என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி என்று முடிய வேண்டும்
என்பதால் எளிதாக சூட்டிக்கொண்டது} என் இயற்பெயரான ரவிசங்கர் என்பதன் பின்னால் பாரதி சேர்த்து ரவிசங்கர் பாரதி, தலைவர் சுஜாதா தன் நிஜப் பெயரான ரங்கராஜனிலிருந்து தன் மனைவி பெயரில் எழுதுகிறார் என்பதை அறிந்ததும் மனசுக்கு பிடித்த பல பெண்பாற் பெயர்களை அள்ளி அள்ளி {உன்னித்து கவனிக்கவும்,பெயர்களை} எனக்கு சூட்டிக் கொள்வதும் பிறகு விலகி வெளியேறுவதுமாக ஒரு பெரிய புனைப்பெயர் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தேன். மைதிலி நந்தினி காயத்ரி மைத்ரேயி,ஜெனிஃபர் ஆகிய பெயர்களை எல்லாம் மாதக்கணக்கில் தாங்கித் திரிந்தேன்.
புனைபெயர்களை சூட்டிக்கொண்டு பல லட்சம் பக்கங்களை எழுதினாயா? என்று கேட்டால் அதுதான் இல்லை. பெயர்களை சூட்டிக் கொள்வதற்கு தான் போராட்டம். ஒரு வழியாக பெயர்களின் துரத்தலில் இருந்து நான் விடுபட்டது 2005 வாக்கில் தான். நான் எழுத வந்தது 2011 ஆம் வருடம் தான். என் புனைப்பெயரை நான் கண்டடைந்த ஆறு வருடங்களுக்கு பின்பு தான் எழுதத் தொடங்கினேன். நான் ரமேஷ் பிரேதனின் வாசகன். பதின்மத்திலிருந்து வாழ்க்கைக்குள் நுழையும் போது என்னைக் கைப்பற்றி அழைத்து வந்த மேதமை தோய்ந்த எழுத்துக்கள் அவருடையது.
என் பெயர் ஆத்மார்த்தி. ஆத்மார்த்தம் எனும் சொல்லின் பெண்பாற் பெயர். எனக்கு சூட்டிக்கொண்ட பெயர் அல்ல. ரமேஷ் பிரேதனின் எழுத்துக்களில் இருந்து நான் கண்டடைந்த வெளிச்சம். புத்தக வாசிப்பினூடாக நான் சென்றடைந்த தூரம். நான் தொடங்கிய புள்ளி. என்னை நான் உற்று நோக்கத் தொடங்கிய தருணத் தொடக்கம்.
ரமேஷ் பிரேதனிடம் அலைபேசியில் முதன்முறை பேசும் பொழுது என் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். ஒரு குழந்தையைப் போல் மகிழ்வோடு மீண்டும் மீண்டும் ஆத்மார்த்தி என அவர் உச்சரித்தது எனக்குப் போதுமான நிறைதலாக இருந்தது. விஷ்ணுபுரம் விருது இந்தாண்டு அவருக்கு அறிவிக்கப் பட்ட போது அடுத்த நொடியே ஜெயமோகனிடம் என் நன்றிகளைத் தெரியப்படுத்தினேன். இந்த விருதும் அதைச் சார்ந்த அத்தனை நடைமுறைகளும் சேர்த்து அவரது உடல் நலத்தை மீட்டுக் கொடுக்கும் என்று நம்ப விரும்பினேன். விருதளிப்பு முடிந்த பிறகு தன் பழைய உற்சாகத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டு ரமேஷ் இன்னும் பல அற்புதங்களை எழுதப்போகிறார் என்று தீர்க்கமாக நம்பினேன். சட்டென்று குமிழ் தீர்ந்த ஈரம் போல் காற்றானார் ரமேஷ்.
போலச் செய்ய முடியாத-
நிகர் சொல்ல முடியாத –
மறுதலிக்க முடியாத-
மாற்று ஏதுமற்ற
ஒரே ஒரு ஒற்றை.
ரமேஷ் பிரேதன்
எழுதிய எழுத்துக்களால் மழை போல் வான் போல் எப்போதும் இருப்பீர்கள்.
சென்று வாருங்கள்.