யாக்கை 28
தொட்டிச்செடி
மலைக்கண்ணன் உடலை கட்டாகப் பேணுபவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. வயதுக்கு பொருத்தமில்லை என்று எளிதில் சொல்லத்தக்க ஆடைகள் கூட அவருக்கு பொருந்தித்தான் போயின. நீல நிற ஜீன்ஸ்,டக்-இன் செய்த கருப்பு முழுக்கை சட்டை. கைகளை முஷ்டிக்கு மேல் மடக்கி விட்டிருந்தார். சட்டை பையில் இருந்து ரேபான் கூலிங் கண்ணாடி எட்டி பார்த்துக் கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த பெர்ஃப்யூமின் வாசனை மதுக்கூடத்தில் குடிக்காமல் மற்றவர்களுக்குத் துணையாக அமர்ந்திருப்பவனின் நாசியில் ஏறுகிற கிறக்கத்தை ஒத்திருந்தது. மிகுந்த புன்னகையுடன்
“வாங்க வாங்க, நல்ல வெயிலோ?”
என சம்பிரதாயமாக வரவேற்றார்.
விக்னேஷ் ஓட்டலின் மாடியில் ஏசி அறை விசாலமாக இருந்தது. பொதுவாக உணவக உபசரிப்பு என்பது கீழ்த்தளத்தோடு முடிந்து விடும். இந்த மாடி பகுதி ஏதாவது மொத்தமாக பிறந்தநாள் பார்ட்டி என கேட்டு வருபவர்களுக்காக ஒதுக்கப்படுவது. முதலாளிக்கு வேண்டியவர்கள் அல்லது பெரிய சிபாரிசோடு வருபவர்களுக்கு இது மாதிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அனுமதி உண்டு.. வியாபாரமும் கூடவே சேர்ந்து நடக்குமல்லவா?
செல்வா வரும் வழியில் வெங்கடேசனிடம் தெளிவாகச் சொல்லி இருந்தான்.
“இங்க பார்… நான் பேசுவதை நீ அப்படியே ஒத்துக்கணும்னு அவசியம் இல்ல. தாராளமா எதிர்த்து பேசு. மாத்தி மாத்தி பேசினாதான் நமக்கு நன்மை கிடைக்கும். ஆனா ஒண்ணு விடுறா நா அப்பறமா சொல்றேன். புரிஞ்சுக்க அப்படின்னு எப்ப எல்லாம் நான் சொல்றேனோ அப்ப மட்டும் அமைதியாகிடு. மத்தத நான் பாத்துக்குறேன்”
“சரி நண்பா விடு செமிச்சிரலாம்!”
என்று டம்ளர் தண்ணி எடுத்து களக் புளக் என சட்டையெல்லாம் கொட்டிக் கொண்டு குடித்து முடித்தவன் அசட்டுத் தனமாக சிரித்தபடி சுவரில் தீட்டப்பட்டிருந்த ஓவியப்பெண்ணின் பொங்கும் மார்புகளைப் பார்த்து எச்சில் விழுங்கினான். என்ன செய்வதெனத் தெரியாமல் கடிகாரத்தை வெறிக்கத் தொடங்கினான். பத்து நிமிடத்திற்குள் வக்கீல் ஆரோக்கியசாமி டி எஸ் பி ஜெகதீசன் மலைக்கண்ணனின் ஜாடையிலேயே அவருடைய அண்ணன் அல்லது தம்பியாக இருக்கலாம் மூன்று பேரும் வந்து அமர்ந்தார்கள். அதுவரை மிக அமைதியாக இருந்த அந்த இடம் சலசலவென ஆரவாரம் பெருக தொடங்கிற்று.
கீழே பேச்சு சத்தம் கேட்க திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த மலைக் கண்ணன்
” கோட்டை வீடு வந்துட்டாப்ல”
என்று முழங்க, இன்னும் மருத்துவமனையின் வாசனை குறையாத பலகீன தோற்றத்துடன் மெல்ல மெல்ல நடந்து வந்த முரளியை நாற்காலியில் அமர வைத்து விட்டு பிறகு சின்னவும் பவுன் ராஜும் அமர்ந்தார்கள். நேரே பாத்ரூமுக்கு சென்று விட்டு சகஜமான புன்னகையுடன் அங்கு வந்து சேர்ந்த சுந்தர்ராஜ் ஏட்டையா ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே சட்டு என்று ஜெகதீசனை பார்த்ததும் உடலை விரைத்து ” ஐயா” என்றார்.
“ஒக்காருங்க சுந்தர்ராஜ்”
என அவருடைய பணிவை ரசித்துக் கொண்டே ஜெகதீசன்
“ப்ரொமோஷன்ல ஐ எஸ் க்கு போறதா கேள்விபட்டேன்”
என கேட்க
“அது நான் இல்லைங்க ஐயா, எல் அண்ட் ஓ பார்த்திட்டிருந்தாப்ல சுந்தரமூர்த்தி, அவர்தான் ஐ எஸ்க்கு கிளம்புறாப்ல”
என்றவர் இன்னும் தணிந்த குரலில்
“எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு ப்ரமோஷனுக்கு”
எனவும் சொன்னார்.
“இன்னும் யார் வரணும் ?”
என பொதுவாக கேட்டார் ஜெகதீசன். முதலில் பொதுப்பேச்சு சிறிது நேரம் சென்றது. ஊர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரைக்கும் பேசி விட்டு சினிமா மழை விவசாயம் உடல்நலம் என்றெல்லாம் சுற்றி வளைத்தபிறகு தான் விஷயத்துக்கு வந்தார் ஜெகதீசன். நேரம் விரயமாவதில் சின்னு சூடானான். சடக்குன்னு வந்தமா படக்குன்னு பேசி முடிச்சமான்னு இல்லாம கெளட்டுப் பயக பேச்சை இழுத்திட்டிருக்கானுங்களே..சீக்கிரத்துல முடிச்சா போயி சரக்கைப் போடலாம். அவனுக்கு மனமும் கரங்களும் ஒருங்கே நடுங்கத் தொடங்கின.
சின்னு முகத்தில் அந்த எரிச்சல் வழிந்தது.
“பாதிக்கப்பட்டவங்க எல்லாம் வந்துட்டோம். தான் பெரிய சண்டியர்னு கத்திய தூக்கின ஆட்களை தான் காணோம். அவங்களும் வந்துட்டா பேசிக்கலாம்ல”
என்றான் நக்கலான குரலில். மலைக் கண்ணனுக்கு கெதக் என்று இருந்தது. முந்தைய நாள் முழுவதும் அவர் உறங்காமல் திரிந்தலைந்து இந்த சந்திப்பை சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவர் பாடு அவருக்குத் தான் தெரியும். அவர் நினைத்தாற் போல் சுமூகமாக இந்தப் பேச்சு வார்த்தை முடிந்தே தீர வேண்டும். சற்று பிசகினாலும் எல்லோரையும் விட அவருக்குத் தான் நட்டம் அதிகம். அதுவே பழமாகக் கனிந்து விட்டால் அவருக்குப் பெரிய லாபங்கள் இருக்கின்றன. கௌரியின் வார பிரார்த்தனைக் கூடத்திற்கென்று பெரிய பஜனைக்கூடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறாள். இன்னும் ஆறேழு மாதங்கள் ஆகும் முழு வேலையும் முடிய. மத்திய மந்திரியை திறப்பு விழாவுக்கு அழைப்பதாகத் திட்டம். அதற்குள் கௌரிக்கு மனம் குளிரும் வண்ணம் எல்லாக் காரியங்களையும் நல்ல படியாக முடித்துக் கொடுத்தால் அவளுடைய கருணைமழை அவரை நனைக்கத் தொடங்கும். வாகன பார்க்கிங் பூஜை சாமான்கள் விற்பனை சிற்றுண்டி சாலை தொடங்கி பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் வறை பக்காவாகத் தயாராகி வருகின்றன. நாலு பேர் கொண்ட ட்ரஸ்டை கௌரி பதிவு செய்ய இருக்கிறதாகக் கேள்வி. இனி அவள் கணவன் என்ற கணக்கில் கதிரும் ஒரு ட்ரஸ்டியாக வர வாய்ப்பிருக்கிறது. என்னவானாலும் கௌரியின் நிழலடியில் ஒரு தொட்டிச் செடியாகவே தன் காலம் முழுவதையும் கழித்தாக வேண்டும் என்பது மலைக்கண்ணன் தன் மனசுக்குள் போட்டு வைத்திருக்கும் நெடுங்காலத்துக்கான பலன் தரக் கூடிய திட்டம். அதற்கு முன் இந்தப் பிரச்ச்சினை. சுமூகமாய்த் தீர்ந்தாக வேண்டுமே என மனசுக்குள் கலங்கினார்.
என்னடா இது ஆரம்பிக்கும் பொழுது இப்படி என்றால் இன்னும் போகப்போக என்ன ஆகப் போகிறதோ? அம்மிக்கும் குளவிக்கும் அடிபட்டாலும் வலிக்காது. நடுவில் இருக்கும் தேங்காய் சில்லு தானே சட்னியாக வேண்டும்? இத்தனை வருடங்களில் எத்தனையோ கட்டப்பஞ்சாயத்துகள் பார்த்தாயிற்று இது இன்னொன்று அவ்வளவுதான் இதற்கெல்லாம் பயந்தால் ஆகுமா ?மானசீகமாக தான் மீசை இரண்டு பக்கங்களிலும் நீவி விட்டுக்கொண்டு
“சமாதானத்தை யார் வேணாலும் முன்னெடுக்கலாம் இல்லீங்களா?
என தொடங்கினார் பொதுவாக.
சின்ன தியாகராஜனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை
“உன் கிட்ட காசு இருக்குன்னா என்கிட்டயும் காசு இருக்கு உனக்கு சமூகத்தில் மரியாதை இருக்குன்னா எனக்கு அதைவிட மரியாதை இருக்கு நீ நேத்து மேல வந்தவன் நான் பரம்பரைக் காசுக்காரன் நீ சொல்றதை நான் கேட்டுட்டு போகணுமா ? இந்த பிரச்சனையில் கதிர் என்பவன் நினைத்ததை எல்லாம் செய்துவிட்டு ஓடி ஒளிந்து கொண்டு ஆள் நேரே வராமல் பஞ்சாயத்து பேசுவதற்கு பெரிய மனிதர்களை அதிலும் போலீஸ்காரர் உள்பட முக்கிய புள்ளிகளை அனுப்பி வைக்கிறான் அவர்களை மதிச்சி எல்லோரும் வந்து உட்காரணும் சமாதானத்தை ஏற்கணும் குத்தினவன் எதுவுமே நடக்காத தொனியில் நாளை இந்த ஊருக்கு வந்து இறங்குவான் நாங்க பாத்துட்டு இருக்கணுமா?”
இதை வாய்விட்டே கேட்டு விட்டான். முரளிக்கு பிரச்சனையை மேலே கொண்டு செல்வதில் விருப்பமில்லை அவன் படித்து படித்து சொல்லி விட்டான் .
“யார் வந்தாலும் வராட்டாலும் நான் சமாதானமா போகிறேன் மாப்பிளை எனக்கு வேற ஆப்ஷன் இல்லை என்னால என் பொண்டாட்டி புள்ள குட்டி பேச்சுகளை மீறி எதுவும் செய்ய முடியாது”
என்றெல்லாம் சொன்ன பிறகும்
“நீ சொல்றது கரெக்ட் ஆனால் எடுத்த எடுப்பிலேயே நாம இதைத்தான் நினைக்கிறோம்னு தெரியப்படுத்திட்டம்னா பயம் போயிறாது..? அதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குக் கத்த விட்டுட்டு அப்பறமா சமாதானத்தை ஒத்துக்கிடலாம்”
எனக் கறாராக முரளியிடம் சொல்லி வைத்திருந்தான். அதனால் முரளியும் எதுவுமே தன் முகத்தில் தெரியப்படுத்தாமல் முகத்தை சமன் செய்து வைத்துக் கொண்டான்.
ஜெகதீசனுக்கு சின்னத் தியாகராஜன் யார் என்ன பின்புலம் என்பதையெல்லாம் மிக நன்றாகச் சொல்லப்பட்டிருந்தது. ‘நம்ம பய’ என்ற பாசத்தோடு தான் அந்தப் பேச்சுக்கே தயாரானார்.
“சரிதாங்க..என்னமோ ஒரு மிஸ்டேக் நடந்திருச்சி. பகையை வளர்த்திட்டே போறதுல லாபமில்லீங்களெ…விட்டுக் குடுத்துப் போறதும் தப்பில்லைன்னு தான் பெரியவுக எல்லாம் சொல்லியிருக்காக…கொஞ்சம் எறங்கி வாங்க. எல்லாருக்கும் மகிழ்ச்சியா பேசிக்கிவம்..”
என்று சின்னுவைக் கண் கொண்டு பார்த்து தன்மையான குரலில் சொன்னார். அவர் பேச்சை எப்படி மறுதலிப்பதென்று ஒரு கணம் சின்னு தடுமாறுவதை ரசித்தார்.
“அய்யா நமக்குள்ளே எந்த விதமான வேற்றுமையும் இல்லீங்களே… என் கூடவே வந்திட்டிருக்கிற சினேகிதக் காரன் உடம்புல கத்தியை எறக்கிட்டு ஓடி ஒளிஞ்சிட்டா பார்த்திட்டு சும்மா இருக்கமுடியுமா..? கொஞ்சம் டயம் குடுங்க நாங்களும் எங்க பங்குக்கு ஒண்ணு ரெண்டு எடத்துல கொத்தி விட்டுட்டு பேச வர்றோம்..அப்பறம் நல்லா சமாதானம் பேசுங்க. அதுதானுங்களெ முறையாவும் இருக்கும்”
என்றான். இதை என்னவோ மந்திரியிடம் மனுக் கொடுக்கும் சாமானியனின் தொனியில் தான் சொன்னான். செல்வத்துக்கு சின்ன தியாகராஜன் மீது பெரிய அபிமானமே உருவாகத் தொடங்கியது.
“யார்றா இவன் போலீஸ்னு தெரிஞ்சும் விட்டுக் குடுக்காம பேசிட்டிருக்கானே?”
என மனசுக்குள் வியந்தான்.
வெங்கடேசனும் தன் பங்குக்கு அதையே ஆரம்பித்தான்.
“அய்யா கதிர்ன்றவன் மேல இருக்குற வெறுப்பைக் காட்டிலும் அவனுக்கு எடுப்பு ஒருத்தன் வந்தானே வரதன்னு..அவன் மேல தான் கொலைவெறியில இருக்கேன். உங்களுக்கு என்ன இப்ப கதிரைக் காப்பாத்தணும் அவ்வளவு தானே..? சரிங்க கதிரை விட்டுரலாம். அந்த வரதன் எங்க இருக்கான்னு மட்டும் தெரியப்படுத்துங்க. போதும்…என்ன நண்பா?”
என்றான் செல்வத்தின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு
ஜெகதீசனும் மலைக்கண்ணனும் மாறி மாறிப் பேசி சமாதானப்படுத்தியதில் வெங்கடேசனுக்கும் முரளிக்கும் அவர்கள் கேட்ட தொகையைத் தந்து விடச் சம்மதித்து இரண்டு தரப்பாரும் மேற்கொண்டு எந்தப் பழிபகைக்கும் செல்வதில்லை என ஒப்புக்கொண்டதை அப்படியே ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொண்டார்கள்.
“பேப்பர் உங்கள்ட்டயே இருக்கட்டும். காசக் கொடுத்திட்டு வாங்கிக்கிடுறம்”
என்றார் ஜெகதீசன்.
எல்லாம் பேசி முடித்த பிறகு
“ ஐயா நீங்க அதிகாரி. நாளைம்பின்ன எங்கனாச்சும் எதிர்ல பார்த்தாக் கூட தெளிவா சமாளிச்சிட்டம்னு நெஞ்சை நிமித்திட்டு அலையவேணாம்னு சொல்லிரணும். இந்தப் பேச்சை அவங்க கெஞ்சுறதாலயும் நீங்க கேட்டுக்கிறதாலயும் தான் சமாதானமா போவுறதுக்கு ஒப்புக்கிடுறம்ன்றதை அந்தக் கதிருக்கும் அவன் கூடத் திரியுற குஞ்சாமணிங்களுக்கும் விளக்கமா சொல்லிருங்க. எதுனா அப்பிடி இப்பிடி பேசிட்டிருந்தா அடுத்த முறை நாங்க முதல்ல கிளிச்சிருவம். பேசுறதுக்கு அர்த்தமெ இருக்காதுங்க”
என்றான் சின்னு.
உறைந்த முகத்தோடு ஜெகதீசன்
“ யப்பா அதெல்லாம் நாங்க வலுவா கண்டிச்சி வச்சிட்டம்யா..நாங்க பார்த்துக்கிடுறம். எதுவுமே தப்பாகாது.ஒரே கூட்டம்யா நாம…நமக்குள்ற அடிச்சிக்கலாமா? போதும்யா”
என்றவாறே வெங்கடேசனையும் செல்வத்தையும் அவஸ்தையாகப் பார்க்க அவர்கள் இரண்டு பேருமே எதுவும் பேசாமல் மௌனித்திருக்க அடுத்திருந்த பவுன்ராஜ்
“ எனக்கு சகலையா வரப்போறாப்ல தம்பி செல்வா…அடுத்த மாசம் மூணாம் தேதி கலியாணம்ங்கய்யா”
என்று சொன்னதும் ஜெகதீசன் மலர்ந்த புன்னகை ஒன்றைத் தரித்தபடி
“கையக் குடுங்க தம்பி…வாழ்த்துகள். கலியாணத்துக்கு அவசியம் பத்திரிகை வைங்க எல்லாரும் வந்து வாழ்த்திருவம்”
என்றார்.
கை குலுக்கிக் கொண்டிருக்கும் பொழுதே மாடிப் படிகளில் கூட்டமாக யாரோ வருகிற சலசலப்பு எழ, திரும்பிப் பார்த்த ஜெகதீசன் சட்டென முகமெலாம் மலர்ந்து கிட்டத் தட்ட ஓட்ட நடையில் விரைந்து சென்று வாசலுக்கருகே நின்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்
“அம்மா ஜெகதாம்பிகா ஜெகத் ரட்சகி உங்களைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு நன்றிம்மா…”
எனத் தழுதழுத்த குரலில் சொல்லியவருக்குக் குரல் கம்மிற்று.
ஆரஞ்சு வண்ணத்தில் பொன் ஜரிகை வேய்ந்த பட்டுப் புடவை சரசரக்க நடன முத்திரை போல வணக்கம் தெரிவித்த கௌரி நடு நாயகமாக அமர்ந்தாள். அவள் அமர்ந்த பிறகு தான் பலரும் மீண்டும் அமர்ந்தார்கள். வெங்கடேசன் ஒப்பனை அறைக்குச் சென்று திரும்பியவனுக்கு கௌரி யாரென்று தெரியாமல் விழிக்க அவனைப் பார்வையாலேயே மீண்டும் அமரச் சொன்னான் செல்வா.
எல்லாரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்துவைத்தார் மலைக்கண்ணன். சின்னத் தியாகராஜனைப் பார்த்து சிரித்தவள்
“எனக்கு நீங்க அண்ணன் வேணும். அரமனைக் கோடியில அப்பளக் கம்பெனி வேலுச்சாமி தெரியுமில்ல, எனக்கு பெரியப்பா”
என்றாள்.
“எங்கம்மாவோட உடன் பிறந்த தங்கச்சி புருஷங்க”
என்ற சின்னு அயர்ந்து போனான். கௌரியைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஊரே அவளைக் கொண்டாடுவதும் வணங்குவதும் தெரிந்தாலும் நண்பன் முரளிக்காக ஏற்றுக் கொண்டு பேச வந்திருக்கிறான். இவள் என்னடாவென்றால் அண்ணன் என்கிறாளே..இத்தனை நெருக்கச் சொந்தமென்று தெரியாமல் போனதே…!
அவன் மனசு பல கணக்குகளைப் போட்டது. பழம்பெருமை எல்லாம் சபையளவில் சரியாக இருக்கும். பிழைப்பு நடக்கப் பணம் வேண்டும்.செல்வந்தமும் அதிகாரமும் கௌரியிடம் கொழிப்பதை நாடே அறியும். இந்தப் புதிய அறிமுகத்தை எப்படிப் பதியனிட்டுப் பழம் பறிக்கலாம் என்று அல்லாடினான்.
கௌரியின் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்ட சின்னு
“யம்மா தங்கச்சி…நீ என்ன சொல்றியோ அதும்படி செய்துக்கலாம். எல்லாருக்கும் எது நன்மையோ அதுக்கு மறுப்பு சொல்லமாட்டம்.”
என்றான். கௌரி மனதுக்குள் நிம்மதி பரவியதைக் கண்கள் பறைசாற்றின. தன்னை அறியாமல் ஒரு சிறு நொடி புன்னகைத்து மீண்டாள்.
சட்டென்று அந்த இடத்தின் சூழலே மாறிப் போனது.
“என் வீட்டுக்காரர் செய்தது தப்பு. அவருக்கு சகவாசம் சரியில்லை,. நான் வேற சிலபல வருடங்களாகவே அவரைக் கவனிக்காம விட்டுட்டேன். என் மனசாட்சி உறுத்துறதால தான் இந்தப் பிரச்சினையில தலையிட்டேன். எனக்காக ஒரு தடவை மன்னிச்சிருங்க. இதுவரைக்கும் நடந்த எதையும் என்னால மாற்ற முடியாதுன்னாலும் இனி நடக்குற எல்லாமே எல்லாருக்குமே நன்மையா நடக்குறாப்ல பார்த்துக்க முடியும்”.
பவுன் ராஜ் பக்கம் திரும்பியவள்
“உங்க தரப்புல என்ன செய்யணும்னு சொல்றீங்களோ அப்பிடியே செய்துரலாங்க. யார் மனசும் நோக வேணாம். சரிங்களா?”
என்றாள்.
அவளோடு வந்திருந்த லட்சுமி அம்மாள் பக்கம் திரும்பியவள் அதைக் குடுங்க என்றாள் அவர் தந்த பாலிதீன் கவர்கள் இரண்டை செல்வம் மற்றும் வெங்கடேசன் இருவரின் கரங்களில் திணித்தாள். எதுவும் சொல்லாமல் அவர்கள் இரண்டு பேரும் அதைப் பற்றிக் கொள்ளவே மீண்டும் லட்சுமியம்மா தந்த கவரை வாங்கி முரளியிடம் நீட்ட அவன் தயக்கமாக சின்னு முகத்தைப் பார்த்தான். அதைக் குறிப்பாக உணர்ந்து கொண்டவளாக கௌரி
“எங்கண்ணன் எதும் சொல்ல மாட்டாப்ல…வாங்கிக்குங்க”
என்றாள்.
“எல்லாருக்கும் சந்தோஷம் தானே?”
என்றவள் தனக்கு வழங்கப்பட்ட பழரசத்தை சம்பிரதாயத்துக்கு பாதி பருகி விட்டு ஜெகதீசனிடமும் மலைக்கண்ணனிடமும் கொஞ்சம் தணிந்த குரலில் பேசிவிட்டு எழுந்து கொண்டாள்.
“நீங்கள்லாம் மெல்லப் பேசி முடிச்சிட்டுக் கெளம்புங்க நான் புறப்புடுறேங்க”
என்று நகர்ந்தாள். இப்போது எல்லாருமே மரியாதை நிமித்தம் எழுந்து கொண்டார்கள். சின்னு பக்கம் திரும்பியவள்
“ அண்ணே, எப்பன்னாலும் நம்ம கோயிலுக்கு வாங்க..வரணும்ணே…”
என்று புன்சிரித்தவளிடம்
“கட்டாயம் வறேன்மா”
என்று கும்பிட்டான்.
முரளிக்கு ஹப்பாடா என்று இருந்தது. கவரில் எவ்வளவு பணம் இருக்கிறது எனத் தெரியவில்லை. எல்லாம் பேசி முடித்து விட்டு படியிறங்கி வந்தவர்கள் தங்களுக்குள் விடைபெற்றுக் கொண்டதும் சாமி ஆட்டோவில் சின்னு நடுவில் அமர பவுன்ராஜூம் முரளியும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கொண்டார்கள். வண்டியை ஒயின்ஷாப்புக்கு விடச்சொன்னான் சின்னு.
{வளரும்}
