Skip to content

வீ சேகர்

வீ சேகர்; பொருட்படுத்த வைத்த கலைஞன்


தன்னுடைய முதல் படமாக நீங்களும் ஹீரோதான் என்ற தலைப்பிட்டு மிகக் காத்திரமான ஒரு கதையினைத் தேர்வு செய்து இயக்குனராக அறிமுகமானவர் வி சேகர். முதல் படம் இயக்குபவர்கள் வசூலும் பேரும் புகழும் முக்கியம் என்று தான் இயங்குவார்கள் அதுவும் தான் தப்பி பிழைப்பதற்குப்பாதுகாப்பாக நன்கு  அறியப்பட்ட கதாநாயக பிம்பத்தின்  பின் சென்று ஒளிந்து கொள்வதையே பெரும்பாலும் விரும்புவார்கள். இப்படிக் கட்டமைக்கப் பட்டிருந்த சினித் துறை நியதிகள் பலவற்றைத் தன் முதல் படத்தினூடே தவிடுபொடி ஆக்கியவர் வி.சேகர். சினிமாவை வழிபடுகிற பெருங் கூட்டத்தின் ஆரவார காலத்தில் சினிமாவை எதிர்த்தும் குறை சொல்லியும் சமூகத்துக்கும் திரைக்கும் இடையிலான கீழ்மைகளை கதைப்படுத்தி நீங்களும் ஹீரோதான் திரைப்படத்தை உருவாக்கினார் சேகர் அந்தப் படம் வசூல் ரீதி
யாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்ற போதிலும் திரைத் துறையினர் மத்தியிலும் பத்திரிக்கை ஊடகங்களிலும் பெரியதொரு அதிர்வை ஏற்படுத்தியது வினோதம்.

மனித உறவுகளின் கசடுகளையும் மேன்மைகளையும் விளக்கிச் சொல்லும் பல கதைகளை வரிசையாகப் படமாக்கினார் சேகர்.அவருடைய கதாபாத்திரங்கள் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் காணத்தக்க தமிழ் சாமானியர்களாக கட்டமைக்கப்பட்டார்கள். சாதியத்தை மதவாதத்தை சமூக ஒடுக்கு முறைகளை பேரினவாதத்தை செல்வச் செருக்கை கேள்விக்கு உட்படுத்துகிற கதைகள் அவருடையவை. அறத்தை முற்கால விழுமியங்களை சக மனித கரிசனத்தை உலகளாவிய ஒன்றுபடுதலை கடின உழைப்பை மற்றும் பேரன்பை முன் வைக்கிற கதையாடல்களாகத் தன் திரைக் கதைகளை அமைத்தார். நாயக அதீதங்கள் ஏதுமற்ற நாயகர்களாக அவரது கதைத் தலைவர்கள் விளங்கினார்கள்.
சமூகம் என்பது பெரிய குடும்பம் என்பதை மீண்டும் மீண்டும் உரத்து சொல்ல முற்பட்ட படங்கள் அவை.

நம்பிக்கை துரோகம் பேராசை மூட நம்பகங்கள் வீண்ஜம்பம் பகட்டு ஆடம்பரம் போன்றவற்றால் தனிமனிதனுக்கும் குடும்பங்களுக்கும்
ஏற்படக்கூடிய தீமைகளை வரிசைப்படுத்தியவை சேகரின் படங்கள்.  90களில் மறுதலிக்க முடியாத பெரு வெற்றிப் படங்களை தொடர்ந்து
தந்தவர் சேகர். ஒன்றுக்கு பத்தாகப் போட்ட பணம்  செழித்துத் திருப்பியவை அவருடைய திரை முயல்வுகள் மற்ற யாரை விடவும் எண்பதுகளுக்கு அப்பால் குணச்சித்திர நடிகர்களுக்கு பெருந்தீனி அளித்தவை வி சேகரின் திரைப்படங்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் நகைச்சுவை நடிகர்களாகக் கோலோச்சிய பலருக்கும் மறக்க முடியாத வேடங்களைத் தந்தவர் வி சேகர். கவுண்டமணி செந்தில் ஜனகராஜ் வடிவேலு விவேக் போன்ற நகைச்சுவை உச்ச நட்சத்திரங்களின் திரை வாழ்வில் மறக்க முடியாத வேடங்களை அவர் தந்தார். நகைச்சுவை வேடங்களைத் தாண்டிய குணச்சித்திர நடிப்பைக் கவுண்டமணி ஜனகராஜ் வடிவேலு விவேக் ஆகியோரிடம் இருந்து வெளிக் கொண்டு வந்த வகையிலும் வி சேகரின் படங்கள் தனித்துவம் பெற்றவை. ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணியும் நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் ஜனகராஜ் காலம் மாறிப்போச்சு படத்தில் வடிவேலு பாண்டியராஜன் போன்றோரும் ஏற்ற வேடங்கள் மகத்தானவை. எளிய கதைகளின் மூலமாகக் கூர் தீட்டிய வசனங்களின் உதவியோடு மனித மனமாச்சரியங்களை வாழ்வின் மலினங்களைச் சாடினார் சேகர்.

குடும்பக் கதைகளின் ஊடுபாவாக சமகால அரசியலின் உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான வாதப் பிரதிவாதங்களையும் பதிவு செய்தவர் சேகர். மிகுந்த பொறுப்புணர்வு மிக்க படைப்பாளி என்று மெச்சத் தக்க வகையில் சேகருடைய படங்கள் மிளிர்கின்றன. அந்த வகையில் 50 60களில் கோலோச்சிய மெலோ ட்ராமா மன்னர்களான பீம்சிங் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதர் பாலச்சந்தர் வகையறாக்களின் கடைசி வாரிசு என்று சேகரை நிச்சயம் முன்னிறுத்த முடியும் மற்றும் அவ்வகை படங்களுக்கு 90களில் நமக்குக் கிடைக்கிற மோனோபோலி சாட்சியங்களாகவும் வி சேகரின் படங்கள் விளங்குகின்றன.

மூடப் பழக்கங்களுக்கு எதிரான வழக்காடல்களாக அவருடைய படங்கள் வலுத்து முழங்கின.. பெண் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்த்த கதாமுயற்சிகள் அவருடையவை. 90களில் வேறு யாரை விடவும் தன் காலில் நிற்கிற தனித்து இயங்குகிற அதே சமயத்தில் உறவுகளைப் பேணுகிற குடும்பத்தை ரசிக்கிற ரட்சிக்கிற நாயகிகள் சேகரின் எல்லாப் படங்களிலும் வலம் வந்தார்கள் மனோரமா ஊர்வசி சங்கீதா ராதிகா பானுப்பிரியா சரண்யா கோவை சரளா எனப் பலருக்கும் மறக்க முடியாத வேடங்களை அளித்தார் சேகர்.

இன்றைக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவருடைய திரைப்படங்கள் பலவும் பாடல்கள் நகைச்சுவை காட்சிகள் என டிவி சேனல்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படுகிற நேயர் விருப்பக் காட்சிப் பண்டங்களாக அழிக்க முடியாத கல்லெழுத்துக்களாகத்  திரைவான் எங்கும் வலம் வருகின்றன. திரை உள்ளவரை சேகரின் கதாபாத்திரங்கள்,திரைக்கதைகள் அவர் பெயரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் என்பது சத்தியம்.