யாக்கை 31
அனாகதம்
மூர்த்தியைக் காணவில்லை என்று அவன் மனைவி இந்திரா வந்து சொன்ன போது கிண்டல் செய்கிறாள் என்றுதான் அவள் முகத்தை ஏற ஏற பார்த்தான் கதிர். காணாமல் போகிற வயசா இது? அவன் உதடுகள் முணுமுணுத்தன ‘இதை ஏன் என்கிட்ட வந்து சொல்ற?” என்று அவளிடம் கேட்க முடியாது.
“உன்கிட்ட வேலை பார்க்கிறவன், உன்னோட சினேகிதன், முந்தாநேற்று சாயங்காலம் கிளம்பி போனவன் 40 மணி நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை உன்னிடம் முறையிடாமல் வேறு எங்கே நான் போவேன்”
சொல்லாமல் சொன்னது அவளது முகம். கதிருக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது வெளியில் அலைந்தது வாரம் பத்து நாள் வீட்டு சாப்பாடு இல்லாமல் கண்டதை தின்றது வயிற்றை படுத்தி வைக்கிறது. மூலப் பிரச்சனை வேறு அவ்வப்போது அவனை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
கௌரியோடு ஒரு மாதிரி சமாதானம் ஆன பிற்பாடு நினைத்த நேரத்தில் எல்லாம் குடிக்க கூடாது என பல்லை கடித்துக் கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளுகிறான். மதியம் மூன்று மணியிலிருந்து வயிற்றின் உள்ளே ஒரு நாக்கு முளைத்து விடும். அந்த நாக்கு உலர்ந்து தவிக்கும் போது கதிர் இரண்டு கைகளால் கண்களைப் பறித்து வெளியே போட்டு விடலாமா என அல்லாடுகிறான். நாக்கை பிடுங்கி எறிந்தாலாவது இந்த தாகம் நின்று போகாதா? கதிருக்கு தன்னை குடிகாரன் என்று யாராவது நினைத்தால் கூட பிடிக்காது. நான் எங்கே? சும்மா லைட்டா தானே? அவனும் இவனும் குடித்துவிட்டு போடுகிற ஆட்டம் எனக்கு தெரியாதா என்ன? தன்னைத்தானே மெச்சிக்கொள்வது தவிட்டுக் கோழி மட்டுமல்ல கதிர் போன்ற சிலரும் அந்த வகை தான். இப்போது எல்லாம் கதிருக்கு குடிக்க வேண்டும் என்றும் குடித்தவரை போதும் என்றும் இரண்டு எண்ணங்கள். இன்றைக்கு என்னவோ காலை 11 மணிக்கு ஒரு வெறி வந்துவிட்டது. உள்ளே ஒருவன் உடனே குடி குடி என்று படுத்தி விட்டான். கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான்.
சமீபத்தில் தான் கௌரிக்கும் அவனுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறிய பக்தர் குழுவை ஒரு பெரிய ஆன்மீக மையமாக வளர்த்தெடுக்கிற கௌரியின் கனவு கிட்டத்தட்ட பலிக்கிற நேரம் இது. “கொஞ்சம் நீ சொல் பேச்சு கேட்டால் நம் எல்லோருக்கும் நல்லது” என்று கதிரின் கண்ணைப் பார்த்து கௌரி சொன்னபோது அப்படியே செய்றேன் என்பதை தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு. பணம் என்பதை காட்டிலும் அதிகாரம் சமூகத்தில் தனக்கு கிடைக்கும் உச்சபட்ச அந்தஸ்து அவற்றை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதில் கதி தீர்மானமாக இருந்தான். டூவீலர்களை வாங்கிவிட்டு கடனை செலுத்தாமல் போக்கு காட்டுபவர்களை கையாளுகிற சீஸிங் ஏஜென்ஸி பிழைப்பில் வங்கிகளுக்கு ஆதரவாக எத்தனை பேரை பகைத்தாயிற்று?. இனி கதிரின் நிலைமை முன்பிருந்ததில்லை. இப்போது அவன் ஒரு விஐபி. கௌரியின் கணவன். இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் அவனுக்கு சிந்தனையாக இருந்தது. உண்மையில் மனிதனால் துக்கத்தை கையாண்டு விட பராமரித்து விட மேலாண்மை செய்துவிட முடியும் அளவுக்கு சந்தோஷத்தை சமாளிக்கவே முடிவதில்லை. கதிரின் நிலைமை அது தான்
இந்திராவை பார்க்கும் போது அவனுக்கு குழப்பமாக இருந்தது. இவளுக்கு எந்த அளவுக்கு என்ன தெரியும் என்பது புரியாமல் எதை பேசுவது?
“மூர்த்தி எங்கம்மா போனான்?
என்று இந்திராவிடம் கதிர் கேட்டான்.
” விடிஞ்சா கிளம்பிப் போறவரு, ராபோதுல அடைவதற்கு தான் வீட்டுக்கு வருவார். உங்க கூடத்தானண்ணே எப்பவுமே இருப்பார். நீங்களே இப்படி கேட்கிறீங்களே? முந்தா நேத்து சாயங்காலம் கிளம்பி போனவர் இப்ப வரைக்கும் வந்து சேரல. மனசு பதபதப்பா இருக்குண்ணே. நீங்கதான் ஏதாவது வேலை விஷயமா அனுப்பி இருக்கீங்கன்னு நினைச்சேன். உங்களுக்கு ஏதோ பிரச்சனை ஊருக்குள்ள தலை காட்ட முடியாத அளவுக்கு தீவிரம்னு சொல்லிட்டு கிளம்பி போனவர் ரெண்டு நாள் முந்தி தான் வந்தார். வந்ததிலிருந்து சரியா பேசல. ஒரே திசையை பார்த்துட்டு இருந்தார். எது கேட்டாலும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பதில் அவ்வளவுதான். முந்தா நேத்து மதியம் முதல்ல சாப்பாடு வேணாம் அப்படின்னு சொன்னார். திடீர்னு என்ன நினைச்சாரோ தட்டுல கொஞ்சமா சோறு போட்டு நாலு வாய் சாப்பிட்டிருப்பார். எதையோ நினைச்சாப்புல தட்டிலேயே கையை கழுவிட்டு சட்டையை போட்டுக்கிட்டு விடு விடுன்னுகிளம்பி வெளியில போனாரு. அவ்வளவு தான் தெரியும்.
எங்க போனாரு இப்ப எங்க இருக்காரு மனசு ஒரே கலக்கமா இருக்கு நேத்து ராத்திரி தூக்கமே வரல பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை அவர் வந்து வாச கதவை தட்ட போறதாவே மனசு அடிச்சிடுச்சு. வரலையே. கலக்கமா இருக்குண்ணே. மூத்தவனும் மருமகனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று வண்ணமாக சொல்லிட்டாங்க. நாளையும் பின்ன நீங்க வந்து ஏன் இந்திரா இப்படி பண்ணிட்ட? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் உன் கூட வந்து நின்றுக்க மாட்டேனா அப்படின்னு கசந்து பேசிருவீங்களோன்னு உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்னு வந்தேன். போலீஸ்கிட்ட போகலாமா அண்ணே? உங்களுக்கும் அவருக்கும் ஏதோ வருத்தம் இருந்ததா அரசல் புரசலா காதுல விழுந்தது. எங்க அண்ணன் எனக்கு கெடுதி பண்ணாது அப்படின்னு உங்ககிட்டயே கேட்க வந்துட்டேன். எதுவா இருந்தாலும் சொல்லுங்கண்ணே? அவருக்கு உங்களை விட்டா இந்த உலகமே தெரியாதுண்ணே. அவர் எங்கண்ணே? அவர் எங்கண்ணே போனாரு?”
நின்ற வாக்கில் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து முழங்காலை கட்டிக் கொண்டு குமுறி குமுறி அழும் இந்திராவை பார்த்தபோது பரிதாபமாக இருந்தது கதிருக்கு. போதையின் தீவிரம் முற்றிலும் இறங்கி போய் தலை விண் என்று தெறிக்கத் தொடங்கியது கதிருக்கு. இது என்னடா புதிதாக கிளம்புகிறது? கோட்டை சுவர்களுக்கு உள்ளே நடந்தது எதுவும் வெளியே யாருக்கும் தெரியாது என்று தான் நம்பி இருந்தான். நான் தான் இந்த மூர்த்தி பயலிடம் சகஜமாக பேசி விட்டேனே. எவ்வளவு அள்ளி கொடுத்திருப்பேன்? மூத்த மகளுக்கு கல்யாணம் செய்த போது ஆயிரக்கணக்கில் தரத்தானே செய்தேன்? பசங்க ரெண்டு பேரும் படிப்பதற்காக என கேட்கும் போதெல்லாம் காசு தரலையா? இன்னும் கல்யாணமாகாம இருக்கும் மூர்த்தியின் இரண்டாவது மக அவளுக்கு எதுவோ தோஷம் பரிகாரம் என்று திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இன்றைக்கு முடிவானாலும் காசு என என்னிடம் தானே வந்து நிற்பான்? தரத்தானே போகிறேன்? எவன் செய்வான் இதைவிட? அடேய் நன்றி கெட்ட மூர்த்தி, கொஞ்சம் கோபத்தில் அப்படி இப்படி நடந்து கொண்டதை வீட்டில் பொய் சொல்லி இருக்கிறாயா என்ன?
அழுகையை நிறுத்திவிட்டு வெறும் கேவலோடு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் இந்திராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கதிர். இவளுக்கு என்ன தெரியும் என்ன தெரியாது. அதுவல்ல பிரச்சனை. மூர்த்தி வீம்புக்கு கிளம்பி எங்காவது போய் ஒளிந்து கொண்டிருக்கக் கூடியவன் தான். என்னை எதிர்க்கத் திராணி இல்லாமல் நிச்சயம் இப்படி எலிவேலை பார்ப்பான். ஒருவேளை… ஒரு வேளை… நிஜமாகவே மூர்த்திக்கு ஏதாவது ஆயிருக்குமா? இந்நேரத்துக்கு செய்தி ரூபத்திலாவது வந்து சேர்ந்திருக்குமே? வரதன் என்பவன் ஏதாவது செய்து விட்டானா? வேறு ஏதாவது பழைய எதிரிகள் பழி எடுத்து விட்டார்களா? உதடுகள் லேசாய் துடித்தன. நெற்றிப் பக்கம் ஒரு நரம்பு விண்வெண் என்று தெறித்தது. இன்னும் கூடுதலாக வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வரவே எதுவும் சொல்லாமல் நகர்ந்து போனவன் வாஷ்பேஷனில் தலையைக் கவிழ்த்து பெரிதான சப்தத்தோடு ஓங்கரித்து வாந்தி எடுத்தான்.
“என்னண்ணே உடம்பு கிடம்பு சரியில்லையா?”
குரலை சகஜமாக மாற்றிக் கொண்ட இந்திரா
“சுடுதண்ணீ அல்லது காப்பி எதுனா ? கொண்டு வரட்டுமா?”
சைகையாலேயே எதுவும் வேண்டாம் என்றவன் மேசை மீதிருந்த தண்ணீர் பாட்டிலில் மீதமிருந்த தண்ணீர் மொத்தத்தையும் நிறுத்தாமல் குடித்து முடித்தான்.பேண்ட் பின்புற பாக்கெட்டில் கைவிட்டு சூட மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
கதவை தட்டி விட்டு உள்ளே வந்த முருகனிடம் ” சித்தப்பா, மூர்த்தி பயலே பார்த்த?” எனக் கேட்டான்.
“இன்னைக்கு நேத்திக்கு பாக்கல முந்தா நேத்து சாயங்காலம் கையில ஒரு பையோட வெளியூர் பஸ் ஸ்டாண்ட் வாசல்ல ஆட்டோல இறங்கி போனான். நீதான் எங்கேயோ ஜோலியா அனுப்பி இருக்கேன்னு நினைச்சேன்.”
என்றவாறே பக்கவாட்டு சேரில் அமர்ந்தார் முருகன்.
இந்த பதில் ஆதரவாக இருந்தது கதிருக்கு. தன் குழப்பத்துக்கு இன்னும் விடை கிடைக்காத இந்திராவிடம்
“இப்ப நீ வீட்டுக்கு போ இந்திரா. சாயந்திரம் வரைக்கும் பார்க்கலாம். நான் எந்த வேலையாகவும் அவனை அனுப்பல. எங்க போயிருக்கான்னு தெரியல. ஒன்னு மட்டும் நிசம். எனக்கும் அவனுக்கும் எந்த பிணக்கும் இல்லை. அடிக்கடி எதனா கத்திக்குவோம். கொஞ்சம் கழிச்சு கூடிக்குவம். வருஷக்கணக்கா நீ பார்க்காததா?”
தன்னால் முடிந்த மட்டும் நேர்மையான குரலில் இதைச் சொன்ன கதிர் ” சாயந்திரம் வரைக்கும் அவன் வரல, தகவல் எதுவும் தெரியல அப்படின்னா போலீசுக்கு போகலாம் சரிதானே?” என்றவன் மணி அடித்து யுவராஜ் வர செய்தான். “நீ போய் இந்திராவை வீட்டில் விட்டுட்டு வா” என அனுப்பினான். முதலில் வரதனிடம் பேச வேண்டும். பிறகு கௌரியிடம். தேவைப்பட்டால் வக்கீல் ஆரோக்கியசாமியிடமும் பேசிக் கொள்ளலாம். குழப்பத்தின் திசைகளை ஒவ்வொன்றாக எடுத்து யோசித்தபடியே சுழல் நாற்காலியைக் கெந்தி கெந்திச் சுற்றிக் கொண்டிருந்தான் கதிர்.
**
முகூர்த்த புடவை நல்ல நாள் பார்த்து சனிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம் என வடிவு சொன்னதும் மறுப்பே சொல்லாமல் சரி சரி என ஒத்துக் கொண்டான் பவுன்ராஜ். சிந்தாமணிக்கும் வடிவுக்கும் என்ன மாதிரி புடவைகள் என பேசி முடிவு செய்த பிறகு வேறு யாருக்கெல்லாம் சிந்தாமணி கல்யாணத்தை ஒட்டி உடுப்பு எடுக்க வேண்டும் என ஆராய்ந்து லிஸ்ட் ஒன்றை தயாரித்தார்கள். கல்யாணத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதற்கென்று பவுன்ராஜ் தனியாக ஒரு லிஸ்ட் வைத்திருந்தான். கோட்டை வீடு, சரகத்திலிருந்து குணாளன் ஏட்டையா, மேற்படி கட்சியில் பிரதிநிதியாக இருக்கும் பொன்னுத்துரை, கல்லு வீட்டு சித்தப்பா என அடுக்கி கொண்டே போனான். “எதுக்கும் எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு துண்டு வாங்கி வைப்போம். அந்த இடத்தில் யாராவது விட்டு போய் வந்து நின்னாக்க வெறுங்கைய வீசிட்டு நல்லாவா இருக்கும்?” என்றதும் வடிவு அதுவும் சரி என ஆமோதித்தாள். கல்யாண களை கட்டத் தொடங்கிவிட்டது. சிந்தாமணிக்கு லேசா கிறக்கமாக வந்தது. செல்வா என்ன செய்து கொண்டிருப்பான் நினைத்த மாத்திரத்தில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்ப நினைச்சு வச்சா பாவம் புரை ஏறிக்குமே? கவலையானாள்.
**
பரீட்சை அட்டையில் பெரிய வெள்ளைத் தாளைச் செருகி வைத்து செல்வா சொல்லச் சொல்ல ஒவ்வொரு பேராக எழுதிக் கொண்டிருந்தான் வைத்தி. வெங்கடேசன் வீட்டு முன் அறையில் ஸ்டூலின் மீது காபி தம்ப்ளர்கள் சப்தமெழுப்பும் தட்டைக் கொண்டு வந்து வைத்தாள் கலா.
” உனக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சு இல்ல?”
என கேட்ட வைத்தியிடம்,“எம்புட்டு தரவனே கேப்ப, நான் வேலைக்கு சேர்ந்து மூன்று வருஷம் ஆச்சு” என அலுத்துக் கொண்டே உள்ளே சென்றாள் கலா. பானுமதியின் குரல் அங்கிருந்தே ஒலித்தது. “செல்வாண்ணே, உங்க ரெண்டு பேத்துக்கும் இன்னிக்கு இங்கதான் சாப்பாடு. திடீர்னு சொல்லாம கொள்ளாம எங்கடாச்சும் போயிடாதீங்க. விளங்குதா?”
கோத்ரேஜ் பீரோவின் ஒரு கதவு முழுக்க நிரம்பி இருந்த கண்ணாடியில் நெருக்கமாக நின்று கொண்டு சவரத்தை முடித்த வெங்கடேசன் ஞாபகமாக சவர்க்காரத்தை எடுத்து தன் புதிய கன்னங்களில் உருட்டியபடியே “ஸ் ஆ ஸ் ஆ” என்று முனகினான். “நம்ம செட்டில் இவன் ஒருத்தன் மட்டும் தனக்குத்தானே சிரைச்சிக்கிறான். எப்பிடி நண்பா?” எனச் சன்னமான குரலில் வைத்தி கேட்க ” எலேய் வைத்தி…செல்வத்தை ஏன் உங்கூட சேக்குற..? சோம்பேறி” என்றதை ரசித்தபடி “அட இரப்பா…கலியாண மாப்பிள்ளைகிட்டே யாரையெல்லாம் அழைக்கணும்னு பேட்டி எடுத்துட்டிருக்கப்ப குறுக்குசால் ஓட்டாதடே” என்று அலுப்பான குரலில் “சரி நீ மேல சொல்லு செல்வம்” என்று தொடர்ந்தான்.
மதிய உணவுக்கு அப்பால் ” ஒரு பீடா போட்டா நல்லா இருக்கும்ல என்று வாய்விட்டுக் கேட்டான் செல்வா. அட இது எனக்கு உரைக்காமப் போச்சே என உடனே சட்டையை எடுத்து அணிந்து கொண்டு
வெளியே கிளம்ப தயாரான வெங்கடேசனை இருடா எல்லாரும் போகலாம் என்று இருவரும் சேர்ந்து எழுந்து கொண்டனர். கிளம்பிட்டீங்களா அண்ணா எனக் கேட்ட பானுமதியிடம் ஆமாம்மா… பவளத்திட்டு போய் வக்கீல் பார்க்கணும். கோர்ட் ஆர்டர் காப்பி இன்னிக்கு தான் தரதா சொல்லி இருக்காரு. அதை கையில வாங்கினால் தான் நிம்மதி என பெருமூச்செரிந்தான்.
” அதான் எல்லாம் முடிஞ்சு தீர்ப்பு ஆயிடுச்சு இல்ல?”
சமாதானமான குரலில் வெங்கடேசன் சொல்ல ஆமாமா என்று முனங்கியவன்
“இல்ல நண்பா விடுப்பு எடுக்காம எல்லா முறையும் தவறாமல் வந்தவ தீர்ப்பு வர்றப்ப உடம்பு சரியில்லைன்னு கடுதாசி கொடுத்துட்டா. அவ அப்படி செய்கிறவ இல்ல. அதான் யோசனையா இருக்கு”
“அட நீ என்னப்பா இதுதான் தீர்ப்பு என்று தெரிந்ததற்கு பிறகு நீயுமே அங்க போயிருக்க தேவையில்லை. கவிதா வராம விட்டதுதான் ரைட்டுன்னு நான் நினைக்கிறேன். எல்லாம் நல்லதுக்கு தான் செல்வம். இனி சட்டப்படி உங்க ரெண்டு பேருக்கு இடையில எந்த சம்பந்தமும் இல்லை. அதைவிட விட்டுறு. கண்டதையும் யோசித்து குழப்பிக்காத. நடக்கப் போற கல்யாணத்தை மட்டும் கவனத்தில் வை. வக்கீல் பாத்துட்டு நேரா போய் சிந்தாமணி கையில் பேப்பரை கொடு. அந்த புள்ள மனசார காத்திருந்ததுக்கு ஒரு நல்லது நடந்திருச்சு”
வெங்கடேசன் கர்ச்சீப்பை எடுத்து தன் இரண்டு கைகளையும் ஏந்தினாற் போல் வைத்து அஸ்க் ஹஸ்க் என நாலைந்து தரம் தும்மினான். மீண்டும் ஒருமுறை கண்ணாடி பார்த்து முகம் எப்படி இருக்கிறது என நோட்டமிட்டவன் சரி வாங்க கிளம்பலாம் என வாசலுக்கு போக பின்னாலேயே இருவரும் தொடர்ந்தனர்.
வைத்தி தன் பைக்கில் தனியாக வர, வெங்கடேசன் பின்னால் அமர்ந்து அவனோடு பேசிக் கொண்டே வந்தான் செல்வம்.
” நீ சொல்றது தான் கரெக்ட். வாழ்க்கை எப்படி எப்படியோ நகருது. நமக்கு நீச்சல் தெரியும் இது மட்டும் தான் நெசம். தண்ணிக்குள்ள இருக்கும் நதிபோக்குல போய்கிட்டே இருப்போம் எந்த கரையா இருந்தாலும் ஏரிக்கலாம். என்ன நண்பா?”
என்பதை புன்னகையோடு ஆமோதித்தான் வெங்கடேசன்.
“ஏன் செல்வா உன் சகல அதான் நீ அந்த பவுன்ராஜ் சரகத்தில் அவன் பெரிய கை போல இருக்கு. வெறுங்கையோட பிழைக்க வந்தாப்டியாம். பொட்டலம் வித்து மேல வந்திருக்காப்ல. இப்ப நல்ல காசு புரளுது போல. மேற்படி கட்சியில பெரிய தொகையை கொடுத்து வெயிட்டான பதவிக்காக காத்திட்டு இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.”
என்பதை ம்ம் எனக் காதில் வாங்கிக் கொண்டு வந்தவன்
” நாம போற வீட்ல ரொம்ப நல்லவனா ஒருத்தன் இருந்தால்தான் பிரச்சனை. இப்படி ஆள் இருந்தா நமக்கு நல்லது தானே நண்பா?” சன்னமான குரலில் சொல்ல ”
“அது என்னவோ சரிதான்”
சமீபத்திய சினிமா பாட்டு ஒன்றை லேசாக விசில் அடித்தபடி பவளத்திட்டு விளக்கில் ஒன்று இரண்டு மூன்று என தெருக்களை எண்ணிக்கொண்டு நான்காவது குறுக்குத் தெருவில் வண்டியை திருப்பி வக்கீல் ஆபீசின் முன்னால் நிறுத்தினான்.
உள்ளே போனதுமே பேப்பரை கையில் எடுத்து நீட்டிய குமாஸ்தா விநாயகம் ” எங்கேயா ஸ்வீட்?” என கேட்க பேண்ட் பையில் இருந்து கிடைத்த ரூபாய் தாள்களை எடுத்து சுருட்டி அவர் கையில் வைத்து அழுத்திய செல்வம் ” மன்னிச்சுக்கண்ணே மறந்து போச்சு. அடுத்து வர்றப்ப கொண்டு வரேன்” என சொல்ல
” போதும்யா தம்பி இன்னமும் இனிமே இங்கு எதுக்கு நீ வரணும். அதான் காசு கொடுத்துட்டேல்ல? நானே வாங்கிக்கிறேன்”
என்றவர் பெரியவருக்கு எதுவும் பாக்கி இருக்கா? என கேட்க நினைவுக்கு தெரிந்து இல்லை செல்வத்தின் பதிலை கேட்டு சிரித்தபடி சும்மா வம்புக்கு இழுத்தேன். பாக்கி எதுவும் இல்லை என்றவர் குரலை தாழ்த்திக் கொண்டு லேசா கண்ணடித்தார்.
“உள்ளே தான் இருக்கார் போய் ஒரு வணக்கத்தை போட்டுட்டு நன்றி சொல்லிட்டு கெளம்புறே என்ன?”
விநாயகத்துக்கு எல்லாமே கட்டளை கலந்த அன்பு தான். அவர் மட்டும் இல்லாவிட்டால் நறுக்கு தெறித்தாற் போல் இந்த வழக்கு இப்படி வெற்றியை தொட்டிருக்குமா என்பது தெரியாது.
“வாங்க . உட்காருங்க” என்று சேரைக் காண்பித்த நரசிம்மராஜனிடம் “ரொம்ப சந்தோசம் சார். ரொம்ப ரொம்ப நன்றி” என்ற போது செல்வத்தின் குரல் கனிந்திருந்தது. அந்த அறை விஸ்தாரமாக ஏற்படுத்தப் பட்ட குளிரும் இருளுமாய்ப் பல முறை ஏற்கனவே வந்து சென்றிருந்தாலும் இன்றைய ரம்மியம் வேறு தான் எனத் தோன்றியது. தன் கலியாணத்தைப் பற்றிச் சொல்லலாம் எனத் தொடங்க முற்பட்ட செல்வத்தை மறித்த வக்கீல்
“ செல்வம் உங்க கிட்டே சொல்றதுக்கு ஒரு ந்யூஸ் இருக்குது என் கிட்டே” என்றவர் “கவிதா நேற்று சாயங்காலம் ரெண்டாவது மாடியிலேருந்து கீழே விழுந்து அன் கான்சியஸ் ஆயிட்டாப்லயாம். க்ரிட்டிகல்னு தான் சொல்றாங்க. எனக்கு அவங்க சைட் வக்கீல் பரமு வேற விஷயமாப் பேசுறதுக்காகக் கூப்டப்ப சொன்னாரு. நிச்சயம் உங்களுக்கு சொல்ல மாட்டாங்கன்னு தெரியும். நானே சொல்லவா வேண்டாமான்னு யோசிச்சேன். சரி எப்டின்னாலும் எதாவதொரு ரூபத்தில தெரியாமப் போவாதில்லன்னு சொல்லிட்டேன் “
சொல்லிவிட்டு இவன் முகத்தையே பார்த்தார்.
செல்வத்துக்கு லேசாக உடம்பு நடுங்கத் தொடங்கிற்று. நிச்சயமாக இது யதேச்சையாக நடந்த விஷயம் தான். யதார்த்தம் என்ற சொல்லின் பின்னே உறைந்திருக்கக் கூடிய க்ரூரத்தை எடுத்தளந்து பார்க்க முடியாது. கிட்டும் பொழுது அளந்து கொள்ள வேண்டியது தான். கடலிலிருந்து உப்பை எடுத்து அளந்து பார்த்து விட்டுக் கடலிலேயே கொட்டுவது போன்ற க்ரூரம் அது. உலர்ந்த உதடுகளோடு எழுந்து கொண்டான். மீண்டும் ஒரு முறை வணக்கம் வைத்து விட்டு வெளியே வந்தான். தத்தம் வண்டிகளில் அமர்ந்தபடி எதையோ கதைத்துக் கொண்டிருந்த வெங்கடேசனும் வைத்தியும்
“ என்னடே புதுமாப்ள…காயிதம் கெடச்சிரிச்சில்ல…அப்பறம் என்ன மூஞ்சை உர்ருன்னு வச்சிட்டிருக்க”
என்று போலியாக அவன் வயிற்றில் குத்துவது போல் பாவிக்க
“ வெங்கடேசு…கவிதா ரெண்டாவது மாடியிலேருந்து விளுத்துட்டாளாம். பேச்சி மூச்சில்லாம ஆஸ்பத்திரியில இருக்கான்னு வக்கீல் சொன்னாப்ல. இப்ப என்னடா செய்றது? “
கெட்டமனம் என்று ஒன்று தனியே வார்க்கப்பட்டு வளர்வதெல்லாம் கிடையாது. எந்த மனம் எப்போது இறுகும் எப்போது உருகும் என்பதெல்லாம் அந்தந்த நேரத்தின் அமைப்புவகை. செல்வா ததும்பிக் கொண்டிருந்தான். அவன் கண்ணோரத்தில் அதுவரை கவிதா எனும் மனுஷிக்காக ஒருமுறையும் துளிர்த்தேயிராத துளிகள் முத்துக் கட்டி நின்றன.
{வளரும்}
