யாக்கை 27
ஒற்றைப் பாதை
செந்தில்நாதபுரம் விலக்கில் இருந்து ரெண்டாய்ப் பாதைகள் கிளைத்தன. ஒன்று மூவரசபுரம் நோக்கிச் செல்லும் இரட்டைப் பாதை. இன்னொன்று ஃபாரஸ்ட் ஏரியாவுக்குள் செல்வதற்கான ஒற்றைப் பாதை. வனத்துறை செக்போஸ்டுக்கு முன்னால் ஓடையின் மீது கற்பாலம் ஒன்று இருந்தது. அவ்வப்போது சினிமா ஷூட்டிங்கெல்லாம் நடந்ததில் சிறிய சுற்றுலாத் தள அந்தஸ்து வந்திருந்தது. செல்வாவுக்கும் வெங்கடேசனுக்கும் பல வருடங்களாக அந்த இடம் தான் ஞானமடம். சரக்கு சைடிஷ் சகிதம் வந்து கற்திண்டின் மீது அமர்ந்து கொண்டால் சில்லென்று காற்றும் ரம்யமான பறவைச் சப்தமும் குடிப்பதற்கு தேவையான மனநிலையைத் தயாரித்துத் தரும். இப்போதெல்லாம் நிறைய மக்கள் நடமாட்டம் இருக்கிறபடியால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சும்மா உட்கார்ந்து பேசலாம். தம் அடிக்கலாம். தண்ணி அடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.
“யாருக்குமே தெரியாம இருந்திச்சி இந்த எடம். இப்பப் பாரு எம்புட்டு ஜனத் திரள்னு..எத்தனை குடிச்சிருப்பம் இங்கன உட்கார்ந்து.? இனி அதுக்கெல்லாம் இடமில்லைல்ல நண்பா?”
என அதிசயித்தான் வெங்கடேசன். எங்கோ பார்த்துக் கொண்டிருந்த செல்வா அசிரத்தையாக உம் கொட்டவே
“என்னப்பா எதையும் ரொம்ப யோசிக்காத, வர்றப்ப பார்த்துக்கலாம்”
என்றான்.
“இல்ல நண்பா இப்ப கலியாணத்துக்கு அவசரப்படுத்திட்டு இருக்காங்கிய, இந்த சமயத்ல கைமீறி எதுனா பிரச்சினையாகிட்டா என்ன பண்றதுன்னு தான் ஒரே யோசனையா இருக்குது. நீயும் குடும்பஸ்தன் தானே? கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமா, என்ன சொல்றே?”
என்றான். இதைச் சொல்லும் பொழுதே செல்வத்தின் குரலில் வழக்கத்துக்கு மாறான பணிதலின் காயம் சேர்ந்தொலித்தது.
“எனக்குக் கூடத் தான் பொண்டாட்டி பிள்ள குட்டின்னு எல்லாம் இருக்கு. நானே யோசிக்கலை. உனக்கு மட்டும் தான் வாழ்க்கை வெல்லக்கட்டியா?”
என்று எதையாவது சுண்டிப் பேசிவிட்டால் என்னாகும் என்ற அச்சத்தினூடான பணிதல் தான் செல்வத்தை அழுத்தியது.
வெங்கடேசனும் அதை வழிமொழிகிறாற் போலத் தான் பேசினான்.
“சரிதான் நண்பா, என் பொஞ்சாதியும் பாக்குறப்பல்லாம் ஒரே அனர்த்தல். எங்கயும் போவாத . பதிலுக்கு எதும் சண்டையிழுக்காதன்னு பிள்ளை தலைமேல சத்தியம் செய்யச் சொல்லி ஒரே அழிச்சாட்டியம். போதாக்குறைக்கு அந்தப் போலீஸ்காரர் சுந்தர்ராஜ் வேற அட்வைஸ் பண்றேன்னு கம்ப ராமாயணத்துலேருந்தெல்லாம் உவமை சொல்லி அறுக்குறாப்ல. நீ முடிவு செய்யி செல்வம்…இப்ப எதுவுமே செய்யத் தேவையில்லைன்னு நாம நம்ம வேலையைப் பார்க்கலாமா..? அது தான் உன் எண்ணம்னா ஒருமித்த கருத்தா அதையே எடுத்துக்கிடலாம். எனக்கும் சம்மதம் தான்”
என்றான்.
‘ஹப்பாடா’ என்றிருந்தது செல்வாவுக்கு. சிந்தாமணி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு முத்தமாய் அவன் உதட்டில் வரிசை கட்டிக் கொண்டே பேசி அனுப்பியது அதைத் தான்.
“ இங்க பாரு…எது சரின்னு உனக்குத் தெரியும். நான் எதும் சொல்லத் தேவையில்லை. உன் மனசுக்குப் படுறதை செய்யி. ஆனா ஒண்ணு மாமா! உனக்காகவே ஒருத்தி உடம்பும் மனசுமாக் காத்துக் கெடந்து ,இப்பத் தான் சேரப் போறம்ன்றதை மட்டும் நெனப்புல வச்சிக்க.சரியா?”
எத்தனை முத்தங்கள்? ஒவ்வொன்றின் உள்ளேயும் நாலு உதடுகளுக்கும் ஒரேயொரு மனசுக்கும் மட்டும் தான் இடம். செல்வாவுக்குப் போதும் என்று தான் தோன்றியது. முடிவற்ற மலையிறக்கப் பாதையில் ஒரே போர்வையைப் பொத்திக் கொண்டு பனிப்பொழிவில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கால்கள் பின்ன நடந்து கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றியது. வாழ்க்கையின் ஆசுவாச காலம் தொடங்கப் போகிறது. இனி அடிதடிக்கெல்லாம் வேலை இல்லை. நிபந்தனையற்ற சமாதானத்தை மட்டுமே மனம் விரும்பத் தொடங்கியிருந்தது.
வைத்தியுடன் பின்னால் அமர்ந்து வந்தவர் பெரிய முறுக்கு மீசையுடன் நெடு நெடுவென்று வளர்ந்த உருவத்தோடு விறைப்பாக இருந்தார். வெங்கடேசனுக்கு அவரைப் பார்த்ததும் போலீஸ் என்று தான் தோன்றியது. இவன் யார்றா என்றாற் போலவே முகத்தை வைத்துக் கொண்டான். செல்வா அந்தப் புதிய மனிதரை லட்சியம் செய்யாமல் வைத்தியைப் பார்த்து
“ என்ன வைத்தி தேடியே வந்திட்ட “
என்றான். அந்தக் கேள்வி தனக்கில்லை புதிய மனிதனுக்கு என்பது புரிந்த வைத்தி வண்டியை தூரமாய் ஸ்டாண்ட் இட்டுவிட்டு ஹெல்மட்டை வலப்புறக் கண்ணாடியில் பொருத்த்தியபடியே
விஷயம் இருக்கு செல்வா
என்று மட்டும் சொன்னான்.
“என் பேரு மலைக்கண்ணன். ஹோம் கார்ட்ல இருக்கேன். ஒளிவந்தார்புரம் ஏரியால உங்கண்ணன் இருக்காரே பன்னீர்னு அவரும் நானும் காலேஜ் வரைக்கும் ஒண்ணாப் படிச்சவங்க”
என்றார் வெங்கடேசனைப் பார்த்து. அண்ணன் பேர் சொன்னதும்
“அப்டிங்களாண்ணே சந்தோஷம்”
என்றவாறே சினேகமாகிப் புன்னகைத்தான் வெங்கடேசன்.
சொல்லுங்க என்றவாறே அமர்ந்திருந்த தோரணையை சரி செய்து கொண்ட செல்வாவின் கண்ணையே நேர் கொண்டு பார்த்தார் மலைக்கண்ணன். பட்டியக் கல்லையே நாற்காலிக்குச் சமமாய்க் கருதிக் கொண்டு அதன் மேற்புறத்தில் தனது பெருத்த புட்டத்தை இருத்திக் கொண்டார். லேசாய்ச் செறுமியபடி தொடங்கினார்
“ அட்வகேட் ஆரோக்கியசாமி நான்லாம் ரியல் எஸ்டேட்ல பார்ட்னர்ஸ். என் வீட்டுக்காரம்மா மல்லிகான்னு கௌரியம்மா ஆன்மீகக் குழுவில முக்கியமான மெம்பரு. கௌரியம்மா புருஷனுக்கும் உங்களுக்குமான பிரச்சினையைக் கேஸூ கோர்ட்டுனு இழுத்தடிச்சா யாருக்கும் லாபமில்லை.அதான் ஒரு சிட்டிங் உட்கார்ந்து பேசினா எல்லார்க்கும் சந்தோசம் வர்றாப்ல சுமூகப்படுத்திக்கலாம்னு வக்கீல் நினைக்கிறாப்ல. உங்களுக்கு சம்மதம்னா சாயங்காலம் ஆறு மணிக்கு மணிக்கூண்டுக்கெதிராப்ல அபிஷேக் ஓட்டல்ல ஏசில உட்கார்ந்து பேசிக்கலாம்.வாங்க. என்ன சொல்றீங்க?” .
நன்கறிந்த நாடகத்தின் எதிர்பாராத திருப்பம் போல் சட்டென்று சூடான செல்வா
“ கலியாணப் பந்தில சாப்பிட்டுட்டு இருந்தவங்களைக் காயப்படுத்திட்டு வீரங்கெட்டு ஓடிட்டிருக்கானுங்க. கைல சிக்கிறப்ப ரவை ரவையா உறிச்சி உப்புக்கண்டம் போடலாம்னு காத்திட்டிருக்கம். இதுல அப்ஸ்காண்டானவங்களுக்கு பரிஞ்சிட்டு வந்து சமரசம் பேசணும்னு சொல்றீங்க…எப்டிங்க ஏத்துக்கிட முடியும்? வெங்கடேசனைக் காட்டி இவனும் நானும் வருசக்கணக்கா சேக்காளிங்க. நாங்க அடிச்சம்னு தாங்க வரலாறு. முதல் முறையா எங்க மேல கைய வச்சிட்டி ஓடிட்டிருக்கானுங்க..எப்பிடி விட்டுக் குடுக்க முடியும்..? குத்துனவனை செமிக்காம வேற வேலை பார்க்குறத இல்லைங்க..இதுல பேச்சிக்கே எடமில்லை சாரி”
என்றான்.
செல்வத்தின் உஷ்ணத்தை உள்ளுக்குள் ரசிக்கவே செய்தான் வெங்கடேசன்.இப்பத் தான் சச்சரவேதும் வேணாம்னு நம்ம கிட்ட சொன்னான், இந்தாள் கிட்டே வெறியாக் கத்துறான் என்று அதிசயித்தபடியே எதுவும் சொல்லாமல் அமைதிகாத்தான். இப்போது செல்வாவை விட்டுவிட்டு வெங்கடேசன் பக்கம் திரும்பினார் மலைக்கண்ணன்.
” தம்பி, சுந்தர்ராஜ் ஏட்டையா எனக்கு ரொம்ப நெருக்கம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய செயல்பாடுகள் பண்ணியிருக்கோம். 20 வயசுல இருக்க வேண்டிய வேகம் இன்னமும் இருக்குறது ஒத்து வராதுங்க. பன்னீரோட தம்பி எனக்கும் தம்பிதான். இந்த பிரச்சனையை சுருக்கமா முடிக்கிறது மட்டும்தான் எல்லாருக்கும் லாபம். வீராப்ப காட்டினா எல்லா பக்கமும் சேதாரம் தான். கௌரியம்மாவுக்கு பல மட்டத்துல செல்வாக்கு இருக்கு. ஏதோ தெரியாம நடந்துருச்சு. இப்ப விட்டுக் கொடுத்துப் போனா லாபம் மட்டும் தான். சண்டையை தொடர்றதுல என்ன பெருசா கிடைச்சிடும்? யோசிங்க நான் ஒரு தம் அடிச்சிட்டு வரேன். நல்ல அமௌன்ட் வாங்கி தரேன். சமரசமா போய்க்கலாம். உங்களுக்குள்ள பேசிட்டு சொல்லுங்க”
என்று பதிலை எதிர்பார்க்காமல் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரெட் தீப்பெட்டி சகிதம் எதிர்பக்கம் இருந்த வேப்ப மரத்தின் அடியில் போய் நின்று கொண்டார் மலைக்கண்ணன்.
“போட்ட போட்ல பைசா தரேன்னு சொல்லி வரான் பாத்தியா அதுக்கு தான் கத்துனேன். உன்னையத் தீண்டுனவனுக்கு ஒன்னு நாம தண்டனை கொடுக்கணும், இல்லங்காட்டி வெயிட்டா சிட்டையை போட்டு விடணும் என்ன நண்பா?”
என்று தாழ்ந்த குரலில் செல்வம் சொல்ல அட்ரா சக்கை என்று ஒத்து ஊதினான் வைத்தி. அடுத்த ஐந்து நிமிடங்கள் எவ்வளவு கேட்கலாம் என்று பேசி ஒரு முடிவுக்கு வர இதுதான் சரியான நேரம் என்று தானாகவே முடிவு செய்து கொண்ட மலைக்கண்ணன் மீண்டும் அருகே வந்து
” சொல்லுங்க வெங்கடேசன் சாயந்திரம் மீட் பண்ணலாமா?”
என்றார்.
” சரிங்க அண்ணே, அபிஷேக் ஹோட்டலுக்கு வந்துடறோம் “
என்றவாறு தாங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்ல
“டபுளாவே வாங்கி தரேன்”
என்று சந்தோசமாக குத்துக்கல்லில் இருந்து எழுந்து கொண்ட மலைக்கண்ணன்
“சரிப்பா வைத்தி எனக்கு சோலி கிடக்கு என்னை கொண்டு போய் வக்கீல் ஆபீஸ்ல விட்டுடு”
என்ன கிளம்பினார். அவர்கள் போனதும் பாரம் விலகினாற் போல் இரண்டு பேருக்குமே முகமெல்லாம் நிம்மதி பூத்தது.
” காச கைப்பத்திட்டு வேலைய பார்ப்போம் நண்பா நீ என்ன சொல்ற”
என கேட்ட செல்வத்திடம்
” சரிதான் பா, நண்பன் கல்யாணத்துக்கு என்னோட மொய்யா இருக்கட்டும், மொத்த காசயும் நீயே வச்சுக்க”
என்றான் பெருந்தன்மையாக.
” நமக்குள்ள என்னப்பா” என சிரித்தான் செல்வா. சிந்தாமணியிடம் முத்தங்களுக்கு நடுவே இங்கே நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
***************
வார்த்தைகளால் சும்மா பயன்படுத்துவதற்காக தான் இந்த நாயை கட்டி வை என்று வரதனைப் பார்த்துச் சொன்னான் கதிர். வரதன் தான் உண்மையில் நாய் குணம் மிகுந்தவன். ஏதாவது ஒரு பக்கம் வாலாட்ட வேண்டும். யாருக்காவது விசுவாசம் காட்ட வேண்டும். யாரைப் பார்த்தாவது குறைக்க வேண்டும். யாரையாவது கடிக்க வேண்டும். நினைத்த நேரத்தில் சம்போகம். கிடைத்த இடத்தில் உறக்கம். வரதன் என்பவனுடைய வம்சம் அவனுக்கு அப்பால் கிளைக்கவில்லை. மழிக்காத தாடியும் நீண்ட தலை முடியும் சோறு உண்ணாத குழந்தைகள் தொடங்கி மெலிந்த மனமுடைய சகல வயதினருக்கும் அச்சம் தரக்கூடிய அந்நியமாகவே அவனது தோற்றம் இருந்தது. தன்னைப் பார்த்தால் பிறர் பயப்படுகிறார்கள் என்பதை ரசிக்கத் தொடங்கிய வரதன் அதை வாழ்வின் போதையாக மாற்றிக் கொண்டான்.
எந்த நேரத்தில் எதைச் செய்வான் என்றே தெரியாது
திடீரென்று ஆக்ரோஷமாவான்
ஒரே அடியில் எதிராளி சுருண்டு விழுந்து விட்டான்.
எடுத்த கத்தி ரத்தம் பார்க்காமல் உறைக்குத் திரும்பாது
என்றெல்லாம் லாவணி பாடினார்கள். தன்னை பற்றி உலவுகிற சொற்களுக்கு தானே பலியானவன் வரதன். ஒழுங்காக பிழைத்திருந்தால் எல்லோரைப் போலவும் கல்யாணம் பிள்ளை குட்டி என்று வாழ்ந்து இருக்க வேண்டிய மற்றொரு சாமானியன். ஒருமுறை பிறழ்ந்ததில் சுகம் கண்டவன். வாழ்வெல்லாம் ஒரு முறைகள் தான். மீண்டும் மீண்டும் பிறழ்ந்து கொண்டே இருக்கப் பிடிக்கிறது. ஒரு தினம் கூட சும்மா இருக்க கூடாது. குற்றமற்ற தினம் தனக்குச் சரித்திர அவமானம் என்பது வரதனுடைய வேத வரிகள். பிறர் உதவியுடனும் தானாகவும் அதை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறான் வரதன்.
யாரையாவது புண்படுத்திக் கொண்டே இருப்பது தான் வரதனின் அகத்துக்கு உணவு. பூவைப் பறிக்கையில் காம்பை உடைப்பது அவனது பாணி. சம்போகத்திற்குப் பிறகு அவனை சபிக்காமல் எழுந்து சென்றவர் யாரும் இல்லை. கோவாவில் ஒரு வெள்ளைக்காரி தன் மொழியில் சொன்னது எதுவும் வரதனுக்குப் புரியவில்லை. தனி ஒருவனுக்கானதல்ல ஒரு தலைமுறைக்கான சாபச்சொற்களை உதிர்த்துச் சென்றாள். அவன் தந்த பணத்தின் மீது காறி உமிழ்ந்து விட்டுக் கிளம்பிப் போனவள் என்ன சொன்னாள் என்பது புரியாமல் சிரித்துக் கொண்டிருந்தான் வரதன்.
வரதனின் துர்க்குணங்கள் அரக்கர்களுக்குச் சொல்லப் பட்டவற்றைக் காட்டிலும் சற்று அதிகம். கதிர் மூர்த்தியைக் காட்டி இந்த நாயைக் கட்டி வை என்று சொன்னதும் அதை அப்படியே செயல்படுத்துவான் என மூர்த்தி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. வரதன் வாயில் தொங்கிய சிகரட்டிலிருந்து புகை வழிந்து கொண்டிருக்க என்னவோ வீட்டில் வளர்க்கும் ஆட்டுக்குட்டியைப் பட்டியில் கட்டுவது போலவே மூர்த்தியை நகர்த்திக் கொண்டு போனான். அவன் சட்டையைக் கழற்றி அதையே கயிறு போலாக்கிக் கைகளைப் பின்னால் முறுக்கிக் கட்டினான். பங்களாவின் முற்புறக் காலிமனையின் ஓரத்திலிருந்த மாமரத்தினடியில் மரத்தோடு சார்த்திக் கால் விரல்களைக் குறுக்கிக் கீழே கிடந்த தாம்புக் கயிற்றைக் கவ்வி எடுத்துக் கைகள் இரண்டையும் சேர்த்து வைத்து சட்டையைக் கழற்றிவிட்டு இறுக்கமாய்க் கயிற்றால் கட்டினான். கட்டி முடித்து விட்டுக் கட்டு சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்தவன் திருப்தியாகி அதன் பின்னரே வாயிலிருந்த சிகரட்டை விரல்களுக்கு மாற்றினான்.
மூர்த்தி கத்துவான் என்று எதிர்பார்த்த கதிர் அவன் எதுவுமே பேசாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் உள்ளுக்குள் கலவரமானான். என்னவோ ஒரு வேகத்தில் சொன்னால் இந்த வரதுப்பயல் அப்படியேவா செய்வான்? மூர்த்தி மீது சொல்ல முடியாத பச்சாதாபம் வந்தது கதிருக்கு. “கயித்தைக் கழற்றி விடுடா” என்று சொல்லப் போகிறான் அதையே சாக்காக வைத்துக் கொண்டு “இனிமே ஒழுங்கா இருக்கணும்” என்று சொல்லி கட்டை அவிழ்த்து விடக் கட்டளை இடலாம் என்று எண்ணியவனுக்கு மூர்த்தியின் மௌனம் புதிராக இருந்தது. அப்போது தான் பின் பக்கம் குதிரை கட்டியிருந்த இடத்திலிருந்து திரும்பி வந்த ஜான்ஸனுக்கு என்னடா இது ஒண்ணுமண்ணாப் பழகுறவங்கிய இத்தனை சல்லித் தனமா நடக்குறாங்கியளே என்று ஆத்திரமாக வந்தது. அடுத்த கணமே இது நாம் பேச வேண்டிய காட்சி அல்லவே என்று புத்திக்குப் படவே அங்கே எதுவுமே நடக்காதது போலத் தன் முகத்தை வைத்துக் கொண்டு வேறு வேலை பார்க்க சமையலறை நோக்கி நடந்தான்.
என்னடா இவனும் எதும் பேசாமல் இருக்கானே எனத் தவிப்பான கதிர்
“ ஜான்ஸன்…நானும் வரதனும் உள்ளே ரூமுக்குப் போறம். வாயத் தொறந்து கட்டை அவுத்து விடுன்னு கெஞ்சினா மட்டும் இந்த நாயைக் கட்டவுத்து விட்டுறு. ஒரு ஓரமாக் கெடக்கட்டும். ஊருக்குப் போறப்ப கூட்டிட்டு போவம்னு சொல்லிரு. வீறாப்பக் காட்டுனா வெறச்சி சாகட்டும்”
என்றபடியே தானும் வரதனின் முதுகைப் பார்த்தபடி பங்களாவின் உட்புறம் நோக்கி நடந்தான்.
ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது என்று தன் மனத்தினுள் ரத்தம் பொங்க எழுதிக் கொண்ட மூர்த்தி கண்களை இறுக்கமாக மூடினான். கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்க் கோடுகள் கன்னத்தைத் தாண்டி உதிரத் தொடங்கின. வெற்று உடம்பிலிருந்து வெள்ளமாய் வியர்வை பொங்கிக் கொண்டிருக்க மூடிய கண்களைத் திறக்காமல் நின்றான். சின்னஞ்சிறிய பிளேடால் கழுத்தை அறுப்பது போல் ஒரு கணம் தோன்றியது.புத்தம் புதிய பிளேடு. அதன் இரு புறங்களுக்கும் இரண்டு தொண்டைக் குழிகளைத் தின்னத் தந்தால் தான் இந்த அவமானம் அடங்கும். முதலில் வரதனைக் கொல்ல வேண்டும். அதற்கடுத்து இந்தக் கதிரைக் கொன்றால் சரி. வரதனைக் கொன்ற பிறகு அச்சத்தின் உச்சத்தில் உறைந்திருக்கும் கதிரின் முகத்தைப் பார்க்க வேண்டும். அவன் தன் கால்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சவேண்டும். கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டுப் பிறகு தான் அவனது கழுத்தை அறுப்பான் மூர்த்தி. எதிரி கூட நல்லவன். நட்பையும் விசுவாசத்தையும் மதிக்கத் தெரியாத துரோகிகளுக்கு மண்ணில் இடமில்லை. மூர்த்தியின் அந்திம காலம் சிறையில் கழிய வேண்டும் என்று எழுதியிருந்தால் அதை எப்படி மாற்ற முடியும்..? ரெட்டைக் கொலை மூர்த்தி என்று யாரோ யாரிடமோ கிசுகிசுப்பது அவனுக்கும் கேட்டது. வியர்வையும் அழுகையும் வெளிப்பட்டு விடும் முன்பாகத் தொடங்கும் பொழுதே வலுத்தது மழை.
{வளரும்}