ந்திருப்பதை தாண்டி கட்டில் அடியில் நின்று கொண்டு வெங்கடேசன் உறங்குவதை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு
ட்ரிப்ஸ் முடிஞ்சிடுச்சு ஒருத்தியாச்சும் வராளுகளா
என்று தன் சகாக்களை திட்டியபடியே அவன் கையில் இருந்து ஊசியை லாவமாக பிடுங்கினாள். வெங்கடேசன் எழுந்து கொள்ள
“சும்மா படுங்க இன்னும் கொஞ்சம் தூங்குங்க”
என்று சொன்ன பானுமதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது
“இப்ப எதுக்குடி அழுகிற எனக்கு என்ன ஆச்சு நான் நல்லாத்தான் இருக்கேன். அந்த ரெண்டு பெட்டு தள்ளி படுத்து இருக்கான் பாரு முரளி அவனுக்கு தான் குத்து ஆழமா விழுந்துருச்சு. நல்ல வேளை உயிருக்கு ஆபத்து இல்லன்னு சொல்றாங்க”
என்று சொன்னமான குரலில் முனங்குவதை போல பேசிவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.
“ஏட்டி பானு… அவருக்கு காப்பிய குடு”
என்று டம்ளரை நிறைத்து பொன்னம்மா நீட்ட குறிப்பறிந்து கலா அதை வாங்கி வெங்கடேசன் கொஞ்சம் கொஞ்சமாய் பருகும்படி அவனுக்கு ஊட்டினாள்.
“நீ எப்ப வந்த?”
என்று சிரிக்க முற்பட்ட வெங்கடேசனிடம் ‘அம்மா கூடத்தான் வந்தேன்’ என பதில் சொன்னாள் கலா. ஒரு சுற்று எல்லா நோயாளிகளையும் பார்த்துவிட்டு வெளியேறப் போன அந்த நர்ஸம்மாளிடம்
“இவருக்கு சாப்பிட என்ன கொடுக்கிறது”
என கேட்ட பானுமதியிடம்
“எல்லாம் கொடுக்கலாம் என்னென்ன செரிக்குமோ எல்லாமே கொடுங்க”
என சிரித்தபடி அகன்றாள்.
அந்தக் கூடத்தில் இருந்த ஐந்து ஆறு நோயாளிகளுக்கும் அட்டெண்டர்கள் வந்து போக தொடங்க அந்த இடத்தின் சத்தம் அதிகரிக்க தொடங்கியது. இயல்பான குரலில்
“வாசலில் நின்ற ஏட்டையாவுக்கு போய் காப்பியை கொடு”
என உத்தரவிட்டான் வெங்கடேசன். ஃப்லாஸ்கில் மீதம் இருந்த காப்பியை எடுத்துக்கொண்டு கலாவும் பானு வெளியே போனார்கள்.
அண்ணே காபி குடிங்க
என்றதும் ஒரு கணம் வேண்டாம் என வாயால் மறுத்தவர் ‘சரி குடுங்க’ என கேட்க காபியை ஊற்றிக் கொடுத்தாள்.
“நான் ஒரு நாளைக்கு 8- 10 காபி குடிப்பேன்”
என்று திருப்தியாக அந்த கோப்பை எங்கே போடுவது எனத் தேட
“குடுங்க அண்ணே நான் போட்டுக்கிறேன்” என்று கலா வாங்கிக் கொண்டாள்.
“என்னம்மா பிரச்சனை?”
என அங்கலாய்ப்பான குரலில் கேட்டார் பரசு.
” என் வீட்டுக்காரர் வம்பா எந்த சண்டைக்கு போகிறவர் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப ஒழுக்கமா பொழச்சிகிட்டு இருக்கிறார். யார் வம்புக்கும் போகாத மனுஷன். தேடி வருது பிரச்சனை. நான் என்னத்த சொல்ல”
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கண்கலங்க ஆரம்பித்தாள்.
“இதெல்லாம் சகசம். நீ எதுக்குமா அழுகுற?. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி இருக்காங்க இன்னும் நாலு நாளுக்குள்ள அவனுங்கள தூக்கிட்டு வந்து கிண்ணிக்கால உருவிற மாட்டம்…? எத்தனை பேர பார்த்திருக்கோம்? “
என்று சமாதானப்படுத்தினார். கோபம் பொத்துக் கொண்டு வந்தது கலாவுக்கு தான்.
“குத்துனவன் நல்லாவா இருப்பான்?”
எனத் தொடங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி ஏசினாள்.
“அட பொறுமையா இரும்மா.கல்யாண வீட்டுக்காரர் செல்வராசு தன்னோட சொந்தக்கான்னு கூட பாக்காம அந்த கதிர், அவனோட கூட்டாளிக மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரும்மா. ரிமாண்ட் பண்ணி ஆறு மாசமாச்சும் உள்ள வெச்சே தீரணும்னு இன்ஸ்பெக்டர் சொல்லி இருக்காரு. உள்ள போய் மிதி வாங்கிட்டு வந்தா தான் திருந்துவானுங்க”
என்று சொன்னவர்
” ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்”
என பேன்ட் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருந்த தீப்பெட்டியை கையில் எடுத்துக் கொண்டே நகர்ந்து போனார்.
மீண்டும் உள்ளே போன பானு இயல்பாக நான்காவது படுக்கையைப் பார்க்க அங்கே தரையில் அமர்ந்திருந்த முரளியின் மனைவி மலர்விழியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். ரெண்டு பேரும் ஆறாவது முதல் 10 வரை க்ளாஸ்மேட்ஸ். இவள் தான் அந்த முரளியின் மனைவியா? ? மலர்விழி மஞ்சள் தேய்த்து குளித்து நெற்றி நடுவே மாபெரும் வட்டமாய் குங்குமப் பொட்டிட்டு இருந்தாள். அவருடைய உதடுகள் ஸ்லோகம் போல் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. பானுமதி போய் அவள் பக்கத்தில் அமர்ந்து கைகளைப் பற்றிக் கொண்டாள். மூன்று நான்கு நிமிடங்களுக்கு பிறகு முணுமுணுப்பை நிறுத்திவிட்டு
” எப்ப வந்த பானு?”
என சோகையாய் சிரித்தாள்.
“கொஞ்ச நேரம் முந்தி தான் வந்தேன் மலரு. அண்ணன் எப்பிடி இருக்காரு?”
என்றாள். வெடித்து வந்து அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு
“இன்னும் கொஞ்சம் ஆழமா இறங்கி இருந்தா உசுருக்கே ஆபத்தாக இருக்கும் போல. டாக்டர் அதிசயமா சொல்றாரு. குத்துனவன் ரொம்ப கவனமா நிப்பாட்டி இருக்கான். குத்துனானேன்னு வருத்தப்படுறதா, கவனமா செயல்பட்டதற்காக சந்தோஷப்படுறதா? ஒன்னும் புரியல. தலைக்கு வந்தது இதைவிட போகட்டும்னு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்”
என்றாள்.
“அதுக்காக சும்மாவா விடுறது? ஏண்டி மலரு அந்த கடங்கார பயல கைய கால உடைச்சு போட வேணாம்?”
என்று கத்தினாள். அவளை ஆற்றுப்படுத்துவது போல் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு
“இங்கே பாருடி அவனுங்களுக்கு அதுவே பொழப்பா இருக்கும். இன்னிக்கு இல்லாட்டாலும் இன்னொரு நாள் அவனுக்கு கிடைக்க வேண்டிய கூலி கிடைக்கும். ஏதோ இதோட போகட்டும்னு நாம நம்ம வேலைக்கு திரும்பிடனும். இந்த மாதிரி ஆசாமிங்களோட மல்லு கட்டிக்கிட்டு இருந்தா புள்ள குட்டிகளை யாரு கரை ஏத்துறது? வன்மத்தை எல்லாம் விட்டுட்டு பிராக்டிகலா யோசி. நமக்கு இந்த சண்டையே வேணாம். என் வீட்டுக்காரர் எவ்வளவோ சூதானமா இருப்பார். கல்யாண வீட்ல சாப்பிட போன இடத்துல எதிர்பாராமல் நடந்தது தலைவிதி தான். அடியே பானு,கட்டின பொண்டாட்டி புருஷனை உசுப்பேத்தி விடக்கூடாதுடி. நாம தான் கண்ட்ரோல் பண்ணனும். அண்ணனுக்கு நீ பக்குவம் சொல்லி வேலையை பார்க்க வை. இந்தச் சண்டை அடிதடி சமாச்சாரமே நமக்கு எல்லாம் வேணாம்”
தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தாள்.
இதை கேட்டதும் பானுமதிக்கு மலர் சொல்வது முழுவதும் ஏற்புடையதாக தோன்றியது. ஆமாம் நாம் நல்ல புத்தி தான் சொல்லணும். சும்மாவே வெங்கடேசனின் தொடக்க வரலாறு அதன் பல பக்கங்கள் இருட்டும் கருப்புமானவை. கல்யாணத்துக்கு பிறகு இவ்வளவு தூரம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பொறுப்பாக மாறி வந்திருப்பது நிச்சயம் சாதனைதான். இப்போது இந்த பிரச்சனை நடுவே குறுக்கே வருகிறது. தட்டிக் கொடுத்து மறுபடியும் நல்ல புத்தி சொல்லி அழைத்துப் போய் விடுவது தான் சரியாக இருக்கும். மலர்விழியை பார்ப்பது வரை இந்த பிரச்சனையில் ஒரு கை பார்க்க வேண்டும் அந்த கதிர் என்பவனை கை காலை உடைக்க வேண்டும். கத்தி எடுத்து குத்திய வரதனை நாலைந்து வருடங்களாவது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பொங்கிக்கொண்டு தான் இருந்தாள் பானுமதி. இப்போது அவளுக்கு உள்ளே குளிர தொடங்கியது. இப்படியெல்லாம் நடந்தால் அந்த கதிரும் வரதனும் அதன் பிறகு என்ன செய்வார்கள்?.
கதிர் பணக்காரன். அவனுடைய மனைவி கௌரிக்கு எக்கச்சக்கமான செல்வாக்கு. எல்லா ஊர்களிலும் பெரிய பதவிகளில் எல்லாம் அவருடைய பக்தர்கள் இருக்கிறார்கள். மலர்விழியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்ரா கூட கௌரியின் பக்தை தான். அதிகாரமும் பணமும் சேர்ந்து செயலாற்றும்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நம்மால் என்ன செய்துவிட முடியும்?. கடவுளுக்கு நன்றி.
வரதன் என்பவனை பற்றி கதை கதையாக சொல்லுகிறார்கள். கொலைக்கு அஞ்சாதவன். இல்லாமல் போனால் கல்யாண வீட்டுக்கு ஒருத்தன் கத்தியோடு வருவானா? ஏதோ இத்தோடு போகட்டும் அவரவர் செய்ததற்கு உண்டான பலன் கடவுள் தருவார் என்று மனத்தை சமாதானம் செய்து கொண்டாள். கலாவும் அவளும் பொன்னம்மா வீட்டுக்குப் போய் குளித்து துணி துவைத்து விட்டு திரும்பி வரும் வரை அங்கே தான் இருந்தாக வேண்டும். எப்படியும் மூன்று மணி நேரமாவது ஆகும். பானுமதிக்கு திடீரென்று பரபரவென்று வந்தது. அவள் உடனடியாக செய்ய வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது.
“நீ இரு நான் இப்ப வந்துடறேன்”
என்று தங்கை கலாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அசுவாரசியமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு படித்த நாளிதழையே மீண்டும் புரட்டிக் கொண்டிருந்த பரசுவிடம் வந்தாள்.
” எங்க மாமாவுக்கு இப்ப எங்க டூட்டி?”
என கேட்டாள். சற்றே யோசித்த பரசு
” சுந்தர்ராஜ் ஏட்டையா இன்னிக்கி கோர்ட் பாப்பாப்ள. இந்நேரம் ஸ்டேஷனுக்கு வந்துருக்கணும். நேர்ல பார்க்கணும்னா நீ உடனே ஸ்டேஷனுக்கு போ. ஒருவேளை அங்க தென்படலைன்னா எதுத்தாப்ல சிக்கந்தர் பாய் டீக்கடையில உட்கார்ந்திருப்பார். போய் பாருமா”
என்று வாஞ்சையான குரலில் சொல்லி அனுப்பி வைத்தார்
மறுபடி உள்ளே வந்து கலாவின் கையில் பத்தும் இருபதுமாக 100 ரூபாய்க்கு சில்லறை தாட்களைத் தந்து விட்டு தாழ்ந்த குரலில்
“நீ இரு மாமா ஏதாவது கேட்டா வாங்கி கொடு. நான் போய் சுந்தரராஜ் மாமாவை பார்த்துட்டு வந்துடறேன்”
என்று கிளம்பினாள். அவள் சொன்னது வெங்கடேசன் காதில் நன்றாக விழுந்தது என்றாலும் மூடிய கண்களை திறக்காமல் அப்படியே இருந்தான் வெங்கடேசன். சற்று தள்ளினாற் போல் அமர்ந்து மலர்விழியும் பானுமதியும் பேசிய அனைத்தையும் அவன் ஏற்கனவே உள்வாங்கி இருந்தான். வெங்கடேசன் எதையும் சொல்லுபவன் இல்லை. தன்னை சாதுவான ஒருவனாக தன் மனைவி மனதளவில் எண்ணுவது அவனுக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. ஒருவன் பேச்சில் வீரியமாக இருக்கக் கூடாது காரியத்தில் வீரியம் காட்டினால் போதும். உன்னை சாய்த்து விடுவேன் என்று ஒருவனிடம் பேசிக் கொண்டு இருப்பதை விடவும் அப்படிச் சொல்லுகிற நேரத்தில் சாய்த்து விடுவது சாலச் சிறந்தது. காரியக்காரர்கள் குறைவாகத்தான் பேசுவார்கள். பொண்டாட்டியிடம் வீரம் பேசுபவன் கச்சேரியில் தோற்றுப் போவான். பெண்களிடம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் தான் சொல்ல வேண்டும். மனைவி என்பவள் கணவனின் மீதான கண்மூடித்தனமான அன்பில் அவனை அப்பாவி என்றும் தன்னை அறிவாளி என்றும் நினைத்துக் கொள்வது இயல்பு தான். சொல்லி திருத்திக் கொண்டிருக்க தேவையில்லை. வரைபடம் ஒன்று கட்டிடம் ஒன்று என்பதைப் போல் நீ நினைப்பதை நினைத்துக் கொண்டிரு. நான் செய்வதைத்தான் செய்வேன் என செயல்படுவது வீரனுக்கு அழகு.
செல்வம் வெங்கடேசன் இருவரின் பழைய கதை புதைக்கப்பட்ட வாட்களைப் போல் மூன்றாவது நபர் அறியாத ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. துருப்பிடித்த வாட்கள் எனினும் இன்னும் அதில் படிந்த குருதிக்கறை அப்படியே தான் இருக்கிறது. எத்தனை ஆழத்தில் இருந்தால் என்ன? எவ்வளவு நாட்கள் ஆகி இருந்தால்தான் என்ன? கத்திகளுக்கு எப்போது பசித்தாலும் மனிதச் சதையை தின்று ரத்தம் குடித்தால் தான் அவை அடங்கும். எந்த கத்திக்கும் தம்மை ஏங்குகிற கரத்துக்கு விசுவாசம் காட்டத்தான் தெரியும். தான் விட்டாலும் செல்வம் விடமாட்டான் என்பதை நினைத்த மாத்திரத்தில் ஏளனமாய் புன்னகைத்துக் கொண்டான் வெங்கடேசன். அவனுக்கு பானுமதியைப் பார்த்தால் பாவமாக இருந்தது. நீ போய் உன் மாமனிடம் சமாதானம் பேசு. நான் என் வழியை பார்த்துக் கொள்கிறேன். செல்வம் சாயந்திரம் வருவான் அப்போது பேசிக் கொள்ளலாம் என நினைத்த மாத்திரத்தில் உறங்க முயற்சித்தான்.
***
கதிர் தன் கூட்டாளிகளோடு எஸ்கேப் ஆன சூட்டோடு குத்துப்பட்ட வெங்கடேசனையும் முரளியையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமண மண்டபத்தில் பந்தியை தொடர செய்துவிட்டு மாடிக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது வாழைத்தோப்பு செல்வராஜ் ரொம்ப தான் சூடாக இருந்தார்.
அவன் சண்டியர் தனம் செய்தது சண்டை போட்டது அல்லது கத்தி எடுத்து குத்தியதோ அவருக்கு பிரச்சனை இல்லை. தேவைப்பட்டால் கொலை கூட செய்யலாம் என்பது தான் அவருடைய மன வார்ப்பு. இந்த 60 வயது வாழ்க்கையில் அவர் பலரும் பார்த்தவர் தான். என் வீட்டு கல்யாணத்துல நான் பத்திரிக்கை கொடுத்து உன்னை அழைத்து இருக்கேன் உனக்கு ஆயிரம் பகை இருக்கட்டும் பந்தியில உட்கார்ந்து சாப்பிடுற இன்னொருத்தனை சண்டை போட்டு கத்தி எடுத்து குத்துறதுக்கு உனக்கு எம்புட்டு தைரியம்? அவ்வளவு பெரிய சண்டியரா நீயி.. உன் விரோதத்தை வாசலுக்கு வெளியில் வச்சி இருந்திருக்கணும். சாப்பிடுற இடத்துல கத்தியெடுத்தது தப்பு. இது இனிமே என் பிரச்சனை உன்னை என்ன பண்றேன் பாரு? என்று முதலில் முழங்கினார்.
செல்வராஜின் மருமகன் பாஸ்கர் அவரைக் கட்டுப்படுத்தினான். கதிர் அவருக்கு நெருக்கமான சொந்தம். கதிரின் மனைவி கௌரி செல்வராஜூடைய சகலை மகள். சின்னத் தியாகராஜன் அவருக்கு பங்காளி பெற்ற பையன். இவர்களுக்கு நடுவே என்ன சண்டை என்பதே மெதுவாய்த் தான் புரிந்தது. சின்னு கலியாண வீட்டுக்குத் தன் புடை சூழ வந்திருக்கிறான். அவனுடைய நண்பன் பவுன்ராஜூக்காக நியாயம் கேட்கப் போன இடத்தில் அவன் நண்பன் முரளிக்குக் குத்து விழுந்திருக்கிறது. பவுன்ராஜின் மனைவி வடிவரசியும் அவருக்கு ரிலேடிவ் தான். அவள் தங்கை சிந்தாமணிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை செல்வத்துடன் வந்த வைத்திக்கும் கதிருக்கும் தான் எதோ முட்டிக் கொண்டு சண்டையாகி இருக்கிறது.
சற்றைக்கெல்லாம் யூ டர்ன் அடித்து அவரே
“பொறுமையாப் போகலாம்பா…நடந்த மட்டிலும் போதும். எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தானே..? நாம கௌரிக்காக அமைதியாப் போய்த் தான் ஆவணும் என்ன சொல்றே சின்னு?”
என்று குளிர்விக்கத் தொடங்கினார். செல்வத்தைப் பார்த்து
“அந்தப் பயலைத் தூக்கியாந்து மன்னிப்புக் கேட்க வைக்கலாம். சபைல வச்சிப் பேசிக்குவம். பொறுமையா இருங்க”
என்றும் சொன்னார். செல்வா எதுவுமே பேசவில்லை. சின்ன தியாகராஜன் செல்வத்தை பார்த்து
” உங்களுக்கு எதுவும் அடி படலைல்ல பிரதர்?”
என ஆதுரமாய்க் கேட்க
“இல்லைண்ணே”
என்று பதிலளித்தான். அவனுக்கு வயிற்றில் பந்து போல் வலியெடுத்தது. இடித்ததா அடித்ததா என தெரியவில்லை முணுமுணுவென்று ஒரு எரிச்சல் அவ்வப்போது வந்து அடங்கி கொண்டிருந்தது. ஒரு ராத்திரி பார்ப்போம் சரியா காட்டி மருந்து கடைக்கு போய் கேட்கலாம் என்று நினைத்தான் நேரமாக ஆக ஆக வலி அதிகரிப்பது போல தோன்றியது.
சின்னு செல்வராஜின் சமரசப் பேச்சுக்குத் தன் பதிலாக
” சித்தப்பா, ஊர்ல முக்காவாசிப் பேரு கதிருக்கு எதிரிங்க தான். முரளி எனக்கு சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட். அவனை தொட்ட என்னை தொட்ட மாதிரி தான். சரகத்தில் சொல்லி இருக்கேன். அந்த கதிர் எந்த மூலைக்கு போனாலும் சரி அவனை தூக்கியாந்து மனசு குளிர அளவுக்கு வெளுத்திட்டு விடுறது தான் நம்ம அஜெண்டா. அந்த வரதன் கொஞ்சம் மோசமானவன் தான். ஏற்கனவே ஜெயில் பார்த்தவனுக்கு மறுபடி ஒரு முறை உள்ள போறது பெருசா உறைக்காது. முதல்ல அவன் பிடிபடட்டும். இன்ஸ்பெக்டர் எஸ்ஐ எல்லாம் நம்ம சொந்தக்காரங்க தானே? கதிரை விட்டுறலாம். அவனுக்காக இல்லைன்னாலும் நம்ம சாதிக்காகவும் அவன் பொஞ்சாதி அந்த கௌரியம்மா அதோட முகத்துக்காகவும் அவனை விட்டுறலாம்.. அந்த வரதன் யாரு..? அவனுக்கு என்ன அத்தனை வீம்பு. இவன் குடுக்கிற சம்பளத்துக்கு கொறைக்கிற நாய்க்கு அம்புட்டு வீம்பா..? அவனை விட்றதா இல்லை. நா பார்த்துக்கிறேன்”
என்றான்.
சாதியைக் காரணம் காட்டி சொந்தம் பந்தம் என்றெல்லாம் சொல்லி கௌரியின் கணவன் என்பதால் விட்டுவிடு என முழங்கி அவனுக்கு வக்காலத்து வாங்கும் யார் மீதும் செல்வத்துக்கு மரியாதை எழவில்லை. அவன் மனசுக்குள் ஒரே ஒரு தீர்மானம் தான் இருந்தது முதலில் வரதன். பிறகு கதிர். அமைந்தால் இருவரையும் வாழ்நாள் முழுவதும் மறந்து போகாத அளவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இப்போது அவனுக்கு தானும் வெங்கடேசனும் மாட்டிக் கொள்ளாமல் இதை எப்படி செய்வது என்பது மட்டும்தான் யோசனையாக இருந்தது. இது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிக மிக அமைதியாக எதையும் உணர்த்தாத நேர்கோட்டு புன்னகை ஒன்றை வெளிப்படுத்திய வண்ணம் உடன் இருந்தான்.
செல்வத்துக்கு ஒன்று மட்டும் புரிந்தது . இப்படி பல பேச்சுக்களை அவன் பார்த்திருக்கிறான் ஆரம்பத்தில் வீராவேசமாக தொடங்கிவிட்டு என் சாதி என் சொந்தம் கூடப் படிச்சவன், பக்கத்து வீட்டுக்காரன் என்றெல்லாம் காரணங்களோடு வந்து கை கொடுக்க வைப்பது அடுத்த கட்டமாக இருக்கும். செம்பு தண்ணீரின் மீது கை வைத்து இனிமேல் எதுவும் செய்ய மாட்டேன் என வாக்கு கொடுத்துவிட்டு தட்டில் கொழுந்து விட்டு எரியும் சூடத்தை கையால் அடித்து அணைத்து விட்டு வெற்றிலை பாக்கை மாற்றிக்கொண்டு உறவை புனரமைத்துப் பகையை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வீடு திரும்புவது எல்லாம் நல்ல அம்சம் தான். தரமான மனிதர்களுக்கு தான் அதெல்லாம் செல்லுபடியாகும். கதிர் தன்னிடம் சிந்தாமணி குறித்து பேசி அன்றைக்கே அவனைத் தேடிச் சென்று அறுத்து இருக்க வேண்டும். சரி ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு பிள்ளை குட்டி என வாழ்ந்து பார்க்கலாம் என்ற ஆசையின் காரணமாக உடம்பெல்லாம் எரிந்து கனன்ற வன்மத்தை அடக்கி கொண்டான். அதுதான் அவன் செய்த தப்பு போல இருக்கிறது. சிந்தாமணியின் சிரிப்பும் குரலும் அவனை மட்டு படுத்தி விட்டது.
நினைத்ததை வெளியில் சொல்வதில் பல பிரச்சினைகள் உண்டு. பகை பெரிதல்ல அதை அறிவிப்பதுதான் பெரிது. பகையை அறிவித்த கணத்திலேயே போர் தொடங்கி விடுகிறது போர் அறிவிப்பது வேறு. நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் நமக்குள் போர் வரும் என்று சொல்வது வேறு நமக்குள் பகைவரும் என்று சொல்வது வேறு பகை எனும் சொல்லின் சூனியம் அத்தகையது. செல்வா ஒருபோதும் சொல்பவன் இல்லை. அவனுக்கு செய்து தான் பழக்கம். கூட்டப் பெருமையை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டே அதை பிறர் மீதான ஏளனமாக மாற்றுவதை அவன் ஒருபோதும் ரசிப்பதில்லை. சிந்தாமணியின் உறவுக்காரர்கள் எல்லோரும் அவனுக்கு நண்பர்களும் இல்லை விரோதிகளும் இல்லை. கதிரை மன்னிப்பது அவனுக்கு ஒரு விஷயமே இல்லை.
நான் பார்த்ததில் பத்தில் ஒரு பங்கு பார்த்திருப்பானா அந்த வரதன். அவனுக்கு வரதனை கட்டி வைத்து சவுக்கால் அடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஒருநாள் முழுக்கவாவது உன்னை அலற அலற அடித்து விட்டு அதற்குப் பிறகு கொன்று போட வேண்டும். வெங்கடேசன் யார் என்று நினைத்தாய்? 12 அடி மதில் சுவரை தாண்டி தான் மட்டும் தப்பித்து ஓடாமல் செல்வத்தையும் சேர்த்து தப்ப வைத்து உடன் அழைத்து வந்தவன். உங்கள் இருவரில் யாராவது ஒருவரை கொன்று விடுவேன் என்று மிரட்டினால் செல்வத்தை விட்டு விடு என்னை கொன்றுவிடு என்று நெஞ்சை நிமிர்த்தி காட்டும் நண்பன். வரதன் என்னை குத்தி இருந்தால் கூட நான் விட்டு இருப்பேன். வெங்கடேசனை தொட்டுவிட்டால் சும்மா விட முடியாது.
“எண்ணி ஒரு மாசத்துக்குள் உன்னை செய்றேன்டா”
என்று மனத்துக்குள் நெடிது உயர்ந்து வளர்ந்திருந்த காய்ந்த மரங்கள் நிரம்பிய வனமொன்றில் ஒரு தீக்குச்சியை கிழித்து எறிந்தான் செல்வா. செய்து முடிக்கும் வரை நீ எரிந்து கொண்டே இரு மனமே!
{வளரும்}