யாக்கை 32
பரமபதம்
கலிவரதனை இரக்கமில்லாமல் துள்ளத் துடிக்க கொலை செய்த ஐவரில் இரண்டு பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வாசித்த போது மூவரின் முகங்களிலும் சலனமே இல்லை. இறுக்கமான முகத்தோடு வேறு யாரைப் பற்றிய விஷயமோ நடந்து கொண்டிருக்கிற பாவனையில் இருந்தார்கள். நீதிபதி எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு கிளம்பிச் சென்றார். அதுவரை ஒரு தியானக் கூடத்தை போல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒன்றை கடைப்பிடித்துக் கொண்டிருந்த எல்லோருமே தளரத் தொடங்கினர். சங்கரனுக்கு இடது கண் துடிக்க ஆரம்பித்தது. ஜி பி முத்து அமைதியாக தன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். நீதிமன்ற அறை பழமை மாறாமல் இருந்தது. வெளிப்புறமாக ஜன்னல்கள் திறக்கப்பட்டு உட்புறம் நீதிமன்ற கூடத்திற்குள் அனுமதிக்கப்படாத நெருக்கமான முகங்கள் உள்ளே நடப்பதை முண்டியடித்தபடி கவனித்துக் கொண்டிருந்தன. எங்கோ தூரத்தில் ஒரு கன்றுக் குட்டி நீண்ட குரல் ஒன்றை எழுப்பிய சத்தம் கேட்டது.
வெங்கடாசலம் தன்னுடைய உப வக்கீல் கூட்டம் சலசலவென ஆர்ப்பரிக்க தொடங்கியதைக் கண்டும் காணாதது போல் நடந்து வெளியே வந்தார். தன்னுடைய சொகுசு காரின் பின் சீட்டு கண்ணாடியை தளர்த்தி, உள்ளிருந்தபடியே நீண்ட படிகளில் இறங்கத் தொடங்கிய வெங்கடாசலத்தின் முகத்தை ஏறிட்டு பார்த்த சந்தானத்தின் மனம் எல்லாம் குளிரும்படி விரல்களை மடக்கி கட்டை விரலை உயர்த்தி “ஜெயித்து விட்டோம்” என்பதைப் போல் காட்டிவிட்டு மேலும் படிகளில் இறங்கிய வெங்கடாசலத்தை சட்டென்று கார் கதவை திறந்து வெளியே இறங்கிய சந்தானம் எதிர்கொண்டு கடைசிப்படியில் அவர் இருக்கும் பொழுதே கட்டிக்கொண்டார்.
“இங்கு எழுதி இருக்கிறது செஷன்ஸ் தீர்ப்புன்னு சாதாரணமா எடுத்துக்காதீங்க. ஜஸ்டிஸ் அவ்வளவு தெளிவா, விரிவா எடுத்துச் சொல்லி தீர்ப்பளிச்சிருக்காரு. சுப்ரீம் கோர்ட் வரை போனாலும் உடைக்கிறது கஷ்டம்னு தான் தோணுது. நீங்க கவலைப்படாதீங்க. இனிமேலாச்சும் நிம்மதியாத் தூங்குங்க.”
சந்தானம் அவருடைய கைகளை விடவே இல்லை. தன்னை இரும்பு மனிதன் என்று தான் எப்போதும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை அறியாமல் கண்கள் கலங்க அதைப் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இந்த நிமிடத்தை அதன் நொடிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறியபடி அப்படியே இருந்தார்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட மூன்று பேரும் இன்றோடு விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூட கற்பனை செய்து கொண்டு, அங்கே வந்திருந்த அவர்கள் தரப்பு மனிதர்கள் தீர்ப்பை கேட்டதும் “கடவுளே” என்று அழத் தொடங்க, காவலாளிகள் உடனடியாக அவர்களை தர தர என இழுத்து வெளியேற்றிய பின்னரும் அந்த கட்டிடத்தின் பின் மூலையில் நெடுநேரம் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. காச நோயின் தீவிரத்தால் உடம்பு உருகி வடிந்திருந்த பகவதியைப் பார்த்தால் யாரோ புதியவன் போலத் தோற்றமளித்தான். அவனுடைய எட்டு வயதுப் பையனுக்கு “அப்பாடா, வாடா” என அருகே அழைத்தபோது மாட்டேன் என்று திமிறிக் கொண்டு ஓடிவிட்டான். நாராயணன் எதுவும் பேசாமலே இருக்க பழனிச்சாமி தன் குடும்பத்தாரோடு தானும் சேர்ந்து கதறிக் கொண்டிருந்தான். ஜீபி முத்து இத்தனை தீவிரமான தீர்ப்பை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் உள் மனசின் கொந்தளிப்புகளை முகத்தில் தோற்றுவிக்காமல் இயல்பாக இருக்க முயற்சித்த படியே சங்கரனிடம் ” ஆர்டர் காபி எல்லாம் கேதர் பண்ணிட்டு ஆபீஸ்க்கு வந்திருங்க” என்றவர் சட்டென்று திரும்பி
” என்ன மஞ்சரி…அப்பீல் நம்ம சைடுக்கு சாதகமாகுமா..?”
எனக் கேட்டதும் அவள் லேசாய் முகத்தை மலர்த்தி சார்…என்றவாறே எதையோ சொல்லத் தயங்கினாள். அவளை நெருங்கி அவள் காதோடு
” இனிமே கேபிடல் பனிஷ்மெண்டை உடச்சி ஆயுள்னு மாத்துறதே ஒரு சாதனை தான்..இல்லியா?”
என்றவாறே வேதனையாகச் சிரித்தார்.
முத்துவும் சங்கரனும் அடுத்தடுத்து கிளம்பி வெளியேறிப் படிகளில் இறங்கித் தம் வாகனத்தை நோக்கிச் சென்ற போது தான் சந்தானத்தின் கார் தூரத்தில் கடந்து சென்றது. காரில் ஏறிய பிறகு சந்தானத்துக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஸ்டீரியோ டேப்பை உச்சபட்ச சத்தத்தில் அலற வைத்தவர் டிரைவர் இடம்
” டேய் மணி அவசரத்துக்கு எங்கேயாவது பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு வண்டிய விடு. வீட்டுக்கு போனா இன்னிக்கு பூரா நான் குடிச்சுக்கிட்டே தான் இருக்க போறேன். அதுக்கு முன்னாடி 108 தேங்கா உடைச்சிட்டு தான் மறு வேலை”.
மாதவபுரத்தில் கிருஷ்ணன் தோப்பில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு மூட்டை தேங்காய் கார் டிக்கியில் இருந்தது. ஒவ்வொரு தேங்காயையும் மணி முடியை பிய்த்துக் கொடுக்க பக்தி சிரத்தையாக உடைத்து முடித்தார் சந்தானம். கைகள் சிவந்து உடம்பெல்லாம் வியர்வை தெப்பத்தில் நனைந்து லேசான நடுக்கத்தோடு காரில் மீண்டும் ஏறினார்.” நேரா வீட்டுக்கு விடு” ஏசி ரீங்காரத்தில் அடுத்த ஐந்தாவது நிமிடம் அமர்ந்த வாக்கில் உறங்கத் தொடங்கியிருந்தார்
********
மூர்த்தி காணாமல் போய் இரண்டு தினங்கள் முடிந்து மூன்றாவது நாள் பாதிப்பொழுது கழிந்த நேரம் இந்திரா அமைதி இழந்தாள். பணம் காசு கூடக் குறைய இருந்தாலும் ஆளும் பேரும் அவளுக்கு அதிகம். மூர்த்தி சைடிலும் சொந்த பந்தங்கள் எக்கச்சக்கம். நன்மைகளில் கூடக் கலக்காமல் தள்ளி நிற்கும் உறவுக் கூட்டம் அல்லதுகளின் பொழுது தவறாமல் தோள் தரும். சில இடங்களில் உத்வேகமே பிழையாக மாறிவிடுவதும் உண்டு.
மூர்த்தி இருக்கிறானா இல்லையா? அவனுக்கு ஏதாவது நடந்து விட்டதா? அவனை யார் என்ன செய்தார்கள்? அவன் எங்கே சென்றிருப்பான்? குழந்தைகளை விட்டுவிட்டு இந்திராவை விட்டுவிட்டு போகிறவன் இல்லை. தன்னை மாய்த்துக் கொண்டானா..? அல்லது தற்செயலாக வீட்டை விட்டு வெளியே போனவனைப் பாம்பு தீண்டிவிட்டதா? அவனது கையிருப்புச் சொற்பத்தைக் கவர்ந்து கொள்வதற்காக யாராவது அவனை தீர்த்து கட்டி விட்டார்களா?. அடித்துப் போட்டதில் அரை மயக்கத்தில் நினைவு இழந்து எங்காவது உருண்டு கொண்டிருக்கிறானா?. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் யாராவது அவனை எங்காவது அடைத்து வைத்திருக்கிறார்களா? 20 வருடங்களுக்கு மேல் பஞ்சாயத்துப் பார்ப்பதையோ தன் தொழிலாக ஆக்கிக் கொண்டவனுக்கு இன்னார் தான் எதிரி என்று யாரை வகைப்படுத்துவது? உள்ளூரிலேயே கதிர் என்பவனுக்காக ஆயிரம் பேரை பகைத்திருக்கிறான். சமீபத்தில் கூட ஏதோ அடிதடி ஆகி ஊரில் தலை காட்ட முடியாமல் ஊர் ஊராக திரிந்து விட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான். எப்போதும் தன்னுடைய நடவடிக்கைகளை பற்றி பெருமிதமாக அசட்டுப் பெருமையோடு அவன் பேசுவதில் பாதிக்கு மேல் உண்மை இருக்காது. இத்தனை இருந்தாலும் அடிப்படையில் மூர்த்தி நல்லவன். அவனாக யாருக்கும் இந்த கெடுதலும் செய்ய மாட்டான். அவனுடைய சேர்க்கை சரி இல்லை. தோளுக்கு மீறிய பிள்ளைகள் ஆளுக்கு ஒரு திசையை தேடிக் கொண்டிருக்கும் போது இன்னமும் சின்ன வயசு சினேகிதக்காரன் என கதிரோடு அவன் சுற்றிக் கொண்டிருப்பது இந்திராவுக்கு குழந்தைகளுக்கு யாருக்கும் பிடித்ததில்லை. வா என்றால் வரமாட்டான் என்பதால் பல்லை கடித்துக் கொண்டு பொறுமை காத்துக் கொண்டிருந்தார்கள்.உண்மையில் மூர்த்தி ஒரு கோழை. யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாதவனுக்கு. உடம்பு தான் சற்றுப்பெறுத்திருந்தது தவிர மனசு வெல்லக்கட்டி. யாராவது கோவிலுக்கு போகிறேன் என்று சொன்னால் கூட கையில் இருப்பதை பகிர்ந்து இதை என் குடும்பத்தின் நலனுக்காக உண்டியலில் போடு என்று எடுத்துக் கொடுத்து விடும் இரக்க மனம் மூர்த்திக்கு. நிச்சயம் இத்தனை பொழுது வீட்டுக்கு தகவல் அளிக்காமல் வெளியே இருந்ததே இல்லை. அவனுக்கு ஏதோ நடக்கக்கூடாது நடந்திருக்கிறது.
தனக்குத்தானே அரற்றிக் கொண்டிருந்த இந்திரா சொந்தமும் பந்தமும் ஒவ்வொன்றாக வந்து சேர சேர வேறொருத்தியாக மாறினாள். எனக்கென்ன யாரும் இல்லைன்னு இளப்பமா நெனைக்கிறாங்கியளா,…? ராசனூர்க்காரின்னா சும்மான்னு நினைச்சிங்களாடா… எனக்கும் ஆளும் தேளும் இருக்குன்னு காட்டுறேண்டா…” அவளுடைய குழப்ப மனம் யாரை எதிர்த்து தன்னுடைய பலத்தை காட்டுவது என்று ஆர்ப்பரிக்க தொடங்கியது. எரிகிற நெருப்பில் சாம்பிராணி அள்ளி அள்ளி போட்டாற் போல்
“மூர்த்தியின் முதலாளி கதிருக்கு தெரியாமலா அவன் காணாது போயிருப்பான்..? எனக்கென்னவோ கதிர்தான் எதுனா செய்திருப்பான்னு தோணுது”
என ஏற்றி விட்டதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.
“நல்லவனா இருந்தா நாலு தடவை வந்திருக்க மாட்டானா மூர்த்தி என்ன ஆனான் அப்படின்னு விசாரிக்கவாவது செஞ்சானா? அவனுக்கு இருக்கிற பழக்க வழக்கத்துக்கும் பணத்துக்கும் நாலு இடத்தில தேடி இந்நேரம் கூட்டி வந்து இருக்க முடியாதா? அவன் பெண்ஜாதி எவ்வளவு செல்வாக்கான ஒருத்தி? நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத இந்திரா, எனக்கு என்னவோ அவங்க பக்கம் தான் தப்பு இருக்குன்னு தோணுது. இன்னிக்கு நீ விட்டுட்டேன்னு வய்யி… அப்புறம் காரியம் கை மிஞ்சி போயிடும். உன் மேல உள்ள அக்கறைல சொல்றேன்”
சொன்ன பத்மாவுக்கு சமீப நாட்களில் கௌரியின் ஆன்மீக மன்றத்தை தேடி ஆர்ப்பரிக்கும் பெரும் கூட்டம் மீது இனம் புரியாத எரிச்சல் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சரியா நான் பார்க்க மார்க்கெட்டில் மீன் வாங்க வந்தவ, சாதாரணமா டூவீலர்ல போயிட்டு இருந்த ஒருத்தி இன்னிக்கி இவ்வளோ பெரிய ஆள ஆவுறதா? என்பது அந்த எரிச்சலின் அடியாழம். இதே இந்திராவிடம் “உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி என் தம்பிக்கு ஆன்மீக மன்றத்துல பூஜை சாமான் விக்கிற கடை எடுத்துத் தரச்சொல்றியா?” என்று கேட்டுக் கொண்டிருந்த அதே பத்மா தான் இன்று வேறொரு பத்மாவாகி வேறொரு இந்திராவை தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்தடுத்து வந்த சொந்தக்காரர்கள் தான் ரெண்டு சொல்லி இந்திரா ரெண்டு சொல்ல மொத்தத்தில் இரண்டும் இரண்டும் நாலாயிரம் ஆனது. அதுவே அன்று மாலை நாலு கோடியாக மாறியிருந்தது. உக்கிரத்தின் உச்சத்தில் இருந்த இந்திராவின் ஒற்றைச் சம்மதத்தை வேண்டி அவளது உறவுக்கூட்டம் காத்திருந்தது. உறங்காத இரண்டு இரவுகளுக்கு அப்பால் கழியும் பகல் பொழுதில் ஒரு மாதிரி சன்னத நிலைக்கு போயிருந்த இந்திரா
” அந்த கதிர் என்கிறவன் ஆபீசுக்கு போவோம்… ஒழுங்கா பதில் சொல்லலைன்னா, வெட்டி வகுந்துற வேண்டியதுதான்”
என்று கூந்தலைப் பந்தாக்கி முடிந்து கொண்டு எழுந்தாள்.ஆறேழு ஆட்டோக்கள் சைக்கிள் டூ வீலர் என ஒரு படையை கூட வருவதைப் பார்த்தவளின் ரத்தம் குன்றாமல் கொதித்துக் கொண்டிருந்தது.
பரமபதம் என்னும் விளையாட்டில் பாம்பும் ஏணியும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக தெரிந்தாலும் அவை எதிர் எதிரான காரியங்களுக்கு பயன்பட்டுக் கொண்டே இருப்பவை. நிஜ வாழ்க்கையில் வினோதம் என்னவென்றால் யாரோ ஒருவர் ஏணியில் ஏறும் போதெல்லாம் அதன் பின்புறம் பாம்பாக மாறி வேறு யாரையோ தலை குப்புற கீழே விழ வைத்துக் கொண்டும் இருப்பதுதான். இந்திரா வந்து தன்னுடைய கணவனை காணோம் என்று முறையிட்டு விட்டு கதிர் சொன்ன பதிலில் திருப்தி அடைந்தவளாகவே அவன் ஆபிசிலிருந்து கிளம்பி போனதும் மூர்த்தியை தேட வேண்டும் என்று தான் கதிர் எண்ணி இருந்தான். அடுத்து வந்த இரண்டு நாட்கள் உண்மையிலேயே அவனுக்கு கால் தரையில் பாவாத அளவுக்கு இறக்கை கட்டி பறக்க வைத்த இரண்டு நாட்களாகவே அமைந்தது தற்செயல் தான்.
மாவட்ட தலைவர் மூலமாக மாநில எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக தரிசனம் கிடைக்கும் எனத் தெரிந்ததும் ‘சடார்’ என்று காரில் மெட்ராசுக்கு கிளம்பி சென்றான். ஆன்மீக மன்றத்தின் விரிவாக்கத்தைத் திறந்து வைக்க பெரியவரின் மூத்த மகளிடம் ஏற்கனவே தேதி கேட்டிருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லாம் நல்லா நடக்கும் என்று பெரியவர் ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். கதிர் ஊருக்கு திரும்பும் வழியில் குடித்துக் கொண்டே வந்தான். கூட வந்தவர்கள் போதும் போதும் என சொன்ன போதும் இன்னும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் ப்ளீஸ் இனிமே குடிக்கவே மாட்டேன் என் செல்லம்ல என்று யுவராஜ் தொடங்கி எல்லோருக்கும் முத்தம் தந்து அதையே அவர்கள் தனக்கு அளித்த சம்மதமாகவும் ஆக்கிக் கொண்டான். ஊரை நெருங்கும் போது கிட்டத்தட்ட சுயநினைவு இல்லாமல் அறற்றத் தொடங்கிய கதிரை இந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்வது உசிதமல்ல என்ற முனைப்பில் யுவராஜ் ஒரு காரியம் செய்தான்.
வண்டியை ஐங்கடல் தெருவில் ஆர்.பி.எஸ் லாட்ஜின் பார்க்கிங்கில் நிறுத்தினான். கதிரை ஒரு குழந்தையை அள்ளிச் செல்வது போல் நாலைந்து பேர் சேர்ந்து தூக்கிச் சென்று வழக்கமாக அவன் தங்குகிற அதே 104 ஆம் எண் அறையின் கட்டிலில் கிடத்தினார்கள்.
டே கௌரி கிட்ட சொல்லிராதீங்கடா…அது சாமிடா…கோச்சிக்கும்டா
என்று குழறினான். தெளிகிற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும், என்று சொல்லிவிட்டு கிளம்பி போனான் யுவராஜ்
முதலில் கதிரின் அலுவலகத்தைத் தேடிப் போனார்கள். அங்கே உருப்படியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவனுடைய வீட்டை தேடி போனபோது வெளியூருக்கு சென்றவன் இன்னும் வரவில்லை என்கிற பதிலை வாசலிலேயே வாங்கிக்கொண்டு அடுத்து எங்கே போவது என குழப்பம் அடைந்த இந்திரா மற்றும் உறவு கூட்டம் முதல்ல டீ சாப்பிடலாம் என்று தெருமுனையில் இருந்த டீ ஸ்டாலை நோக்கிச் சென்றது. அந்த கடையில் நெடுநாள் மாஸ்டராக வேலை பார்த்து வந்த நாகப்பாண்டியன், மூர்த்திக்கு தூரத்து உறவு. இத்தனை பேரை ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் அவருக்கு மனசுக்குள் பல கேள்விகள் எழுந்தன. அவை முக்கியமல்ல. அவரிடம் இருந்த சில பதில்கள் அந்த கூட்டத்திற்கு மிகவும் முக்கியமானவையாக மாறிப் போயின.
இந்திராவின் சித்தி மகன் சோலை தசரதபுரத்தில் கொஞ்சம் தா ட்டியமானவன். அதிர்ந்து பேச மாட்டான் ஆனால் அவனோடு இருக்கும் நாலைந்து பேர் மிக வேகமானவர்கள். சோலைக்கு நாகப் பாண்டியன் சொன்ன ஒரு தகவல் மிக முக்கியமானதாக பட்டது.
” முந்தா நேத்துக்கு முத நாள் சாயந்திரம் கண்ணெல்லாம் செவக்க வந்தானப்பா மூர்த்தி. நான் கேட்காமலேயே நல்லா பாத்துக்க மாமு. இனிமே பார்க்க முடியாது. அப்படின்னான். என்னடா ஒரு மாதிரி பேசுற என்னடா ஆச்சு எலேய் மூர்த்தி எதா இருந்தாலும் சொல்லுடா நாம பார்க்க மாட்டோமா அப்படின்னு கேட்டேன். அதுக்கு விரக்தியா சிரிச்சுக்கிட்டே “மானம் கெட்டிருச்சு. போனா வருமா?” அப்படின்னு சொன்னவன் திரும்பிப் பார்க்காமல் விடு விடுன்னு பஸ் ஸ்டாண்ட் நோக்கி போயிட்டான்”
என்று முடிக்க அவர் சொன்ன நேரமும் கதிரின் அலுவலகத்தில் பார்த்தபோது முருகன் மூர்த்தியை பார்த்ததாக சொன்ன நேரமும் கிட்டத்தட்ட பொருந்தி வந்தது.
ஒவ்வொரு நபராக சொன்ன தகவல்களை எல்லாம் கோத்துக் கொண்டே போனதில் கிட்டத்தட்ட முழுமையான ஒரு சித்திரம் தோன்றியிருந்தது. எங்கோ போன இடத்தில் கதிருக்கும் மூர்த்திக்கும் சண்டை. வாய் வார்த்தை முற்றியதில் இவனை கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். ஊருக்கு திரும்பும் போது அவமானத்தில் குன்றி போயிருந்த மூர்த்தியையும் எதுவுமே நடக்காதது போல் கூட்டி வந்து இறக்கி விட்டிருக்கிறான் கதிர். தனக்குள்ளேயே மறுகிக்கொண்டிருந்தவன் நிச்சயமாக தன் உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி போய் விட்டான். இனி மூர்த்தி திரும்ப மாட்டான் என்கிற ஒற்றை இருள் மூலைக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்த இந்திரா ஓவென்று அலறிக்கொண்டே மயங்கி சரிந்தாள். முகத்தில் தண்ணீரை அடித்து அவளை எழுப்ப
” தம்பி சோலை, உங்க மாமா இனிமே வரமாட்டாருடா. அவரை சாகத் தூண்டுன அத்தனை பேரும் சாகனும் டா”
என்று அரற்ற
” நிச்சயம் செய்வோம் அக்கா”
என்றபடியே சற்று தள்ளி வந்து தன் கூட்டாளிகளுக்கு நடுவில் நின்று கொண்டு சிகரட்டை பற்ற வைத்தான் சோலை.
{வளரும்}
