யாக்கை 30
நீர்ப்பூக்கள்
ஜே.பி.முத்து பொதுவாக க்ரைம் வழக்குகளில் ஆஜராவதில்லை. கட்சி மேலிடம் இந்த வழக்கை அவர்தான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே நிர்ப்பந்தித்து விட்டது. அப்படி ஒன்று நடந்திராவிட்டால், இம்மாதிரி வழக்குகளை நிச்சயம் தவிர்த்திருப்பார். ஸ்பீடு சங்கரன் முத்துவின் அணுக்க சீடர். முத்துவின் பெயரில் இந்த வழக்கை நடத்துவதற்கு மிகச் சரியான ஆள் சங்கரன்தான். அவரிடம் வழக்கை ஒப்படைத்த நாள் தொடங்கி ஒவ்வொரு ஹியரிங்கின்போதும் பக்தி சிரத்தையாக சங்கரன் முத்துவைத் தேடி வந்துவிடுவார். சிவில், கிரிமினல் என இரண்டு பாகங்களிலும் சங்கரன் கெட்டிக்காரராகப் பெயர்பெற்று விளங்கிக்கொண்டிருந்தார். தனக்கு வழிகாட்டிய சீனியர் இந்த வழக்கை யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைத்திருக்க முடியும் என்றபோதிலும், சங்கரன்தான் இதை நடத்தவேண்டும் என்று விருப்பப்பட்டுவிட்ட பிறகு, அதை மறுப்பதற்கு மனம் வராமல், மறுபடியும் ஒரு புதிய மாணவனைப் போல், சிரத்தையோடு வழக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தொடக்கத்தில் ட்ரையல் ஆமை வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது. எப்படியாவது மன்றாடி ஜாமீன் பெற்றுவிட முடியும் என்ற நிலை வரும்போது மிகச்சரியாக, ஜேம்ஸ் என்பவன் தூக்கில் தொங்கினான். செத்தவன் எழுதி வைத்திருந்த கடிதம் சம்மந்தப்பட்ட மீதி நான்கு பேருக்கும் கழுத்தில் சுருக்கிட்டு, அதை இறுக்கவும் செய்தது. ஜாமீன் இல்லை என்றான பிறகு, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. கட்சி மேலிடம் வேறு அவ்வப்போது முத்துவைத் தொடர்புகொண்டு, வழக்கின் தன்மையைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தது.
சங்கரன் உயிரைக் கொடுத்து வழக்கை நடத்தினார். விநோத், மஞ்சரி என அவருடைய இரண்டு ஜூனியர்கள் கண்ணும் கருத்துமாக, மிகவும் மெனக்கெட்டார்கள். இடையில் தேசிய கமிட்டி மெம்பராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்பாராமல் நடந்தது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் விருப்பக் கூட்டணியின் சார்பாக, திரவியனூர் தொகுதிக்கு, முத்துவை வேட்பாளராக பரிசீலிப்பதைக் கட்சி சூசகமாக அவரிடம் உணர்த்தியது. கட்சி சார்ந்த யூனியனில் எம்.எஸ் மில்லின் பெருவாரி தொழிலாளர்கள் அங்கம் வகிப்பதையும் கவனப்படுத்திற்று. பூட்டப்பட்டிருக்கும் மில்லின் எதிர்காலம், இந்தக் கொலைவழக்கின் முடிவைப் பொறுத்து, மாறுபடலாம் என்கிற கவலையும் கட்சிக்கு இருந்தது.
அரசு வக்கீல் வெங்கடாசலத்தின் கிடுக்கிப்பிடி, சங்கரனால் சமாளிக்க முடியாமல் சில சமயம் திணறுவதைக் கட்சி சுட்டிக்காட்டியது. எம்.எஸ் முதலாளியின் தகிடுதத்தங்களைப் பற்றி, கட்சி மற்றும் தொழிற்சங்க மேலிடம் இரண்டுமே, கிடைத்த தகவல்களை எல்லாம் முத்துவிடம் பகிர்ந்துகொண்டே இருந்தன. ‘இனிமேல் மில் திறக்கப்படப் போவதே இல்லை என்கிற நிலை உறுதியாய்த் தெரிந்த மட்டில், தொழிலாளர் குடும்பங்கள் மொத்தமாய் மனம் உடைந்து போனார்கள். ஏ1 இருதயம் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனது, மேலும் துன்பமாய்ப் போனது. கட்சி சார்பிலும், தொழிற்சங்கம் தனியாகவும், மாநாடு, ஊர்வலம், உண்ணாவிரதம் என எவ்வளவோ முயன்றும் ஒரு நன்மையும் பயக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுச் சிறையிலிருக்கும் மீத மூன்று பேரையாவது விடுவித்தே ஆகவேண்டும் எனக் கட்சி நிர்ப்பந்தித்தது.
எப்பேர்ப்பட்ட வாய்ப்பு அது..? ராமகிருஷ்ண சம்பத் அலங்கரித்த திரவியனூர் எம்.பி பதவி, சம்பத்துக்காக, சட்டக்கல்லூரி மாணவர் முத்து திரள்நிதி அளித்த புகைப்படம், சம்பத் பிரச்சாரத்தைத் துவக்கும் பொழுது அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட புகைப்படம், எம்.பி.சம்பத் முத்துவுக்குப் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கும் புகைப்படம் எனத் தன் அலுவலகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்பட வரிசையை இன்னொரு தரம் பார்த்து, புன்னகைத்துக்கொண்ட முத்துவுக்கு, ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. வெங்கடாச்சலம் நீதிபதியாகப் பதவி உயர்வு அடைந்துவிட்டார். இந்த வழக்கை முடித்துவிட்டு, பதவியேற்றுக் கொள்வதாக அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்திவிட்டார். கட்சி முத்துவின் மீது எலெக்ஷனைத் திணிக்கிறது.
“இந்த வழக்கில் ஜெயித்தால் நிச்சயமாக நீ எம்.பி”
என்று ஆசை காட்டுகிறது. நீதிபதி ஆசை கிஞ்சித்தும் இல்லாத முத்துவுக்கு, வாழ்க்கை வக்கீலாகவே முடிந்துவிடக் கூடாது.
சந்தானம் கடும் கோபத்தில் இருக்கிறார், குற்றம் சாட்டப்பட்ட மீதி மூன்று பேரையும் எப்படியாவது கொன்றுவிடத் துடிக்கிறார். வழக்கை நடத்தி முடிக்கும்வரை பிணை கிடைத்துவிடக் கூடாது என்று வெறியோடு அலைகிறார். பூட்டிய மில்லிலிருந்து அத்தனை இயந்திர உபகரண இத்தியாதிகள் அனைத்தையும் ஒவ்வோர் இரவிலும் உருவி, அப்புறப்படுத்தியிருக்கிறார். கிடைத்த வேலைக்குப் போய், வெவ்வேறு ஊர்களில் சிதறி, சேமித்ததை இழந்து, கைப்பொருளையெல்லாம் விற்று, ஏழ்மை நோய்மை, வறுமை என சுமை தாளாமல் நாலாபுறமும் சிதறிய ஜனக்கூட்டம் அல்லாடுகிறது. முத்துவுக்கு, கைமுஷ்டியை மடக்கும் போட்டியில் வென்றால் தங்கம், தோற்றால் தேள்க்கடி, தன்னைத் துரத்திக்கொண்டு வேகம் பிடிக்கும் ஓராயிரம் தேள் விரைதலைப் பார்த்துக்கொண்டே திகைத்து நின்றார் முத்து.
ஒரு தேர்ந்த வக்கீல் வழக்கை ஒப்புக் கொள்ளும் முன்பே வழக்கின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானித்து விடுவான். தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே ஒரு வழக்கை ஒப்புக்கொள்வதெல்லாம் அரிதாக நடக்கும் செயல்தான் வழக்கை நடத்துவதற்கு அதில் வெற்றி பெறுவதை காட்டிலும் முக்கியமான தவிர்க்க முடியாத ஏதாவது ஒரு காரணம் இருக்கும் பொழுது அதில் ஈடுபட்டுத் தான் ஆக வேண்டும் என்கிற நிர்பந்தம் உருவாகிறது. மேற்படி வழக்கு முழுக்க முழுக்க ஜே பி முத்து தவிர்க்க முடியாமல் தலையை கொடுத்த கதை தான். சொல்லப் போனால் முத்துவை தவிர வேறு யார் தொழிலாளிகளின் சார்பாக ஆஜராகி இருந்தாலும் சொடுக்கு போடுகிற நேரத்தில் எம் எஸ் முதலாளி அந்த வக்கீலை வளைத்திருப்பார். விலை போகாத நேர்மை என்பதே முதல் காரணம். கொலை நடந்த தினத்திலிருந்து கட்சி மேலிடம் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்தது. தொழிலாளிகள் ஐந்து பேர் சரணடைந்து அரசு வக்கீலாக வெங்கடாசலம் நியமிக்கப்பட்ட கணத்தில் வழக்கு சூடு பிடிக்க தொடங்கியது. நாளிதழ்கள் வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் விரிவாகச் செய்தி வெளியிட்டார்கள். திரவியனூர் சரகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எம் எஸ் ஆலையோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஒரு மில் பூட்டப்படுவது நிலம் சரிந்து வனம் அழிக்கிறாற் போல் ஒரு மகா பெரிய நிகழ்வு. நாளாக நாளாக மில் திறக்கப்படும் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை.
ஜேம்ஸும் இருதயமும் இறந்து போனதை சுட்டிக்காட்டி மீதமிருக்கும் மூவருக்கும் அந்தக் கொலையில் பங்கு மிகவும் குறைவு தான் என்கிற ரீதியில் சங்கரன் வழக்கை நகர்த்திக் கொண்டு போனது இடைக்கால நிம்மதியை தான் தருமே ஒழிய, அதனால் வழக்கின் முடிவு எந்த விதத்திலும் மாறப்போவதில்லை என்பது முத்துவுக்கு நன்றாக தெரிந்தது. வேறு வழியில்லாமல் அவர் அதை அனுமதிக்க வேண்டி இருந்தது. பொது மக்களில் பலருக்கும் அந்த வழக்கு குறித்த ஞாபகம் குன்றிப் போய் சமீப காலத்தின் நிகழ்வுகள் பற்றியே கவலை கொண்டார்கள். மில்லைத் திறக்கப் போவதில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்த பலரும் சுற்றுப்பட்டு ஊர்களை நோக்கிப் பிழைக்கத் தேடிச் சென்றார்கள். சேமிப்பெல்லாம் கரைந்து கடன் கூடிக் கழுத்தை நெறிக்கத் தொடங்கிய ஓரிருவர் நோய்மை எனும் போர்வையில் மனம் வெதும்பிச் செத்துப் போயினர். எதைக் குறித்தும் கவலையில்லாத முதலாளி உறுமீன் கடக்கும் நொடிப் பொழுதுக்காகக் கண் துஞ்சாமல் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கைப் போலக் காத்துக் கிடந்தார்.
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும் அல்லவா..? மஞ்சரியும் விநோத்தும் சங்கரன் வருவதற்கு முன்பே வந்து ஜீபீ முத்துவின் அலுவலக வரவேற்பறையில் காத்திருந்தார்கள். 7 மணிக்கு தான் சங்கரன் வருவதாக சொல்லி இருந்தார். முத்து வரவேற்பறைக்கு நேர் மேலே மாடியில் ஈசி சேரில் அமர்ந்திருந்தார். மறுநாள் மதியம் அவர் நாக்பூர் கிளம்புகிறார். இரவு சென்னை வரை காரிலும் பிறகு விமானத்திலும் பயணம். திடீரென்று நாள் பட்ட தாடியை மழித்துவிட்டு சென்றால் என்ன என தோன்றியது. அவருடைய நாட்பட்ட வீசிங் தொந்தரவு காரணமாக எப்போதுமே சலூனுக்குச் செல்ல மாட்டார். இதை தவிர்க்கும் பொருட்டுத் தான், நாட்பட்ட தாடியைப் பராமரித்து வந்தார். பவளத் திட்டு ரத வீதியில் பொன்னாயிரம் என்பவர் ‘பொன்மணி சலூன்’ என்று நடத்தி வந்தார். முத்து சார் மாதக்கணக்கில் வளர்த்து வந்திருந்த தாடியை அகற்றும் வைபவத்துக்காக அழைத்தபோது கைவேலையை முடித்துக் கொண்டு ” இதோ வரேன்” என கிளம்பி வந்தார்.
திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளியே காற்று நடத்துகிற களேபரம் உள்ளேயும் தெரிய வந்தது. முத்து வெளிப்புறச் சன்னலை அடைத்துவிட்டு இந்தப் பக்கத்து சன்னலை திறந்த போது சரியாக மஞ்சரியும் விநோத்தும் கீழே வந்து அமர்ந்து கொண்டார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை என்கிற சவுகரிய தைரியத்தில் இயல்பான குரலில் இருவரும் பேசிக் கொண்டனர். அவர்கள் பேச்சிலிருந்து வழக்கு போகும் விதம், அதன் தன்மை இன்ன பிற யாவும் துல்லியமாக முத்துவுக்கு புரிந்தது. வெங்கடாசலம் கூடிய சீக்கிரமே நீதிபதியாகப் பதவியேற்கப் போகிறார். இன்னும் மூன்று தினங்களில் வழக்கின் தீர்ப்பு வரப் போகிறது. நீதிபதியின் மௌனத்திலிருந்து தீர்ப்பின் திசையை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் மஞ்சரி விநோத் இருவரின் குரல்களில் கலக்கமாக தொனித்தது. விநோத் என்பவன் சற்று கோபக்காரனாகவும் எப்படியாவது என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்கிற ஆத்திரக்காரனாகவும் தெரிகிறான். மஞ்சரி என்பவள் வயதில் மிகவும் சின்னப்பெண். இப்போதுதான் சட்டம் முடித்துவிட்டு வந்திருக்கிறாள். தன் வயதுக்கு சம்பந்தம் இல்லாத நிதானமும் புத்தி கூர்மையும் அவளுடைய பேச்சில் தொனிக்கிறது. மஞ்சரியின் பார்வை தீர்க்கமாக இருந்தது. வெற்றி தோல்வி என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் தன்னுடைய கருத்தை அவள் சொன்ன விதம் முத்துவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
எப்படிப் பார்த்தாலும் மீதமிருக்கும் மூவரில் இருவருக்காவது ஜென்ம தண்டனை கிடைக்கும் என்று அவள் நம்புகிறாள் மூன்றாவது நபருக்கு குறைந்தபட்ச தண்டனையோ அல்லது விடுதலையோ கிடைக்கலாம் என்றும் கருதுகிறாள். முத்து எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை தான். இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே பெருவாரி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த போதிலும், சட்டத்தை பொருத்தவரை சம்பவம் சாட்சிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிரதம தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுவது நடக்கும். இந்த வழக்கை பொறுத்தவரை ஜேம்ஸ் தற்கொலை செய்து கொண்டது வழக்கை நடத்தும் பட்சத்தில் மீதமுள்ள நால்வருக்கும் எதிரானது போல் தோற்றமளித்தாலும் வழக்கின் முடிவில் இறந்து போனவன் மீதான குற்றப் பங்களிப்பை அதிகரித்து மற்றவர்களுக்கு அதை சாதகமாக்க முடியும் என்று ஆரம்பத்தில் இருந்தே அவர் நம்பியிருந்தார். இருதயம் இறந்து போனது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. அரசின் பாதுகாப்பில் இருக்கும் கைதி ஒருவன் நோய்மையில் இறந்து போவது கிட்டத்தட்ட மரண தண்டனையை முன்கூட்டி வழங்குவது போலவே பொது புத்தியால் கருதப்படுவது நடக்கும். மீதம் இருக்கும் மூவரும் தத்தம் அதிர்ஷ்ட துரதிஷ்டங்களை எண்ணி ஏங்கியபடி வழக்கு முடிவுக்காக காத்துக் கிடப்பது இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. மஞ்சரி ஒரு வேளை தண்டனை வழங்கப்பட்டாலும், கட்சி இந்த வழக்கை தொடர்ந்து நடத்தவே விரும்பும் என்றும், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நேரடியாக ஜேபி முத்து அவரே நடத்த வேண்டி இருக்கும் எனவும் சொன்ன பொழுது விநோத் ஆவேசமாக
“எப்படி சொல்ற? எப்படி சொல்ற?”
என்று தான் கேட்டான்.
பொன்னாயிரம் சுவரில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அலைக்காக கழட்டி தன் இரண்டு கைகளிலும் ஒரு விளக்கை ஏந்துவது போல் ஏந்தி முத்துவின் முகத்துக்கு முன்னால் அரைவட்டம் அடித்து காட்டினார் முகத்தின் எடை பேர் பாதி குறைந்தாற் போல் தோன்றியது. மூன்று வருடங்களாக கவனிக்காமல் விட்ட தாடியை மழித்து மீசையை சிக்கனமாக்கி தலை முடியையும் சற்று அளவு குறைத்து இன்று காலை எழுந்த தோற்றத்திலிருந்து புதிய தோற்றத்திற்கு மாறிவிட்டதை ஒரு கணம் நிதானமாக ரசித்தார் முத்து. துண்டால் தன் கன்னத்தை ஒத்திக்கொண்டே அவர் எழுந்து கொள்ள தூரத்தில் காத்திருந்த வேலையாள் மணி ஓடி வந்து ஈசி சேர் எடுத்து மடித்து அதன் இடத்தில் இருத்தினான். தரையில் விரித்திருந்த நியூஸ் பேப்பர் மீது சிதறி கிடந்த மயிர்க் கற்றைகளை லாவகமாக எடுத்துச் சுருட்டி மடித்து தூரத்தில் இருந்த குப்பை கூடைக்குள் போட்டவன் ஐயா கொஞ்சம் நகர்ந்துக்குங்க என்றவரே அரை வாசலில் இருந்து கையில் இருந்த விளக்கு மாற்றால் கூட்டத் தொடங்கினான். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பொன்னாயிரம் கிளம்பி சென்றதும் முத்து குளியல் அறைக்கு சென்றார். நுழையப் போனவர் எதையோ நினைத்துக் கொண்டு மறுபடி வந்து மாடியறையின் உள்பக்க ஜன்னல் வழியாக மஞ்சரியையும் விநோத்தையும் அவர்கள் அறியாமல் பார்த்தார். இப்போது விநோத் ஏதோ ஒரு பத்திரிக்கையை அசுவாரசியமாக புரட்டிக் கொண்டிருக்க, கேஸ் கட்டுகளை எடுத்து தனக்குத் தானே முனுமுனுத்தபடி புரட்டிக் கொண்டிருந்த மஞ்சரியை பார்த்து லேசாய் புன்னகைத்துக் கொண்டே மீண்டும் குளியல் அறைக்குள் நுழைந்தார்.
ஹாலில் இருந்த டேப் ரெகார்டரில் சன்னமான குரலில் பீ.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் வரிகளைத் தானும் சேர்ந்து பாடிக் கொண்டே ஷவரிலிருந்து கோடி நீர்ப்பூக்களைத் திறந்து விட்டார் முத்து.
{வளரும்}
